மேஷம்: ராகு – கேது பெயர்ச்சி பொதுப்பலன்கள் (13.02.2019 முதல் 31.08.2020 வரை) Mesha rasi palangal ragu ketu peyarchi 2019
மேஷ ராசி வாசகர்களே

கலகலப்பாகப்பேசுவதுடன் கறாராகவும் இருப்பவர்களே! உங்களுக்கு 13.02.2019 முதல் 31.08.2020 வரை உள்ள காலகட்டங்களில் ராகுவும் கேதுவும் எப்படிப்பட்ட பலன்களைத் தரப்போகிறார்கள் என்பதைப் பார்ப்போம்.

ராகு தரப்போகும் பலன்கள்

இதுவரை உங்களின் ராசிக்கு நான்காம் இடத்தில் அமர்ந்துகொண்டு உங்களை நாலாபுறமும் பந்தாடியதுடன், தாயாருடன் வீண் வாக்குவாதங்களையும் உடல்நலக் குறைவுகளையும் கொடுத்துவந்த ராகு பகவான், இப்போது ராசிக்கு 3-ம் வீட்டுக்கு வந்தமர்கிறார். இனி எதிலும் வெற்றியுண்டாகும். தடைபட்ட சுபகாரியங்களை இனி, சிறப்பாக நடத்துவீர்கள். கழுத்தை நெருக்கிப் பிடித்த கடன் தொல்லையிலிருந்து விடுபடுவீர்கள். குடும்பத்தில் உங்கள் பேச்சுக்கு மதிப்பு கூடும். கணவன் மனைவிக்குள் நெருக்கம் அதிகரிக்கும்.

தாயின் ஆரோக்கியம் சீராகும். அரைகுறையாக நின்றுபோன பல வேலைகளை விரைந்து முடிப்பீர்கள். பிள்ளைகளின் எதிர்காலம் குறித்து முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். அவர்களின் உயர்கல்வி, வேலைக்காக வெளிநாட்டுக்கு அனுப்பிவைப்பீர்கள். வீட்டில் பழுதான மின்னணு, மின்சார சாதனங்களை மாற்றுவீர்கள். கனவாகவே இருந்த சொந்த வீட்டை, இப்போது நிஜமாகக் கட்டும் வாய்ப்பு அமையும்.

ராகு பகவானின் நட்சத்திர சஞ்சாரம்

குரு பகவானின் புனர்பூசம் நட்சத்திரத்தில் 13.2.2019 முதல் 18.8.2019 வரை ராகு பகவான் செல்வதால் பணப்புழக்கம் அதிகரிக்கும். அரசாங்கத்தால் ஆதாயம் உண்டு. வங்கிக் கடன் உதவி கிடைக்கும்.

ராகு பகவான் தன் சுய நட்சத்திரமான திருவாதிரையில் 19.8.2019 முதல் 26.4.2020 வரை செல்வதால் இருசக்கர வாகனங்களை இயக்கும்போது கவனம் தேவை. வீண் சந்தேகத்தால் குடும்பத்தில் குழப்பம் அதிகரிக்கும். வேற்றுமொழிக்காரர்கள், வெளிநாட்டிலிருப்பவர்களால் ஆதாயம் உண்டு.

செவ்வாயின் மிருகசீரிஷம் நட்சத்திரத்தில் 27.4.2020 முதல் 31.8.2020 வரை ராகு பகவான் செல்வதால் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். சகோதர வகையில் சின்ன சின்ன இழப்புகளும் கருத்து மோதல்களும் வந்து போகும்.

கேது தரும் பலன்கள்

உங்கள் ராசிக்குப் பத்தாமிடத்தில் அமர்ந்து எந்த வேலையையும் முழுமையாகச் செய்ய விடாமல் தடுத்த கேது இப்போது ராசிக்கு ஒன்பதாமிடத்தில் வந்தமர்கிறார். குடும்பத்தில் நிலவிவந்த குழப்ப நிலை மாறும். உத்தியோகம் தொடர்பான வழக்கில் நல்ல தீர்ப்பு கிடைக்கும். ரத்த அழுத்தம் சீராகும். நண்பர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். அடிக்கடி பணம் கேட்டு நச்சரித்த உறவினர்கள் நிலைமையைப் புரிந்துகொள்வார்கள். எனினும், கேது ஒன்பதாம் வீட்டுக்கு வருவதால் தந்தையாருடன் விட்டுக் கொடுத்துச் செல்லுங்கள்.

கேது பகவானின் நட்சத்திர சஞ்சாரம்

சூரியனின் உத்திராடம் நட்சத்திரம் 1-ம் பாதத்தில் 13.2.2019 முதல் 17.4.2019 வரை கேது பகவான் செல்வதால் பிள்ளைகளால் கொஞ்சம் அலைச்சல் இருக்கும். படிப்பு, வேலையின் பொருட்டுப் பிரிவார்கள். பூர்வீகச் சொத்துப் பிரச்சினை தலைதூக்கும்.

சுக்கிரனின் பூராடம் நட்சத்திரத்தில் 18.4.2019 முதல் 22.12.2019 வரை கேது செல்வதால் பணவரவு உண்டு. ஆனால், திடீர் செலவுகளால் பணப்பற்றாக்குறை ஏற்படும். கண் பார்வையைப் பரிசோதித்துக்கொள்வது நல்லது.

கேது பகவான் தன் சுய நட்சத்திரமான மூலம் நட்சத்திரத்தில் 23.12.2019 முதல் 31.8.2020 வரை செல்வதால் சிறுநீர்த் தொற்று, தோலில் நமைச்சல், ஒவ்வாமையால் கட்டி வந்து போகும். சிலருக்குச் சிறிய அறுவை சிகிச்சைகள் நடக்கும்.

இந்த ராகு-கேது மாற்றத்தில் கேதுவால் அவ்வப்போது நீங்கள் அலைக்கழிக்கப்பட்டாலும், ராகுவின் ஆதரவும் அனுகிரகமும் இருப்பதால் அதிரடி முன்னேற்றம் கிட்டும்.

திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் அமைந்து சீக்கிரம் திருமணம் நடக்கும். பணியில் இருந்த பிரச்சனைகள் நீங்கி ஊதிய உயர்வு பதவி உயர்வுகள் போன்றவை கிடைக்கும். எதிர்பார்த்த இடங்களுக்கு பணியிட மாற்றங்கள் கிடைக்கும். தொழில் வியாபாரங்கள் அமோகமாக இருக்கும். புதிய தொழில், வியாபார விரிவாக்கம் செய்வதோடு, புதிய வாடிக்கையாளர்களும் கிடைக்க பெறுவார்கள். அரசியல் துறையில் இருப்பவர்கள் எதிலும் நேர்மையாக செயல்பட்டால் மக்களின் நன்மதிப்புகளை பெற முடியும்.

ஆண்டின் பிற்பகுதியில் விவசாயிகள் சிறந்த விளைச்சலை பெற்று மிகுந்த லாபங்களை பெறுவார்கள். கலைதொழிலில் இருப்பவர்களுக்கு சிறந்த வாய்ப்புகள் தேடி வரும். அதனால் பணம், புகழ் ஆகியவற்றை சம்பாதிக்க முடியும். பெண்களுக்கு புதிய பொன் ஆபரணம், ஆடைகளின் சேர்க்கை உண்டாகும். மாணவ – மாணவிகள் கல்வியில் சிறந்த சாதனைகளை செய்வார்கள்

 

பரிகாரம்: திங்கட்கிழமையன்று அருகிலிருக்கும் சிவாலயம் சென்று சிவபெருமானை வழிபடுவதுடன் பசுவிற்கு அகத்திக்கீரை, கேரட் கொடுக்க வேண்டும்.

மேஷம் | ரிஷபம் | மிதுனம் | கடகம் | சிம்மம் | கன்னி | துலாம் | விருச்சிகம் | தனுசு | மகரம் | கும்பம் | மீனம்

Leave a Comment

Enable Notifications Allow Miss notifications