கண்ணன் கதைகள் – 39
பிரம்மனின் கர்வ பங்கம்
திருமால், முன்பு செய்த அவதாரங்களில் காணப்படாத சில அதிசயங்கள், க்ருஷ்ணாவதாரத்தில், அகாசுர வதத்தில் காணப்பட்டது என்று தேவர்கள் கூறியதைக் கேட்ட பிரம்மா, கண்ணனைப் பரீட்சிக்க விரும்பி, தன் சக்தியால் மாடு கன்றுகளை மறைவான இடத்திற்கு அழைத்துச் சென்று மறைத்து வைத்தார். கோபகுமாரர்கள் கன்றுகளைக் காணாமல் துயரம் அடைந்தனர். இடைச்சிறுவர்களின் துயரத்தைக் கண்ட கண்ணன், பாதி உண்டுகொண்டிருக்கும்போது கையில் சாதத்துடன் கன்றுகளைத் தேடச் சென்றான். அப்போது பிரம்மா, உணவு உண்டு கொண்டிருக்கும் இடையர்களையும் மறைத்து வைத்தார்.
பிரம்மனின் இந்த செயலை, கண்ணன் தியானத்தால் அறிந்தான். பிரம்மனுக்குப் பாடம் கற்பிக்க எண்ணம் கொண்டான். உடனே, கன்றுகளாகவும், இடைச்சிறுவர்களாகவும் தானே உருவெடுத்து, மேலும், உறி, உறியில் உள்ள பாத்திரம், புல்லாங்குழல், முதலியவைகளாகவும் வேடம் பூண்டு காட்டில் வெகு நேரம் விளையாடிவிட்டு மாலையில் வீடு சென்றான். கன்றுகளாகவும், கோபகுமாரர்களாகவும் உருவம் கொண்ட கண்ணனை, தாய்மார்கள் சந்தோஷத்துடன் வரவேற்றார்கள். அவர்களாலும் கண்டுபிடிக்க முடியவில்லை. தங்கள் பிள்ளைகள் என்றே நினைத்தார்கள். பரமாத்மாவையே குழந்தையாக அடைந்த தாய்மார்கள் அடைந்த ஆனந்தத்திற்கு அளவேது?
இவ்வாறு ஒரு வருடம் கழிந்த பின்னரே, கன்றுகளும், சிறுவர்களும் கண்ணன் தான் என்பதை பலராமன் உணர்ந்தார். வருடத்தின் முடிவில், பிரம்மதேவன் கன்றுகளையும், சிறுவர்களையும் கண்டு, அவை தன்னால் மறைத்து வைக்கப்பட்டவையா அல்லது புதியனவா என்று திகைத்தார். அப்போது கண்ணன் புதிதாக உள்ள எல்லாவற்றையும் கிரீடம், தோள்வளைகளுடன், நான்கு கரங்கள் கொண்டவைகளாக பிரம்மனுக்குக் காண்பித்தான். பிரம்மா, ஒவ்வொருவரையும் லக்ஷ்மிதேவியுடன் ஆதிசேஷன்மேல் பள்ளி கொண்டிருப்பவர்களாகவும், அழகிய வடிவமுடனும், ஸனகாதியரும், முனிவர்களும் சேவித்துக்கொண்டிருக்கக் கண்டார். கணக்கற்ற வடிவங்களைக் கண்டார். எங்கும் தான் சேவகனாய் இருப்பதாகவும் கண்டார். மிகுந்த குழப்பத்தை அடைந்தார். அப்போது கண்ணன், கையில் பாதி அன்னக்கவளத்துடன் காட்சி அளித்தான்.
பிரம்மன் கர்வம் நீங்கி, கிருஷ்ணனைத் துதித்துப் பாடி, நமஸ்கரித்து, பிரதக்ஷிணம் செய்து, சத்யலோகம் சென்றார். புதிய உருவம் கொண்ட சிறுவர்களும், கன்றுகளும் மறைந்தார்கள். இடைச்சிறுவர்களும், யமுனைக் கரையில் உணவு உண்டு கொண்டிருந்தார்கள். அவர்கள் ஒரு வருடம் சென்றதைக் கூட உணரவில்லை. கண்ணன் கன்றுகளுடன் யமுனைக் கரைக்கு வந்தான். சிறுவர்கள், கண்ணன் கன்றுகளை மேய்த்துவிட்டு மெதுவே வருகிறான் என்று நினைத்து, “கண்ணா! சீக்கிரம் வா! உணவு உண்ணலாம்” என்று கூறினார்கள். கண்ணனும் சிரித்துக் கொண்டேஉணவு உண்டுவிட்டு, மகிழ்ச்சியாக மற்ற சிறுவர்களுடன் வீடு திரும்பினான்.