பன்றிக்குட்டிகளை மந்திரியாக்கிய படலம் | pandri kutty story thiruvilaiyadal

பன்றிக்குட்டிகளை மந்திரியாக்கிய படலம் (pandri kutty story) சாபத்தினால் பன்றிகளாக மாறிய சுகலனின் பன்னிரு புதல்வர்களுக்கு பாலூட்டிய சொக்கநாதர் அவர்களை இராசராசபாண்டியனுக்கு மந்திரியாக்கிய விதத்தை விளக்கிக் கூறுகிறது.
சொக்கநாதரிடம் பால் அருந்தியதால் பன்றிக்குமாரர்களுக்கு ஏற்பட்ட ஞானம் மற்றும் வலிமை, பன்றிகுமாரர்களை பாண்டியனுக்கு மந்திரியாக்கி பின் சிவகணங்களாக அருளியது ஆகியவை இப்படலத்தில் விளக்கப்பட்டுள்ளன.
பன்றிக்குட்டிகளை மந்திரியாக்கிய படலம் திருவிளையாடல் புராணத்தின் கூடல்காண்டத்தில் நாற்பத்தி ஆறாவது படலமாக அமைந்துள்ளது. இப்படலம் பன்றிக் குட்டிக்கு முலை கொடுத்த படலத்தின் தொடர்ச்சியாகும்.

பன்றிகுமாரர்களை மந்திரியாக மாற்றுதல்
சொக்கநாதரிடம் பால் அருந்திய பன்றிக்குட்டிகள் பன்றி முகமும், மனிதஉடலும் கொண்ட பன்றிகுமாரர்களாக மாறினர். அவர்கள் பல கலைகளிலும் வல்லவர்களாக பன்றிமலையில் வசித்து வந்தனர்.

அப்போது ஒருநாள் அங்கையற்கண்அம்மை இறைவனாரிடம் “எம்பெருமானே, இழிந்த பிறவியான பன்றிக்குட்டிகளுக்கு தாங்கள் பாலூட்டி அவைகளின் அறியாமையை போக்கியது ஏன்?” என்று கேட்டார்.
அதற்கு இறைவனார் “உலகில் உள்ள சகல உயிர்களும் எமக்கு ஒரே தன்மையை உடையவையே. உலக உயிர்களிடம் எந்த பேதமையும் எமக்கு கிடையாது. ஆதலால்தான் எம்மை சகல சீவ தயாபரன் (எல்லா உயிர்களுக்கும் ஒரே தன்மையை அருளுபவன்) என்று அழைக்கின்றனர்.
ஆதரவின்றி தவித்த பன்றிக்குட்டிகளுக்கு பாலூட்டி அவற்றின் அறியாமையை நீக்கினோம். இனி அப்பன்றி குமாரர்களை பாண்டியனுக்கு மந்திரியாக்கி இறுதியில் அவர்களை சிவகணங்களாக்குவோம்” என்று திருவாய் மலர்ந்து அருளினார்.
பின்னர் இராசராச பாண்டியனின் கனவில் தோன்றி “அரசனே, பன்றி மலையில் அறிவில் சிறந்த பன்னிரெண்டு பன்றிகுமாரர்கள் இருக்கிறார்கள். நீ அவர்களை மந்திரியாக்கி நன்மைகளைப் பெறுவாயாக” என்று கூறினார்.

இறைவனின் ஆணையைக் கேட்ட இராசராசபாண்டியன் விழித்து எழுந்தான். காலையில் தன்னுடைய ஆட்களை பன்றிமலைக்கு அனுப்பி பன்றிகுமாரர்களை அழைத்து வரச்செய்தான்.
பன்றிகுமாரர்களுக்கும் அரசனின் அழைப்பினை ஏற்று மதுரை வந்தனர். பின்னர் அவர்கள் மதுரையை அடையும்போது அவர்களை எதிர்கொண்டு அழைத்து பரிசுகள் பல அளித்து அவர்களை மந்திரிகளாக ஆக்கிக் கொண்டான்.

பழைய அமைச்சர்களின் பெண்களை அவர்களுக்கு திருமணம் செய்வித்தான். அப்பன்றிகுமாரர்களும் ஒற்றுமையுடன் வாழ்ந்து பாண்டியனுக்கு நல்லோசனைகள் கூறி நல்ல நெறிகளைச் செயல்படுத்தினர்.

ஈகையும், அறமும், புகழும் பாண்டினுக்கு உண்டாகும்படி எட்டுத் திக்கும் வெற்றி பெருக வாழ்ந்திருந்தனர். சிலகாலம் சென்றபின் சிவலோகத்தை அடைந்து சிவகணங்களாக மாறும் பேறு பெற்றனர். இராசராச பாண்டியனும் தேவலோகம் அடைந்தான்.

பன்றிக்குட்டிகளை மந்திரியாக்கிய படலம் கூறும் கருத்து
இறைவனார் முன்னர் எல்லா உயிர்களும் சமம். அவர் எல்லா உயிர்களுக்கும் ஒரே தன்மையையே அருளுகிறார் என்பதே பன்றிக்குட்டிகளை மந்திரியாக்கிய படலம் கூறும் கருத்தாகும்.