காரைக்குடி கொப்புடையம்மன் பாமாலை

மஞ்சள் முகத்தழகும் மத்தியிலே பொட்டழகும்
மங்களம் தருவதன்றோ
மாணிக்க மூக்குத்தி நத்துப் பில்லாக்குமே
மகிழ்வூட்டும் அலங்காரமோ

அஞ்சனம் தீட்டிய அம்புவில் விழிகளில்
அகிலமே அடக்கமன்றோ
அழகான காதினில் ஆடிடும் குண்டலம்
அலைகடல் முத்துவகையோ

தஞ்சமென வந்தவரைத் தாங்கிடும் கைகளில்
தவழ்ந்திடும் தங்க வளையல்
தங்கமென நெஞ்சிலே கொஞ்சிடும் மாலைகள்
தாயவளின் பொற்குவியல்கள்

கொஞ்சிடும் உதட்டிலே கூடிடும் புன்னகை
கோடிக்கு கோடி பெறுமே
குறையாத வாழ்வினை நிறைவாகத் தந்திடும்
கொப்புடையம்மை உமையே !!!

Enable Notifications Allow Miss notifications