Hanuman prayer benefits tamil

ஆஞ்சநேயர் வழிபாடு முறை மற்றும் பலன்கள் (Hanuman prayer benefits tamil). நித்திய சிரஞ்சீவியாகத் திகழும் அனுமன் இன்றும் நம்மோடு சூட்சும வடிவில் இருக்கும் தெய்வம். மனமுருகிப் பிரார்த்திப்பவர்க்கு பிரத்யட்சமாகத் தோன்றி அருள்புரியும் தெய்வம். அனுமனுக்கு வெண்ணெய், வெற்றிலை மாலை சாத்தி வழிபடுகிறோம். சிலரோ காரமான மிளகு வடை மாலை சாத்துவார்கள். வட இந்தியாவில் ஜாங்கிரி மாலை சாத்தி வழிபடுவார்கள்.

♻ வடைமாலை ♻

தென்னிந்தியர்கள் காரத்தை அதிகம் விரும்பி உண்பார்கள். ஆதலால், எளிதில் கிடைக்கும் உப்புடன், காரமும் இயற்கையாகச் சேர்ந்துவிட்டது வடையுடன். ஆதலால் இங்கு உப்பு மற்றும் மிளகு சேர்த்து காரமாகச் செய்யப்படும் வடைகளினாலான மாலை ஆஞ்சநேயருக்குப் படைக்கப்படுகிறது.

வட இந்தியாவில் கரும்பு அதிகம் விளைவிக்கப்படுகிறது. அதனால் சர்க்கரை உற்பத்தியும் அதிகம். வட இந்தியாவில் இருப்பவர்களுக்கு இனிப்பு மிகவும் பிடித்தமான உணவு. அங்கே பெரும்பாலான மக்களுக்குக் காலை உணவே ஜாங்கிரிதான். அந்த ஜாங்கிரியும் ராகுவுக்குப் பிடித்தமான உளுந்தினால்தான் செய்யப்படுகிறது.

ஜாங்கிரி மாலை

ஆஞ்சநேயருக்கு இனிப்பான ஜாங்கிரி மாலை சார்த்தினாலும், காரமான வடைமாலை சார்த்தினாலும், இரண்டுமே உளுந்தினால் ஆனது என்பதே உண்மை. இரண்டுமே ராகு தோஷத்திலிருந்து நம்மை விடுவித்து, நல்லது செய்யும் என்பது மகிழ்ச்சியான விஷயம்தான் என்று காஞ்சி மகா ஸ்வாமிகள் கூறியுள்ளார்.

அனுமனின் சக்தி

அனுமானுக்கு வாலில் தான் சக்தி அதிகம். அதனால் தான் ஆஞ்சநேயர் வாலில் குங்குமம் வைத்து வழிபடுகிறோம். பக்தி சிரத்தையுடன் ராம நாமத்தை உச்சரித்துக் கொண்டு வால் தோன்றும் இடத்தில் இருந்து தினமும் சந்தனம் பூசி, குங்கும திலகம் வைத்துக் கொண்டு வர வேண்டும். வாலின் நுனியை அடைந்ததும் கலைத்து விட்டு மறுபடியும் பொட்டு வைக்க வேண்டும். வால்முனையில் பொட்டு பூர்த்தி பெறுகின்ற சுப தினத்தில் வடை மாலை சாத்தி வழிபட வேண்டும்.

சகலதோஷம் நீங்கும்

ராகுவின் தோஷத்திலிருந்து விடுபட மட்டுமல்லாமல், காரிய சித்திக்காகவும் அனுமனுக்கு வடைமாலை சார்த்தப்படுகிறது. அனுமனுக்குச் சார்த்தப்படும் வடைமாலை செய்வதற்கு, தோல் நீக்காத கறுப்பு உளுந்துதான் பயன்படுத்தப்படுகிறது. ஓம் ஆஞ்சநேயாய வித்மஹே, வாயுபுத்ராய தீமஹி, தந்தோ ஹனுமன் ப்ரசோதயாத்’ என்ற அனுமன் காயத்ரி மந்திரத்தை உச்சரித்து சகல பாவங்களில் இருந்தும், கஷ்டங்களில் இருந்தும் நிவர்த்தி பெறலாம்.
துன்பம் போக்கும் வெண்ணெய்

ஆஞ்சநேயருக்கு வெண்ணை சாற்றினால் நம் துன்பங்கள் சூரியனைக் கண்டு உருகும் வெண்ணை போல உருகி விடும்.

குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு புத்திர பாக்கியம் கிடைக்கும். துளசி மாலை சாற்றினால் பாவங்களில் இருந்து நிவர்த்தியும்,

வடை மாலை சாற்றினால் வழக்குகளில் வெற்றியும் கிட்டும் என்பது நம்பிக்கை.

அவருக்கு வெற்றிலை மாலை சாற்றினால் தடை நீங்கி கன்னிப் பெண்களுக்கு விரைவில் திருமணம் நடக்கும்.

அவருக்கு ஸ்ரீராம ஜெயம் எழுதி மாலை சூட்டிப் போட்டால் அனைத்துச் செயல்களும் வெற்றியடையும் முடியும்.🍋

ஹனுமான் ஜெயந்தி ஸ்பெஷல் !

அனுமனை வணங்காத இந்து பக்தர்களே இல்லையெனலாம். அந்தளவுக்கு அனுமனை வணங்கும் பக்தர்கள் உலகத்திலே உண்டு. ஸ்ரீராமபிரானின் பக்தனாய் விளங்கி அந்த ஸ்ரீராமனுக்கும் சீதைக்குமே பாலமாய் இருந்து அவர்களுக்கு உதவ தூது போனார். சிரஞ்சீவி மலையையே தன் பலத்தால் தூக்கிக்கொண்டு பறக்கும் அளவுக்கு சக்தி படைத்தவர். அதே போல் பக்தர்களிடையேயும் நினைத்த காரியத்தை மாருதியாகிய அனுமன் தீர்த்து வைப்பார் என்ற நம்பிக்கை நீடித்துள்ளது. நாம் நினைக்கும் காரியம் வெற்றியாவதற்கு அதற்குத் தகுந்த அலங்காரத்தில் அனுமனைக் கண்டால் நாம் தேடிய வெற்றி கிடைக்கும் என்று நம்பப்படுகிறது. ஒவ்வொரு அலங்காரங்களையும் தரிசித்து அதற்குரிய பலன்களைப் பெறுவீர்களாக!

🌸முத்தங்கி சேவை அலங்காரம்!!!

💧தரிசிக்கும்போது சொல்லவேண்டிய மந்திரம் :
ஓம் அஸாத்ய ஸாதக ஸ்வாமின்
அஸாத்யம் கீம் தவ பிரபோ
ராம தூத மஹாப்ராக்ஞ்ய
மம கார்யம் ஸாதயா💧

தரிசிப்பதின் பலன் :
ராஜயோகம் கிடைக்கும்

☘பட்டு அலங்காரம் :-
தரிசிக்கும்போது சொல்லவேண்டிய மந்திரம்:

💧ஓம் புத்திர்பலம் யசோ தைர்யம்
நிர்பயத்வம் அரோகதா
அஜாட்யம் வாக் படுத்வம் ச
ஹநூமத் ஸ்மரணாத் பவேத்💧

தரிசிப்பதின் பலன்:
துன்பங்கள் விலகும்

🌸சந்தனக்காப்பு அலங்காரம்!!!
தரிசிக்கும்போது சொல்லவேண்டிய மந்திரம்:

💧ஆஞ்சநேயம் அதிபாட லானனம்
காஞ்சநாத்ரீ கமநீய விக்ரஹம்
பாரிஜாத தருமூல வாஸிநம்
பாவயாமி பவமாந நந்தனம்💧

தரிசிப்பதின் பலன்: செல்வ வளர்ச்சி உண்டாகும்

☘வெண்ணைகாப்பு அலங்காரம்
தரிசிக்கும்போது சொல்லவேண்டிய மந்திரம்:

💧யத்ர யத்ர ரகுநாத கீர்த்தனம்
தத்ர தத்ர கிருதமஸ்த காஞ்சலிம்
பாஷ்ப வாரிம் பரிபூரண லோசனம்
மாருதிம் நம: ராக்ஷ ஸாந்தகம்💧

வெண்ணைய் காப்பு சாற்றுவதின் பலன்

ஸ்ரீ ஆஞ்சநேயருடைய உடம்பு உக்ரமானது. அவரது உடம்பில் வெப்பம் அதிகமாக உள்ளதால், அவருக்கு வெண்ணெய் காப்பு இடுவதால், அவரின் உடல், மனம் குளிர்ந்து பக்தர்களின் கோரிக்கைகளை உடனுக்குடன் நிறைவேற்றி வைக்கின்றார்.

தரிசிப்பதின் பலன்:
வெற்றி கிடைத்திடும்

🌸சாதாரணத் தோற்றம்
தரிசிக்கும்போது சொல்லவேண்டிய மந்திரம்:

💧அஞ்சிலே ஒன்றுபெற்றான் அஞ்சிலே ஒன்றைத்தாவி
அஞ்சிலே ஒன்றாறாக ஆரியற்காக ஏகி
அஞ்சிலே ஒன்றுபெற்ற அணங்கைக் கண்(டு) அயலார் ஊரில்
அஞ்சிலே ஒன்றைவைத்தான் அவனெம்மை அளித்துக் காப்பான்💧

தரிசிப்பதின் பலன் :
தடைகள் விலகிடும்

☘வடைமாலை அலங்காரம்
தரிசிக்கும்போது சொல்லவேண்டிய மந்திரம்:

💧அஞ்சனை மைந்தா போற்றி அஞ்சினை வென்றாய் போற்றி
வெஞ்சினக் கதிர்பின் சென்று பிழுமறை யுணர்ந்தாய் போற்றி
மஞ்சன மேனிராமன் மலர்ப்பாதம் மறவாய் போற்றி
எஞ்சலில் ஊழியெல்லாம் இன்றென் விருப்பாய் போற்றி💧

அனுமானுக்கு வடைமாலை சாற்றுவதன் வகைகள்
பேருருவம் கொண்ட ஆஞ்சநேயருக்கு வடைமாலை மூன்று வகையாக சாற்றப்படுகிறது. கூப்பிய கைக்கு மட்டும் வடைமாலை சாற்றுவது ஒருவகை. இடுப்பு வரை இரண்டு மடங்கின முழங்கைகள் வரை வடைமாலை சாற்றுவது இரண்டாவது வகை. தலையிலிருந்து பாதம் வரை வடைமாலை சாற்றுவது மூன்றாவது வகை. அவரவர் சக்திக்குத் தகுந்தாற்போல் வேண்டிக்கொண்டு வடைமாலை சாற்றவேண்டும்.

வடைமாலை சாற்றுவதின் பலன்
“மாம்ஸார்த்தே மாஷம் குர்யாத்’’ என்னும் வரிகளுக்கு ஏற்ப ‘மாஷம்’ என்னும் பெயரினைக் கொண்ட உளுந்து தான்யத்திற்கு உள்ள சிறந்த குணம் யாதெனில், மாம்ஸத்திற்கு உள்ள பலமும் – குணத்தினையும், உளுந்தும் கொடுக்க வல்லது. ஸ்ரீ ஹனுமான் இலங்கைக்குச் சென்று திரும்பி வருவதற்குத் தேவையான வீர்யத்தையும், திறனையும் பெறுவதற்காக உளுந்து தான்யத்தினை உண்டார் என்பது சான்றோர் வாக்கு. எனவே, சிறப்பான இந்த உளுந்து தான்யத்தினால் செய்யப்பட்ட வடைகளைக் கொண்டு மாலையாக ஹனுமனுக்கு ஸமர்ப்பிப்பதால் அவர் மகிழ்ந்து தன் பக்தர்களுக்கு உள்ள கஷ்டம், ரோகம், பிணி ஆகியவற்றினை அகற்றி நாம் சிரமமின்றி, ஆரோக்கியமாக வாழ வழிசெய்து அருளுவார்.
தரிசிப்பதின் பலன் :
சனி, ராகு கிரக தோஷங்கள் விலகும்

🌸மஞ்சள் பட்டு அலங்காரம்
தரிசிக்கும்போது சொல்லவேண்டிய மந்திரம்:

💧அஞ்சனைப் பெற்றெடுத்த அருந்தவப் புதல்வன் செல்வன்
செஞ்சுடர் குலத்துதித்த சிலையணி ராமன் தூதன்
வஞ்சகர் தமையடக்கி வணங்கிடும் அன்பர்க்கென்றும்
அஞ்ச லென்றருளும் வீரன் அனுமனைப் போற்றுவோமே💧

தரிசிப்பதின் பலன்:
சுக்கிர கிரக தோஷங்கள் விலகும்.

☘திருமஞ்சன அலங்காரம்
தரிசிக்கும்போது சொல்லவேண்டிய மந்திரம்:

💧அன்னைகை மோதிரத்தை அளித்தலும் மணியைத் தந்து இன்னெடும் கடலைநீயும் எங்ஙனம் கடந்தாய், என்ன உன்னத நெடியமாலாய் உயர்ந்தெழுந் தடங்கி நின்று
மன்னுதாய் ஆசி பெற்ற மாருதி பாதம் போற்றி💧

தரிசிப்பதின் பலன்:
ஆயுள் விருத்தி உண்டாகும்.

🌸வெற்றிலைக்காப்பு அலங்காரம்
தரிசிக்கும்போது சொல்லவேண்டிய மந்திரம்:

சொல்லுரம் பெற்ற சோர்விலா தூயவீரன்
வல்லவன் ராமன் சீதை வாயுறை பெற்ற அன்பன்
அல்லலைப் போக்கிக் காக்கும் அனுமனைப் பாடும்காலை
கல்வினைப் பெண்ணாய்ச் செய்தாள் கழலிணைப் போற்றுவோமே

ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை போடுவதின் பலன்

சீதாதேவி அசோகவனத்தினில் சிறைபட்டிருந்த ஸமயம் ஸ்ரீ ஆஞ்சநேயர் அங்கு சென்று சீதையை வணங்கி, தான் ராமதூதன் என்பதை நிரூபித்து சூடாமணியினைப் பெற்றுக் கொண்டு ராமனிடம் திரும்ப எண்ணி சீதா தேவியிடம் ஆசீர்வாதங்களை வேண்டி நின்றான். அச்சமயம் சீதை தன் அருகில் இருந்த வெற்றிலைக் கொடியிலிருந்து, வெற்றிலைகளைக் கிள்ளி ஆசீர்வாதங்களை அருளினாள். ஆதலால் ஹனுமாருக்கு வெற்றிலை மாலை அணிவித்தால் ஸ்ரீ மஹாலக்ஷ்மியின் ஸ்வரூபமான சீதையின் ஆசீர்வாதங்களால் நாம் பிரார்த்திப்பவைகள் எல்லாம் லக்ஷ்மிகரமாக நிறைவேறும் என்பது திண்ணம்.

தரிசிப்பதின் பலன் :
சகல சௌபாக்கியமும் கிடைக்கும்.

🌼பூ அலங்காரம்
தரிசிக்கும்போது சொல்லவேண்டிய மந்திரம்:

💧சுட்டின னின்றனன் றெழுத கையினன்
விட்டுயர் தோளினன் விசும்பின் மேக்குயர்
எட்டரு நெடுமுக டெய்தி நீளுமேல்
முட்டுமென் றுருவொடும் வளைந்த மூர்த்தியான்💧

தரிசிப்பதின் பலன் :
ஆரோக்கியம் பெருகும்.

☘துளசி மாலை போடுவதின் பலன்

இராமாவதாரத்தின் முடிவினில் “சீதாதேவி பூமியினில் சென்றுவிட்டால் மறுபடியும் என்னை எவ்வாறு அடைவாய்” என்று ஸ்ரீராமன் சீதையிடம் கேட்டான். அதற்கு சீதாதேவி, “நான் மறுபடியும் (திருத்துழாய்) துளசியாக வந்து உன் திருவடியை அடைவேன்” என்று கூறியதாக புராணங்கள் கூறுகிறது. எனவே, துளிசி இருக்குமிடத்தில் ஸ்ரீ ராமர் இருக்கின்றார். ஸ்ரீராமன் இருக்குமிடத்தில் ஹனுமான் இருக்கின்றார் என்ற ஐதீகத்தினைக் கொண்டு, துளசியை மாலையாக ஸ்ரீ ராமனின் பிரசாதமாக ஆஞ்சநேயருக்கு அணிவித்தால், ஹனுமான் மிக்க மகிழ்வுற்று வேண்டுவோருக்கு வேண்டியவற்றைத் தந்து அருள்வார்.

🌸இளநீர்
இளநீர் உடம்பின் வெப்பத்தை அகற்றி சக்தியைத் தரும் வல்லமையுடையது. ஹனுமான் ‘என்றும் சிரஞ்சீவி ஆதலால், அவருக்கு இளநீர் அபிஷேகமோ அல்லது நிவேதனமோ செய்வதால், பக்தர்களை அனுக்ரஹித்து எவ்வித கஷ்டமும் இன்றி அதிக நாட்கள் இப்பூவுலகில் வாழ வரமளிப்பார்.

☘பாலபிஷேகம்
அனுமானுக்கு பால் அபிஷேகம் செய்தால் எடுத்த காரியங்கள் நிறைவேறும். நல்ல செய்திகள் கிடைக்கும்.

🌺குளிர்ச்சியான தயிரை அனுமனுக்கு அபிஷேகம் செய்தால் அனுமன் மனம் குளிர்ந்து நமக்கு அருள் புரிவார். தயிரை அபிஷேகம் செய்தால் மக்கட்பேறு உண்டாகும்.

🌺அனுமானுக்கு நல்லெண்ணை காப்பு சாற்றுவதன் மூலம் குளிர்ச்சி தரும். அவரும் மனம் குளிர்ந்து அருள்வார் என்பது நம்பிக்கை.

🌺எலுமிச்சம்பழ மாலை சாற்றுவதன் பலன்
எலுமிச்சம் பழம் ராஜகனி. புள்ளியில்லாத எலுமிச்சம்பழமே சிறந்தது. எலுமிச்சம் பழத்தை அனுமானுக்கு மாலை சாற்றினால் திருஷ்டியினால் உண்டாகும் கோளாறுகள் விலகும். ஏவல், பில்லி, சூனியம் விலகும்.

“ஸ்ரீ ராம ஜெயம்! ஸ்ரீ ராம ஜெயம்!ஸ்ரீராம ஜெயம்!

 

இவரைப்பற்றி பேசினாலே நல்லநேரம் வந்துடும்

எங்கு சென்றாலும் நல்ல செய்தியைக் கொண்டு சேர்ப்பதில் வல்லவராக ஆஞ்சநேயர் விளங்கினார். அவரைப் பற்றி ஒருவர் பேசுகிறார் என்றாலே, அவருக்கு நல்லநேரம் பிறந்து விட்டதாக அர்த்தம். முதன்முதலில் சுக்ரீவனுக்கு ராமனின் வரவைத் தெரிவித்ததன் மூலம், சுக்ரீவனின் மனைவி அவனுடன் சேரக் காரணமானார். அசோகவனத்தில் சிறை இருந்த சீதைக்கு கணையாழியைக் கொடுத்து ஆறுதல் அளித்ததன் மூலம், ராமனுடன் அவள் சேரக் காரணமானார். கிஷ்கிந்தையில் இருந்த ராமருக்கு சீதையின் சூளாமணியை அளித்து நற்செய்தி சொன்னதன் மூலம், அவரது உயிர் பிரியாமல் பாதுகாத்தார். அவர் வாயுவின் பிள்ளை என்பதால், பலரது மூச்சுக்காற்று தொடரச் செய்வதில் சிரமமா என்ன! இந்திரஜித் விடுத்த நாகபாணத்தால் லட்சுமணன் மயங்கிக் கிடந்தபோது, தக்கசமயத்தில் சஞ்சீவி மலையைத் தாங்கி வந்து உயிர் கொடுத்தார். ராவண சம்ஹாரம் முடிந்தபின் “ஸ்ரீராமஜெயம்’ என்னும் வெற்றிச் செய்தியை சீதைக்கு எடுத்துச் சொல்லி மகிழ்ச்சிக்கடலில் திளைக்கச் செய்தார். ராமனைச் சகோதரனாக ஏற்றுக் கொண்ட குகனிடம், ராமனின் வருகையை எடுத்துரைத்தார். அயோத்தின் எல்லையில் நந்திக்கிராமத்தில் இருந்த பரதனிடம் வனவாசம் முடிந்து ராமன் நாடு திரும்புவதை எடுத்துரைத்தார். இப்படி ராமாயணத்தில் ஆஞ்சநேயர் செல்லும் இடமெல்லாம் நல்லசெய்தியை வழங்குவதைக் காணலாம்.

ஸ்ரீராமஜெயம்

‌ராமா ராமா ராமா ராமா ராமா

 

ஸ்ரீ ராம ஜெயம்.

அனுமனின் ராம பக்தி

ஸ்ரீ ராமபிரான் வைகுண்டம் அடையும் போது எமனின் பாதையை தடுத்தார் அனுமன்

ராமபிரான்  பூலோகத்தை விடுத்து வைகுண்டம் செல்ல எண்ணினார். இதை அனுமன் விரும்பமாட்டார் என்று அறிந்த ராமர் அதற்கு ஒரு முடிவு செய்தார்.

தன் மோதிரம் பூமியில் விழுந்து விட்டது தேடி வா என்று அனுமனை அனுப்பி விட்டார். அனுமன் வருவதற்கு முன் ராமர் வைகுண்டம் சென்றார்.,

யத்ர யத்ர ரகுநாத கீர்த்தனம்

தத்ர தத்ர க்ருதமஸ்த காஞ்சலிம்

பாஷ்பவாரி பரிபூரண லோசனம்

மாருதிம் நமத ராக்ஷஸாந்தகம் … !!!

‘எங்கெல்லாம் ஸ்ரீராம நாமம் ஒலிக்கிறதோ, அங்கெல்லாம் பக்திப் பரவசத்துடன் கண்களில் நீர் மல்கக் காட்சி தந்து கொண்டிருப்பவர் எவரோ, அவரே அனுமன் என்று தெரிந்துகொள் ‘  இதுதான் இந்த ஸ்லோகத்தின் பொருள்.

பக்திபூர்வமாக ராமநாமம் ஜபிக்கும் அனைவரும் ஆஞ்சநேயரின் அருளைப் பெற்று சிறக்க வாழலாம்

 

📿ஆஞ்சநேயருக்கு ஏன் வடை மாலை📿

 🤚காஞ்சி மகானின் தத்துவ விளக்கம்🤚

ஆஞ்சநேயருக்கு ஏன் வடை மாலை போடுகிறார்கள் தெரியுமா..?

ஒரு முறை வட நாட்டில் இருந்து ஓர் அன்பர் மஹா பெரியவாளைத் தரிசிக்க வந்தார்.

மனம் குளிரும் வண்ணம் அவரது தரிசனம் முடிந்த பிறகு, சற்றே நெளிந்தவாறு நின்றார்.

இவரது மனதில் ஏதோ கேள்வி இழையோடுகிறது போலும் என்று தீர்மானித்த பெரியவா, “என்ன சந்தேகம். கேளுங்கோ” என்றார்.

அந்த வட நாட்டு அன்பருக்கு ஆஞ்சநேயர் குறித்த ஒரு சந்தேகம் நெடு நாட்களாகவே இருந்து வந்தது.

இது குறித்துப் பலரிடமும் விளக்கம் கேட்டு விட்டார்.

ஆனால் எவரிடம் இருந்தும் சரியான பதில் வரவில்லை.

அவர், அந்த சந்தேகத்தை மஹா பெரியவாளிடம் கேட்கலாமா என்று யோசித்துக் கொண்டிருந்த போதுதான், ஸ்வாமிகளே உத்தரவு கொடுத்து விட்டார்.

“ஆஞ்சநேயரைப் பற்றி எனக்கு ஒரு சந்தேகம்…” இழுத்தார் அன்பர். “வாயுபுத்திரனைப் பத்தியா… கேளேன்” என்றார் ஸ்வாமிகள்.

“ஸ்வாமி.. ஆஞ்சநேயர் பலருக்கும் இஷ்ட தெய்வமாக இருக்கிறார். எல்லாருமே அவரை வணங்கி அருள் பெறுகிறார்கள்.

ஆனால் அவருக்கு அணிவிக்கப்படும் மாலை பற்றித் தான் என் சந்தேகம்….” பெரியவா மெளனமாக இருக்கவே… அன்பரே தொடர்ந்தார்:

*“அனுமனுக்குத் தென்னிந்தியாவில் காரமான மிளகு கலந்த வடை மாலை சாற்றுகிறார்கள்.*

ஆனால் நான் வசிக்கும் *வட இந்தியாவிலோ ஜாங்கிரி மாலை சாற்றுகிறார்கள். ஏன் இப்படி வித்தியாசப்படுகிறது ?”*

பதிலுக்காக மஹா பெரியவாளையே பார்த்துக் கொண்டிருந்தார் வட நாட்டில் இருந்து வந்த அன்பர்.

தன்னுடைய நீண்ட நாளைய சந்தேகத்துக்கு, பெரியவாளிடம் இருந்தாவது தகுந்த பதில் வருமா என்கிற எதிர்பார்ப்பு அவரது முகத்தில் இருந்தது.

கேள்வி கேட்ட வட நாட்டு அன்பர் மட்டுமல்ல… பெரியவா சொல்லப் போகும் பதிலுக்காக அன்று அங்கு கூடி இருந்த அனைவருமே ஆவலுடன் இருந்தனர்.

ஒரு புன்முறுவலுக்குப் பிறகு பெரியவா பதில் சொல்ல ஆரம்பித்தார்.

“பெரும்பாலோர் வீட்டில் கைக்குழந்தைகள் சாப்பிடுவதற்கு அடம் செய்தால், வீட்டுக்கு வெளியே குழந்தையை இடுப்பில் தூக்கிக் கொண்டு வந்து, ‘அதோ பார் நிலா…’ என்று சந்திரனை அந்தக் குழந்தைக்கு வேடிக்கை காட்டி உணவை சாப்பிட வைப்பார்கள் பெண்கள்.

அழகான நிலாவையும் வெளிக்காற்றையும் சுவாசிக்க நேரும் குழந்தைகள் அடம் பண்ணாமல் சமர்த்தாக உணவை சாப்பிட்டு விடும். சம்பந்தப்பட்ட அம்மாக்களுக்கும் இது சந்தோஷத்தைத் தரும்.

உங்களில் பலர் வீடுகளிலும் இது நிகழ்ந்திருக்கும்.

சாதாரண குழந்தைகளுக்கு நிலா விளையாட்டுப் பொருள் என்றால், ராமதூதனான அனுமனுக்கு சூரியன் விளையாட்டுப் பொருள் ஆனது. அதுவும் எப்படி?

பார்ப்பதற்கு ஏதோ ஒரு பழம் போல் காட்சி தந்த சூரியனை அடுத்த கணமே தன் கையில் பிடித்துச் சாப்பிட வேண்டும் என்று தீராத ஆசை ஏற்பட்டது அனுமனுக்கு.

அனுமன் கைக்குழந்தையாக விளையாடிக் கொண்டிருந்தபோது வானத்தில் செக்கச்செவேல் என்று ஒரு பழம் போல் ‘ஜிவுஜிவு’ என்று தோற்றமளித்த சூரியன், அவரை மிகவும் கவர்ந்து விட்டது.

மனித வாழ்க்கையின் ஜீவாதாரத்துக்குக் காரணமான சூரியனை, சாப்பிடுவதற்கு உகந்த ஒரு பழம் என்று நினைத்து விட்டார் அனுமன். வாயுபுத்திரன் அல்லவா ?

அடுத்த கணமே அது தன் கையில் வந்து விட வேண்டும் என்று விரும்பினார்.

வாயு வேகத்தில் வானத்தில் பறந்தார். பிறந்து சில நாட்களே ஆன ஒரு பச்சிளங்குழந்தை, சூரியனையே விழுங்குவதற்காக இப்படிப் பறந்து செல்வது கண்டு தேவர்கள் திகைத்தனர்.

வாயுபுத்திரனின் வேகத்தை எவராலும் தடுக்க முடியவில்லை.

அதே நேரத்தில் ராகு கிரஹமும் சூரியனைப் பிடித்து கிரஹண காலத்தை உண்டுபண்ணுவதற்காக நகர்ந்து கொண்டிருந்தது.

ஆனால், அனுமன் சென்ற வேகத்தில் ராகு பகவானால் செல்ல முடியவில்லை.

சூரியனைப் பிடிப்பதற்காக நடந்த இந்த ரேசில் அனுமனிடம் ராகு பகவான் தோற்றுப் போனார். இந்த நிகழ்ச்சியின் முடிவாக, அனுமனுக்கு ஒரு அங்கீகாரம் கொடுத்தார் *ராகு பகவான்.*

*அதாவது, தனக்கு மிகவும் உகந்த தானியமான உளுந்தால் உணவுப் பண்டம் தயாரித்து எவர் ஒருவர் அனுமனை வணங்குகிறாரோ , அவரை எந்தக் காலத்திலும் தான் பீடிப்பதில்லை எனவும், தன்னால் வரும் தோஷங்கள் அனைத்தும் நிவர்த்தி ஆகி விடும் எனவும் ராகு பகவான் அனுமனிடம் தெரிவித்தார்.*

இந்த உணவுப் பண்டம் எப்படி இருக்க வேண்டும் என்றும் ராகு பகவான் அனுமனிடம் சொன்னார்.

அதாவது தன் உடல் போல் (பாம்பு போல்) வளைந்து இருக்க வேண்டும் எனவும் சொன்னார்.

*அதைதான் உளுந்தினால் ஆன மாலைகளாகத் தயாரித்து அனுமனுக்கு சமர்ப்பிக்கிறோம். ஆக, ராகு தோஷத்தால் பாதிக்கப்பட்டிருப்பவர் உளுந்து தானியத்தால் ஆன வடை மாலைகளை அனுமனுக்குச் சார்த்தி வழிபட்டால், ராகு தோஷம் நிவர்த்தி ஆகி விடும் என்பது இதில் இருந்து தெரிகிறது.*

இப்போது மிளகு வடை மற்றும் ஜாங்கிரி விஷயத்துக்கு வருகிறேன். *வடையாகட்டும்… ஜாங்கிரி ஆகட்டும். இரண்டுமே உளுந்தினால் செய்யப்பட்டவை தான்.*

*தென்னிந்தியாவில்* இருப்பவர்கள் அனுமனுக்கு உளுந்து வடை மாலை சாற்றுகிறார்கள்.

இங்கே உப்பளங்கள் அதிகம் உள்ளன.

இங்கிருந்து பல வெளி நாடுகளுக்கும் உப்பு அதிக அளவில் ஏற்றுமதி ஆகிறது. ஆகவே, *உப்பும் உளுந்தும் கலந்து கூடவே மிளகும் சேர்த்து* பாம்பின் உடல் போல் *மாலையாகத் தயாரித்து, அனுமனுக்கு சார்த்தி வழிபடும் வழக்கம் நம்மூரில் அதிகம் உண்டு.*

*வட இந்தியாவில்* பல மாநிலங்களில் கரும்பு விளைச்சல் அமோகமாக இருக்கிறது.

*சர்க்கரை பெருமளவில் அங்கு உற்பத்தி ஆகி, வெளிநாடுகளுக்கெல்லாம் ஏற்றுமதி ஆகிறது.*

தவிர, வட இந்தியர்கள் இனிப்புப் பண்டங்களை அதிகம் விரும்பிச் சாப்பிடுபவர்கள்.

அதுவும், அவர்களுக்குக் காலை நேரத்திலேயே — அதாவது பிரேக் ஃபாஸ்ட் வேளையில் இனிப்புப் பண்டங்களையும் ரெகுலர் டிஃபனோடு சேர்த்துக் கொள்வார்கள்.

அவர்கள் இனிப்பு விரும்பிகள். எனவேதான், *அவர்கள் உளுந்தினால் ஆன ஜாங்கிரி மாலையை அனுமனுக்கு அணிவித்து வழிபடுகிறார்கள்.*

*எது எப்படியோ… அனுமனிடம் ராகு பகவான் கேட்டுக் கொண்டபடி உளுந்து மாலைகள் அனுமனுக்கு விழுந்து கொண்டே இருக்கின்றன.*

*அது உப்பாக இருந்தால் என்ன… சர்க்கரையாக இருந்தால் என்ன.. மாலை சார்த்தி வழிபடும் பக்தர்களுக்கு ராகு தோஷம் தொலைந்து போனால் சரி” என்று சொல்லி விட்டுச் சிரித்தார் மஹா பெரியவா.*

பெரியவாளின் விளக்கமான இந்த பதிலைக் கேட்ட வட நாட்டு அன்பர் முகத்தில் பரவசம்.

சடாரென மகானின் திருப்பாதங்களுக்கு ஒரு நமஸ்காரம் செய்து தன் நன்றியைத் தெரிவித்தார்.

கூடி இருந்த அநேக பக்தர்களும் பெரியவாளின் விளக்கத்தால் நெகிழ்ந்து போனார்கள்

அனுமான் 108 போற்றி

அனுமன் ஜெயந்தி ஸ்பெஷல்

அனுமனுக்கு சிறப்பு சேர்க்கும் சுந்தரகாண்டம்

ஆஞ்சநேயர் வழிபாடு பலன்கள்

Leave a Comment