Arthamulla Aanmeegam

பிரம்மா தேவரின் வரலாறு | lord brahma story in tamil

Lord brahma story in Tamil

பிரம்மா யார்? அவர் எங்கிருந்து தோன்றினார்? (Lord brahma story tamil)

இந்து தர்ம புராணங்களின்படி முப்பெரும் கடவுளர்களாக முறையே பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகியோர் வணங்கப்படுகிறார்கள். இவர்களில் படைக்கும் தொழில் கொண்டவர் பிரம்மா; காக்கும் தொழில் கொண்டவர் விஷ்ணு; அழிக்கும் தொழில் கொண்டவர் சிவன் என, இவர்களைப் போற்றி வணங்குகிறது வேதம்.

பிரம்ம வைவர்த்த புராணம், விஷ்ணு புராணம், சிவ புராணம், ஸ்ரீமத் பாகவதம் ஆகிய புராண நூல்களில் இந்த மூவரின் தோற்றமும், அவர்கள் தத்தமக்குரிய பணிகளை ஏற்ற விவரமும், அவர்களின் பூரண மஹிமையும் சித்திரிக்கப் படுகின்றன…

பன்னெடுங்காலமாக பிரம்மாவை ஆலயங்களில் வழிபடக்கூடாது என்ற சம்பிரதாயம் நடைமுறையில் இருந்து வருகிறது. புண்ணிய பாரதத்தில் ஒன்றிரண்டு கோயில்கள் தவிர, பிரம்மாவுக்கு வேறு ஆலயங்கள் கிடையாது. சிவனுக்குத் தனி வழிபாடு செய்பவர்கள் சைவர்கள் எனப்படுகின்றனர்.

விஷ்ணுவுக்குத் தனி வழிபாடு செய்பவர்கள் வைணவர்கள் எனப்படுகின்றனர். பிரம்மனை மட்டும் தனியாக வழிபடும் சம்பிரதாயமோ, பிரிவோ இல்லை. பல ஆலயங்களில் விஷ்ணுவும் சிவனும் சேர்ந்து ஹரிஹர ஸ்வரூபமாகப் பூஜிக்கப்படுகின்றனர்.

*ஹரியும் ஹரனும் ஒன்று*’ என்ற வாசகம் உண்டு. ஆனால், பிரம்மாவை தனியாகவோ அல்லது மூவருடன் சேர்த்தோ வழிபாடு செய்ய எந்த சம்பிரதாயத்திலும் விளக்கங்கள் இல்லை.

தேவி மஹாத்மியம் என்கிற தேவி புராணத்தில் ஒரு சம்பவம் விளக்கப்படுகிறது.

ஒரு யுகத்தில் மஹாப்பிரளயம் தோன்றி அனைத்து உலகங்களையும் நீரில் ஆழ்த்தியது. அதற்கு முன்பு தோற்றுவிக்கப்பட்ட எந்த ஜீவராசிகளும், தாவர, விலங்கினங்களும் காணப்படவில்லை. பார்க்குமிடமெல்லாம் தண்ணீர். அந்த பிரளய வெள்ளத்தில் ஒரு சிறு ஆலிலை மிதந்து வந்தது. அதன் மேல் பகவான் ஸ்ரீ மஹாவிஷ்ணு ஒரு குழந்தை வடிவில் மிதந்து கொண்டிருந்தார்.

‘நான் யார்? என்னைப் படைத்தவர் யார்? எதற்காகப் படைத்தார்?’ என்ற சிந்தனையுடன் ஸ்ரீமஹாவிஷ்ணு அனந்த நிஷ்டையில் ஆழ்ந்திருந்தார். அப்போது, ஆதிபராசக்தி எனும் மூல சக்தி ‘மஹாதேவி’ என்ற பெயருடன் தோற்றமளித்தாள்.

சங்கு, சக்கரம், கதை, தாமரை ஆகிய சின்னங்கள் அவள் கரங்களில் ஒளிர்ந்தன. ஆதிபராசக்தியைச் சூழ்ந்து ரதி, பூதி, புத்தி, மதி, கிருதி, த்ருதி, ஸ்ரத்தா, மேதா, ஸ்வேதா, ஸிதா, தந்த்ரா ஆகிய 11 தேவியரும் காட்சி தந்தனர். அப்போது மஹாதேவி அசரீரியாக அருள்வாக்கு தந்தாள்.

”மஹாவிஷ்ணுவே! படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய மூன்று கர்மாக்களும் ஒவ்வொரு யுகத்திலும் பிரதிபலிக்கும். பிரளயம் தோன்றி அவற்றை அழிக்கும்போது, காக்கும் கடவுளான நீ மட்டும் அழியாமல் நிற்பாய்.

ஆதிசக்தியின் அம்ஸமாகத் திகழும் நீ பிரளயத்துக்கும் ஊழித்தீக்கும் அப்பாற்பட்டு நிலைத்திருப்பாய். சத்வ குணங்களின் பரிமாணமாக நீ திகழ்வாய். உனது நாபியிலிருந்து பிரம்மன் தோன்றுவான்.

அவன், ரஜோ குணங்களின் பிரதிநிதியாக இருந்து, பிரளயத்தில் மறைந்த அனைத்தையும் சிருஷ்டி செய்வான். அவன் அழியாத பிரம்மஞானத்தின் மொத்த உருவமாக இருந்து, மீண்டும் அண்ட சராசரங்களை உருவாக்குவான். அவனது புருவ மத்தியில் ஒரு மாபெரும் சக்தி தோன்றும். அதன் வடிவம்தான் சிவன்.

அவன், தமோ குண வடிவமாக, ருத்ர மூர்த்தியாக நின்று, ஸம்ஹாரம் எனும் அழிக்கும் தொழிலை ஏற்பான். இப்படி படைத்தல், காத்தல், அழித்தல் எனும் முப்பெரும் கர்மாக்களையும் பிரம்மா, விஷ்ணு, சிவனாகிய நீங்கள் மூவரும் செய்வீர்கள். உங்களின் இயக்க சக்தியாக நானும் என் அம்ஸங்களான தேவிகளும் செயலாற்றுவோம்” என்று அருளினாள் தேவி.

தேவி புராணத்தின் ஏழாவது காண்டத்தில், பிரம்மன் தோன்றிய வரலாறு மேற்க் கண்டவாறு விளக்கப்படுகிறது.

விஷ்ணுவின் நாபியிலிருந்து ஒரு தாமரைத் தண்டு வளர ஆரம்பித்தது. பிரளய வெள்ளத்தின் பரப்புகளைத் தாண்டி, அது நீண்டு வளர்ந்தது. அதன் நுனியில் ஒரு பிரமாண்டமான தாமரை மலர் மலர்ந்தது. அதனுள் இருந்து பிரம்மதேவன் தோன்றினார்.

அப்போது அவருக்கு ஐந்து முகங்கள் இருந்தன. அவற்றில் ஒரு முகம், பின்னர் சிவபெருமானால் அழிக்கப்பட்டது. அதனால் பிரம்மன் ‘நான்முகன்’ என்றழைக்கப்பட்டார். அவருக்கு ‘சதுரானன்’ என்ற பெயரும் உண்டு.

தாம் தோன்றியதுமே ஸ்ரீ விஷ்ணுவைக் குறித்தும், அம்பிகையைக் குறித்தும் கடும் தவம் இயற்றத் தொடங்கினார் பிரம்மன். ஜகதம்பா எனப்படும் மஹாதேவி மற்றும் மஹாவிஷ்ணுவின் அனுக்ரஹத்தால் பிரம்மன் ஞானச்சுடராக மாறினார்.

சிருஷ்டி தொடங்கியது. முதலில், பூரண ஞானத்தின் பிரதிநிதிகளாக அத்ரி, ப்ருகு, குத்ஸர், வஸிஷ்டர், கௌதமர், காஸ்யபர், ஆங்கீரஸர் ஆகிய சப்தரிஷிகள் தோன்றினர்.

அதன்பின், ஜீவராசிகளை உற்பத்தி செய்யும் பிரஜாபதிகள் தோன்றினர். அண்டங்கள் தோன்றின. ஜீவராசிகள் உருவாகின. புல், புழு, பூச்சி, கடல்வாழ் இனங்கள், நிலவாழ் மிருகங்கள், மனிதன் என சிருஷ்டி தொடர்ந்தது.

– இது, தேவி மஹாத்மியத்தில் காணப்படும் பிரம்மனின் தோற்றம் பற்றிய புராணத் தொகுப்பு.

‘மனு ஸ்மிருதி’ எனப்படும் சாஸ்திரத்தில் பிரம்மன் தோன்றிய வரலாறு வேறு விதமாகச் சித்திரிக்கப்பட்டுள்ளது.

”பிரளயத்தின் முடிவில் அண்டங்களை விடப் பெரியதாக ஒரு முட்டை வடிவம் தோன்றியது. அது, தங்கத்தைவிடப் பிரகாசமாக ஜொலித்தது. பல்லாயிரம் வைரங்கள்போல் அது மின்னியது. அண்ட சராசரங்களை உருவாக்கும் அத்தனை சக்தியும், அதற்குரிய தவமும் ஞானமும் அந்த முட்டையில் அடங்கியிருந்தது. பிரளய வெள்ளத்தில் விழுந்த முட்டை வெடித்தது. அதிலிருந்து ஐந்து முகத்துடன் ஜெகஜ்ஜோதியாக ஒரு தேவன் தோன்றினார்.

அவர்தான் பிரம்மதேவன். அவரிடமிருந்து சிருஷ்டி தொடங்கியது. பிரமாண்டமான அந்த முட்டை உடையும்போது ஒரு சத்தம் உருவானது. அதுவே ‘ஓம்’ எனும் பிரணவம். அந்த ஓம்கார நாதத்திலிருந்து மூன்று சப்த அலைகள் வெளிப்பட்டன.

அவை ‘பூர்’, ‘புவ’, ‘ஸுவஹ’ என்பன. இந்த நாதத்திலிருந்தே பூலோகம், புவர்லோகம், ஸுவலோகம் ஆகிய மூன்று உலகங்களும் தோன்றின. மனு ஸ்மிருதியிலும், வாமன புராணத்திலும் பிரம்மனின் தோற்றம் பற்றி மேற்கண்ட விபரங்கள் தரப்பட்டுள்ளன.

இந்த எல்லா புராணங்களிலிருந்தும் ஓர் உண்மை புலனாகிறது. ‘பிரம்மதேவன்’ ஒரு ஸ்வயம்பூ. அதாவது, தானாகத் தோன்றிய தெய்வம் என்பதே அந்த உண்மை. அவர் அண்ட சராசரங்களில் உள்ள அத்தனை ஆற்றல், அறிவு, ஞானம் ஆகியவற்றின் மொத்த உருவம். அவர் மூலம் ஒன்று பத்தாகி, பத்து நூறாகி, நூறு ஆயிரமாகி, அது லட்சமாகி, கோடியாகும்.

பிரம்ம சிருஷ்டி ஒவ்வொரு விநாடியும் நிகழ்ந்துகொண்டே இருக்கிறது. இந்த ஞானத்தையும், ஆற்றலை யும் ஒரு கருவறைக்குள் அடைத்து வைக்க முடியுமா? அப்போது சிருஷ்டி நிகழ்வது தடைப்படாதா? அதனால்தான், பிரம்மனுக்கு ஆலய வழிபாடு இல்லை என பல்வேறு ஞானிகள் பல்வேறு காலகட்டங்களில் விளக்கியுள்ளனர்.

‘ஞானம்’ என்பதற்கு வடிவமோ, வர்ணமோ, வாசனையோ கிடையாது. அதற்குப் பரிமாணங்களும் இல்லை.அதனால், அதனை ஓர் ஆலய உருவத்தில் அடக்க முடியாது. ஆகவே பிரம்மன், உருவ வழிபாட்டுக்கு அப்பாற்பட்டவன் என்பது தெரிகிறது. ஒவ்வொரு மனிதனும் ஞானத்தைத் தேடும்போது, அவனுள் அடங்கும் சக்தியை பிரம்மஞானம் என்கிறோம்.

பிரம்மனுக்குரிய ஆலயம், ஞானிகளின் உள்ளம்தான். ‘அழியாத சத்யமும், பிறழாத தர்மமுமே பிரம்மஞானம்’ என்று கூறியுள்ளனர் சித்தர்கள்.

ஒருமுறை சிவபெருமானின் திருவடி, திருமுடியைக் கண்டறிய பிரம்மாவும் விஷ்ணுவும் முயன்றனர். வராக வடிவில் பூமியில் ஆழச் சென்ற விஷ்ணு, சிவபெருமானின் திருவடியைக் கண்டறிய முடியவில்லை என்பதை ஒப்புக்கொண்டு அவரைச் சரணடைந்தார்.

ஆனால் பிரம்மனோ, திருமுடியைக் கண்டறிந்ததாகப் பொய் கூறினார். அப்போது சிவபெருமான், பிரம்மனுக்குப் பூவுலகில் ஆலய வழிபாடு இருக்காது என சாபமிட்டார்.

இப்படி அருணாசலேஸ்வர புராணத்திலும், சிவபுராணத்திலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

சிவபெருமான் பிரம்மனைச் சபித்தார் என்பதை அறிவுபூர்வமான கண்ணோட்டத் துடன் பார்த்தால், ஒரு தத்துவம் புரியும். *’பொய் வழியில் யாரும் சிவனைக் காண முடியாது. பொய் வழியால் சிவனை அறிந்ததாகக் கூறுபவர்கள் உலகோரால் பாராட்டப்பட மாட்டார்கள்’* என்பதே இதன் ஆழ்ந்த கருத்து.

யார் பிரம்மன், அவர் எப்படித் தோன்றி னார் என்பதை ஆராய்ந்து அறியும்போது ஒரு தெளிவு ஏற்படுகிறது. யார் பிரம்மன் என்பதைவிட, எது பிரம்மம் என்பதைக் கண்டறிவதே உயர்ந்த ஞானம். பிரம்மன் எப்படித் தோன்றினார் என்பதைத் தெரிந்து கொள்ளும்போது, ‘ஞானம்’ எப்படித் தோன்றுகிறது, அதனை அடையும் வழி எது என்பதையும் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியமாகிறது.

*சத்யமே ஆன்மிகம்! தர்மமே தெய்விகம்!*

பிரம்மா காயத்ரி மந்திரம்

சிவபெருமானுக்கு உகந்த விரதங்கள்

தமிழ் இலக்கிய நூல்கள் தொகுப்பு

பொன், பொருள், புகழ் தரும் லலிதா சகஸ்ரநாமம்

நவகிரகங்களின் வரலாறு

You can find this article for aanmeegam story, lord brahma story, lord brahma mantra in tamil

Share
ஆன்மிகம்

Leave a Comment
Published by
ஆன்மிகம்
  • Recent Posts

    ஓடி ஓடி உட்கலந்த ஜோதியை பாடல் வரிகள் | odi odi utkalantha lyrics in tamil

    odi odi utkalantha lyrics in tamil சித்தர் சிவவாக்கியர் பாடிய ஓடி ஓடி உட்கலந்த (Odi Odi Utkalantha)… Read More

    5 hours ago

    Today rasi palan 04/05/2024 in tamil | இன்றைய ராசிபலன் மற்றும் பஞ்சாங்கம் சனிக்கிழமை சித்திரை – 21

    Today Rasi Palan in Tamil | இன்றைய இராசிப்பலன் _*பஞ்சாங்கம்*_ °°°°°°°°°°°°°° *சித்திரை - 21* *மே -… Read More

    22 hours ago

    Guru Peyarchi Palangal 2024-25 Parigarangal | குருப்பெயர்ச்சி பலன்கள் 2024-2025

    Guru Peyarchi Palangal 2024-25 Parigarangal குரு பெயர்ச்சி பலன்கள் 2024 - 2025 (Guru Peyarchi Palangal 2024-25)… Read More

    3 days ago

    Mesha rasi Guru peyarchi palangal 2024-25 | மேஷம் ராசி குருப்பெயர்ச்சி பலன்கள்

    Mesha rasi guru peyarchi palangal 2024-25 குருப்பெயர்ச்சி பலன்கள் 2024-25 Mesha rasi guru peyarchi palangal 2024-25… Read More

    3 days ago

    Rishaba rasi Guru peyarchi palangal 2024-25 | ரிஷபம் ராசி குருப்பெயர்ச்சி பலன்கள்

    Rishaba Rasi Guru Peyarchi Palangal 2024-25 ரிஷபம் ராசி குருப்பெயர்ச்சி பலன்கள் Rishaba Rasi Guru Peyarchi Palangal… Read More

    3 days ago

    Mithuna rasi Guru peyarchi palangal 2024-25 | மிதுனம் ராசி குருப்பெயர்ச்சி பலன்கள்

    Mithuna rasi Guru peyarchi palangal 2024-25 மிதுனம் ராசி குருப்பெயர்ச்சி பலன்கள்.. Mithuna rasi guru peyarchi palangal… Read More

    3 days ago