கண்ணன் கதைகள் – 35

நளகூபர, மணிக்ரீவ சாப விமோசனம்

‘தாமோதரன்’ என்று தேவர்களால் துதிக்கப்பட்ட கண்ணன், உரலில் கட்டப்பட்டபடியே, உரலுடன் மெல்லத் தவழ்ந்து சென்றான். அருகில் இரண்டு மரங்களைக் கண்டான்.

முன்னொரு சமயம், குபேரனுடைய மகன்களான நளகூபரன், மணிக்ரீவன் இருவரும் சிவனைத் தொழுது, மிகுந்த ஐஸ்வர்ய செருக்குடன், உலக ஆசைகளில் ஈடுபட்டிருந்தனர். மது அருந்திவிட்டு, கங்கையில் அனேகப் பெண்களுடன் வஸ்திரம் இல்லாமல் ஜலக்ரீடை செய்து கொண்டிருந்தனர். இதை நாரதர் பார்த்தார். நாரதரைக் கண்டவுடன் அந்தப் பெண்கள் தம்முடைய ஆடைகளை எடுத்துக் கொண்டனர். அப்பொழுது கூட, நளகூபரன், மணிக்ரீவன் இருவரும் மயங்கி விளையாடிக் கொண்டிருந்தனர்.

நாராயணனிடத்தில் அவர்களுக்கு பக்தி உண்டாக வேண்டுமென்பதற்காக, நாரதர் அவர்களை சபித்தார். “நீங்கள் இருவரும் நெடுங்காலம் மராமரங்களாக இருந்து, பின்னர் ஸ்ரீஹரியைத் தரிசனம் செய்தவுடன் பழைய நிலையை அடைவீர்களாக” என்று சபித்தார். அவ்விருவரும், கண்ணனான ஸ்ரீஹரியைத் தரிசிக்க ஆவலுடன் மரங்களாகக் காத்துக் கொண்டிருந்தனர்.

கண்ணன் மெதுவாக அந்த மருதமரங்களின் அருகே சென்று, மரங்களின் குறுக்கே உரலை இழுத்துக் கொண்டு போனான். உடனே அவ்விரு மரங்களும் முறிந்து விழுந்தன. மரங்கள் விழுந்ததும், அதிலிருந்து இரண்டு யக்ஷர்கள் தோன்றினார்கள். கிருஷ்ணனைத் துதித்து நமஸ்கரித்தனர். சாப விமோசனம் பெற்று, பக்தியையே வரமாகப் பெற்றுச் சென்றனர்.

மரம் முறிந்த சத்தத்தைக் கேட்ட இடையர்கள் ஓடி வந்தனர். நந்தகோபர், கண்ணனைக் கயிற்றிலிருந்து விடுவித்தார். “தெய்வ அருளால் மரங்களுக்கு நடுவே அகப்பட்ட குழந்தை தப்பியது” என்று கூறிக்கொண்டே இடையர்களும், நந்தகோபனும் கண்ணனை வீட்டிற்கு அழைத்துச் சென்றனர்.

Leave a Comment