திருநீலகண்ட நாயனார்.

கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரத்தில் அவதரித்து வாழ்ந்து வந்த சிவனடியார். எப்பொழுதும் சிவனாரை திருநீலகண்டம் திருநீலகண்டம் என உச்சரித்தபடியே இருந்தமையால் அவரது திருநாமமே திருநீலகண்டர் என்றாயிற்று. மண்ணிலிருந்து பானை, சட்டி போன்ற உபயோகப் பொருட்களைத் தயார் செய்வதை தொழிலாக கொண்டவர்.அவர் சிதம்பரத்தில் உள்ள சிவனிடத்தில் (பொன்னம்பலவாணர்) பேரன்பும், பக்தியும் கொண்டிருந்தார்.
சிதம்பரம் பூலோக கயிலாயம் என்று சிறப்பாக அழைக்கப்படுகிறது. அது தில்லை மரங்கள் நிறைந்த பகுதியாக விளங்கியதால் தில்லை வனம் என்றும் அழைக்கப்படும். இறைவனையும் தில்லையுள் கூத்தனே என்பர் மணிவாசக பெருமான்.

திருநீலகண்டர் சிவடியார்களுக்கு மண்ணிலிருந்து திருஓடுகள் செய்து கொடுப்பதைத் தொண்டாகச் செய்து வந்தார். ஏனெனில் அடியர்களுக்கு செய்யும் சேவை சிவனுக்கு செய்வதைப் போன்றது அல்லவா? ஆதலால் அத்தொண்டை மிகுந்த விருப்பத்துடன் செய்து வந்தார்.

சிவனிடத்து பற்று கொண்டு அவனை தம் மனத்தில் இருத்தி வைத்திருந்த ஒரு அம்மை, தமக்கு சிவனை மனத்தில் இருத்தி வைக்கும் ஒரு அன்பரே இல்வாழ்வில் துணையாக வரவேண்டுமென இறைவனை வேண்டினார். இறைவனும் தம்மீது மிகுந்த பற்றுகொண்ட திருநீலகண்டரை அம்மைக்கு துணையாக அருளினார். கணவனும், மனைவியும் அடியவர்களுக்கு தொண்டு செய்து இல்லறத்தை நல்லறமாக நடத்தி வந்தனர்.
ஒருநாள் விதிப்பயனாக திருநீலகண்டர் பரத்தையரிடம் சென்று வந்தார். இதனை அறிந்த அவருடைய மனைவி திருநீலகண்டரிடம் சிவனை வைத்துப்போற்றும் நெஞ்சத்தில் வேறொரு பெண்ணை வைத்து விட்டீர்களே, பெரும்பாவம் செய்த தாங்கள் சிவனை நெஞ்சத்தினுள் சுமக்கும் எம்மையும் தீண்டாமல் இருப்பீராக. இது தாங்கள் எப்போதும் சொல்லக்கூடிய அந்த திருநீலகண்டத்தின் மீது ஆணை என்றார்.எனினும் இல்லாளின் பணிகளைச் செய்து வந்தார். திருநீலகண்டரைத் தீண்டுவதைத் தவிர்த்தார்.

திருநீலகண்டத்தின் மீது ஆணையிட்டதால், இனி மனைவியை மட்டுமல்லாமல் எப்பெண்ணையும் மனதாலும் தொட மாட்டேன் என்று திருநீலகண்டர் சபதம் ஏற்றார்.
அப்போதிருந்து அவர் ஐம்புலன்களையும் அடக்கி வாழ்ந்தார். அவர்கள் இருவரும் சிறிய வீட்டில் இருந்தும் மாற்றார் போன்றே இருந்தனர். ஆண்டுகள் பல ஓடின. தம்பதியர் இருவரும் முதுமைப் பருவம் எய்தினர்.
திருநீலகண்டத்தின் மீது ஆணையிட்டதால், திருநீலகண்டரும் அவருடைய மனைவியும் கொண்ட மனஉறுதியினை உலகுக்கு எடுத்துக்காட்டி, அவர்களுக்கு அருள் செய்ய இறைவனார் திருவிளையாடலை ஆரம்பித்தார்.

இறைவனார் வயது முதிர்ந்த சிவனடியாராக வேடம் பூண்டு, திருநீலகண்டரின் இல்லத்திற்கு வந்தார். திருநீலகண்டரும் அவருடைய மனைவியும் சிவனடியாரை அன்புடன் வரவேற்று உபசரித்தனர்.
சிவனடியார் திருநீலகண்டரிடம் திருவோடு ஒன்றினை கொடுத்து “இந்த ஒடு மிகவும் புனிதமானது. இதற்கு ஈடுஇணை ஏதும் இவ்வுலகத்தில் இல்லை. இதனைப் பத்திரமாக வைத்திருங்கள். நான் தக்க சமயம் வரும்போது உங்களிடத்திலிருந்து இதனைப் பெற்றுக் கொள்கிறேன்.” என்று கூறினார். திருநீலகண்டரும் அடியார் கொடுத்த திருஓட்டினை பத்திரமாக பேழையில் வைத்துப்பூட்டினார். சில நாட்கள் கழிந்து தாம் கொடுத்த திருஓட்டினை மறையச்செய்தார் சிவனடியார்.

பின்னர் சிவனடியார் திருநீலகண்டரின் வீட்டிற்கு வந்து தன்னுடைய திருவோட்டினைத் திருப்பித் தருமாறு கூறினார்.திருநீலகண்டரும் திருவோட்டினை பாதுகாப்பாக வைத்திருந்த இடத்தில் சென்று பார்த்தார் அது மறைந்திருந்தது.
மனம் பதைத்து திருநீலகண்ட நாயனார் சிவனடியாரிடம் திருவோட்டினைக் காணவில்லை என்பதைக்கூற அதனைக் கேட்ட சிவனடியார் மிக்க சினம் கொண்டவர் போல நடித்தார்.

அதனை உண்மை என நம்பிய திருநீலகண்டர் “ஐயா, உங்களுக்கு வேறு ஒரு நல்ல திருவோட்டினை செய்து தருகிறேன். என்னுடைய பிழையை பொறுத்துக் கொள்ளுங்கள்.” என்றார். அதற்கு சிவனடியார் எம் திருவோட்டின் மகிமையை அறிந்து களவு செய்தாயோ என்கிறார்.

திருநீலகண்டர் யாம் சொல்வது சத்தியம். களவாடவில்லை என்கிறார். திருநீலகண்டரின் இல்லத்தரசியரும் அவர் சொல்வது உண்மை என்கிறார். சிவனடியாரும் நீங்கள் இருவர் சொல்வதும் உண்மையெனில் இருவரும் கரத்தை பற்றிக்கொண்டு குளத்துநீரில் மூழ்கி எழுந்து சத்தியம் செய்தால் நம்புவேன் என்கிறார். இருவரும் சிவனடியாரின் விருப்பப்படி ஒரு சிறு குச்சியை எடுத்து அதன் இரு நுனிபகுதியை இருவரும் பற்றியபடி குளத்தில் மூழ்கி எடுகின்றனர். சிவனடியாரும் தம்பதிகளின் வயோதிக உருவமும் மறைகிறது. இளமையான தம்பதிகளாக வடிவம் பெறுகின்றனர். இறைவன் இருவரையும் இனிதே இல்லறத்துடன் நல்லறமும் செய்து திருவடிபேறு பெற்று சிவபுரம் சாரும்படி அருள்புரிகிறார்.

திருநீலகண்டரும் இறைவன் ஆணையின்படி சிலகாலம் இல்லறத்தோடு நல்லறம் புரிந்து ஈசனின் திருவடி பேறுபெற்று சிவபுரம் சேருகின்றனர். அறுபத்து மூன்று நாயன்மார்களிலும் ஒருவராக அருள்பெறுகிறார் திருநீலகண்டர். திருநீலகண்ட நாயனார் குருபூசை தைமாதம் விசாகம் நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறது.

திருநீலகண்ட நாயனார் திருவடிகள் போற்றி

அம்மையப்பன் மலரடிகள் போற்றி போற்றி.