கரிக்குருவிக்கு உபதேசம் செய்த படலம் | Kuruvi story thiruvilayadal
கரிக்குருவிக்கு உபதேசம் செய்த படலம் (Kuruvi story) இறைவனான சொக்கநாதர் கரிக்குருவிக்கு மிருத்திஞ்சய மந்திரத்தை உபதேசம் செய்து முக்தி அளித்ததைக் குறிப்பிடுகிறது.
கரிக்குருவிகள் வலியன் குருவிகள் என்று அழைக்கப்படும் காரணத்தையும் இப்படலம் எடுத்துரைக்கிறது.
கரிக்குருவி கேட்டறிந்த சொக்கநாதரின் பெருமைகள், கரிக்குருவி சொக்கநாதரை வழிபட்டது, இறைவனார் கரிக்குருவிக்கு மிருத்திஞ்சய மந்திரத்தை உபதேசித்தது, கரிக்குருவி பெற்ற வரம் ஆகியவை இப்படலத்தில் விளக்கப்பட்டுள்ளன.
கரிக்குருவிக்கு உபதேசம் செய்த படலம் திருவிளையாடல் புராணத்தின் கூடல் காண்டத்தில் நாற்பத்தி ஏழாவது படலமாக அமைந்துள்ளது.
சொக்கநாதரின் பெருமை
இராசராச பாண்டியனுக்குப் பின் அவனுடைய மகன் சுகுண பாண்டியன் மதுரையை நல்லாட்சி செய்து வந்தான்.
அப்போது முற்பிறவியில் நல்ல வினைகள் செய்த ஒருவன், சில தீவினைகள் செய்தமையால் மதுரைக்கு அருகில் உள்ள ஊரில் கரிக்குருவியாக பிறந்தான்.
அக்கரிக்குருவியை காகம் உள்ளிட்ட பறவையினங்கள் தலையில் கொத்தின. இதனால் கரிக்குருவிக்கு தலையில் காயங்கள் உண்டானது. கரிக்குருவியால் அப்பறவைகளை எதிர்க்க இயலவில்லை. எனவே கரிக்குருவி அவ்வூரை விட்டு காட்டுப் பகுதிக்கு சென்றது. அங்கு ஒருநாள் மரத்தில் கரிக்குருவி அமர்ந்திருந்தது.
அப்போது சிவபக்தர் ஒருவர் தன் அடியவர் கூட்டத்தினருடன் அம்மரத்தடிக்கு வந்தார்.
சிவபக்தர் கூட்டத்தினரை நோக்கி “தலம், தீர்த்தம், மூர்த்தி என மூன்று சிறப்புகளையும் உடையது மதுரையம்பதி. அங்கு கோவில் கொண்டிருக்கும் சொக்கநாதர் தலைசிறந்தவர். அவர் தம் பக்தர்களுக்கு இம்மையிலும் மறுமையில் நற்கதி அளிப்பார்.” என்று மதுரையின் சிறப்பையும், சொக்கநாதரின் பெருமைகளையும் எடுத்துக் கூறினார்.
சிவபக்தர் கூறியதைக் கேட்ட கரிகுருவிக்கு சொக்கநாதரை வழிபட வேண்டும் என்ற ஆர்வம் உண்டானது.
சொக்கநாதர் கரிக்குருவிக்கு அருளியது
அக்கரிக்குருவி மதுரை நோக்கி பறந்தது. மதுரையை அடைந்ததும் பொற்றாமரைக் குளத்தில் நீராடியது. பின்னர் அங்கயற்கண் அம்மையையும், சொக்கநாதரையும் மனமுருக வழிபட்டது. இவ்வாறாக மூன்று தினங்கள் கரிக்குருவி இறைவழிபாடு செய்தது.
கரிக்குருவியின் செயலினைக் கண்டதும் அங்கையற்கண் அம்மை இறைவனாரிடம் “ஐயனே, இக்கரிக்குருவி வழிபடும் காரணம் என்ன?” என்று கேட்டார்.
இறைவனார் கரிக்குருவியின் முற்பிறவியும், இப்பிறவியில் இறைவனை கேட்டறிந்த விதத்தையும் எடுத்துரைத்தார். பின்னர் கரிக்குருவிக்கு ஆயுள்பலத்தையும், பிறவித்துன்பத்தையும் போக்கும் மிருத்திஞ்சய மந்திரத்தை உபதேசித்தார். ஞானம் பெற்ற கரிக்குருவியானது இறைவனை பலவாறு துதித்து வழிபட்டது.
பின்னர் இறைவனாரிடம் “ஐயனே, எனக்கு ஓர் குறை உள்ளது. மற்ற பறவைகள் எல்லாம் என்னை துன்புறுத்துகின்றன.” என்றது.
அதனைக் கேட்ட இறைவனார் “அப்பறவைகளுக்கு எல்லாம் நீ வலியன் ஆவாய்.” என்று திருவாய் மலர்ந்தருளினார். உடனே கரிக்குருவி “வலியன் என்பது அடியேன் மரபில் உள்ள பறவைகளுக்கு எல்லாம் விளங்க வேண்டும். தேவரீர் அடியேனுக்கு உபதேசித்த மந்திரத்தை அவைகளுக்கும் ஓதி உய்தல் வேண்டும்.” என்று வேண்டியது.
சொக்கநாதர் “அவ்வாறே ஆகுக” என்று கூறியருளினார். உடனே அக்குருவியும், அதன் இனமும் சொக்கநாதர் ஓதியருளிய மந்திரத்தை உச்சரித்து வலியவனாகின.
அதனால் வலியன் என்னும் காரணப் பெயர் பெற்றுச் சிறப்பு பெற்றன. சில காலம் சென்ற பின் கரிக்குருவி சிவனடியை அடைந்தது.
கரிக்குருவிக்கு உபதேசம் செய்த படலம் கூறும் கருத்து
இறைவனார் எல்லோர் இடத்திலும் அன்பு கொண்டவர். நம்முடைய நல்வினைகள் நம்மை நல்வழிப்படுத்தும் ஆகியவை இப்படலம் கூறும் கருத்தாகும்.