கண்ணன் கதைகள் – 38
அகாசுர வதம்
ஒரு முறை கண்ணன், ஆயர் சிறுவர்களுடன் வனபோஜனம் செய்ய விருப்பம் கொண்டான். சிறுவர்களைக் கூப்பிட்டு தனது விருப்பத்தைக் கூறினான். சிறுவர்கள் அனைவரும் காய், கறி, குழம்பு முதலியவைகளுடன் கூடிய அன்னத்தை எடுத்துக்கொண்டு கன்றுகளுடனும் கோபர்களுடனும், குதூகலத்துடன் காட்டுக்குச் சென்றார்கள். உல்லாசமாக விளையாடிக்கொண்டும், ஆடிப்பாடிக் கொண்டும் இருந்தார்கள்.
அப்போது, அகன் என்ற அசுரன், மலைப்பாம்பின் உருவெடுத்து வழிமறித்தான்.
அப்பாம்பு பெரிய மலை போலவும், திறந்திருந்த அதன் வாய் பெரிய குகை போலவும் தோற்றமளித்தது. ஆயர்சிறுவர்கள் அதை நிஜமான குகையென்று நினைத்து அதன் வாயில் புகுந்தனர். தவறுதலாகப் புகுந்த அவர்கள் மிக்க தாபத்தை அடைந்து மயங்கினார்கள். ஆதரவற்ற நண்பர்களைக் காப்பதற்காக கண்ணன் அப்பாம்பின் வாயில் நுழைந்தான். அதன் வாயில் இருந்துகொண்டு உருவத்தை மிகப் பெரியதாகச் செய்துகொண்டான். அந்தப் பாம்பு மூச்சு விட முடியாமல் புரண்டது. அதனுடைய கழுத்து கிழிந்து, உயிரை விட்டது. உடனே தன்னுடைய ஒரு பார்வையால், கோபகுமாரர்களையும், மாடு கன்றுகளையும் மயக்கம் தெளிய வைத்து, வெளியில் வந்தான். அகாசுரன் இறந்ததும், அவனுடைய உடலிலிருந்து புறப்பட்ட ஒளி, வானில் காத்திருந்து, கண்ணன் வெளியே வந்ததும் அவனுடன் கலந்து மறைந்தது. தேவர்கள் கண்ணனுடைய புகழ் பாடி ஆடினார்கள்.
உச்சிப் பொழுது ஆகிவிட்டதால் அனைவருக்கும் பசித்தது. கொம்பையும், புல்லாங்குழலையும் இடுப்பில் சொருகிக்கொண்டு, கையில் அன்னத்துடன், வேடிக்கையாகப் பேசி, சிறுவர்களைச் சிரிக்கச் செய்து கொண்டு, இடைச்சிறுவர்களுடன் வனபோஜனம் செய்தான். மகிழ்ச்சியுடன் சிறுவர்கள் அனைவரும் உணவு உண்டார்கள். அதைக் கண்ட பிரமனும், தேவர்களும்,”நாம் யாகத்தில் தரும் ஹவிர்பாகத்தை சாப்பிடுவதைவிட, இங்கு இடைச்சிறுவர்களோடு உண்பதில் அதிக ஆனந்தம் அடைகிறார்” என்று ஆச்சர்யத்துடன் கூறித் துதித்தனர்.