வைகுண்ட ஏகாதசிக்கு முதல்நாளன்று நம்பெருமாள் மோகினி அலங்காரத்தில் காட்சி அளிப்பார். இந்த மோகினி அலங்காரம் அன்று நடைபெறுவதற்கான காரணம் பின் வருமாறு .. (Perumal mohini darshan)

ஏற்கெனவே சென்ற இடமெல்லாம் பக்தர்களைப் பைத்தியமாய் அடித்துத் தன் பக்கம் இழுத்த அழகிய மணவாளன் ஆன நம்பெருமாளுக்குத் தனியாக மோகினி அலங்காரம் என்று வேண்டுமா? இல்லை; இல்லை. அதனால் எல்லாம் இவன் அனைவரையும் கவர்ந்தான் எனச் சொல்வதற்கு இல்லை. ஆனால் தில்லையம்பலத்து ஆனந்த நடராஜரை எவ்வாறு ஆனந்தத் தாண்டவக் கோலத்தில் தரிசிப்பது ஆனந்தம் அளிக்கிறதோ அவ்வாறே நம்பெருமாளையும் மோகினி அலங்காரத்தில் காண்பது கண்கொள்ளாக் காட்சியாகும். உண்மையில் மக்களுக்குப் பித்தே ஏற்பட்டு விடும். அப்படியொரு பிரகாசமான பேரழகு. காணக் கண் கோடி வேண்டும். இதன் தாத்பர்யம் என்னவெனில் மார்கழிமாதம் தசமியன்று தான் திருப்பாற்கடல் கடையப் பட்டு அமிர்தம் வந்ததாகச் சொல்வார்கள். துர்வாசரின் சாபத்தினால் தேவலோகத்தை இழந்த இந்திரன், தன் சக்தியையும் இழக்கவே திருமாலின் ஆலோசனைப் படி அசுரர்களின் உதவியோடு, தேவர்களும் கூடிப் பாற்கடலைக் கடைந்தனர்.

Perumal mohini darshan

மத்தாக இருந்த மந்த்ர மலை சாய்ந்துவிழுந்துவிடும் நிலையில் கூர்மமாக மாறி அந்த மலையைத் தன் மேல் தாங்கினார் திருமால். வாசுகியான பாம்பரசனைக் கயிறாகக் கொண்டு கடைந்ததால் அதன் வாய் வழி வந்த விஷமும், பாற்கடலின் மேலே இருந்த ஆலகால விஷமும் ஒன்று சேர்ந்து வெளிவரவே அதைத் திரட்டி ஒரு உருண்டையாக்கி உட்கொண்டு ஈசன் திருநீலகண்டராக ஆக, பின்னர் ஒவ்வொன்றாக வெளிவந்து கடைசியில் தங்கக் கலசத்தில் அமுதமும் வெளிவந்தது. அசுரர்கள் அதைப் பறித்துக்கொள்ள எப்போதும் போல் ஏமாந்த தேவர்கள் திருமாலைச் சரணடைந்தனர். திருமாலும் ஒரு அழகிய பெண்ணாக மாறி தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் அமுதம் கொடுப்பதற்கு முன் வந்து அசுரர்களை ஏமாற்றி தேவர்களுக்கு அமுதம் கிட்டச் செய்தார். இந்த சுக்லபக்ஷ தசமியின் மறுநாளே தேவர்கள் வைகுண்ட வாசியான மஹாவிஷ்ணுவான திருமாலைப் போற்றி வணங்கித் தங்களுக்குத் தரிசனம் கொடுத்தருள வேண்ட மஹாவிஷ்ணுவும், வைகுண்ட வாசலான பரமபத வாசலைத் திறந்து வெளி வந்து பரமபதத்தில் ஆஸ்தானமாக வீற்றிருந்து தேவாதி தேவர்களுக்கு தரிசனம் அளிக்கிறார். இதுவே வைகுண்ட ஏகாதசித் திருநாளின் முதல்நாளன்று மோகினி அலங்காரத்திற்கான காரணமும், மறுநாள் நம்பெருமாள் பரமபத வாசல் வழி வெளி வந்து (அன்றொரு நாள் விரஜா நதிக்கரையில் உள்ள பரமபதத்தில் காட்சி அளித்தவாறு) ஆயிரங்கால் மண்டபத்தில் உள்ள திருமாமணி மண்டபத்தில் ஆஸ்தானம் இருந்து காட்சி அளிக்கிறார்.

 

Perumal mohini

அரங்கன் ஆஸ்தானமிருந்து கட்டளையிடும் அழகைப் பார்க்கும் முன்னர் அரங்கனின் திவ்ய அலங்காரம் குறித்த ஒரு வர்ணனை. தோளில் கிளி மாலையுடனும், தலையில் பாண்டியன் கொண்டையுடனும் காட்சி அளிக்கும் நம்பெருமாளுக்கு ரத்தின அங்கியால் அலங்கரிக்கின்றனர். வைகுண்ட ஏகாதசி அன்று நம்பெருமாள் முழுதும் ரத்தினங்களால் ஆன அங்கி அணிந்திருப்பார். இந்த ரத்தின அங்கியை சூரியனின் கதிர் வீச்சுக்குச் சமமாகச் சொல்கின்றனர். இந்தக் கதிர்வீச்சு மருத்துவ மற்றும் தெய்வீக குணம் உள்ளது. என்றாலும் இதுவும் ஒரு அளவுக்கு மேல் போனால் ஆகாது என்பதால் அந்த ரத்தின அங்கியில் அவரைப் பாதி வரை தான் பார்க்க இயலும். இடுப்புக்குக் கீழே சல்லாத்துணியால் மறைத்திருப்பார்கள். இவ்வாறு ஒளி மிகுந்த ரத்தினங்களின் கிரணங்கள் சூரிய கிரணங்கள் போல் பக்தர்கள் மேல் படுவதால் அதன் பாதிப்பைக் குறைக்கவே பெரிய பெருமாளை முத்தங்கியால் அலங்கரிக்கின்றனர். வைகுண்ட ஏகாதசி அன்று நம்பெருமாள் பரமபத வாசல் காணுவதே முக்கியம் என்பதால் அதை முதலில் கண்ட பக்தர்கள் பின்னர் மூலவரான பெரிய பெருமாளைக் காண வரும்போது சந்திரனின் குளிர்ந்த கிரணங்கள் போன்ற சந்திரனின் கதிர்வீச்சின் குணம் கொண்ட முத்துக்களால் ஆன அங்கி அணிவிக்கப் படுகிறது. சூரிய கிரணங்களின் வீரியத்தை ஈடு செய்யும் வகையிலேயே இந்த அங்கி பெரிய பெருமாளுக்கு அணிவிக்கப் படுகிறது.

இந்த மோகினி அல்ங்காரத்துடன் பராங்குசநாயகியான நம்மாழ்வாரைப் பார்த்து, நம்பெருமாள் கேட்டாராம்: “என்ன எப்படி என் அலங்காரம்? அதோ அங்கே பார், ஶ்ரீயை விட என் அலங்காரம் பிரமாதமில்லை? அவளை விட நான் அழகு இல்லை? என்னைப் பார் என் அலங்காரத்தைப் பார்!”

நம்மாழ்வார்: தேவரீர் அடியேனை க்ஷமிக்க வேண்டும். ஒரே ஒரு குறை உள்ளது!

நம்பெருமாள்: குறையைச் சொல்லும் சடகோபரே, நிவர்த்திக்கிறேன்.

நம்மாழ்வார்: தேவரீரால் இயலுமா?

நம்பெருமாள்: அதென்ன அப்படிக் கேட்டுவிட்டாய்?

நம்மாழ்வார்: தேவரீருக்கு எல்லா அலங்காரமும் பொருந்தியே வருகிறது. அதே போல் இந்த மோகினி அலங்காரத்திலும் ஜொலிக்கிறீர் தான்!

நம்பெருமாள்: அப்புறமென்ன?

நம்மாழ்வார்: ஆனால் ஸ்ரீஎனப்படும் மஹாலக்ஷ்மித் தாயாரின் கடைக்கண்களில் இருந்து கிளம்பும் கருணை ஒளியான ஜோதியை இங்கே காண முடியவில்லையே ஸ்வாமி!

நம்பெருமாளின் முகத்தில் குறுநகை. படிதாண்டாப் பத்தினியான ரங்கநாயகியைப் பார்த்து, இப்போது சந்தோஷமா என்னும் பாவனையில் பார்க்கிறார்.

நன்றி ! இணைய தளம் !

Leave a Comment

Enable Notifications Allow Miss notifications