கண்ணன் கதைகள் – 41
காளியமர்த்தனம்,
காளிங்கநர்த்தனம்

முன்னொரு சமயம் ஸௌபரி என்ற முனிவர், திருமாலைத் தரிசிக்க ஆவல் கொண்டு, பன்னிரண்டு வருடம் காளிந்தி நதியின் உள்ளே நீரில் தவம் செய்தார். அப்போது நீரில் இருந்த மீன்கூட்டங்களிடம் அன்பு கொண்டார். ஒரு நாள் எதிரே கருடன் வருவதைக் கண்டார். கருடன் பசியால் மீன்களைத் தின்பதைக் கண்டார். துயரமடைந்த அவர் ‘இங்கு உள்ள ஏதாவது ஒரு ஜீவனைத் தின்றால் உடனே உயிரிழப்பாய்’ என்று கருடனைச் சபித்தார்.

காளியன் என்ற பாம்பு, கருடனுக்கு வைக்கப்பட்ட பாகங்களைத் தின்று வந்தது. கோபமடைந்த கருடன், தன் இறக்கைகளால் காளியனை அடித்து விரட்டினான். காளியனும் கருடன் வரமுடியாத அந்த காளிந்தி மடுவிற்குச் சென்றது. அந்த மடுவில் காளியன் புகுந்ததும், அதன் விஷமான மூச்சுக் காற்றால் மடுவின் கரையிலுள்ள மரங்கள் கருகின. மடுவிற்கு மேல் வானில் பறக்கும் பறவைகளும் இறந்து விழுந்தன.

ஒரு முறை, இடையர்களும், கண்ணனும், பலராமனை விட்டுத் தனியே யமுனை நதியின் கரையிலுள்ள காட்டிற்குச் சென்றார்கள். கடுமையான வெய்யிலினால் துன்பமடைந்த இடையர்களும், பசுக்களும் அந்த மடுவின் விஷ நீரைப் பருகினார்கள்.உடனே உயிரிழந்து கீழே விழுந்தார்கள். கண்ணன் கருணையுடன் அவர்கள் அருகே வந்து, அமிர்தமாகிற தன்னுடைய கடைக்கண் பார்வையால் அவர்களைப் பிழைக்கச் செய்தான். உயிர் பிழைத்த அவர்கள், இந்த ஆனந்தம் எங்கிருந்து உண்டாகிறது? என்று கூறிக் கொண்டு எதிரில் கண்ணனைக் கண்டார்கள். கண்ணனே காரணம் என்று உணர்ந்து அவனைக் கட்டித் தழுவினர். நொடிப்பொழுதில் பிழைத்த பசுக்களும், ஆனந்தமுடன் மெதுவாகக் குரல் கொடுத்துக் கொண்டே கண்ணனைச் சுற்றி வந்தன. ‘எங்கள் தேகத்தில் மயிர்க்கூச்சலுடன், சொல்லமுடியாத ஆனந்தம் உண்டாகிறது. இந்த விஷவேகம் ஆச்சர்யமாக உள்ளது’ என்று கூறி இடையர்கள் வணங்கினார்கள்.

கண்ணன், அந்தப் பாம்பின் கொடிய செயலைத் தடுக்க முடிவு செய்து, மடுவின் கரையில் விஷக்காற்றால் வாடி நின்ற கடம்பமரத்தின்மீது ஏறினான். சிவந்த மென்மையான பாதங்களால் மரத்தின் மீது ஏறி, அலைகள் நிறைந்த அந்த மடுவில் உயரத்திலிருந்து குதித்தான். கண்ணன் குதித்ததும், அவனுடைய பாரத்தால் அலைகள் உயரே கிளம்பி, மிகுந்த ஓசையுடன், கரைகளை மூழ்கடித்தது. அந்த ஓசையைக் கேட்ட காளியன் கோபத்துடன் நீரிலிருந்து வெளியே வந்தான். ஆயிரக்கணக்கான அவன் படங்களிலிருந்து கொடிய விஷம் பெருக்கெடுத்து ஓட, பெரிய மலை போலத் தோற்றமளித்தான். பயங்கரமான விஷ மூச்சை விட்டுக்கொண்டு, கண்ணனை அசையாமல் இருக்கும்படி சுற்றிக் கொண்டான். கரையில் நின்ற இடையர்களும், பசுக்களும், சிறுவர்களும் கண்ணனைக் காணாமல் துயரமடைந்தனர். கோபர்களும், பல கெட்ட சகுனங்களைக் கண்டு யமுனைக்கரைக்கு விரைந்து வந்தனர். கண்ணனுடைய நிலையைக் கண்ட அனைவரும் பிராணனை விட நினைத்தார்கள்.

அப்போது கண்ணன், அப்பாம்பின் பிடியிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டு, புன்சிரிப்புடன் ஆற்றிலிருந்து வெளியே வந்தான். மென்மையான சிறிய தன்னுடைய கால்களால் அப்பாம்பின் படங்களின் மேல் ஏறி நடனம் செய்தான். அவனுடைய கால்களில் அணிந்திருந்த கொலுசுகளும், கைவளைகளும் அந்த நடனத்திற்கு ஏற்றவாறு சப்தித்தன. காளியனுடைய படமெடுத்த தலைகளின் மீது ஏறி நடனம் செய்தான். காளியனுடைய தலை தொங்கியது. தொங்கிய தலைகளை விட்டுவிட்டு, மீண்டும் படமெடுத்த தலையின் மீது ஏறி, தனது தாமரைப் பாதங்களால் தாளமிட்டுக் கொண்டு நர்த்தனமாடினான். அந்த நடனத்தைக் கண்ட கோபர்கள் மகிழ்ச்சி அடைந்தார்கள். ஆகாயத்தில், தேவ மங்கையர் துந்துபி வாசிக்க, தேவர்கள் பூமாரி பொழிந்தனர். முனிவர்கள் ஆனந்தத்துடன் துதித்தனர். இவ்வாறு கண்ணன் ஆடியதும், காளியனுடைய படமெடுத்த தலைகள் யாவும் தொங்கிவிட்டது. காளியன் உடலில் ரத்தம் வடிந்தது. அவன் சோர்ந்து விழுந்தான். அப்போது, மடுவின் உள்ளே இருந்த காளியனின் மனைவியர் கண்ணனை சரணடைந்து, “எங்கள் கணவரை விட்டுவிடுங்கள்” என்று கூறி, பலவிதமான ஸ்தோத்திரங்களால் கண்ணனைத் துதித்தனர். காளியனும் தலைவணங்கித் துதித்தான். கண்ணன் அவர்கள் மீது இரக்கம் கொண்டான். அவர்களிடம்,” உங்களை நான் கொல்ல மாட்டேன்.இந்த மடுவில் குழந்தைகளும், பசுக்களும் நீர் அருந்த வருவதால், நீங்கள் இந்த மடுவை விட்டு சமுத்திரத்தில் இருக்கும் ரமணகம் என்னும் இடத்திற்கு செல்லுங்கள். அங்கு கருடன் உங்களைத் தொந்திரவு செய்ய மாட்டான்” என்று கூறினான். இவ்வாறு சொன்னதும், காளியன் மற்ற பாம்புகளுடன் ரமணகத்திற்குப் புறப்பட்டான். காளியனின் மனைவியர் கண்ணனுக்கு விலையுயர்ந்த ரத்தினங்களையும், ஜொலிக்கும் ஆபரணங்களையும், பட்டுத் துணிகளையும் கொடுத்தனர். அவற்றை அணிந்துகொண்டு ஆனந்தத்துடன் காளிந்தி மடுவின் கரையில் நிற்கும் சுற்றத்தாரிடம் வந்தான். தன்னுடைய அழகான கடைக்கண் கடாக்ஷத்தால், அங்குள்ளோரது தாபங்களைப் போக்கி மகிழ்வித்தான். கண்ணனைக் கண்ட ஆயர்கள், அவனைத் தோளில் சுமந்துகொண்டனர். பசுக்களும், ஆனந்தமுடன் மெதுவாகக் குரல் கொடுத்துக் கொண்டே கண்ணனைச் சுற்றி வந்தன. இடைச்சிறுவர்கள் அவனைச் சுற்றிலும் நின்றுகொண்டு ஆடிப் பாடி ஆனந்தித்தனர்.

Leave a Comment