Thulam rasi guru peyarchi palangal 2017-18

துலாம் இராசி அன்பர்களே….

உங்கள் இராசிக்கு 02.09.2017 அன்று உங்கள் இராசிலேயே ஜென்ம குருவாக குரு பகவான் பெயர்ச்சி ஆகி வருகிறார். வனவாசம் போன இராமருக்கு ஜென்ம குரு என்று சிலர் கூறுவார்கள். உங்களுக்கு அப்படி அல்ல. குரு ஜென்மத்தில் அமர்ந்தாலும், செவ்வாயின் சாரத்தை பெறுகிறார். அதாவது 2, 7-க்குரிய சாரத்தில் அமர்கிறார். திருமணம், குழந்தைபேறு போன்ற சுபவிஷயங்கள் அருமையாக நடக்கும். குரு பகவான், பஞ்சமஸ்தானத்தை பார்வை செய்வதால், பூர்வீக சொத்து கைக்கு கிடைக்கும். மனைவி வழியில் நன்மை நடக்கும். பாக்கியஸ்தானத்தை பார்வை செய்கிற காரணத்தால், தடைப்பட்ட கட்டடத்தின் கட்டுமானம் நடைப்பெறும். கோயில், புண்ணியஸ்தலம் செல்லும் பாக்கியம் கிட்டும். உத்தியோகத்தில் இடப்பெயர்ச்சி உண்டாகும். சற்று கடுமையாக உழைக்க வேண்டியதாக இருக்கும். வாகனம் வாங்கும் பாக்கியம் உண்டாகும். சரி, எந்த விஷயத்தில் உஷாராக இருக்க வேண்டும்? உயர் அதிகாரிகளிடம் பணிவாக இருக்க வேண்டும். கடன் சுமை அதிகரிக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள். பொழுதுபோக்கு, செலவு செய்யும் விஷயத்தில் கவனம் தேவை. மற்றப்படி, குரு பகவான் இந்த பெயர்ச்சியில் நன்மையே தருவார். நல்வாழ்த்துக்கள்.

 

சித்திரை (3,4), சுவாதி, விசாகம் (1,2,3)

முன்கோபம் அதிகம் இருந்தாலும் தன்னுடைய வாக்கு சாதுர்யத்தால் பிறரை கவர்ந்து இழுக்கும் ஆற்றல் கொண்ட துலா ராசி நேயர்களே!

உங்கள் ஜென்ம ராசிக்கு 3,6-க்கு அதிபதியான பொன்னவன் எனப் போற்றப்படக்கூடிய குரு பகவான் வாக்கியப்படி 2-9-2017 முதல் 4-10-2018 வரை ஜென்ம ராசியிலேயே சஞ்சாரம் செய்ய உள்ளார். இது அவ்வளவு சாதகமான அமைப்பு என்று கூறமுடியாது. பொருளாதாரநிலை சிறப்பாக இருக்கும் என்றாலும் தேவையற்ற வீண் விரயங்களும் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் வயிறு சம்பந்தப்பட்ட பாதிப்புகள் உண்டாகி மருத்துவச் செலவுகளை ஏற்படுத்தும் என்பதால் உணவு விஷயத்தில் மிகவும் கவனம் செலுத்துவது நல்லது. கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடுகள், குடும்பத்தில் உள்ளவர்களிடம் ஒற்றுமையற்ற நிலை உண்டாகும். முயற்சிகளிலும் தடை தாமதங்கள் ஏற்படும். சர்ப்ப கிரகங்களான கேது, ராகுவும் 4, 10-ல் சஞ்சரிப்பதால் தேவையற்ற அலைச்சல், டென்ஷன் ஏற்படும். பண விஷயத்தில் பிறருக்கு வாக்குறுதி கொடுப்பது, முன்ஜாமீன் கொடுப்பதைத் தவிர்ப்பது உத்தமம்.

குரு ஜென்ம ராசியில் சஞ்சரிக்கும் இக்காலங்களில் வாக்கியப்படி 19-12-2017 முதல் சனி பகவான் முயற்சி ஸ்தானமான 3-ல் சஞ்சரிக்க இருப்பதால் முயற்சிகளில் எதிர்நீச்சல் போட்டாவது வெற்றியினைப் பெற்றுவிடுவீர்கள். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்துக்கொண்டால் கடனில்லாத கண்ணிய வாழ்க்கை அமையும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் தேடிவரும். புதிய ஒப்பந்தங்களில் கையழுத்திடும் வாய்ப்பினைப் பெறுவீர்கள். போட்டி பொறாமைகளை சமாளிக்கக்கூடிய ஆற்றலும் அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது வீண்பிரச்சினைகளைத் தவிர்க்க உதவும். எதிர்பார்க்கும் உயர்வுகள் சில தடைகளுக்குப்பின் அமையும். கலைஞர்கள் எதிர்பார்த்த கதாபாதிரங்களுக்கான வாய்ப்பினைப் பெறுவார்கள். பயணங்களால் சற்றே அலைச்சல்கள் அதிகரித்தாலும் அதன்மூலம் அனுகூலமானப் பலன்களும் உண்டாகும். அரசியல்வாதிகள் மேடை பேச்சுகளில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது, மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றுவது உத்தமம். மாணவர்கள் அதிக அக்கறையோடு படித்தால் எதிர்பார்த்த மதிப்பெண்களைப் பெற்று வாழ்வில் உயர்வினை அடையமுடியும்.

உடல் ஆரோக்கியம்
உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் ஏற்படக்கூடிய காலம் என்பதால் ஆரோக்கிய விஷயங்களில் மிகவும் கவனமுடன் செயல்படுவது நல்லது. மனைவி, பிள்ளைகளாலும் மருத்துவச் செலவுகள் அதிகரிக்கும். உடல் சோர்வு, எதிலும் சுறுசுறுப்பாக ஈடுபட முடியாத சூழ்நிலைகள் உண்டாகும். உற்றார்- உறவினர்களின் ஆதரவற்ற நிலைகளால் மனக்குழப்பங்கள் ஏற்படும். எதிர்பாராத பயணங்கள் உண்டாகி தேவையற்ற அலைச்சல், டென்ஷன் அதிகரிக்கும். உணவு விஷயங்களில் மிகவும் கவனமுடன் செயல்படுவது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது.

குடும்பம், பொருளாதாரநிலை
குடும்பத்தில் வீண் வாக்குவாதங்களால் ஒற்றுமைக்குறைவுகள் உண்டாகும். கணவன்-மனைவியிடையே கருத்து வேறுபாடுகளும், புத்திரர்களால் மனநிம்மதியற்ற நிலையும் உண்டாகும். பணவரவுகள் ஏற்ற இறக்கமாக இருக்கும் என்பதால் குடும்பத்தேவைகளைப் பூர்த்திசெய்ய கடன் வாங்க நேரிடும். முடிந்தவரை ஆடம்பரச் செலவுகளைக் குறைப்பது உத்தமம். நெருங்கியவர்களை அனுசரித்து நடந்து கொண்டால் வீண் பிரச்சினைகள் உண்டாவதைத் தவிர்க்கலாம். வீடு, மனை, வண்டி, வாகனங்கள் வாங்கும் முயற்சிகளில் சிந்தித்துச் செயல்படுவது நல்லது.

கொடுக்கல்வாங்கல்
கமிஷன் ஏஜென்சி, கான்டிராக்ட் போன்ற துறைகளில் உள்ளவர்கள் எந்தவொரு காரியத்திலும் சிந்தித்துச் செயல்படுவது நல்லது. கொடுக்கல் -வாங்கலில் மிகவும் நம்பியவர்களே துரோகம் செய்வார்கள். பணவிஷயத்தில் பிறரைநம்பி முன்ஜாமீன் கொடுப்பதும், வாக்குறுதிகளைக் கொடுப்பதும் வீண் பிரச்சினைகளை ஏற்படுத்திவிடும். வம்பு வழக்குகள் உண்டாகும்.

தொழில், வியாபாரம்
தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு நெருக்கடிகளும், போட்டிகளும் ஏற்படும் என்றாலும் எதையும் சமாளிக்கக்கூடிய ஆற்றலும் உண்டாகும். வாங்கிய கடன்களைத் திருப்பிச் செலுத்தமுடியாத சூழ்நிலைகளும் ஏற்படும். கூட்டாளிகளின் ஒற்றுமையற்ற செயல்பாட்டால் அபிவிருத்தி குறையும் என்பதால் முடிந்தவரை அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. பெரிய முதலீடுகளில் செய்ய நினைக்கும் எந்தவொரு காரியத்திலும் சற்று சிந்தித்துச் செயல்படுவது உத்தமம். தொழில்ரீதியாக மேற்கொள்ளும் பயணங்களாலும் வீண் அலைச்சல்கள் ஏற்பட்டாலும் அதன்மூலம் அனுகூலப்பலனை அடையமுடியும்.

உத்தியோகம்
உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப்பளு அதிகரித்தாலும் எடுக்கும் பணிகளை சரிவரச்செய்து முடிக்க முடியும். எதிர்பார்க்கும் பதவி உயர்வுகள் தடை தாமதங்களுக்குப்பின் கிடைக்கும். உடன்பணிபுரிபவர்களை அனுசரித்து நடந்து கொள்வதன்மூலம் வீண் பிரச்சினைகள் உண்டாவதைத் தவிர்க்க முடியும். சில நேரங்களில் பிறர் செய்யும் தவறுகளுக்கு நீங்களே பொறுப்பேற்க வேண்டியிருக்கும். அதிகநேரம் உழைக்க வேண்டியிருப்பதால் உடல்நிலை சோர்வடையும். அடிக்கடி விடுப்பு எடுக்க வேண்டி இருக்கும். எதிர்பாராத இடமாற்றங்களால் அலைச்சல்கள் அதிகரிக்கும்.

பெண்கள்
உடல்நிலையில் அடிக்கடி பாதிப்புகள் உண்டாகி மருத்துவச்செலவுகளை ஏற்படுத்தும். திருமண சுபகாரிய முயற்சிகளில் தடைகளுக்குப்பின் அனுகூலம் உண்டாகும். கணவன்-மனைவியிடையே ஒற்றுமை சுமாராக இருக்கும். உற்றார்-உறவினர்களை அனுசரித்துச்செல்ல வேண்டிவரும். எதிர்பார்க்கும் பணவரவுகளும் தாமதப்படுவதால் குடும்பத்தேவைகளைப் பூர்த்தி செய்வதில் தடைகள் நிலவும். புத்திரவழியில் வீண்கவலைகள் ஏற்படும். பணிபுரியும் பெண்களுக்கு உயரதிகாரிகளின் கெடுபிடிகள் அதிகரித்து மனநிம்மதி குறையும். கடன் அதிகரிக்கும்.

அரசியல்
பொதுப்பணிகளில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொள்ள முடியாத சூழ்நிலைகள் உண்டாகும். முடிந்தவரை மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றுவது நல்லது. எடுக்கும் காரியங்களில் தடைகளுக்குப் பின்பே வெற்றி பெறமுடியும். உடனிருப்பவர்களை அனுசரித்துச்செல்வது, பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. பொருளாதாரநிலை ஏற்ற இறக்கமாக இருக்கும்.

விவசாயிகள்
விளைச்சல் சுமாராக இருந்தாலும் முதலீட்டினை எடுத்து விடமுடியும். நீர் வரத்து தேவைக்கேற்றபடி இருக்கும். புதிய பூமி, மனை வாங்கும் முயற்சிகளில் தடைகளுக்குப்பின் அனுகூலம் உண்டாகும். உற்றார் -உறவினர்களை அனுசரித்துச்செல்வது, வாய்க்கால் வரப்பு பிரச்சினைகளை பெரிது படுத்தாமல் இருப்பது நல்லது.

கலைஞர்கள்
கிடைத்த வாய்ப்புக்களை நழுவவிடாமல் பாதுகாத்துக்கொள்வது உத்தமம். புதிய வாய்ப்புகள் கிடைப்பதில் சிக்கல்கள் உண்டாகும். நெருக்கடியான சூழ்நிலைகளால் உடல்நிலை பாதிப்புகள் ஏற்பட்டு மனஅமைதி குறையும். உடன் இருப்பவர்களாலே வீண் பிரச்சினைகளைச் சந்திப்பீர்கள். பணவரவுகள் தேவைக்கேற்றபடி இருக்கும்.

மாணவமாணவியர்
கல்வியில் ஈடுபாடு குறையும். ஞாபகமறதி, மந்த நிலை உண்டாகும். படிப்பில் கவனம் குறைவதால் எதிர்பார்க்கும் மதிப்பெண்களைப் பெறமுடியாது. தேவையற்ற நண்பர்களின் சகவாசமும் பொழுதுபோக்குகளும் உங்களின் வாழக்கை நிலையையே மாற்றியமைக்கும். விளையாட்டுப்போட்டிகளில் ஈடுபடும்போது கவனம் தேவை. வண்டி வாகனங்களில் பயணம் செய்யும்போது வேகத்தைக் குறைத்துக்கொள்வது நல்லது.

குரு பகவான் சித்திரை நட்சத்திரத்தில் 2-9-2017 முதல் 5-10-2017 வரை
குரு பகவான் தனக்கு நட்பு கிரகமான செவ்வாயின் நட்சதிரத்தில் ஜென்ம ராசியில் சஞ்சரிப்பதால் எதிலும் சற்று நிதானமாகச் செயல்படுவது நல்லது. தனவரவுகள் திருப்தி அளிப்பதாக இருந்தாலும் வரவுக்குமீறிய செலவுகளை ஏற்படுத்தும். கொடுக்கல்-வாங்கலில் பெரிய தொகை ஈடுபடுத்துவதைத் தவிர்ப்பது நல்லது. சனி பகவானும் 2-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் தொழில்ரீதியாகவும் சில போட்டிகளைச் சந்திக்கநேரிடும். கூட்டாளிகளிடையே கருத்து வேறுபாடுகள் அதிகரிக்கும். குடும்பத்தில் கணவன்-மனைவி இடையே ஒற்றுமை குறையும். உற்றார்-உறவினர்களை அனுசரித்து நடந்துகொள்வது நல்லது. உடல்நிலையிலும் தேவையற்ற பாதிப்புகள் உண்டாகி மருத்துவச்செலவுகளை ஏற்படுத்தும். உத்தியோகரீதியாக மேற்கொள்ளும் பயணங்களாலும் அலைச்சல், டென்ஷன், உடல்சோர்வு ஏற்படும். புத்திரவழியில் வீண்செலவுகள் உண்டாகி மனநிம்மதி குறையும். எந்தவொரு காரியத்தைச் செய்வது என்றாலும் ஒருமுறைக்குப் பலமுறை சிந்தித்துச் செயல்படுவது நல்லது. சனிக்குரிய பரிகாரங்களைச் செய்வது உத்தமம்.

குரு பகவான் சுவாதி நட்சத்திரத்தில் 6-10-2017 முதல் 7-12-2017 வரை
குரு பகவான் ராகுவின் நட்சத்திரத்தில் ஜென்ம ராசியில் சஞ்சரிப்பதால் இக்காலங்களில் சற்று அனுகூலப்பலன்களை அடையமுடியும். உடல்நிலையில் கவனம் செலுத்த வேண்டிவரும். பணவரவுகள் சுமாராக இருக்கும். எதிர்பார்த்த உதவிகள் தாமதப்படும். கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் உண்டாகி ஒற்றுமை குறையும். உற்றார்-உறவினர்களும் தேவையற்ற பிரச்சினைகளையே ஏற்படுத்துவார்கள். கொடுக்கல்-வாங்கலில் பழைய பாக்கிகளை வசூலிப்பதில் வீண்கஷ்டங்கள் ஏற்படும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தாமதநிலை உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகள் தடைப்படும். வேலைப்பளு அதிகரிக்கும். மேலதிகாரிகளின் கெடுபிடிகள் அதிகரித்தாலும் உடன்பணிபுரிபவர்களின் ஒத்துழைப்பு ஓரளவுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் மறைமுக எதிர்ப்புகளையும், போட்டிகளையும் சமாளித்து எதிர்நீச்சல் போட்டே முன்னேற்றத்தை அடையமுடியும். தேவையற்ற பயணங்களால் அலைச்சல்கள் அதிகரித்தாலும் அதன்மூலம் ஓரளவுக்கு அனுகூலப்பலனை உண்டாக்கும். குருப்பரீதியாக தட்சிணாமூர்த்தியை வழிபடவும்.

குரு பகவான் விசாக நட்சத்திரத்தில் 8-12-2017 முதல் 13-2-2018 வரை
குரு பகவான் தன் சொந்த நட்சத்திரத்தில் ஜென்ம ராசியில் சஞ்சரிப்பது சுமாரான அமைப்பு என்றாலும் வாக்கியப்படி 19-12-2017 முதல் சனி பகவான் முயற்சி ஸ்தானமான 3-ஆம் வீட்டிற்கு மாறுதலாக இருப்பதால் உங்களுக்கு நடைபெற்றுக்கொண்டிருந்த ஏழரைச்சனி முழுமையாக முடிவடைந்துவிடுகிறது. இதனால் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். குடும்பத்தில் மகிழ்ச்சிதரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். பணம் பலவழிகளில் வந்து உங்களின் பாக்கெட்டை நிரப்பும். பொன், பொருள் சேரும். தொட்டதெல்லாம் துலங்கக்கூடிய காலமாக அமையும். சிலருக்கு நினைத்தவரையே கைப்பிடிக்கும் யோகம் உண்டாகும். சிறப்பான புத்திரபாக்கியம் உண்டாகி மனமகிழ்ச்சியை ஏற்படுத்தும். உற்றார்-உறவினர்களும் சாதகமாக அமைவார்கள். எதிரிகளின் பலம் குறைந்து உங்கள் பலம் அதிகரிக்கக்கூடிய காலமாக இருக்கும். புதிய வீடு, மனை, வண்டி, வாகனம் போன்ற யாவும் வாங்கக்கூடிய யோகம் அமையும். சேமிப்பு பெருகும். பிரிந்த உறவினர்களும் தேடிவந்து ஒற்றுமை பாராட்டுவார்கள். தொழில்ரீதியாக நல்ல முன்னேற்றத்தை அடைவீர்கள். உத்தியோகஸ்தர்கள் எதிர்பாராத உயர்வுகளைப்பெற்று மகிழ்ச்சியடைவார்கள். புதிய வேலை தேடுபவர்களும் சிறப்பான வேலை வாய்ப்பினைப் பெறுவார்கள். தட்சிணாமூர்த்தியை வழிபடுவது நல்லது.

குரு பகவான் அதிசாரமாக விருச்சிக ராசியில் 14-2-2018 முதல் 6-3-2018 வரை
குரு பகவான் அதிசாரமாக உங்கள் ஜென்ம ராசிக்கு தனஸ்தானமான 2-ஆம் வீட்டில் சஞ்சரிக்கும் இக்காலங்களில் உங்களுடைய புகழ், பெருமை யாவும் உயரும். உடல்நலம் அற்புதமாக அமையும். மனைவி, பிள்ளைகளும் மகிழ்ச்சியுடனேயே இருப்பார்கள். எந்தவித மருத்துவச் செலவுகளும் இல்லாத காலமாக இருக்கும். பொருளாதாரநிலையும் சிறப்பாக அமைவதால் எல்லாத்தேவைகளும் பூர்த்தியாகி கடன்கள் அனைத்தும் பைசலாகும். சிலருக்கு புதுவீடு கட்டி குடிபுகக்கூடிய யோகமும் உண்டாகும். சிலருக்குப் பெரிய தொகை சேமிக்கக்கூடிய வாய்ப்பு உண்டாகும். மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றிமேல் வெற்றியினைப் பெறமுடியும். கொடுக்கல்-வாங்கலிலும் சரளமானநிலை இருக்கும்.தொழில், வியாபாரம் நல்ல லாபத்தை உண்டாக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதிர்பார்த்த இடமாற்றங்கள் கிடைக்கப்பெற்று குடும்பத்தோடு சேர்ந்து மகிழ்வார்கள். வெளிவட்டாரத் தொடர்புகளால் பெயர், புகழ் உயரும். அரசியல்வாதிகளுக்கு மாண்புமிகு பதவிகள் கிடைக்கப்பெறும். கடன்கள் குறையும். பழைய பாக்கிகள் வசூலாகும். விநாயகரை வழிபடவும்.

குரு பகவான் வக்ரகதியில் 7-3-2018 முதல் 3-7-2018 வரை
குரு பகவான் இக்காலங்களில் வக்ரகதியில் சஞ்சரிப்பதால் எல்லாவகையிலும் ஓரளவுக்கு ஏற்றம் மிகுந்த பலன்களை அடைவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். சுபகாரியங்கள் தடைகளுக்குப்பின் கைகூடும். பணவரவுகளில் இருந்து வந்த தடைகள்விலகி மேன்மையான பலன்கள் ஏற்படும். கடன்கள் சற்றுக் குறையும். கணவன்- மனைவி யிடையே ஒற்றுமை நிலவும். எந்தவொரு காரியத்திலும் எதிர்நீச்சல் போட்டாவது முன்னேறிவிடுவீர்கள். கொடுக்கல்-வாங்கலில் நிதானமாக செயல்பட்டால் எதிர்பார்த்த லாபத்தைப் பெறமுடியும். கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றமுடியும். சனியும் முயற்சி ஸ்தானமான 3-ஆம் வீட்டில் சாதகமாக சஞ்சரிப்பதால் தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு எதிர்பாராத பெரிய ஆர்டர்கள் கிடைக்கும். அபிவிருத்தியும் பெருகும். கூட்டாளிகள் அனுகூலமாக நடந்து கொள்வார்கள். லாபம் அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்கள் உயர்வடைவார்கள்.மாணவர்கள் கல்வியில் படிப்படியான முன்னேற்றத்தைப் பெறுவார்கள். தேவையற்ற பொழுதுபோக்குகளையும் நண்பர்களின் சகவாசத்தையும் தவிர்ப்பதன்மூலம் நற்பலனைப் பெற முடியும். ஓரளவுக்கு சேமிப்பு பெருகும். ஆஞ்சநேயரை வழிபாடு செய்வது உத்தமம்.

குரு பகவான் விசாக நட்சத்திரத்தில் 4-7-2018 முதல் 4-10-2018 வரை
தன் சொந்த நட்சத்திரத்தில் ஜென்ம ராசியில் சஞ்சரிப்பது சற்று சாதகமற்ற அமைப்பு என்றாலும் சனி 3-ல் சாதகமாக சஞ்சரிப்பதால் குடும்பத்தில் ஒற்றுமையும், சுபிட்சமும் உண்டாகும். எடுக்கும் முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். கணவன்-மனைவியிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. பணம் பலவழிகளில் வந்து குவியும். வீடு, மனை, வண்டி, வாகனம் வாங்கக்கூடிய யோகம் உண்டாகும். சிலருக்கு நினைத்தவரையே கைப்பிடிக்கும் யோகம் அமையும். புத்திரவழியில் மகிழ்ச்சிதரக்கூடிய சம்பவங்களும் நடைபெறும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதிர்பார்த்த இடமாற்றங்களைப் பெற்று குடும்பத்தோடு சேர்ந்து மகிழ்வார்கள். உடன்பணிபுரிபவர்களின் ஆதரவும், அதிகாரிகளின் ஒத்துழைப்பும் மனமகிழ்ச்சியினை ஏற்படுத்தும். அரசியல்வாதிகள் மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றி மக்களின் ஆதரவைப் பெறுவார்கள். கொடுக்கல்- வாங்கல் சரளமான நிலையில் அமையும். பிறருக்குக் கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றமுடியும். கலைஞர்களுக்கு வாய்ப்புகள் வந்து குவிவதால் பொருளாதாரநிலையும் உயரும். வெளியூர், வெளிநாடுகளுக்குச் செல்லும் வாய்ப்பும் உண்டாகும். குருப்ரீதியாக தட்சிணாமூர்த்தியை வழிபடவும்.

பரிகாரம்
துலா ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு ஜென்ம ராசியிலேயே குரு சஞ்சரிப்பதால் குருவுக்குரிய பரிகாரங்களைச் செய்வது.

வியாழக்கிழமைதோறும் தட்சிணா மூர்த்திக்குக் கொண்டைக்கடலை மாலை சாற்றி நெய் தீபமேற்றுவது நல்லது.

சர்ப்ப கிரகங்களும் சாதகமற்று சஞ்சரிப்பதால் ராகு-கேதுவுக்குப் பரிகாரம் செய்வது, துர்க்கையம்மன், விநாயகர் வழிபடுவது மேற்கொள்வது நல்லது.

அதிர்ஷ்டம் அளிப்பவை
எண்: 4, 5, 6, 7, 8.
நிறம்: வெள்ளை, பச்சை.
கிழமை: வெள்ளி, புதன்.
கல்: வைரம்.
திசை: தென் கிழக்கு.
தெய்வம்: லக்ஷ்மி.

Leave a Comment