Pamban swamigal history tamil
பாம்பன் குமரகுருதாச சுவாமிகள் வரலாறு (Pamban swamigal history)
பாம்பன் சுவாமிகள் இருபதாம் நூற்றாண்டில் வாழ்ந்த உன்னத துறவியாவார். முருகன் பால் அன்பு பூண்டு கவிகள் பல பாடி கனவிலும, நனவி-லும் ஆறுமுகப்பெருமானை தரிசித்தவர். சுவாமிகளின் தமிழ் ஞானம் அளவிடற்கரியது. சுவாமிகள் உலகம் உய்ய பல அருள் நூல்களை அருளிச் செய்துள்ளார். சுவாமிகளின் வாழ்க்கை வரலாற்றினை இங்கு சுருக்கமாக விளக்கப்பட்டுள்ளது. அனைவரும் படித்து பயன் பெறுவோமாக.
*பிறப்பு*
பாம்பன் என்னும் ஊரில் பாம்பன் சுவாமிகள் பிறந்தார். அடிகளாரது தந்தையார் சாத்தப்ப பிள்ளை, தாயார் செங்கமல அம்மையார். அடிகளாரது பிள்ளை திருநாமம் அப்பாவு. சுவாமிகள் பிறந்த ஆண்டு உறுதியாக அறியப்படவில்லை. 1850 முதல் 1852 ஆண்டுக்குள் இருக்கலாம் என நம்பப்படுகிறது.
*தமிழ் ஞானம்*
அடிகளார் சிறு வயதிலேயே தமிழ் மொழியில் மிகுந்த ஞானத்துடன் விளங்கினார். திருமுருகன்பால் மிகுந்த பக்தி கொண்டார்.
கந்த சஷ்டி கவசத்தை நாள்தோறும் 36 முறை ஓதினார்.
கந்த சஷ்டி கவசத்தை எழுதிய தேவராய சுவாமிகள் போல் தாமும் முருகன் பால் தமிழில் கவி பாட வேண்டும் என வேட்கை கொண்டார்.
ஒவ்வொரு பாடலின் முடிவிலும் அருணகிரிநாதரின் பெயரை வைத்தே முடிக்க வேண்டும் என முடிவு செய்தார்.
முதன் முதலாக முருகனை போற்றி “கங்கையை சடையிற் பரித்து” என தொடங்கும் பாடலை இயற்றினார்.
தினமும் உண்பதற்கு முன் ஒரு பாடல் வீதமாக நூறு பாடல்கள் இயற்ற வேண்டும் என்ற நியதியை மேற்கொண்டார்.
அவ்வாறே நூறு பாடல்களை இயற்றினார். பின்னர் சேது மாதவ ஐயர் என்பவரிடம் சடக்ஷர மந்திர உபதேசம் பெற்றார்.
*திருமணம்*
சுவாமிகள் திருமண பருவம் அடைந்தும் திருமணஞ் செய்து கொள்ள விருப்பமில்லாமல் இருந்தார். சேது மாதவ ஐயரின் வற்புறுத்தலின் பேரில் 1872ஆம் ஆண்டு காளிமுத்தம்மையார் என்பவரை மணம் புரிந்தார். மூன்று ஆண்டுகள் கழிந்தன.
முருகாண்டியாபிள்ளை, சிவஞானாம்பாள், குமரகுருதாச பிள்ளை என்று மூன்று குழந்தைகள் பிறந்தனர்.
சிவஞானாம்பாளுக்கு ஒராண்டு நிரம்பிய போது ஒரு நாள் நள்ளிரவில் ஓயாது அழுது கொண்டே இருந்தது. அம்மையார் சுவாமிகளிடம் குழந்தை அழுவதை கூறி திருநீறளிக்குமாறு வேண்டினார்.
சுவாமிகள் இப்பொழுது எவருக்கும் திருநீறு அளிப்பதில்லை என்றும், முருகனிடம் வேண்டுமாறும் கூறினார். அவ்வாறே அம்மையார் முருகனிடம் வேண்டி குழந்தையின் அருகில் படுத்தார்.
அப்போது, காவி உடை உடுத்திய ஒருவர் அங்கு வந்து குழந்தையை அம்மையாரிடம் வாங்கி திருநீறு பூசி குழந்தை இனி அழாது என கூறி தாயிடம் தந்து விட்டு மறைந்தருளினார். அம்மையார் நடந்தவற்றை சுவாமிகளிடம் கூறினார். சுவாமிகள் முருகனின் திருவருளை நினைத்து வியந்தார்.
*பொய் பகரல்*
சுவாமிகளின் பெருமையை உணர்ந்து பல அடியார்கள் சீடர்கள் ஆயினர். இந்நிலையில், சுவாமிகளின் தந்தையார் சிவபதம் அடைந்தார்.
சுவாமிகள் துறவறம் மேற்கொள்ளும் எண்ணத்தில் இருந்தார். ஒரு சமயம் அங்கமுத்துப்பிள்ளை என்பவரிடம் தாம் பழனி செல்ல இருப்பதாக சுவாமிகள் கூறினார்.
அங்கமுத்துப்பிள்ளை தற்போது செல்ல வேண்டாம் என சுவாமிகளிடம் கூறினார். அதற்கு சுவாமிகள், இது முருகப்பெருமான் ஆணை என பொய் பகன்றார்.
அன்று மாலை, சுவாமிகள் வீட்டின் மாடியில் அமர்ந்திருந்தார். அப்பொழுது, சுவாமிகள் கண்களுக்கு தென் திசையில் இறை உருவம் தென்பட்டது.
அந்த உருவம் அச்சுறுத்தும் வகையில் பயங்கரமாக இருந்தது. “எனது கட்டளை என பொய் கூறினாயே, இது முறையாகுமா?” எனக்கூறி அச்சுறுத்தியது.
சுவாமிகள், இறைவனது சினத்தை கண்டு அஞ்சி, “தம் தவறுக்கு மன்னித்தருளுமாறு” வேண்டினார். அதற்கு, இறைவன், “இனி பழனிக்கு வரக்கூடாது” என உறுதி அளிக்குமாறு கூறினார்.
சுவாமிகளும் அவ்வாறே உறுதி அளித்ததும் அந்த உருவம் மறைந்து போனது. ஒரு பொய் கூறிய காரணத்தினால் சுவாமிகள் இறுதி வரை பழனி செல்ல முடியாமல் போனது.
அடிகளாரின் தந்தையார் இறந்ததால், சுவாமிகளுக்கு குடும்ப சுமை அதிகரித்தது. சுவாமிகள் குத்தகை தொழில் புரிந்து வந்தார்.
1891ம் ஆண்டு தமக்கு வந்த இன்னல் நீங்கும் பொருட்டு அ முதல் ன முடிய (உயிர் எழுத்து – 12, மெய் எழுத்து – 18) 30 பாடல்களால் சண்முக கவசம் இயற்றினார்.
இதனால் அவரது இன்னல் நீங்கியது. சண்முக கவசம் மிகவும் சக்தி வாய்ந்தது. இதனை பாராயணம் செய்து பலனடைந்தார் பலர்.
சிறிது நாள் கழித்து, பரிபூஜன பஞ்சாமிர்த வண்ணம் எனும் செய்யுளை பாடியருளினார். இந்த பாடல் முருகப்பெருமானுக்கு மிகவும் விருப்பமானது.
*வழக்குகளில் வெற்றி*
அடிகளார் தொழில் நிமித்தமான பல்வேறு வழக்குகளை சந்திக்க நேர்ந்தது. முருகன் அருளால் வழக்குகள் அனைத்திலும் வெற்றி பெற்றார்.
*குமர கோட்ட தரிசனம்*
சுவாமிகள் பல திருத்தலங்களை தரிசிக்க வேண்டி தல யாத்திரை மேற்கொண்டார்.
மதுரை, திருவண்ணாமலை, திருக்காளத்தி, திருத்தணி எனும் திருத்தலங்களை தரிசித்து விட்டு காஞ்சிபுரம் வந்து சேர்ந்தார்.
அங்கு உள்ள பல திருக்கோயில்களை தரிசித்து விட்டு ஊர் திரும்ப எண்ணினார்.
அப்போது, ஒரு சிவந்த மேனியுடைய இளைஞர் அடிகளாரை அணுகி, “இங்கு வந்த காரியம் யாது” என வினவினார்.
அதற்கு சுவாமிகள், “ஆலய தரிசனத்துக்காக” என்றார். “குமரகோட்டம் தரிசித்ததுண்டா?” என இளைஞர் கேட்டார். அதற்கு அடிகளார், “அது எங்குள்ளது” என்றார்.
அதற்கு இளைஞர் “என் பின்னே வருக” என கூறி அழைத்து சென்றார்.
குமரகோட்டம் திருக்கோயிலை காண்பித்து விட்டு மறைந்து போனார்.
இது ஆறுமுகப்பெருமானின் திருவிளையாடல் என்று உணர்ந்த சுவாமிகள், கண்ணீர் பெருக்குடன் குமரகோட்ட முருகப்பெருமானை வழிபட்டார். பின் பாம்பன் வந்தடைந்தார்.
*தவம் புரிதல்*
அடிகளார் முருகப்பெருமானை நேரில் கண்டு உபதேசம் பெற வேண்டும் என பேராவல் கொண்டார். 1894ம் ஆண்டு பிரப்பன்வலசை எனும் ஊரை அடைந்தார்.
அங்கு உள்ள மயான பூமியில் தமது சீடர்களின் உதவியால் ஒரு சதுரக் குழி வெட்ட செய்தார். அதை சுற்றி முள் வேலி, கொட்டகை அமைக்கச் செய்தார்.
அக்கொட்டகையின் உள் ஒரு கை செல்லுமாறு சிறிய சந்து அமைக்க செய்து, நாள் தோறும் ஒரு வேளை உப்பிலாத அன்னம் வைக்குமாறு சீடர்களுக்கு கூறினார்.
வைத்த உணவை தாம் எடுக்கவில்லையானால் அது முதல் வைக்க வேண்டாம் என கட்டளையிட்டார். பின்னர் அக்குழியில் அமர்ந்து தியான யோகத்தில் ஈடுபட்டார்.
முதல் ஐந்து நாள், பேய்கள் அவரை சூழ்ந்து தவத்திற்கு இடையூறு செய்தன.
பின்னர் ஒரு ஆவி, அவரை தூக்க முயன்றது. சுவாமிகள் ஷடக்ஷர மந்திரத்தை ஓங்கி கூறினார். அந்த பேய்கள் அவரை விட்டு நீங்கி மறைந்து போனது.
அடிகளார் தவத்தை தொடர்ந்து புரிந்து வந்தார். எழாவது நாள் இரவில் இரு முனிவர்களுடன், முருகப்பெருமான் இளைய அடிகளார் உருவில் காட்சி அளித்தார்.
அவரிடம் ஒரு ரகசியமான சொல்லை உபதேசித்து விட்டு, அம்முனிவர்களுடன் மேற்கு திசை நோக்கி சென்று மறைந்து போனார்.
அச்சொல்லை சிந்தித்த வண்ணம் முப்பது நாள் தவ யோகத்தில் இருந்தார். முப்பத்தைந்தாம் நாள், “தவத்திலிருந்து எழுக” என்ற ஒலி கேட்டது.
“முருகன் கூறினால் மட்டுமே எழுவேன்” என சுவாமிகள் கூறினார். “முருகன் கட்டளை! எழுக” என்று பதில் வந்தது.
சுவாமிகள், அவ்விடத்தை வணங்கி விட்டு அங்கிருந்து நீங்கினார். பின் பாம்பன் வந்து சேர்ந்தார். அது முதல் வெள்ளை அங்கி அணியலானார்.
*துறவு பூணுதல்*
1895ம் ஆண்டு கார்த்திகை மாதம் ஒரு நாள் தமது சீடர் ஒருவரிடம் தாம் துறவு பூண்டு செல்லும் முடிவை கூறினார்.
பின்னர், பாம்பனை விட்டு நீங்கி ஒரு படகு மூலம் வடகரை அடைந்தார். பின்னர் சென்னை செல்லும் எண்ணம் அவர் மனதில் உதித்தது. அவ்வாறே சென்னை வந்தடைந்தார்.
அங்கு ஒருவர் அடிகளாரை அணுகி அவரை வைத்தியநாத முதலித் தெருவில் உள்ள ஒரு இல்லத்தில் சேர்ப்பித்தார்.
அந்த இல்லத்தின் உரிமையாளரான ஒரு அம்மையார், தமது கனவில் அடிகளாரை உபசரிக்குமாறு கட்டளை பிறந்ததாக சுவாமிகளிடம் கூறி, அடிகளாருக்கு அன்னம் படைத்து உபசரித்தனர்.
சுவாமிகள் முருகப்பெருமானின் அருட்செயலை எண்ணி உவந்து இருந்தார். சென்னையில் அடிகளாருக்கு பல சீடர்கள் சேர்ந்தனர்.
பின்னர், சென்னையில் உள்ள திருத்தலங்களை தரிசித்து மகிழ்ந்தார். முருகன் பால் பல திருப்பாக்களை பாடி அருளினார்.
*காவியுடை தரித்தல்*
சுவாமிகள் காசி செல்ல பெருவிருப்பங்கொண்டு ஆடித்திங்கள் தொடக்கத்தில் காசி யாத்திரை மேற்கொண்டார்.
பெஜவாடா, கோதாவரி, விசாகப்பட்டினம், ஜகந்நாதம், கல்கத்தா, கயா முதலிய இடங்களுக்கு சென்று அங்குள்ள மூர்த்திகளை ஆறுமுக மூர்த்தியாகவே எண்ணி வழிபட்டார்.
பின்னர் காசி மாநகரம் சேர்ந்து அங்கு உள்ள குமரகுருபரர் திருமடத்தில் தங்கினார். அங்கிருந்த ஒரு வயோதிக அடியார் ஒருவர், சுவாமிகளுக்கு காவியுடை அளித்து, அதனை ஏற்றுக் கொள்ளுமாறு வேண்டினார்.
இது குமரகுருபரருடைய ஆணை என்று அடிகளார் உட்கொண்டு அவரை வணங்கி அவர் அளித்த காவி உடையை ஏற்றுக் கொண்டார்.
அன்று முதல், சுவாமிகள் காவியுடையை மட்டுமே அணியலானார்.
பின்னர் சென்னை வந்தடைந்தார். அடிகளார் எந்நேரமும் ஆறுமுகப்பெருமானை தியானிப்பதும், அப்பரமனை போற்றி பாடல்கள் பாடுவதும், மற்ற நேரங்களில் திருத்தல யாத்திரை புரிவதுமாகவே வாழ்ந்து வந்தார்.
*பின்னத்தூர் அடைதல்*
சென்னையை சுற்றியுள்ள திருவொற்றியூர், பழவேற்காடு, ஆண்டார்குப்பம் போன்ற திருத்தலங்களை தரிசித்து விட்டு சிதம்பரம் அருகே உள்ள பின்னத்தூர் என்ற ஊரை அடைந்தார்.
அங்குள்ள அடியார்கள் சுவாமிகளை வணங்கி உபசரித்தனர்.
அங்கு சிவ நிந்தனையில் ஈடுபட்டு வந்த சில வைணவர்கள் மீது வழக்கு தொடர்ந்து வெற்றி பெற்றார்.
வழக்கில் தோற்ற சிலர், ஒரு மந்திரவாதியின் மூலம் சுவாமிகளை கொல்லும் பொருட்டு ஒரு துர்த்தேவதையை ஏவினர்.
ஆனால், சுவாமிகளின் அருள்த் தன்மையினால், அத்தேவதை சுவாமிகளை கண்டு அஞ்சி தன்னை ஏவிய மந்திரவாதியை தாக்கி கொன்றது.
சுவாமிகளை கொல்ல பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், முருகன் அருளால் அடிகளார்க்கு எந்த தீங்கும் நேரவில்லை.
பின்னர் பல ஆண்டுகள் கழித்து 1914ம் ஆண்டு மீண்டும் சென்னை சேர்ந்தார்.
*குமாரஸ்தவம் இயற்றல்*
1918ம் ஆண்டு தமக்கு ஏற்பட்ட வெப்பு நோய் விலகும் பொருட்டு குமாரஸ்தவம் எனும் அர்ச்சனை நூலை சுவாமிகள் இயற்றினார். அந்நோயும் நீங்கியது.
சுவாமிகள் திருப்புகழ் பாடிய அருணகிரிநாதர் சுவாமிகட்கு குரு பூஜை நடத்தப்படாமை குறித்து வருந்தினார்.
தியான யோகத்தில் அமர்ந்து, அருணகிரிநாதர் முக்தி பெற்ற தினம் உத்தராயணம் கழிந்த ஆறாவது பௌர்ணமி என்று உணர்ந்தார்.
தமது சீடர்களுக்கு இது குறித்து அறிவித்து குரு பூஜை நடைபெறுமாறு செய்தார்.
*சுவாமிகளின் பாடல் தொகையும் பலன்களும்*
1. முதல் மண்டலம் – குமரகுருதாச சுவாமிகள் பாடல்
2. இரண்டாம் மண்டலம் – திருவலங்கற்றிரட்டு 2 கண்டங்கள்
3. மூன்றாம் மண்டலம் – காசியாத்திரை, பரிபூரணானந்தபோதம், தகராலய ரகசியம்
4. நான்காம் மண்டலம் – சிறுநூற்றிரட்டு, திருத்தலத்தரிசனத்தின் போது பாடிய கட்டளை கலித்துறை, சேந்தன்செந்தமிழ், பத்துப் பிரபந்தம், குமரவேள் பதிற்றுப் பத்தந்தாதி, குமாரஸ்தவம், செக்கர் வேள் செம்மாப்பு, செக்கர் வேளிறுமாப்பு, சீவயாதனா வியாசம்.
5. ஐந்தாம் மண்டலம் – திருப்பா
6. ஆறாம் மண்டலம் – ஸ்ரீமத் குமார சுவாமியம்
இப்படி ஆறாயிரத்தறுநூற்றறுபத்தாறு பாக்களைச் செவ்வேட் பரமனுக்கு சூட்டிய பெருமையோடு சாத்திர நூல்களாகத் திருப்பா, பரி்பூரணானந்தபோதம், தகராலய ரகசியம் எனும் மூன்று நூல்களையும் சுவாமிகள் நமக்கு வழங்கினார்.
வடமொழி நூலார் மரபையொட்டி திருப்பா முதல் 10 பாடல்களுக்கு “திட்பம்” எனும் உரையும் பரிபூரணானந்தபோதத்துக்கு சிவசூரியப்பிரகாசம் எனும் உரையும் தகராலய ரகசியத்துக்குச் சதானந்த சாகரம் என்ற உரையும் வழங்கி உரையாசிரியர் ஆனார்கள். காசியாத்திரை என 608 பாடல்கள் பாடி முதற் பயண நூல் படைத்தவர் ஆனார்கள். 1906 ஆண்டு வடமொழி தவிர்த்து 50 வெண்பாக்களில் “சேந்தன் செந்தமிழ்” பாடி முதல் தனித்தமிழ் பனுவல் படைத்த “பாமணி” ஆனார்கள்.
சைவசமயசரபம்,நாலாயிரப்பிரபந்த விசாரம் படைத்ததன் மூலம் வாதநூல் வல்ல “பரசமயக் கோளறி” ஆனார்கள்.
கு-எனில் அறியாமை, ரு-எனில் அதைப் போக்குபவன்
கு-எனில் குணம், ரு-எனில் ரூபம், குணமும் ரூபமும் கொண்டவன் குரு – அவனை வழிபடுவோர்க்கு இவ்விரண்டு நலனையும் அருள்வான்.
கு-குருடு, ரு-அறிவு ஒளி-குருட்டு விழிக்கு அறிவு ஒளி அளிப்பவனே குரு.
அவனை நாட அவனருள் கூட அவன் பாடிய 6666 பாடல்களுமே நமக்குத் துணை – ஜனனக் கடல் கடக்க நாம் பிடிக்கும் புணை, துணை, எல்லாம் அவையே!
ஆறாயிரத்தருநூற்றறுபத்தாறையும் பாடிப் பரவிப் பரமனை வழிபடுவோர் – இகபர சௌபாக்கியங்களையும் பெற்று மரணமிலாப் பெருவாழ்வாம் மாண்படைவர்.
தமிழகத்தில் தோன்றிய தவசீலர்களில் சுவாமிகள் ஒருவரே தமது பாடல்களுக்கு இன்னின்ன பலன்கள் கிட்டுமென்று வரையறுத்து வாக்களித்தவர், முருகனிடம் வாக்குறுதி பெற்றவர்.
“நான் பாடு பாட்டை நவில்பவர்க்கு நலம் நல்காய்
கான்பாடு வண்டறையும் கழுகுமலை முருகா”
“எனைத் தள்ளினாலு மெனை நம்பினவர்த் தள்ளேல்
கனைத் தண்டை சிலம்ப வரும் கழுகுமலை முருகா”
துன்புறுத்தும் நோயிலிருந்து விடுபடக் – குமாரஸ்தவம்
உலகில் நடைவருத்தும் பகைஒழிய – பகைகடிதல், சங்கடம் தரும் வழக்கு, சதிகாரர்களின் சழக்கு, வழிச்செலவில் வரும் ஆபத்து இவை களிலிருந்து நமைக் காக்க – சண்முக கவசம்
மகப்பேறு பெறுவதற்கு – வேற்குழவி வேட்கை
பாபநாசம், சத்துருநாசம் ஆயுள்விருத்தியுடன் சர்வார்த்த சித்தியும் முக்தியும் பெற- — அட்டாட்ட விக்ரக லீலை பாராயணம் செய்து பயன்பெறுவீர் பக்தர்களே!
இவ்வாறு நாள் தோறும் உணவு உண்பதற்கு முன் ஒள்வேள் கடவுளாகிய ஒப்பற்ற முருகனுக்கு வாடும் பூமாலை சூட்டாமல் வாடாப் பாமாலை சூடி வழிபட்டார் அப்பாவு எனும் குமரகுருதாசர் – அப்பொழுது சுவாமிகள் பெற்ற பேரின்பம் தான் என்னே?
பாடியே அறியா எளியேன் வாய்
பாடலுள் கிருபை எனவும் நினைந்தேன்
நேடியே அறியாத என் நினைவு
நினை நினைந்திடல் கருதியும் மகிழ்ந்தேன் –
இவ்வாறு பாடலோர் பாடி முடித்தபின் அவற்றை ஒரு நோட்டுப்புத்தகத்தில் சுவாமிகள் எழுதி வைத்திருந்தார்கள் .
*சடக்கர உபதேசம்*
நெல் வியாபாரம் ஒரு முகம்மதியரையும் கூட்டாளியாகக் கொண்டு பாம்பனில் தந்தையார் சொற்படி செய்து வருங்கால், அவண் வந்த செவ்வேட் பரமனடியார் சேது மாதவப் பெருமாள் கோயில் அர்ச்சகர் சேதுமாதவ ஐயர் என்பவர் சுவாமிகள் பாடல்கள் எழுதி வைத்திருந்த நோட்டுப் புத்தகத்தைப் புரட்டிப் பார்த்துப் படித்து புதுக்கோட்டை வித்துவான் குமாரசாமிப் பிள்ளையிடம் அளிக்க அவர் பார்வையிட்டு பாடல் நயமுடையது, துறவு நோக்கமுடையது, பதிப்பிக்கத் தக்கது எனப் பாராட்டி சாற்றுக் கவியும் வழங்கினார்.
பின்னர் பாம்பன் வந்து சேதுமாதவ ஐயர் நாளை விசய தசமி இன்று மாலை என் இல்லம் வா எனக் கூறிச் சென்றார். அவ்வாறே அப்பாவு தப்பாமல் அன்றிரவு சேதுமாதவ ஐயர் இல்லத் திண்ணையிற் இறங்கி மறுநாட்காலை இளங்காலைப் போதில் அக்னி தீர்த்தத்தில் மும்முறை மூழ்கி எழ ஐயர் திருவாறெழுத்து மந்திரத்தை அப்பாவுவுக்கு உபதேசித்து அருளினார். ஆசிரியரை வணங்கி அவர் அளித்த திருநீற்றை அருட்பிரசாதமாய்ப் பெற்று மகிழ்ந்த பொழுது அவர் உடன் “வடமொழி கற்பாயாக” என உத்தரவும் இட்டார்.
*வடமொழியின் மாண்பு*
சுவாமிகள் வடமொழியறிவு பெற்றதனாலேயே சாம வேதத்திலே சுவாமி என அழைக்கப்பட்ட சிறப்பு ஆறுமுகச் சிவனுக்கே கிட்டியது என்பதைப் பாடலாய்ப் பாடியருளினார். தன் சாத்திர நூல்களில் எல்லாம் வேதாகம உபநிடதக் கருத்துக்களை மேற்கோளாக எடுத்துக் காட்டி குகபரத்துவக் கொள்கையை நிருவியருளினார்.
பிறப்பாலுயர்வு தாழ்வு இல்லையெனும் கருத்தை சாமவேத வஜ்ரஸுசிகோப நிஷதம் கொண்டு பரிபூரணானந்த போதம் நூலில் பகர்ந்தார். சைவசித்தாந்த பொதிவு என்ற ஆங்கில நூலில் வார வழிபாட்டின் தந்தை சைவப்பாதிரியார் சச்சிதானந்தம் பிள்ளையவர்கள் (என்ஆசான்) பாம்பன் சுவாமிகள் என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் எழுதியது. “Mean while he became well-versed in upanishdic and Agamic Love in Sanskrit” என்றுரைத்தல் காண்க. (TALKS ON SAIVA SIDDHANTA) தமிழ்த் தென்றல் திரு.வி.கவும் சுவாமிகளின் வடமொழிப் புலமையை தன் வாழ்க்கைக் குறிப்புகள் நூலில் குறிப்பிடுகின்றார்.
“பாம்பன் சுவாமிகள் என்பவர் பாம்பனில் தோன்றிய குமரகுருதாச சுவாமிகள்-சுவாமிகள் வடமொழிக் கடலையும் தென்மொழிக் கடலையும் முழுதொருங்குண்ட காளமேகம்”
“குமரகுரு திருவல்லிக்கேணியில் தங்கியிருந்தபோது நாடோறும் மாலை வேளையில் கடற்கரை செல்வர். அவருடன் யானும் போவேன். அடிகள் வடமொழி உபநிடதக் கருத்துக்களைத் தமிழில் விளக்குவர். சாத்திர நுட்பங்களை எளிதில் வெளியிடுவர்” . . . . . திரு.வி.க.வாழ்க்கை குறிப்பு பக்கம் 127.
சுவாமிகள் வடமொழியிலியற்றிய “குமாரஸ்தவம்” தௌத்தியம், அட்டாட்ட விக்கிரகலீலை போல்வன என்றும் பாராயணத்திற்குரிய பனுவல்களாய் விளங்குகின்றன.