மண் சுமந்த படலம் | Thiruvilayadal man sumantha padalam

மண் சுமந்த படலம் (Thiruvilayadal man sumantha padalam) இறைவனான சொக்கநாதர் மாணிக்கவாசகருக்கும், வஞ்சி மூதாட்டிக்கும் அருள் செய்யும் நோக்கில் தன்னுடைய திருமுடியில் மண்ணினைச் சுமந்து வந்து பிரம்படி பட்ட வரலாற்றினை விளக்குகிறது.
மண் சுமந்த படலம் திருவிளையாடல் புராணத்தின் ஆலவாய்க் காண்டத்தில் அறுபத்தியோராவது படலமாக அமைந்துள்ளது.

கரையை அடைக்க முயற்சி
மாணிக்கவாசகரை காப்பாற்றும் நோக்கில் இறைவனார் வையையில் வெள்ளப்பெருக்கினை உண்டாக்கினார். வையையில் ஏற்பட்ட வெள்ளமானது ஆற்றின் கரையை உடைத்து வெளியேறத் தொடங்கியது.
இதனைக் கண்டதும் காவலர்கள் அரிமர்த்தன பாண்டியனிடம் விவரத்தை எடுத்துரைத்தனர். அரிமர்த்தன பாண்டியனும் குடிமக்களுக்கு ஆற்றின் கரையை அடைக்குமாறு ஆணையிட்டான்.
அரசாங்க ஏவலர்கள் பாண்டிய நாட்டு குடிமக்களுக்கு ஆற்றின் உடைபட்ட கரையினை அளந்து தனித்தனியே கொடுத்து பெயர்களை பதிவு செய்து கொண்டு அவரவர் பங்கினை அடைக்க உத்தரவிட்டனர்.
மக்களும் வைக்கோல், பசுந்தளை, மண்வெட்டி, கூடை ஆகியவற்றைக் கொண்டு தாங்களாகவும், கூலிக்கு வேலையாள் அமர்த்தியும் ஆற்றின் கரையினை அடைக்கத் தொடங்கினர்.
வஞ்சியின் வேண்டுதல்
அப்போது பாண்டிய நாட்டில் தென்கிழக்குத் திசையில் வஞ்சி என்னும் மூதாட்டி பிட்டு விற்று வசித்து வந்தாள். அவள் சொக்கநாதரிடம் பேரன்பு கொண்டவள்.
தினமும் தான் செய்யும் முதல் பிட்டினை இறைவனாருக்குப் படைத்துவிட்டு அப்பிட்டினை சிவனடியாருக்கு வழங்கி ஏனைய பிட்டுகளை விற்று வாழ்ந்து கொண்டிருந்தாள்.
வஞ்சி பாட்டிக்கும் ஆற்றின் கரையை அடைக்குமாறு பாகம் பிரித்துக் கொடுக்கப்பட்டது. வஞ்சியோ மூதாட்டி ஆதலால் தன் பங்கிற்கான ஆற்றின் கரையை அடைக்க தகுந்த கூலியாளைத் தேடிக் கொண்டிருந்தாள்.
கூலியாள் கிடைக்காததால் வஞ்சி மிகவும் கலக்கமுற்று சொக்கநாதரிடம் “ஐயனே, நானோ வயதானவள். என்னுடைய பங்கிற்கான ஆற்றின் கரையை அடைக்க கூலியாள் கிடைக்கவில்லை.
ஆதலால் இன்னும் என்னுடைய பங்கிற்கான ஆற்றின் கரை அடைபடாமல் உள்ளது. எனவே அரசனின் கோபத்திற்கு நான் உள்ளாகலாம். ஆதலால் என்னை இக்கட்டிலிருந்து காப்பாற்று” என்று வேண்டினாள்.

இறைவனார் மண் சுமந்தது
இந்நிலையில் இறைவனார் வஞ்சிக்கு அருள் செய்ய விருப்பம் கொண்டார். ஆதலால் மண் சுமக்கும் கூலியாள் போல் வேடமிட்டு கையில் மண்வெட்டியும், திருமுடியில் கூடையையும் சுமந்து கொண்டு பிட்டு விற்றுக் கொண்டிருக்கும் வஞ்சியின் இடத்தினை அடைந்தார்.
“கூலி கொடுத்து என்னை வேலைக்கு அமர்த்துபவர் உண்டோ” என கூவிக்கொண்டு வஞ்சியை நெருங்கினார்.
உடனே வஞ்சி இறைவனாரிடம் “என்னுடைய பங்கான ஆற்றின் கரையை அடைக்க முடியுமா?” என்று கேட்டாள்.

“சரி. அப்படியே செய்கிறேன். எனக்கு கொடுக்கும் கூலி யாது?” என்று கேட்டாள். “நான் விற்கும் பிட்டினை உனக்கு கூலியாகத் தருகிறேன்.” என்று கூறினாள். இறைவனாரும் அதற்கு சம்மதம் தெரிவித்தார்.
பின்னர் வஞ்சியிடம் “நான் தற்போது பசியால் மிகவும் களைப்புற்றுள்ளேன். ஆதலால் நீ எனக்கு உதிர்ந்த பிட்டை எல்லாம் தற்போது தருவாயாக. நான் அதனை உண்டு பசியாறிய பிறகு கரையை அடைக்கிறேன்.” என்று கூறினார்.
வஞ்சியும் அதற்கு சம்மதித்து பிட்டினைத் தந்தாள். இறைவனார் அதனை உண்டு சற்று களைப்பாறிவிட்டு கரையினை அடைக்கச் சென்றார்.
வையையின் கரையினை அடைந்து ‘நான் வந்தியின் கூலியாள்’ என பதிவேட்டில் குறித்துக் கொள்ளச் சொன்னார்.

பின்னர் கரையை அடைப்பது போல் நடித்துக் கொண்டும், மற்றவர்களுக்கு வேடிக்கை காட்டியும், மரநிழலில் அவ்வப்போது ஓய்வெடுத்துக் கொண்டும் வஞ்சியிடம் பிட்டை வாங்கி உண்டும் பொழுதைப் போக்கினார்.
அரசாங்க காவலர்கள் வஞ்சியின் பங்கு அடைப்படாமல் இருப்பதைக் கண்டனர். வஞ்சியின் கூலியாளான இறைவனாரிடம் “ஏன் வஞ்சியின் பங்கு இன்னும் அடைக்கப்படாமல் உள்ளது. இதற்கு என்ன காரணம்?” என்று கேட்டனர்.
அச்சமயத்தில் வையையின் கரை அடைப்பட்டிருப்பதைக் காண அவ்விடத்திற்கு அரிமர்த்தன பாண்டியன் வந்தான்.
நடந்தவைகளைக் கேட்டறிந்தான். உடனே கோபம் கொண்டு பிரம்பால் இறைவனாரை அடித்தான்.
இறைவனார் உடனே மண்ணினை உடைப்பில் கொட்டிவிட்டு மறைந்தருளினார். பாண்டியன் இறைவனை அடித்ததும் அடியானது அங்கிருந்த பாண்டியன் உட்பட எல்லோரின் முதுகிலும் விழுந்தது. எல்லோரும் திடுக்கிட்டனர். அரிமர்த்தன பாண்டியன் கூலியாளாக வந்தது இறைவனே என்பதை உணர்ந்தான்.

இறைவனாரின் திருவாக்கு
அப்போது “பாண்டியனே, தூயநெறியில் உன்னால் தேடப்பட்ட செல்வம் முழுவதும் என்னுடைய அடியவர்களின் பொருட்டு மாணிக்கவாசகரால் செலவழிக்கப்பட்டது.
ஆதலால் நாம் நரிகளை பரிகளாக்கி உம்முடைய இடத்திற்கு அனுப்பினோம். பரிகளெல்லாம் மீண்டும் நரிகளானதால் மாணிக்கவாசகரை நீ தண்டித்தாய். அதனைப் பொறுக்காமல் வையை யாம் பொங்கி எழச்செய்து கரையினை உடைக்கச் செய்தோம்.
வஞ்சியின் கூலியாளாய் வந்து அவளிடம் பிட்டு வாங்கி உண்டு உன்னிடம் பிரம்படி பட்டோம். நீ மாணிக்கவாசகரின் உள்ளப்படி நடந்து கொண்டு நீதிநெறி பிறழாமல் ஆட்சி செய்து எம்மை வந்தடைவாயாக.” என்று திருவாக்கினைக் கூறினார்.
அரிமர்த்தன பாண்டியன் மாணிக்கவாசகரைச் சந்தித்து தன்னை மன்னித்து மீண்டும் அமைச்சர் பொறுப்பை ஏற்க வேண்டினான்.

மாணிக்கவாசகரோ அதனை மறுத்து தில்லைஅம்பலத்திற்குச் சென்று இறைவனை வணங்குவதே தன்னுடைய விருப்பம் என்பதைக்கூறி தில்லைவனம் சென்று பாடல்கள் பாடி மகிழ்ந்து இறுதியில் இறைவனாரின் சோதியில் கலந்தார்.
இறைவனாரின் ஆணைப்படி சிவகணங்கள் வஞ்சியை சிவலோகத்துக்கு அழைத்துச் சென்றனர். அரிமர்த்தபாண்டியன் சகநாதன் என்னும் புதல்வனைப் பெற்று இறைவனாரின் திருவடியை அடைந்தான்.

மண் சுமந்த படலம் கூறும் கருத்து
இறைவனாரிடம் பேரன்பு கொண்டவர் எல்லோரும் இறைவனாரின் அருளுக்கு பாத்திரமானவர் ஆவர். இறைவனார் எல்லோரிடம் இருக்கிறார் ஆகியவை இப்படலம் கூறும் கருத்தாகும்.