மாயப்பசுவை வதைத்த படலம் | Maya pasuvai vadhaitha padalam

மாயப்பசுவை வதைத்த படலம் (Maya pasuvai vadhaitha padalam) சமணர்களின் வேள்வியில் உருவான மாயப்பசுவை இறைவனான சொக்கநாதர் நந்தியெம் பெருமான் மூலம் அழித்ததைப் பற்றிக் கூறுகிறது.
மதுரையில் பசுமலை, இடபமலை உருவான வரலாறு இப்படலத்தில் கூறப்படுகிறது.

சமணர்களின் மாயப்பசு உண்டாக்கிய அழிவு, நந்தியெம்பெருமான் அழகிய காளை வடிவில் மாயப்பசுவை வெற்றி கொள்ளுதல், இராமபிரானின் மதுரையம்பதி வருகை, சொக்கநாதரின் பெருமைகள் ஆகியவை இப்படலத்தில் விளக்கப்பட்டுள்ளன.
மாயப்பசுவை வதைத்த படலம் திருவிளையாடல் புராணத்தின் கூடல் காண்டத்தில் இருபத்தி ஒன்பதாவது படலமாக அமைந்துள்ளது.

மாயப்பசுவின் வருகை
அனந்தகுணப் பாண்டியன் இறைவனான சொக்கநாதரின் அருளினால் சமணர்கள் உண்டாக்கிய நாகத்தினை அழித்து மதுரையைக் காத்ததை நாகம் எய்த படலத்தினால் அறியலாம்.
இதனை கண்ட சமணர்கள் எப்படியாவது சூழ்ச்சி செய்து மதுரையையும், சிவனடியாராகத் திகழ்ந்த அனந்தகுண பாண்டியனையும் அழிக்க எண்ணினர்.
‘பசுவானது சைவர்களுக்கு புனிதமானது. எனவே மாயப்பசுவை உருவாக்கி மதுரையை அழிக்க ஆணையிட்டால் அனந்தகுண பாண்டியன் புனிதத்தன்மையான பசுவினை எதிர்த்து போரிடமாட்டான். ஆதலால் அவனை எளிதில் வெற்றி கொள்ளலாம்’ என்று எண்ணினர்.
எனவே அவர்கள் ஒன்றுகூடி மீண்டும் வேள்வி செய்யத் தொடங்கினர். வேள்வியின் இறுதியில் மாயப்பசு ஒன்று உருவானது.
அவர்கள் மதுரையையும், அனந்தகுண பாண்டியனையும் அழிக்க மாயப்பசுவிற்கு ஆணையிட்டனர்.
மாயப்பசுவும் அவர்களின் ஆணையை ஏற்று மதுரையை நோக்கி விரைந்தது. வானளவிற்கு வளர்ந்திருந்த அப்பசு கண்ணில் பட்டவற்றை எல்லாம் அழிக்கத் தொடங்கியது.
நந்தியெம் பெருமான் அழகிய காளையாக வருதல்
மாயபசுவின் செயல்களை மக்கள் அனந்தகுண பாண்டியனுக்குத் தெரிவித்தனர்.
இதனைக் கேட்டதும் அனந்தகுண பாண்டியன் திருகோவிலுக்குச் சென்று இறைவனான சொக்கநாதரிடம் முறையிட்டான். தன்னையும், தம்மக்களையும் காத்தருளும்படி வேண்டினான்.
அனந்தகுண பாண்டியனையும், மதுரை மக்களையும் காப்பாற்ற சோமசுந்தரர் திருவுள்ளம் கொண்டார்.
அவர் நந்தியெம் பெருமானை அழைத்து “நீ சென்று சமணர்கள் ஏவிய மாயப்பசுவினை வென்று வருவாயாக” என்று கட்டளையிட்டார்.
நந்தியெம் பெருமானும் இறைவனின் ஆணைக் கேட்டதும் கண்களில் அனல் தெறிக்க மிகப்பெரிய காளை வடிவாகி மாயப்பசு இருக்கும் இடத்தை நோக்கி விரைந்தார்.
காளை வடிவில் இருந்த நந்தியெம் பெருமானுக்கும், மாயப்பசுவிற்கும் நெடுநேரம் சண்டை நடந்தது. இறுதியில் நந்தியெம் பெருமான் அழகிய காளையாக வடிவெடுத்தார்.

பசுமலை, இடபமலை உருவாதல்

அழகிய காளையைக் கண்ட மாயப்பசு அதனுடைய அழகில் மயங்கியது. மாயப்பசு மோகத்தினால் சண்டையை மறந்தது.
சண்டையில் களைப்படைந்திருந்த மாயப்பசு மோகம் அதிகரித்தால் தன்னிலை மறந்து மயங்கி விழுந்து மடிந்தது.
மாயப்பசு வீழ்ந்த இடம் மலையாக மாறியது. அம்மலையானது இன்றும் மதுரையில் பசுமலை என்று அழைக்கப்படுகிறது.
மாயப்பசு மடிந்ததைக் கண்ட அனந்தகுண பாண்டியனும், மதுரை மக்களும் மிக்க மகிழ்ச்சி அடைந்தனர்.
மாயப்பசுவினை வென்றதும் நந்தியெம் பெருமான் தன்னுடைய பூத உடலினை இடபமலையாக நிறுத்திவிட்டு சூட்சும உடலோடு திருக்கயிலாயத்தை அடைந்தது.
இடப மலை என்பது இன்றைக்கு மதுரையில் அழகர்கோவில் மற்றும் பழமுதிர்ச்சோலை அமைந்திருக்கும் இடம் ஆகும்.

இராமபிரான் சொக்கநாதரைத் தரிசித்தல்
இராமபிரான் சீதையைத் தேடி இலங்கைக்குச் செல்லும்போது இடப மலையில் தங்கியிருந்தார். இதனை அறிந்த அகத்தியர் இராமபிரானிடம் சென்று சொக்கநாதரின் பெருமைகளையும், இந்திரன் சாபத்தை அவர் போக்கி அருளியதையும் எடுத்துக் கூறினார்.
இராமபிரான் சொக்கநாதரை வழிபட மதுரைக்கு வந்தார். பொற்றாமரைத் தீர்த்தத்தில் நீராடி சொக்கநாதரை பலவாறு துதித்து வழிபட்டார்.
சொக்கநாதர் “இராமா நீ இலங்கை சென்று வைதேகியை மீட்டு வெற்றியுடன் திரும்பி வந்து உன் நாட்டிற்குச் சென்று சிறப்புடன் ஆட்சி செய்வாயாக. அச்சம் கொள்ள வேண்டாம்” என்று திருவாய் மலர்ந்தருளினார். இராமபிரானும் இலங்கை சென்று இராவணனை வென்று மைதிலியுடன் வெற்றியுடன் இராமேஸ்வரத்தை அடைந்து சிவலிங்க வழிபாடு மேற்கொண்டு தன்னுடைய நாட்டுக்குப் புறப்பட்டான். அப்போது மதுரையை அடைந்து சீதையுடன் சொக்கநாதரை வழிபட்டு தன்நாட்டிற்குச் சென்றான்.
அனந்தகுண பாண்டியன் தன்மகனான குலபூடணிடம் தன்னுடைய ஆட்சிப் பொறுப்பை ஒப்படைத்து இறுதியில் சிவப்பேறு பெற்றான்.

மாயப்பசுவை வதைத்த படலம் கூறும் கருத்து
சைவர்களின் புனிதமான பசுவினை அழிக்கமாட்டார்கள் என்று எண்ணி சமணர்கள் ஏவிய மாயப்பசுவினை காளையின் வடிவான நந்தியெம் பெருமான் மூலம் இறைவன் மக்களைக் காத்தார். ஆதலால் தீவினைகளை இறைவன் எவ்வாறேனும் அழிப்பார் என்பதே மாயப்பசுவை வதைத்த படலம் கூறும் கருத்தாகும்.