கண்ணன் கதைகள் – 40
தேனுகாசுர வதம்
குழந்தைப் பருவத்தைத் தாண்டி, பிள்ளைப் பருவத்தை அடைந்த கண்ணன், கன்றுகளை மேய்ப்பதை விட்டு, பசுக்களை மேய்த்து ரக்ஷிக்கத் தொடங்கினான். பூமியைக் காக்க அவதாரம் செய்த கண்ணன், ‘கோ’ எனப்படும் பசுக்களையும் காக்கத் தொடங்கினான்.
ஒரு முறை பலராமனுடன் காட்டின் அழகிய காட்சிகளில் மகிழ்ந்து செல்லும்போது, ஸ்ரீதாமன் என்ற நண்பன், “கண்ணா! இங்கு ‘தாளவனம்’ என்ற ஒரு பனங்காடு இருக்கிறது. ஆனால், தேனுகன் என்ற அசுரன் அதைக் காவல் காத்து வருகிறான், பறவைகளும் மிருகங்களும் கூட அங்கு செல்ல பயப்படும். அங்குள்ள பனம் பழங்கள் மிகுந்த சுவை உடையதாய் இருக்கும், அதை சுவைக்க வேண்டும் என்பது எங்களுடைய நீண்ட நாள் ஆசை” என்று சொன்னான். நண்பர்களின் ஆசையைப் பூர்த்தி செய்ய விரும்பிய கண்ணனும் பலராமனும், இடைச்சிறுவர்களுடன் தேனுகன் என்ற அசுரனின் காட்டிற்குச் சென்றார்கள். கண்ணன் கூறியதால், பலராமன், அங்கு உயர்ந்திருந்த பனைமரங்களை வலுவாக அசைத்தார். பழுத்ததும், பழுக்காததுமான பழங்கள் கீழே விழுந்தன. சத்தத்தைக் கேட்ட தேனுகன் என்ற அசுரன், கழுதை வடிவம் எடுத்துக் கொண்டு, விரைந்து வந்து பலராமனின் நெஞ்சில் உதைத்தான். பலராமன் அசுரனின் பின்னங்கால்களைப் பற்றி, சுழற்றி எறிந்து அவனைக் கொன்றார். தேனுகனென்ற அசுரனும் உயிரிழந்து கீழே விழுந்தான்.
உடனே, அந்த அசுரனுடைய பணியாட்கள் தாக்க வந்தனர். கண்ணன், அவர்களை அனாயாசமாக, நாகப்பழங்களைப் போல பனைமரங்களில் எறிந்து,
அனைவரையும் கொன்றான். “தாங்கள் அவதரித்த பலன் கிடைத்துவிட்டது” என்று கூறி தேவர்கள் பூமாரி பொழிந்து துதித்தனர். ‘ஆம் பழம் கிடைத்துவிட்டது’ என்று சிரித்துக்கொண்டே, பெரிதாகவும், நிறைய சாறுடன் இனிமையாக உள்ள அந்தப் பழங்களை சிறுவர்களுடன் சேர்ந்து உண்டு மகிழ்ந்து, நிறைய பழங்களை எடுத்துக் கொண்டு வீடு திரும்பினார்கள்.
தேனுகன் இறந்ததால், மக்கள் பயமின்றி ‘தாளவனம்’ சென்று பனம்பழங்களை சேகரித்து உண்டு மகிழ்ந்தார்கள். பசுக்களும், மிருகங்களும் பயமின்றி அந்த வனத்திலுள்ள புல்லை மேய்ந்து மகிழ்ந்தன.