வீட்டில் தெய்வ சக்தியை உணர வேண்டுமா? | Pooja room positive vibrations

நம் வீட்டு பூஜை அறையில் தெய்வங்கள் உயிரோட்டமாக இருக்க, நாம் செய்ய வேண்டிய முக்கிய விஷயங்கள். நம்முடைய வீட்டில் தெய்வ சக்தியையும் உணர இந்த பதிவில் குறிப்பிட்டுள்ளோம்….

ஒரு வீட்டு பூஜை அறையில் தெய்வ சக்தி இருப்பதையும், தெய்வ சக்தி இல்லாததையும் நாம் எப்படி தெரிந்து கொள்வது. சின்ன சின்ன விஷயங்களை வைத்து இதை நாம் கண்டுபிடிக்கலாம். சில வீடுகளில் பூஜை அறையில் தெய்வத்தின் திருவுருவப்படங்களில் உயிரோட்டம் இருக்கும். சில வீட்டு பூஜை அறையில் எவ்வளவுதான் சீரியல் பல்பு போட்டு, எவ்வளவு தான் பூக்களால் அலங்காரம் செய்திருந்தாலும் அந்த வீட்டில் தெய்வங்களின் திருவுருவப்படத்தில் உயிரோட்டம் இருக்காது. ஆத்மார்த்தமாக உண்மையான பக்தியோடு இறைவழிபாடு செய்பவர்களுக்கு இது நிச்சயம் புரியும். நம்முடைய வீட்டிலேயே சில நேரம் பூஜை செய்யும்போது நம்முடைய மனதில் ஒரு திருப்தியே இருக்காது. பூஜை அறையும் குறையுமாக, செய்வது போல தோன்றும். அப்போது சுவாமியை நம் கண்களில் பார்க்கும்போது பூஜை அறையில் இருக்கும் திருவுருவப்படம் வெறும் படமாக மட்டும் தான் தெரியும். அதில் இறைவனை நம்மால் காண முடியாது.

சில நேரங்களில் பூஜை செய்யும்போது மனநிறைவு அப்படி இருக்கும். தெய்வங்களின் திரு உருவப்படங்கள் நம்மிடம் பேசும். அந்த படங்களில் இருக்கும் கண்களை பார்க்கும் போது ஒரு உயிரோட்டம் நமக்குத் தெரியும். நிஜமாகவே கடவுள் வந்து நம் பூஜை அறையில் அமர்ந்து விட்டாரா என்று கூட தோன்றும். சில பேருக்கு சந்தோஷத்தில் ஆனந்த கண்ணீர் கூட வரும். இப்படி சில நேரத்தில் வீட்டில் இறை சக்தி இருப்பதற்கும் சில நேரத்தில் வீட்டில் இறை சக்தி இருக்காமல் போவதற்கும் என்ன காரணமாக இருக்கும். எப்போதுமே நம்முடைய வீட்டில் இறைசக்தி நிறைந்திருக்க நாம் என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றிய ஆன்மீகம் சொல்லும் வழிபாட்டு முறை இதோ உங்களுக்காக.

 

வீட்டில் தெய்வசக்தி தங்க பூஜை செய்யும் முறை:

வாரம் ஒரு முறை கட்டாயமாக பூஜை அறையை கல் உப்பு கலந்த தண்ணீரில் துடைத்து சுத்தம் செய்ய வேண்டும். மீண்டும் நல்ல தண்ணீரை துணியில் தொட்டு பூஜை அறையை முழுமையாக சுத்தம் செய்து விடுங்கள். (அடுத்தவர்கள் நம் பூஜை அறையை பார்த்து எவ்வளவு அழகாக இருக்கிறதே என்று கண் திருஷ்டி வைத்தாலும் அந்த இடத்தில் ஏதோ ஒரு எதிர்மறை ஆற்றல் வந்து அமர்ந்தது போல இருக்கும். அதை சரி செய்ய கல் உப்பு தண்ணீரைக் கொண்டு சுத்தம் செய்ய வேண்டும்.)

பூஜை அறையில் ஒட்டடை சிலந்தி கட்டாயம் இருக்கக் கூடாது. வாடிய பூக்கள் இருக்கவே கூடாது. இன்று பூக்களை புதுசாக சூட்டி விட்டோம். அடுத்த நாள் போடுவதற்கு பூ இல்லை என்றாலும் வாடிய பூக்களை பூஜை படங்களில் இருந்து எடுத்து விடுங்கள்‌.

தினமும் பஞ்ச பாத்திரத்தில் இருக்கும் தண்ணீரை கீழே ஊற்றிவிட்டு, புதிய தண்ணீரை மாற்றி வைக்கவும். அந்த தண்ணீரில் ஒரு சிட்டிகை பச்சை கற்பூரம், ஒரு துளசி இலை போட்டு வைப்பது கடவுளுக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும். இது ஒரு நேர்மறை ஆற்றலை உங்கள் பூஜை அறைக்கு கொடுத்துக் கொண்டே இருக்கும். பூஜை அறையில் இருக்கக்கூடிய இறைசக்தி, உயிரோட்டத்தோடு இருப்பதற்கு இந்த வாசம் ரொம்ப ரொம்ப முக்கியம். தினமும் குளித்துவிட்டு வந்தவுடன் பூஜை அறையில் விளக்கு ஏற்றி வைக்கவும்.

இது தவிர யார் என்ன சொன்னாலும், காலம் எவ்வளவுதான் மாறினாலும் சரி, தீட்டு காலங்களிலோ அல்லது தீட்டு பட்ட வீட்டிலிருந்து வந்தவர்கள் குளிக்காமல் பூஜை அறைக்கு செல்லவே கூடாது. பெண்கள் மாதவிடாய் காலத்தில் பூஜை அறை வீட்டில் மூடி தான் இருக்க வேண்டும். வெளியிடங்களுக்கு செல்கிறீர்கள் சொந்தபந்த வீட்டில் சுப தீட்டு இருக்கட்டும், அசுப தீட்டு இருக்கட்டும், எதுவாக இருந்தாலும் அந்த வீட்டிற்கு சென்று, நம் வீட்டுக்கு வந்தவுடன் நிச்சயமாக குளித்துவிட்டு தான் பூஜை அறையை தொட தொட வேண்டும் வீட்டில் மற்ற இடங்களுக்கும் செல்ல வேண்டும்.

பூஜை அறையில் கட்டாயமாக பெண்களுடைய முடி ஆங்காங்கே சுற்றிக்கொண்டு இருக்கக் கூடாது. பூஜை அறை சுத்தமாக தான் இருக்க வேண்டும். நாமெல்லாம் மனிதர்கள். நமக்கு மனதிற்கு பிடிக்காத ஒரு இடத்தில் தங்க வேண்டும் என்று சொன்னால் நாம் தங்குவோமா. ஒரு மணி நேரம் கூட நம்மால் நம் மனதிற்கு பிடிக்காத இடத்தில் தங்க முடியாது. தெய்வங்களும் அப்படித்தான்.

அவர்களுடைய மனதிற்கு பிடித்த இடத்தில் மட்டும் தான் தங்குவார்கள். அசுத்தம் நிறைந்த துர்நாற்றம் வீசக்கூடிய சுத்தம் இல்லாத இடத்தில் நிச்சயம் தெய்வங்கள் தாங்காது. மேல் சொன்ன இந்த விஷயங்களை எல்லாம் பின்பற்றி இறுதியாக நீங்கள் உங்களுடைய மனதில் இறைவன் நம்முடைய வீட்டில் இருக்கிறார், பூஜை அறையில் இறைவன் வாழ்கின்றான் என்ற முழு மன நிறைவோடு பக்தியோடு சுவாமிக்கு பூஜை செய்ய வேண்டும்.

சில பேர் எல்லாம் கடமைக்காக வீட்டை சுத்தம் செய்வதும், செய்யாததும் போல, பூஜை செய்ய வேண்டுமே என்று போன போக்கில் ஒரு விளக்கை ஏற்றி கற்பூரம் காட்டுவார்கள். இப்படி சுவாமி கும்பிட்டால் நிச்சயமாக உங்களுடைய வீட்டில் சுவாமி தங்காது. ஆத்மார்த்தமாக இறைவன் இருக்கின்றான் என்று நம்பி பூஜை செய்து பாருங்கள். உங்களுடைய வீட்டில் இறை சக்தி என்றென்றும் தங்கும்