புலிப்பாணி சித்தர் பற்றி நாம் அறியாத அபூர்வ கதை | pulipani siddhar history in tamil

ஜோதிடத்தில் புலியாகவும், குரு போகர் துணைகொண்டு மருத்துவத்தில் வல்லவராகவும், முருகனின் பூஜை முறையை அறிந்தவராகவும், அட்டமா சித்திகளிலும் கைதேர்ந்தவராகவும் குருவை மிஞ்சிய சிஷ்யனாக விளங்கினார். இவர் குரு தொண்டு செய்வதில் வல்லவர். எள்ளு என்றவுடன் எண்ணெய்யாக இருப்பார். அதனால் குருவின் அருகே இருந்து அனைத்து வித்தைகளையும் கற்றுக் கொண்டார். குருவுக்குத் தேவையான மூலிகைகளை மலைக்கு மலை சென்று சேகரித்தலும் அதுதவிர குருவிற்குத் தேவையான பணிவிடைகளையும் செய்துவந்தார்.

இவர் போகரின் சீடராவார். புலிப்பாணி என்பது இவரது இயற்பெயரல்ல. இப்பெயர் மாற்றத்திற்கு காரணக் கதையுண்டு:

ஒரு நாள் போகர் குடிப்பதற்கு தண்ணீர் கேட்க தம் குருநாதர் கேட்டுவிட்டார்
என்பதற்காக ஒரு புலியை வசியப்படுத்தி அதன் மீது ஏறிச் சென்று வெறும்
கையாலேயே போதிய தண்ணீர் திரட்டிக் கொண்டு வந்தார். புலி மேல் சென்று பாணி (தண்ணீர்) கொண்டு வந்ததால் இவர் புலிப்பாணி என்றழைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. பழனிமலை முருகன் சிலையை போகர் செய்வதற்கு உறுதுணையாய் இருந்தவர் புலிப்பாணி சித்தர். நவபாக்ஷாண மூலிகைகளை இவர் தமது புலியின் மீதேறி சென்று பறித்து வந்ததாக கூறப்படுகிறது.

போகர், சமாதிநிலைக்கு செல்லும் முன் பழநி தண்டாயுதபாணியின் பூசைகளை கவனித்துக் கொள்ளும்படி புலிப்பாணியை நியமித்தார். ஆனால் பிற்காலத்தில் அவரை போகர் சமாதிக்கு மட்டும் பூசை செய்ய அனுமதிக்கப்பட்டது. போகர் பழநி சிலையை செய்து முடித்ததும் சீன தேசத்திற்கு சென்றார். அங்கு தமது தவ வலிமைகளை இழந்து விடவே, இந்த புலிப்பாணியார் அவரை தமது முதுகிலேயே சுமந்து வந்து பழநியில் வைத்து அவருக்கு சகல தவ வலிமைகளையும் அளித்தார் என்று கூறப்படுகிறது.

இவர் வைத்தியத்திலும் ஜாலங்கள் செய்வதிலும் போகரை மிஞ்சியவர் என்றும் சொல்லப்பபடுகிறது. அதனால் இவரை குருவை மிஞ்சிய சிஷ்யன் என்றும் அழைக்கப்படுவதாக கூறப்படுகிறது. பழனி முருகன் சிலையை போகர் செய்யும்போது ஒன்பது வகை விஷ மூலிகைகளை வைத்து தம் குருநாதர் சிலை செய்கிறாரே இவை மனிதனை குணப்படுத்துவதற்க்கு பதில் ஆளையல்லவா கொன்றுவிடும் என்ற சந்தேகமும் புலிப்பாணிக்கு இருந்து வந்தது.

இதை தன் குருநாதர் போகரிடம் கேட்டார். மக்கள் மீது புலிப்பாணிக்கு
இருக்கும் அபிமானத்தை பாராட்டிய போகர் கவலை கொள்ளாதே நீ கொண்டு வரும் ஒன்பது மூலிகைகளையும் குறிப்பிட்ட விகிதாச்சாரத்தில் கலந்தால் நவபாஷாணம் என்னும் மருந்து கிடைக்கும் இந்த மருந்தை நேரடியாக சாப்பிட்டால் மரணம் சம்பவிக்கும் என்பது உண்மையே. ஆனால் நவபாஷாணத்தை சிலையாக வடித்து அதற்க்கு அபிஷேகம் செய்யும் பொருட்களை சாப்பிட்டால் அது மருத்துவத்தன்மை பெறும். மேலும் நவபாஷாணத்தின் வாசம் பட்டாலே மனிதர்கள் புத்துணர்வு பெறுவர் நான் செய்யும் இந்த முருகன் சிலை கலியுகம் முடியும் வரையில் அங்கேயே இருக்கும் அவன் அருளால் உலகம் செழிக்கும் மக்களுக்கு எந்த ஆபத்தும் வராது என்றார் போகர்.

மூலிகை வைத்தியத்தில் கை தேர்ந்தவரான புலிப்பாணி பலருக்கு மூலிகை வைத்தியம் செய்து பலரை நோயில் இருந்து காத்துள்ளதாக கூறப்படுகிறது. போகர் இறந்த பிறகு அவரின் சமாதிக்கு பூஜை செய்வதை வழக்கமாக வைத்திருந்தார். புலிப்பாணியை மனதார நினைத்தால் அவரே நேரடியாக வந்து மருந்து தருவதாக சொல்லப்படுகிறது. இவரும் தன் குருநாதர் வாழ்ந்த பழனியிலேயே சமாதியாகிவிட்டதாக கூறப்படுகிறது

புலிப்பாணி சித்தர் தமிழில் இயற்றிய நூல்கள்:

புலிப்பாணி வைத்தியம் – 500
புலிப்பாணி சோதிடம் – 300
புலிப்பாணி ஜாலம் – 325
புலிப்பாணி வைத்திய சூத்திரம் – 200
புலிப்பாணி பூஜாவிதி – 50
புலிப்பாணி சண்முக பூசை – 30
புலிப்பாணி சிமிழ் வித்தை – 25
புலிப்பாணி சூத்திர ஞானம் – 12
புலிப்பாணி சூத்திரம் – 9

தியானச் செய்யுள்:

மகா சித்தருக்கே மருத்துவம் சொன்ன மரவுரிச் சித்தரே
புலிவாகனம் கொண்ட மந்திர சித்தரே
மயில் வாகனனை வணங்கியவரே
எம் கலிப்பாவம் தீர்க்க
உங்கள் புலிப்பாதம் பற்றினோம்.
⚜️⚜️⚜️⚜️⚜

18 சித்தர்களின் மூல மந்திரம்

சித்தர் மொழிந்த பொன்மொழிகள்

மூன்று கால் சித்தர் பிருங்கிரிஷி

Leave a Comment