கண்ணன் கதைகள் (8)
உதவி சமையற்காரன்
ஒரு சமயம், ஒரு பக்தர் 100 படி அரிசி சமைத்து கோயிலில் அன்னதானம் செய்ய விரும்பினார். குருவாயூர்க் கோயிலில், வெளியாட்கள் சமைக்கவோ, சமைத்துக் கொண்டு வந்து கொடுக்கவோ முடியாது. கோயிலின் மடப்பள்ளியில் கீழ்சாந்திகள் (உதவி புரிபவர்) தான் சமைப்பார்கள்.
கோவிலில் மொத்தம் இரண்டு கீழ்சாந்திகளே இருந்தனர். அதிலும் ஒரு கீழ்சாந்தி விடுப்பில் சென்றிருந்தார். மல்லிசேரி நம்பூதிரி என்ற மற்றொரு கீழ்சாந்திதான் ஒருவனாக எவ்வாறு அவ்வளவு சமைப்பது என்று மிகுந்த கவலை கொண்டார். எப்படி அவ்வளவு ஏற்பாடுகளைச் செய்வது என்ற கவலையுடன் தூக்கமில்லாமல் இரவைக் கழித்தார். இரவு முழுவதும் நாராயண நாமத்தை உச்சரிப்பதைத் தவிர வேறு ஒன்றும் செய்யவில்லை.
அடுத்த நாள், அதிகாலையிலேயே கோவிலுக்குச் சென்றுவிட்டார். வேலைகளைச் செய்யத் தொடங்கினார். விடுமுறையில் சென்றிருந்த கீழ்சாந்தி அவர்க்கு முன்பாகவே வந்து விருந்து தயார் செய்ய ஆரம்பித்திருந்தார். சமையல் முடியும் தருவாயில் இருந்ததைப் என்று பார்க்க நிம்மதியாக இருந்தது. சமையல் முடிந்த பிறகு அந்த கீழ்சாந்தி நாராயண சரஸில் குளித்து விட்டு வருகிறேன் என்று சொல்லிச் சென்றார். வெகு நேரமாகியும் திரும்பி வரவில்லை. விருந்தும் நல்லபடியாகவே முடிந்தது.
அடுத்த நாளும் அவர் வரவில்லை. அவரை அழைத்து வரச் சொல்லி ஒருவரை அனுப்பினார். என்ன ஆச்சர்யம்! விடுமுறையில் சென்ற கீழ்சாந்தி சென்றது முதல் படுத்த படுக்கையாக இருப்பதாகத் தகவல் வந்தது. நம்பமுடியாததாய் இருந்தாலும் அவருக்கு உதவியாளராக வந்தது அந்தக் கண்ணனே என்பது மல்லிசேரிக்குப் புரிந்தது. குருவாயூரப்பனின் திருவிளையாடலை எண்ணி மிகவும் வியந்து மகிழ்ந்தார். நம்பியவரைக் காக்க இறைவன் எந்த உருவிலும் வருவார்!!