கண்ணன் கதைகள் – 34
யசோதை – கண்ணனை உரலில் கட்டி வைத்தல்
யசோதை ஒரு முறை தயிர் கடைந்து கொண்டிருந்தாள். கண்ணன் தூங்கிக் கொண்டிருந்தான். கண்ணனுடைய விஷமங்களை நினைத்து மிகவும் பெருமிதத்துடன், பாட்டிசைத்துக் கொண்டு தயிர் கடைந்தாள். சிறிது நேரத்தில் விழித்துக் கொண்ட கண்ணனுக்கு, பால் குடிக்க ஆசை ஏற்பட்டது. உடனே யசோதையின் மடிமீது ஏறி, தயிர் கடைவதைத் தடுத்து, பால் குடித்தான். தாமரைமொட்டுக்கள் போன்ற மார்பில், தாமரை முகத்துடன் அவன் பால் குடித்துக் கொண்டிருந்தபொழுது, அடுப்பில் பால் பொங்கியதால் யசோதை அவனைக் கீழே இறக்கிவிட்டு உள்ளே சென்றாள்.
பாதி பால் குடித்துக் கொண்டிருக்கும்போது தடை ஏற்பட்டதால், கோபம் கொண்ட கண்ணன், மத்தை எடுத்து தயிர்ப் பானையை உடைத்தான். பானை உடைந்த சத்தம் கேட்டு வேகமாக வந்த யசோதை, கீழே சிதறிக் கிடந்த தயிரைக் கண்டாள். கண்ணனைத் தேடினாள். அவனைக் காணவில்லை. தயிரில் தோய்ந்த கண்ணனின் காலடித் தடத்தைப் பின்பற்றி மெதுவே சென்றாள். அங்கே, அவன் உரலில் அமர்ந்துகொண்டு பூனைக்கு வெண்ணை கொடுத்துக்கொண்டிருந்தான்.
பயந்தவன் போல் முகத்தை வைத்துக் கொண்டிருந்த அவனைக் கோபத்துடன் கையில் பிடித்து, ” உன் விஷமம் எல்லை கடந்து போய்விட்டது, கட்டிப் போட்டால்தான் சரியாகும்” என்று கூறி, அவனை உரலில் கட்டிப்போட கயிற்றை எடுத்தாள். பல கயிறுகளை ஒன்றாக இணைத்தும், கட்டுவதற்கு இரண்டு அங்குலம் கயிறு குறைவாக இருந்தது. வீட்டிலுள்ள எல்லா கயிறுகளையும் இணைத்தும் அவளால் கட்ட முடியவில்லை. கயிறு சற்று குறைந்தே இருந்தது. அவள் முகம் வியர்த்தது. இடைப் பெண்கள் அவளைப் பரிகாசமாய்ப் பார்த்தார்கள். அதைக் கண்ட கண்ணன், அவள்மேல் கருணை கொண்டு, அவள் கயிற்றால் உரலில் கட்ட உடன்பட்டான். யசோதை, “துஷ்டனே! இந்த உரலிலேயே கட்டுப்பட்டு இரு” என்று சொல்லி வீட்டிற்குள் சென்றாள். அவள் சென்றவுடன், மறுபடி முன்பே உரலில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெண்ணையைத் தின்னத் தொடங்கினான். தேவர்கள் கிருஷ்ணனை “தாமோதரன்” (கயிற்றால் இடுப்பில் கட்டப்பட்டவன்) என்ற பெயரால் துதித்தனர்.