திருநாளை போவார் நாயனார்.

சோழ நாட்டில் ஆதனூரில் பிறந்தவர் நந்தன். ஆலயத்திற்குள் சக மனிதர்களால் அனுமதிக்க முடியாத இனத்தில் பிறந்தவராக இருந்தாலும் இறைவனான சிவ பெருமானை தன் நெஞ்சிலே உயர்ந்த இடத்தில் வைத்து வணங்கி வருபவர்.உயிர்பலி கூடாது எனும் சைவசமயநெறியை பின்பற்றி வாழ்ந்தவர். கோயில் முரசுகளுக்கு தோல் தைத்து கொடுப்பது, கோரோசனை வழங்குவது, யாழ்களுக்கு நரம்பு செய்து தருவது, கைலாய வாத்தியத்திற்கு தோல் மற்றும் வார், கொக்கரை ஆகியவை செய்து சிவஆலயத்திற்கு தருவது இவருடைய வேலை.

அதில் கிடைக்கும் பணத்தை தனக்காக இல்லாமல் சிவாலய திருப்பணிகளுக்கு செலவு செய்வார். ஈசனும் அந்த செலவுகளை நந்தனின் புண்ணிய கணக்கில் வரவு வைத்தார். நந்தனுக்கு ஒரு மனவருத்தம் இருந்தது. நந்தன் ஆலயத்திற்குள் சக மனிதர்களால் அனுமதிக்க முடியாத இனத்தில் பிறந்ததால் அவரை கோயிலுக்குள் அனுமதிக்க மறுத்தார்கள்.
அதனால் கோயில் வாசலில் நின்றபடிதான் சிவபெருமானை மனதால் வணங்கி வருவார். எப்படியாவது ஆலயத்திற்குள் சென்று இறைவனை சிவலிங்க ரூபமாக தரிசிக்க வேண்டும் என்று நீண்ட காலமாக வேண்டி வந்தார்.

சிவபெருமானை கோயிலுக்குள் சென்று தரிசிக்க வேண்டும் என்று சொல்லும் போதெல்லாம், “அதெல்லாம் புண்ணியம் செய்தவர்களுக்குதான் கிடைக்கும். நமக்கு அந்த பாக்கியம் இல்லை. நினைப்புதான் பிழைப்பை கெடுக்கும் என்பார்கள். நீ தேவையில்லாத நினைப்பினால் பிழைப்பை கெடுத்துக்கொள்ள வேண்டாம்.” என்று நந்தனின் சமுதாயத்தில் உள்ளவர்களே சொன்னார்கள்.

நந்தனார் தன் கணீரென்ற குரலில் சிவனை நினைத்து பாடல்களை பாடுவார்.

. தாம் பட்டினி கிடப்பதை பற்றி கூட பெரியதாக நினைக்கவில்லை நந்தன். சிவபெருமானுக்கு தன்னால் எதுவும் செய்ய முடியாமல் தாம் செய்து வந்த திருப்பணி தடைப்பட்டதே என்றுதான் மனம் வருந்தினார்.
திருப்புன்கூரில் இருக்கும் சிவபெருமானை தரிசிக்க வேண்டும் என்று நந்தனுக்கு நீண்டநாள் ஆசை இருந்தது. அதனால் திருப்புன்கூர் சென்றார். வழக்கம் போல் சிவாலயத்தின் வெளியே நின்றபடி சிவலிங்கத்தை தரிசிக்க கருவறையை எட்டி எட்டி பார்த்தார் நந்தன். சிவலிங்கத்தை கண்ணாற காண முடியவில்லை. காரணம் நந்தி மறைத்து நின்றது.

இதை கண்ட நந்தன், “அப்பனே..உன்னை காணவிடாமல் நந்தி குறுக்கே நிற்கிறதே.” என்று கலங்கினார். அப்போது யாரும் எதிர்பாராத அற்புதம் அங்கே நிகழ்ந்தது.
நந்தி விலகியது. நந்தன் சிவபெருமானை காண வழி விட்டது. நந்தி விலகியதை கண்டு அந்த ஆலயத்தில் இருந்த பக்தர்கள் திகைத்து நின்றார்கள். நந்தன், ஈசனின் கருணையை எண்ணி மகிழ்ச்சியுடன் வணங்கி சென்றார். அதனால்தான் இன்றுவரை திருப்புன்கூர் ஆலயத்தில் நந்தி விலகியே நிற்கிறது என்கிறது தலபுராணம்.

சிதம்பரம் அழைத்த நடராசர்
ஒருநாள் வானத்தில் மேகங்கள் ஒன்றாக கூடி சிவலிங்கமாக காட்சி நந்தனுக்கு காட்சி தந்தது. “நந்தா.. நீ சிதம்பரம் வா” என்று சிவபெருமான் அழைத்தார். அன்றிலிருந்த தாம் சிதம்பரம் செல்ல வேண்டும். திருச்சிற்றம்பல நாதரை தரிசிக்க வேண்டும் என சொல்லியபடி இருந்தார்.
சிதம்பரம் செல்ல பொருள் வசதி வேண்டி தன் முதலாளியிடம் சென்றார். நந்தனின் சிவபக்தியை பயன்படுத்தி அவரை தன் பண்ணையிலும் வயலிலும் வீட்டிலும் நிறைய வேலை வாங்குவாரே தவிர முதலாளி நந்தனுக்கு பணம் ஏதும் தர மாட்டார். கேட்டால் நாளை தருகிறேன் என்பார்.

நந்தனை யாராவது, “எப்போது நீ சிதம்பரம் செல்வாய்” எனக் கேட்டால், “நாளை போவேன்” என்று சொல்வார். இப்படியே ஆண்டுகள் நகர்ந்தது. முதலாளியும் பணம் தராமல் ஏமாற்றி வந்தார். நந்தனும், “நாளை சிதம்பரம் போவேன்” என்று அப்பாவியாக சொல்லி வந்தார்.
ஒருநாள் நந்தன் பொறுமையிழந்தார். முதலாளியிடம் சென்றார். “ ஐயா… நான் சிதம்பரம் போக வேண்டும். எனக்கு உதவி செய்யுங்க.” என்று அழுது கேட்டார். இதனால் முதலாளிக்கு தர்மசங்கடமாகி விட்டது.

“டேய் நந்தா..நீ சிதம்பரம் போய் என்ன செய்ய போறே.? உன்னை அந்த ஊருக்குள்ளயே விட மாட்டார்கள். அப்புறம் எப்படி கோயிலுக்கு போய் சுவாமியை தரிசிப்பாய்.” என்றார் முதலாளி.
“ ஐயா அதெல்லாம் என்னோட கவலை. நீங்கள் எனக்கு சிதம்பரம் போக பணம் தந்தா போதும்.” என்றார் நந்தன்.
“சரி…உனக்கு பணம்தானே வேண்டும். அப்படி என்றால் ஒரு வேலை செய். என் வயலுக்கு சென்று, என்னுடைய நாற்பது ஏக்கர் நிலத்தையும் பயிர் செய்து அறுவடை செய்த பிறகு உனக்கு பணம் தருகிறேன். நீ தாராளமாக சிதம்பரம் போ.” என்றார் முதலாளி.
இதை கேட்டு அதிர்ச்சியடைந்தார் நந்தன்.

“என் அப்பனே.. இது என்ன புதிய சோதனை.? இந்த நாற்பது ஏக்கர் விவசாய நிலத்தையும் எப்போது பயிர் செய்து அறுவடை முடிப்பது.? என்னால் சிதம்பரம் போகவே முடியாதா?” என்று பாலைவனம் போல இருந்த அந்த விவசாய நிலத்தில் அழுதபடி மயங்கி விழுந்தார்.
நந்தனுக்காக இன்னொரு அற்புதத்தை நிகழ்த்தினார் ஈசன். விவசாய நிலம் அனைத்தும் பயிர் செய்து அறுவடைக்கு தயாராக இருந்தது. கண் விழித்து பார்த்த நந்தன் பெரும் மகிழ்ச்சி அடைந்தார். இறைவனை எண்ணி போற்றி பாடினார். இந்த அதிசயத்தை கண்டவர்கள், முதலாளியிடம் தகவல் சொன்னார்கள். முதலாளி விரைந்தோடி வந்தார். திகைத்து நின்றார். முதலாளியை கண்ட நந்தன் ஓடி வந்தார்.

“ஐயா. பயிர் அறுவடைக்கு தயாராகிவிட்டது. அறுவடை முடிந்தவுடன் நான் சிதம்பரம் போக உதவி செய்வீர்களா?” என்று அப்பாவியாக கேட்டார் நந்தன்.
நந்தன் சிதம்பரம் செல்ல பண உதவி தந்து அனுப்பினார்.

சிதம்பரம் சென்றார் நந்தனார். ஊருக்குள் செல்ல தயங்கி, தூரத்தில் இருந்தே சிதம்பர கோயில் கோபுரத்தை தரிசித்து பெரும் மகிழ்ச்சி அடைந்தார். கோயிலுக்குள் யாரும் அனுமதிக்கவில்லை என்றால் என்ன? சிதம்பரமே சிவன்தானே என்றுணர்ந்து, சிதம்பரம் மண்ணை கையில் அள்ளி நெற்றியில் பூசி கொண்டு ஊருக்கு வெளியே தங்கி இருந்தார் நந்தனார்.

அன்றிரவு கோவில் முக்கியமானவர்கள், மற்றும் தில்லைவாழ் அடியவர்களின் கனவில் நடராசப் பெருமான் தோன்றி,
நம் அடியவன் “திருநாளைப் போவார்” வந்திருக்கிறார். நம் சிதம்பரத்தின் வெளியே தங்கி உள்ளார். சிறப்புகள் பல செய்து நம்மிடம் அழைத்து வாருங்கள்.” என்றார் திருச்சிற்றம்பல நாதர்.

மறுநாள் சிதம்பரமே ஒன்றுக் கூடி திரண்டு, பூரண கும்பமரியாதையுடன் “திருநாளைப் போவார்” என்று இறைவனால் அழைக்கப்பட்ட நந்தன் என்கிற நந்தனாரை கோயிலுக்கு அழைத்து வருவதற்கு ஆயத்தம் ஆனார்கள்.. அவரை ஜோதி வடிவில் இறைவன் வரச் சொன்னதாக சொல்லினர்.. அதன்படி தீக்குண்டம் தயாரானது..

ஆனால் நந்தனார் மனதில் எந்த பதட்டமும் அவர் முகத்தில் எந்த அதிர்ச்சியும் இல்லை.
“என் வாழ்வில் எத்தனையோ அற்புதங்களை செய்தார் இறைவன். அவையெல்லாம் நானே எதிர்பாராதது. நான் சிதம்பரம் வருவதற்கே ஒரு அற்புதம் செய்து அனுப்பினார். இறைவனின் விருப்பதை யாராலும் தடுக்க இயலாது” என்றார் திருநாளை போவார்.

தீ கொழுந்துவிட்டு எரிந்தது. அந்த தீ குண்டத்தில் நந்தனார் கவலையின்றி, “திருச்சிற்றம்பலம்” என ஈசனை நினைத்தவாறே இறங்கினார். இறைவனின் பல அதிசயங்களில் இங்கு ஒன்று நடந்தது. தீயில் இறங்கி தன் பூதஉடல் அழியப்பெற்று அழகிய ஞானஒளி வீசும் தெய்வீக தோற்றத்துடன் பொன்னொளி வீச வெளிப்பட்டார் நந்தனார்.

ஆலயத்திற்குள் மணியோசை எழும்பியது. அந்த மணி ஓசை திருநாளை போவார் எனும் நந்தனாரை, “உள்ளே வா” என்று இறைவனே அழைப்பது போல இருந்தது. நந்தனார் கோயிலுக்குள் நுழைந்தார். கருவரையின் முன்னதாக நின்று நடராசப் பெருமானை கண்குளிரக் கண்டார் .
தன் தாய்-தந்தையை ஒரு குழந்தை பார்த்ததும் அதன் அருகில் செல்வது போல, நந்தனாரும் நடராசப் பெருமானை கண்டவுடன் கருவறைக்குள் நுழைந்தார்.சோதி வடிவில் தோன்றினார். மாசற்ற சோதியான இறைவனுடன் நந்தனார் ஒன்றென கலந்தார்.

மணிவாசக பெருமானை எப்படி தமக்குள் புகுவித்து கொண்டானோ அம்பலக்கூத்தன் அதைப்போன்றே நந்தனார் பெருமானையும் தமக்குள்ளே புகுவித்து கொண்டான் இறைவன். ஆலயத்திற்குள்ளே சகமனிதர்களால் அனுமதிக்காத ஒருவரை ஆண்டவன் தமக்குள்ளேயே வைத்துக்கொண்டான்.பேராது நின்ற பெருங்கருணை பேராறு இறைவன். அவனுக்கு அனைத்து உயிர்களும் சமமே. தில்லைத்திருத்தல மண்ணையும் மிதிப்பது பாவம் என்றெண்ணிய நந்தனாரை தமக்குள்ளேயே அணைந்தருளிய நம் தங்கத்தலைவன் பொன்னம்பலத்தான் கருணை எவருக்கு வந்தருளும். சிவாயநம.

நந்தனார் நாயனார் திருவடிகள் போற்றி.

அம்பலக்கூத்தன் மலரடி போற்றி.
அன்னை சிவகாமி
மலரடி போற்றி.