கண்ணன் கதைகள் – 37
பகாசுர, வத்ஸாசுர வதம்
வண்டுகள் ரீங்காரம் செய்யும் பிருந்தாவனத்தின் வனங்களில், கொம்பு, புல்லாங்குழல், பிரம்பு முதலியவற்றை எடுத்துக்கொண்டு, பலராமனோடும், ஆயர் சிறுவர்களோடும் கன்றுகளையும், பசுக்களையும் மேய்த்துக் கொண்டு, கண்ணன் திரிந்து மகிழ்ந்தான். அவனுடைய பிஞ்சுப் பாடங்கள் பட்டதால், அங்கு உள்ள மரங்கள், கொடிகள், நீர், பூமி, மலை, வயல்கள் முதலிய யாவையும் பெருமை உடையதாய் செழித்து விளங்கின.
பச்சைப் புல்வெளியிலும், கோவர்த்தன மலையிலும் குழலூதிக்கொண்டு கன்றுகளை மேய்த்துக் கொண்டிருந்த கண்ணன், ஒரு நாள், கன்றின் வடிவில் இருந்த வத்ஸாசுரனைப் பார்த்தான். அசுரன் வேகமாக வாலை அசைத்துக் கொண்டு, முகத்தைத் திருப்பிக்கொண்டு, கண்ணனை நெருங்க சரியான நேரத்தை எதிர்பார்த்துக் கொண்டு காத்திருந்தான். அப்போது கண்ணன், அவன் கால்களைப் பிடித்து வேகமாகச் சுற்றி, அவனை ஒரு மரத்தின் மீது எறிந்து கொன்றான். அவன் இறந்து கீழே விழுந்தான். அவன் விழுந்த வேகத்தில் பல மரங்கள் சாய்ந்து விழுந்தன. தேவர்கள் பூமாரி பொழிந்தனர். இடைச்சிறுவர்கள், கண்ணனின் தலையில் விழுந்த பூக்களைப் பார்த்து, “மிகவும் மணம் நிரம்பிய இந்தப் பூக்கள் எங்கிருந்து விழுகின்றன?” என்று கேட்டனர். கண்ணனும், “அசுரனை மரத்தில் எறிந்தபோது அம்மரத்திலிருந்த பூக்கள் உயரே கிளம்பி, மெதுவே கீழே விழுகிறது” என்று விளக்கம் அளித்தான்.
ஒரு நாள், வெயில் மிகவும் அதிகமாக இருந்தது. அதிக வெயிலால் தாபமடைந்த ஆயர் சிறுவர்களுடன், பலராமனும் கண்ணனும் யமுனை நதிக்குத் தண்ணீர் குடிக்கச் சென்றார்கள். தண்ணீரைக் குடித்துவிட்டு வரும்போது அங்கே, இறக்கைகளை அசைத்துக் கொண்டிருக்கும் ஒரு பெரிய கொக்கைக் கண்டார்கள். அந்தக் கொக்கு பெரிய மலையைப் போன்றதாய் இருந்தது. சிறுவர்கள் மிகவும் பயந்தார்கள். கொக்கு கண்ணனை விழுங்கியது. கண்ணன் அதற்கு நெருப்பைப் போன்றதாய் ஆனான். அவனுடைய உஷ்ணத்தைத் தாங்க முடியாமல் வெளியே உமிழ்ந்தது. மீண்டும் அந்தக் கொக்கு வேகமாக வந்து கண்ணனைக் கொத்தியது. அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே கண்ணன், அதன் அலகினைப் பற்றி, இரு கூறாகக் கிழித்துக் கொன்றான். தேவர்கள் பூமழை பொழிந்தனர். சிறுவர்களும் பிருந்தாவனத்திலிருந்து வீடு திரும்பினார்கள்.
கண்ணனின் குழலோசையைக் கேட்ட கோபியர்கள் சந்தோஷத்துடன் அருகே ஓடி வந்தனர். இடைச்சிறுவர்கள் நடந்தவற்றைக் கூறினார்கள். அதை நம்பாமல், தந்தை நந்தகோபனும், தாய் யசோதையும் மிகுந்த மகிழ்ச்சியுடன் கண்ணனை அணைத்துக் கொண்டார்கள்