Temple rules
நம் மன குறைகளை தீர்க்க நாம் எதனும் ஒரு ஆலயத்தில் தங்கி இறைவனை மனமார வழிபட்டால் அனைத்தும் தீரும்….
ஆலய வழிபடுவோர் கடைப்பிடிக்க வேண்டிய 100 விஷயங்கள்
1. ஆலய நுழைவாயிலில் கை கால்களை கழுவிவிட்டு உள்ளே செல்லுங்கள். தலையில் நீரைத் தெளிக்க வேண்டாம்.
2. முதல்நாள் இரவே பரிகார ஸ்தலத்திற்கு சென்று விடுவது நல்லது.
3. போகும்போதோ வரும்போதோ உறவினர் வீடு மற்றும் பிற ஸ்தலங்களுக்கு செல்ல வேண்டாம்.
4. குடும்பத்தோடு செல்வது நல்லதுதான். அதற்காக பூஜையை வாரக்கணக்கில் தாமதப்படுத்தக் கூடாது.
5. புறப்படுவதற்கு 24 மணி நேரம் முன்பும், பின்பும் அசைவ உணவு, மது இவற்றை தவிர்ப்பீர். மற்ற விஷயங்களிலும் கட்டுப்பாடு தேவை.
6. போகும்போதா வரும்போதோ யாருக்கும் பிச்சை போட வேண்டாம்.
7. பெண்கள் வீட்டுக்கு விலக்காகி 7 நாட்கள் கழித்துச் செல்வது நல்லது.
8. யாரிடமும் கடன் வாங்கி செல்ல வேண்டாம். அப்படிப்பட்ட சூழ்நிலையில் பூஜைக்கென்று சொல்லி வாங்காதீர்.
9. போகும்போதோ வரும்போதோ குல தெய்வத்தை வழிபடலாம். தோஷமில்லை.
10. தர்ப்பணம் கொடுக்காதவர்களுக்கு எந்த பூஜையும் பலன் தராது.
11. சுவாமி தரிசனம் சிலமணி நேரம் ஆகும் என்பதால் புறப்படுவதற்கு முன்பு பன், டீ, பிஸ்கட், காபி, ரஸ்க், டிரை ப்ரூட்ஸ், கூல்ட்ரிங்ஸ், போன்ற ஸ்லைட் ஃபுட் சாப்பிடலாம்.
12. பரிகாரங்கள் அனைத்தையும் தாங்களே முன்னின்று செய்யவும்.
13. ஆலயம் வர இயலாதவர்கள், வெளி நாடு வாசிகள், விரும்பாதவர்கள் இவர்களுக்கு அவர்களது இரத்த உறவுக்காரர்கள், விசுவாசமுள்ளவர்கள் குருமார்கள் பூஜை செய்தால் பலிதமாகும்.
14. பூஜைக்காக தாங்கள் நேரம், பணம் செலவழிப்பது பெரிய விஷயமல்ல. கணிந்த, தாழ்ந்த, முறையான பக்தி மனோபாவமே பலனை நிர்ணயம் செய்கிறது.
15. முக்கிய பூஜை சம்பந்தப்பட்ட விஷயங்களை பிறரிடம் சொல்லாமல் இருப்பது நல்லது.
16. பூஜை சம்பந்தப்பட்ட கிரகத்தின் நாள் ஹோரையில் செய்யுங்கள்.
17. தேவையான காலம் வரை வருடத்திற்கு ஒரு முறையாவது இப்பூஜையை செய்ய வேண்டும்.
18. எல்லா ஆலயங்களுக்கும் சம்பந்தாசம்பந்தமின்றி சென்று வருவது பயனற்றது.
19. பொழுதுபோவதற்காக (சுற்றுலா) ஆலயம் செல்லாதீர்.
20. தங்கள் சக்திக்கேற்றபடி பூஜை செய்ய வேண்டும். வசதியுள்ளவர்கள் சாதாரண பூஜை செய்தால் பலிக்காது. எளியவர்கள் கடன் வாங்கி பெரிதாக செய்ய வேண்டாம்.
21. பூஜைக்கு அமாவாசை, பவுர்ணமி தங்கள் பிறந்த நாள், சித்திரை 1, ஜனவரி 1 போன்றவை உகந்தவை.
22. தலங்களுக்கு செல்வதற்கு முன் 1 நாளும், பின் 1 நாளும் இறந்தவர் வீட்டிற்கு செல்லாதீர்.
23. நெருங்கிய உறவினர் இறந்துவிட்டால் ஐயர் அல்லது ஜோதிடரைக் கேட்டு தகுந்த காலம் கடந்து தரிசிக்க வேண்டும்.
24. வசதியுள்ளவர்கள் புத்தாடை அணிந்து செல்லலாம்.
25. மாலை நேர பூஜைக்கு காலை அணிந்த உடையை அணியாதீர்.
26. ராகுகால பூஜையைத் தவிர மற்ற பூஜைகளை காலை 7.00 மணிக்குள் ஆரம்பித்து விட வேண்டும்.
27. பொருட்கள் தரமாக இருந்தால் அனைத்தையும் பரிகார ஸ்தலத்தில் வாங்குவது சிறந்தது.
28. அதிகம் பேரம் பேச வேண்டாம்.
29. முதலில் விநாயகர், அருகம்புல் வைத்து பிரார்த்தித்து, ஒரு தேங்காயை வலது கையில் வைத்துக்கொண்டு 1 பிரதட்சணம் வந்து பூஜையைத் துவங்கி ஒதுக்கப்பட்ட இடத்தில் அந்த சிதறு காயை உடையுங்கள்.
30. ஆலயத்திற்குள் யாருடனும் பேச வேண்டாம். செல்போன்களைத் தவிர்க்கவும்.
31. வெற்றிலைக்கு நுனியும், வாழைப் பழத்திற்கு காம்பும் இருக்க வேண்டும். வில்வம் மற்றும் தாமரைப்பூவிற்கு இதழ்கள் மட்டுமே உயர்ந்தவை. காம்பு, மஞ்சள் கரு, உள் இழைகள் இருக்கக்கூடாது.
32. வெற்றிலை, வாழைப்பழம், தேங்காய், உதிரி புஷ்பங்கள், பழவகைகள், மண் விளக்கு, ஸ்பூன், அலங்கார மாலை, அர்ச்சனைத் தட்டு முதலியவற்றை கழுவி எடுத்துச் செல்லவும்.
33. சிதறு காயைத் தவிர மற்ற காய்களை மஞ்சள் தடவி (இளநிற மஞ்சள்) எடுத்துச் செல்லுங்கள்.
34. மண்விளக்குகளில் ஐந்து இடத்தில் மோதிர விரலால் மஞ்சள், குங்குமம் வைக்க வேண்டும். இதற்கு சந்தனம் உபயோகிக்கக் கூடாது.
35. பூஜை சாமான்களை கைகளில், பிளாஸ்டிக் பைகளில் கொடுக்காமல் பித்தளை, எவர் சில்வர் தாம்பாளம், கூடை இவற்றில் வைத்துக் கொடுங்கள்.
36. நைவேத்யம் அந்தந்த ஆலய மடப்பள்ளியில் தயார் செய்ய வேண்டும். நீங்கள் தயாரித்து எடுத்துச் செல்லக்கூடாது.
37. பால்கோவா, ஸ்வீட்ஸ், அவல் பொரி, கடலை இவற்றையும் நைவேத்தியமாகப் பயன்படுத்தலாம்.
38. திரி, தீப்பெட்டி, டிஸ்யூ பேப்பர், கேண்டில், நெய் துடைக்க துணி, ஸ்பூன் முதலியவற்றை எடுத்துச் செல்லவும்.
39. திரை போட்ட பின் பிரதட்சணம் வர வேண்டாம்.
40. விநாயகருக்கு ஒன்று. தனி அம்பாளுக்கு இரண்டு. சிவனைச் சார்ந்த அம்பாளுக்கு மூன்று என்ற கணக்கில் வலம் வாருங்கள்.
41. ஒரு பிரதட்சணம் முடிந்ததும் கொடி மரத்தடியில் கைகூப்பி நின்று வணங்கியதும் அடுத்ததை துவங்கவும்.
42. கொடிமரத்தடியைத் தவிர வேறெங்கும் விழுந்து வணங்கக் கூடாது.
43. ஸ்பெஷல் எண்ட்ரன்ஸ் வழியாகச் சென்றால் சிறப்பான நிம்மதியான தரிசனம் கிடைக்கும்.
44. பிற தீபங்களிலிருந்து உங்கள் தீபத்தை ஏற்ற வேண்டாம்.
45. நெய் அல்லது எண்ணையை பிற விளக்குகளில ஊற்ற வேண்டாம்.
46. அபிஷேக ஆராதனைகளும், ஹோமங்களும் உயர்வு தரும்.
47. பரிகாரம் சம்பந்தப்பட்டவர்களுக்கு விபூதி, பிரசாதம் அனுப்பி வைக்க வேண்டும்.
48. பரிகாரம் செய்யும் நேரத்தில், பரிகாரம் சம்பந்தப்பட்ட நபர் வீட்டில் உறங்கக் கூடாது.
49. பூஜை செய்து கொண்டிருக்கும் சமயம், யாராவது பிரசாதம் கொடுத்தால், அதை பெற்றுக்கொண்டு பூஜை முடிந்தபின் உண்ணவும்.
50. பரிகாரம் செய்தபின் பூஜை பொருட்களை அங்கேயே கொடுத்து விடுவது நல்லது. பசுமாட்டிற்கு வாழைப்பழம், மற்றவற்றை ஐயரிடம் கொடுக்கலாம். சிப்பந்திகளிடமும் கொடுக்கலாம்.
51. பிரத்யேக கனி வகைகளை வைத்துப் படைப்பது நல்லது. எலுமிச்சை, மாதுளை, ஆப்பிள், சாத்துக்குடி, ஆரஞ்சு, மா முதலியன.
52. வேகமாக ப்ரதட்சணம் வராமல் பொறுமையாக நமச்சிவாய என்ற 5 எழுந்து மந்திரத்தை உச்சரித்தபடி பொறுமையாக வருவது நல்லது.
53. பலன் முழுமையாகப் பெற 1 வருஷ காலம் வரை ஆகலாம். நமக்கு 1 வருஷம் என்பது ஆண்டவனுக்கு 1 நாள்.
54. ஒவ்வொரு ஆலயத்திலும் தீபம் ஏற்றுவதற்கென்று உரிய தனியான இடத்தில் ஏற்றவும், சிலைகள் அருகில் ஏற்றக்கூடாது.
55. சுவாமியைத் தொடாமல் பூஜிக்கவும்.
56. பூஜை செய்த சாமான்கள் பூஜை செய்யாதவற்றுடன் சேர்ந்து விடக்கூடாது.
57. நீர், நிலம், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய பஞ்ச பூதங்களுக்காக 5 மூக்கு தீபம் ஏற்ற வேண்டும்.
58. திரி கனமாக இருந்தால் தீபம் நின்று எரியும். தீபம் ஏற்றிய பின் விளக்குகளை தூக்கி தீபம் காட்டுவது, நகற்றுவது கூடாது. தீபத்துடன் பிரதட்சணம் வருவது தவறு.
59. ஒரு கையில் விபூதி குங்குமம் வாங்கக்கூடாது. இடது கையை கீழே வைத்து வலது கையை மேலே வைத்து பௌயமாக பெற்றுக் கொள்ள வேண்டும். விபூதி, குங்குமத்தை பேப்பரில் வாங்ககூடாது.
60. பெற்ற விபூதி குங்கும பிரசாதத்தை கீழே கொட்டாமல் வீட்டிற்கு பேப்பரில் மடித்து எடுத்துச் செல்லவும்.
61. விபூதியை நிமிர்ந்து நின்று அப்படியே பூசிக் கொள்ளவும். இடது கையில் வைக்க வேண்டும்.
62. பரிகாரங்கள் அனைத்தும் தங்கள் ஜோதிடரின் அறிவுரைப்படி வரிசைக் கிரமமாக இருக்க வேண்டும்.
63. அலங்கார மாலை அவசியமானது தான். ஆனால் மாலையை விட உதிரிப்பூக்கள் விசேஷமானது.
64. அருகம்புல், வில்வம், தாமரைப்பூ, சம்பங்கி, சாமந்தி, பச்சை, மரிக் கொழுந்து, சங்குப்பூ, நீலப்பூ, துளசி, மல்லிகை, ரோஜா, பன்னீர் ரோஜா, விருட்சிப்பூ போன்ற பூ வகைகளால் பூஜிப்பது நல்லது.
65. காளி, துர்கா, முருகனுக்கு பஞ்ச அரளிப் பூக்கள் விசேஷமானது.
66. அம்பாளுக்கு மெருன் நிற குங்குமமே சிறந்தது.
67. எண்ணையை விட நெய்க்கு வீரியம் மிக அதிகம்.
68. சாதாரண மாலையை வாங்காமல் பாதம் வரையிலுள்ள வாகை மாலையை வாங்குங்கள்.
69. சுவாமி சன்னதியில் ஸ்தோத்திரங்கள் பாடுவது பிறருக்கு தொல்லையாக அமையும். அமைதி தேவை.
70. கஜ பூஜை, ஒட்டக பூஜை, கோ பூஜை, சிப்பந்திகளுக்கு தட்சணை தருவது இவை பூஜையின் பலனை அதிகரிக்கும். ஜீவகாருண்யம் உயர்வு தரும்.
71. சிவன், அம்பாளை மட்டும் தரிசிப்பது சரியல்ல. பரிவார தேவதைகள் என வழங்கப்படும் பிற சன்னதிகளிலும் வழிபாடு தேவை. நெய் தீபம் ஏற்றி உதிரி புஷ்பங்களை சமர்ப்பிக்கலாம்.
72. வாழைப்பழத்தில் பூவம் பழம் உயர்ந்தது. அடுத்து நாட்டுப்பழம்.
73. சூடம் ஏற்றினால் புகையினால் இடம் மாசுபடும்.
74. ஆலயத் தூய்மை ஆலய தரிசனத்தை விட முக்கியமானது.
75. தல வரலாறு புத்தகம் வாங்கி ஸ்தலம் சம்பந்தப்பட்ட அனைத்து விசேஷங்களையும் தெரிந்துகொள்வது பூஜைக்கு உதவும்.
76. கோயிலுக்குள் சில்லறை கிடைக்காது. ரூ. 10,50,100 என மாற்றி வைத்துக் கொள்ளுங்கள். சில்லறைக் காசுகள் போடுவதைத் தவிர்ப்பீர்.
77. கூட்டம் அலைமோதும் ஸ்தலங்களில் பொறுமை தேவை.
78. காசு செலவழித்து செல்பவர் மீது பொறாமை வேண்டாம். நிர்வாகத்திற்கு பணம் தேவை.
79. வி.ஐ.பி. க்கு முன்னுரிமை கொடுப்பதில் எவ்வித தவறும் இல்லை. அது நியாயமானதுதான்.
80. விபூதி குங்குமம் வாங்கும் முன்பே பிராமணருக்கு தட்சணை கொடுத்து விட வேண்டும்.
81. சங்கல்பம் மிக முக்கியம்.
82. கோபுர தரிசனம் கோடி நன்மை.
83. சண்டிகேஸ்வரருக்கு கடைசிப் பிரகாரத்தில் தீபம் ஏற்றி வழிபடுங்கள். அமைதியாக கையை தட்டுங்கள். சொடுக்குப் போடாதீர்.
84. கொடி மரத்தடியில் வடக்குப் பார்த்து விழுந்து வணங்கி பிரார்த்தனையை நிறைவேற்ற வேண்டும்.
85. பிறகு சற்று விலகி கீழே அமர்ந்து 1 நிமிஷம் தியானம் பண்ணி பிரார்த்தனையை நிறைவேற்றவும்.
86. ஆரம்பத்தில் விநாயகரிடம் விடுத்த வேண்டுகோள்தான் இறுதி வரை இருக்க வேண்டும். மாறக்கூடாது.
87. பிரார்த்தனைகள் 1 அல்லது 2க்கு மேல் இருக்கக்கூடாது.
88. காவல் தெய்வங்கள் இருந்தால் அவர்களை வழிபட்ட பிறகே விநாயகர் வழிபாடு செய்ய வேண்டும்.
89. இத்தகைய பூஜைகள் காரியசித்தி பூஜைகள் தானே தவிர கர்ம வினைகளை முற்றிலும் மாற்றாது. ஆனால் வாழ்வில் திருப்பத்தை ஏற்படுத்தும்.
90. பூஜைக்கு முன்னுரிமை பெறுபவை. 1. பித்ருக்கள், 2. குலதெய்வம், 3. விநாயகர், 4. திசாநாதன், 5. பிரச்சனை அல்லது கோரிக்கை சார்ந்த தெய்வம்.
91. நவக்கிரகங்கள் சம்பந்தமின்றி நேரடியாக செயல்படும் ஆற்றல் முனீஸ்வரர், அனுமார், பசு, யானை இவர்களுக்கு உண்டு.
92. இயன்றவரை இறைவனைப் பற்றிய சிந்தனையிலேயே இருங்கள்.
93. தோஷ நிவர்த்திப் பூஜாக்களை இளம் வயதிலேயே 30 வயதிற்குள் செய்து விடுங்கள்.
94. ஸ்தோத்ர பாராயணம் எல்லோருக்கும் அவ்வளவு பலன் தராது.
95. கடுமையான விரதங்களை மேற்கொள்வது, அடிக்கடி பட்டினி கிடப்பது இவற்றை தவிர்க்கவும்.
96. இயல்பான முழுமையான நம்பிக்கையுடன், நேர்த்தியாக, பூரண மன அமைதியுடன் பிரார்த்தனை செய்யுங்கள்.
97. பூஜைக்கு விபூதி, குங்குமம், மஞ்சள், நெய், உதிரி புஷ்பம், வஸ்திரம், மாலை, சந்தனம், தேங்காய், பழம், வெற்றிலை, பாக்கு, ஊதுபத்தி, நைவேத்யம், தட்சணை இவை முக்கியம்.
98. சின்னச்சின்ன பூஜைகளை விட அனைத்தும் அடங்கிய முறையான ப்ரத்யேக பூஜைதான் பலன்களை அள்ளித் தருகின்றன.
99. ஆண்டவன் நினைத்தால் மட்டுமே பூஜைக்குரிய அனுமதி கிடைக்கும்.
100. ஆண்டவனை நினைத்துக் கொண்டே இருங்கள். காலம் கனியும்போது ஆண்டவன் நம்மை நினைப்பார்.