அதிபத்த நாயனார்.

சோழ நாட்டின் துறைமுக நகராக நாகப்பட்டிணம் விளங்கிய காலம். நாகப்பட்டிணம் கடற்கரைக்கு அருகே நுழைப்பாடி என்ற இடத்தில் பரதவர் எனும் இனத்தவர் மீன்பிடி தொழில் செய்து வாழ்ந்துவந்தனர். அவர்களுக்கு தலைவராக அதிபத்தர் இருந்தார். அவர் சிவபக்தி மிகுந்தவர் என்பதால் தனக்கு கிடைக்கும் மீன்களில் சிறந்ததொன்றை சிவபெருமானுக்கு அர்ப்பணம் செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.
தனக்கு ஒரு மீன் மட்டுமே கிடைக்கும் காலங்களிலும் இந்த வழமை தவறாது வந்தார்.

ஒரு சமயம் தொடர்ந்து ஒரு நாளுக்கு ஒரு மீன் என்றவாறே கிடைத்து வந்தது. அப்போதும் அந்தவொரு மீனையும் இறைவனுக்கு அர்ப்பணித்துவிட்டு அதிபத்தர் பசியோடு இருந்தார். அவரைப் போலவே நண்பர்களும், உறவினர்களும் உணவின்றி வருந்தினர். தொடர்ந்து வந்த நாளெல்லாம் இவ்வாறு ஒரு மீன் கிடைப்பதே வழமையாக நிகழ்ந்தது. ஆயினும் அதிபத்தர் தன்னுடைய பக்தியிலிருந்து தவறாமல் சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கும் செயலை செய்து வந்தார்.

அதிபத்தரின் பெருமையை உலகறியச்செய்யவும் அதிபத்தருக்கு பரமுத்தி அருளவும் எண்ணிய சிவபெருமான் ஒருநாள் மீனுக்கு பதிலாக பொன்மீனை அதிபத்தரின் வலையில் பிடிபடுமாறு செய்தார். அம்மீன் மீனுறுப்பெல்லாம் அமைந்த அற்புதப் படைப்பாக இருந்தது. அம்மீன் ரத்தின மணிகள் பதிந்த பொன்மீனாக இருந்தது. அதனை வலையில் பிடித்த வலைஞர்கள் மிகவும் மகிழ்ந்து அதிபத்தரிடம் பெருமைபட கூறினார்கள். அன்றைய நாளில் அம்மீன் ஒன்றே கிடைத்தமையால், அதனை சிவபெருமானுக்கு அதிபத்தர் அர்ப்பணம் செய்தார். அதிபத்தரின் பத்திமையை பாராட்டும் படியாக சிவபெருமான் பார்வதியுடன் இணைந்து காட்சி தந்தார். அதன் பின் அதிபத்தருக்கு பரமுத்தியளித்தார்.
அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவராக அதிபத்தருக்கும் அருள் புரிந்தார். சைவசமயம் உள்ளவரை அவரது திருநாமமும் புகழும் நிலைப்பெற்று இருக்கும்.சிவாயநம.

திருச்சிற்றம்பலம்.

Leave a Comment

Enable Notifications Allow Miss notifications