Aadi month special Festival News and Info

ஆடி மாத சிறப்புகள் Aadi month special news – ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதம் ஆகும். ஆடி மாதத்தில் வரும் கிருத்திகை, அமாவாசை போன்ற தினங்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை ஆகும். ஆடி மாதம் சூரியன்   வடக்கிலிருந்து தெற்கு திசை நோக்கி செல்லும் காலம் ஆகும். ஆடி மாதம் மழை பொழிவின் தொடக்கத்தை குறிப்பதால் தமிழர்கள் ஆடிப்பிறப்பை சிறப்பாக கொண்டாடுகிறார்கள்.

⭐ அக்காலத்தில் ஒரு சமயம் பார்வதி சிவனிடம் ஒரு வேண்டுகோள் வைத்தார். உங்களின் தேகத்தில் பாதியை மகா விஷ்ணுவுக்கு அளிக்க வேண்டும் என கூறினார். இதனை ஏற்றுக் கொண்ட சிவபெருமான் பொதிகை மலையில் தவம் இருந்தால் உனது வேண்டுகோள் நிறைவேறும் என்றார்.

⭐ பார்வதி தேவியும் ஊசி முனையில் அமர்ந்து கடும் தவம் செய்தார். இதனை கண்டு மகிழ்ச்சி அடைந்த சிவபெருமான் ஆடி பவுர்ணமி அன்று பார்வதி தேவிக்கு உத்திரம் நட்சத்திரத்தில் சங்கர நாராயணராக காட்சி தந்தார். இதனால் ஆடித்த பசு என்ற பெயரில் நெல்லை மாவட்டத்தில் இவ்விழா விமர்சையாக கொண்டாடப்படுகிறது.

⭐ கருடாழ்வார் ஆடி மாதத்தில் சுவாதி நட்சத்திரத்தில் அவதரித்தவர் ஆவார். அவரது பிறந்த தினம், ‘கருட பஞ்சமி” என்ற பெயரில் விரதமிருந்து கொண்டாடப்படுகிறது.

⭐ ஆண்டாள் அவதரித்தது ஆடி மாதம் பூரம் நட்சத்திரம் என்பதால் ஒவ்வொரு ஆண்டும் ‘ஆடிப்பூரம்” அன்று ஆண்டாள் அவதரித்த ஸ்ரீவில்லிப்புத்தூரில் தேரோட்டம் நடத்தப்படுகிறது. ‘ஆடிப்பூரம்” நாளில் ஆண்டாளை வணங்கிடும் பெண்களுக்கு மாங்கல்ய பாக்கியம் கிடைக்கும்.

⭐ கஜேந்திரன் என்ற யானையை ஒரு முறை முதலை ஒன்று கவ்வியது. வலியால் யானை, ஆதிமூலமே! என்று திருமாலை அழைத்தது. யானையின் அலறலைக் கேட்ட திருமால் தன் கையில் இருந்த சக்ராயுதத்தை ஏவி முதலையைக் கொன்று கஜேந்திர யானையை காப்பாற்றியது ஆடிமாதத்தில் தான்.

⭐ விவசாயத்தை காத்து வரும் காவிரித்தாயை வணங்கும் வகையில் ஆடி மாதம் பதினெட்டாம் நாளை ஆடிப்பெருக்கு விழாவாக மக்கள் கொண்டாடுகின்றனர்.

⭐ ஆடி மாத பவுர்ணமி நாளில் ஹயக்கீரிவர் ஆலயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகின்றது. ஏனெனில் ஹயக்கீரிவர் அவதாரம் நிகழ்ந்தது ஆடி மாதத்தில் தான்.

⭐ ஆடி மாதத்தில் வியாச பூஜை நடத்தபடுகின்றது. குருக்களுக்கெல்லாம் குருவாக போற்றப்படுபவர் வியாசர். எனவே ஆடி மாதத்தில் நடைபெறும் ஆடிப்பவுர்ணமி அன்று மாணவர்கள் வியாசரை வணங்கினால் கல்வி வளம் அதிகரிக்கும்.

இத்தனை சிறப்புமிக்க ஆடி மாதத்தில் கடவுள்களை மனமுருகி வழிபட்டு அனைத்து வளங்களையும் பெறுவோம்!

ஆடி மாத விரதங்கள்

*🔔 ஆடி மாதங்களில் இறைவனுக்கு விரதங்கள் இருப்பது விஷேமானது. இம்மாதத்தில் விரதங்கள் இருப்பதால் பல விதங்களில், கூடுதல் நன்மைகள் கிடைக்கும் என்பது ஐதீகம். உண்ணாமல் விரதம் இருப்பதும், எந்நேரமும் இறைவனையே சிந்தித்து, மவுன விரதம் இருப்பதால், வேண்டுதல்கள் நிறைவேறும் என்பது, பக்தர்களின் அசையாத நம்பிக்கை.*

*🔔 இம்மாதத்தில் வேத பாராணயங்கள், மந்திரங்கள், ஜெபங்கள் ஆகியவற்றுக்கு அதிக முக்கியத்துவம் தரப்படுகிறது. ஆடி மாதத்தில் பிராணயவாயு அதிகமாக கிடைப்பதால், ஜீவ ஆதார சக்தி அதிகமாக உள்ள முக்கிய மாதமாகவும் உள்ளது. இதனால், ஆடி மாதம் சக்தி நிறைந்த மாதமாக கருதப்படுகிறது.*

*🔔 ஆடியில், செவ்வாய்க்கிழமைதோறும் சுமங்கலிப் பெண்கள் மஞ்சள் பூசிக் குளிப்பதால், மாங்கல்ய பலம் கூடும். அதேபோன்று ஆடி மாதச் செவ்வாய்க்கிழமைகளில் பெண்கள் ஒளவையார் விரதம் கடைப்பிடிக்கும் வழக்கமும் உண்டு. கணவனின் ஆயுள் நீடிக்கவும், குழந்தை வரம் வேண்டியும், குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கவும், கன்னிப் பெண்களுக்கு விரைவில் திருமண வரம் கிடைக்கவும் இந்த விரத வழிபாட்டின் மூலம் பிரார்த்தித்துக் கொள்வார்கள்.*

*🔔 ஆடி மாதத்தில் வரும் நான்கு செவ்வாய்க்கிழமைகளிலும், அம்மன் கோவில்களுக்கு சென்று, பெண்கள் வழிபட்டால், எண்ணிய காரியம் ஈடேறும். இந்நாளில், பெண்கள் அதிகாலையில் குளித்து, குலதெய்வ வழிபாடு நடத்திய பின், துர்க்கை அம்மன், முருகன் கோவில்களுக்கு சென்று வழிபடுவது சிறப்பு.*

*🔔 வசதியுள்ளவர்கள், கடைசி செவ்வாய்க்கிழமை அன்று குழந்தைகளை வீட்டுக்கு வரவழைத்து அவர்களை தெய்வமாக வழிபட்டு விருந்தளிக்கலாம். ஆடி -செவ்வாய்க்கிழமைகளில் அம்பாளை வழிபட்டு, மங்கல கௌரி விரதம் கடைப்பிடிப்பதாலும் விசேஷ பலன்கள் கைகூடும்.*

*🔔 ஆடி மாதம் துளசி வழிபாடு அரிதான பல பலன்களைத் தரும். ஆடி மாதம் வளர்பிறை நாட்களில் துளசியை வழிபட்டு வந்தால், ஐஸ்வர்யம் பெருகும். நீண்ட ஆயுள் கிடைக்கும்.*

*🔔 ஆடி மாதம் சுக்லபட்ச ஏகாதசியில் கடைப்பிடிக்கப்படுவது, ஆடி கோபத்ம விரதம். இந்த தினத்தில் பசுவை வழிபடுவதால், லட்சுமி கடாட்சம் கிட்டும். அதேபோல், ஆடி வெள்ளிக்கிழமைகளில் புற்றுக்கு பால் தெளித்து, பூஜை செய்வதால், நாகதோஷம் நிவர்த்தியாகும். குடும்பம் சுபிட்சமாக இருக்கும்.*

*🔔 ஆடிமாதம் முழுவதும் பக்தி நிறைந்த நாளாக காணப்படுவதால் விரதம் இருந்து வழிப்பட்டு வேண்டியதை அருளும் இறைவனை வணங்குவோம்.*
🌿🔔🔥🔔🔥🔔🌿

ஆடி பிறப்பு !.

ஆடி மாத சிறப்புகள் தொடர்பான 40 குறிப்புகள் வருமாறு:-

1. ஆடி மாதம் பிறந்ததும் தட்சணாயனம் ஆரம்பமாகிறது. ஆடி முதல் மார்கழி வரை தட்சணாயன காலமாகும்.

2. இந்த புண்ணிய கால கட்டங்களில் புனித நதிகளில் நீராடுவது மிகவும் விஷேம்.

3. ஆடி மாதத்தைக் கணக் கிட்டுத்தான் பண்டிகைகளின் தொடக்கம் ஏற்படுகிறது.

4. ஆடி மாதம் முழுவதும் கிராமப்புறத்தில் காவல் தெய்வமாக விளங்கும் மாரியம்மன், அய்யனாரப்பன், மதுரை வீரன், மாடசாமி, கருப்பண்ணசாமி போன்ற கிராம தேவதைகளுக்கு பூஜைகளும், விழாக்களும் நடைபெறும்.

5. ஆடி மாதத்தில் நெல்லை மாவட்டம் சங்கரன்கோவிலில் பன்னிரண்டு நாட்கள் அம்மனின் ஆடி தபசு திருநாள் மிகக் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. அரியும் சிவனும் ஒன்றே என்ற தத்துவத்தை உலகிற்கு உணர்த்த இந்த விழா நடத்தப்படுகிறது.

6. ஆறு, மக்களின் ஜீவ நாடியாதலால், அதில் ஆடி மாதம் புதுநீர் வருவதைக் கொண்டாடுவது பல நூற்றாண்டுகளாக தமிழர் மரபாக உள்ளது.

7. ஆடி மாதத்தில் சிவனின் சக்தியை விட பார்வதி யின் சக்தி அதிகமாக இருக்கும் என்பது ஐதீகம்.

8. தமிழ் மாதங்களில் ஆடி மாதத்தில் தான் அதிகபட்ச அளவுக்கு அம்மன் கோவில்களில் திருவிழா நடக்கிறது. எனவே ஆடி மாதத்துக்கு அம்மன் பக்தர்களிடம் தனி மரியாதை உண்டு.

9. கேரளாவில் ஆடி மாதத்தை கஷ்டமான மாத மாக அம்மாநில மக்கள் கருதுகிறார்கள்.

10. ஆடி அமாவாசை அன்று மறைந்த முன் னோர்களுக்கு பிதுர் கடமைகளை செய்தால், ஆண்டு முழுவதும் பித்ருக்களுக்கு கடன் கொடுத்த பலன் கிடைக்கும்.

11. ஆடி பவுர்ணமி தினத்தன்று தான் ஹயக்ரீவர் அவதாரம் நிகழ்ந்தது. எனவே ஆடி பவுர்ணமி தினத்தன்று வைணவ தலங்களில் சிறப்பு வழிபாட நடைபெறும்.

12. தமிழ்நாட்டின் பல பகுதிகளில் அம்மனுக்கு பல வித காய்கறிகளால் ஆன கதம்ப சாதத்தை படைப்பது ஐதீகமாக உள்ளது.

13. ஆடி மாதம் சுக்ல தசமியில் திக் தேவதா விரதம் இருக்க வேண்டும். அன்று திக் தேவ தைகளை அந்தந்த திக்குகளில் வணங்கி பூஜித்தால் நினைத்தது நடக்கும்.

14. ஆடி மாதம் சுக்லபட்ச ஏகாதசி முதல் கார்த்திகை மாத சுக்லபட்ச ஏகாதசி வரை மாச உப வாசம் இருப்பது குடும்பத்தில் அமைதி ஏற்படுத்தும்.

15. ஆடி மாதம் கிராம தேவைதை கோவில்கள் உள்பட திறக்காத எல்லா கோவில்களும் திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

16. ஆடி செவ்வாய்க்கிழமைகளில் கோவிலில் எலுமிச்சம் பழ விளக்கு ஏற்றினால் கூடுதல் பலன்கள் கிடைக்கும். ஆனால் எலுமிச்சம் பழ விளக்குகளை ஒரு போதும் வீட்டில் ஏற்றக் கூடாது.

17. ஆடி மாதம் வளர்பிறை துவாதசி நாளில் தொடங்கி கார்த்திகை மாதம் வளர்பிறை துவாதசி நாள் வரை பெண்கள் துளசி பூஜை செய்து வந்தால், நினைத்தது நடைபெறும். வீட்டில் சகல செல்வங்களும் குவியும்.

18. கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை என்ற ஊரில் முருகன் கோவில் உள்ளது. ஆடி மாதம் கடைசி வெள்ளிக்கிழமை அங்குள்ள முருகனுக்கு கூடை, கூடையாக மலர்களை கொட்டி மலர் அபிஷேகம் செய்வார்கள். இதை அந்த பகுதி மக்கள் ஆடியில் மலர் முழுக்கு, அழகு வேல்முருகனுக்கு என்று சொல்வார்கள்.

19. ஆடிப்பெருக்கு திருவிழா ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் விமரிசையாக நடைபெறும். அப்போது பெருமாள் மண்டபத்துக்கு எழுந்தருள்வார்.

20. ஆடி மாதம் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் காமாட்சியை வணங்கினால் திருமண தடைகள் விலகி சுபம் உண்டாகும்.

21. ஆடி மாதம் முழுவதும் மீனாட்சியை வழிபட்டால் குடும்பத்தில் அமைதி ஏற்படும்.

22. ஆடி மாதம் முத்து மாரியம்மனை மனம் உருக வழிபட்டால் திருஷ்டிகள் விலகி விடும்.

23. ஆடி மாதம் சுக்ல துவாதசியில் மகா விஷ்ணுவை நினைத்து விரதம் இருந்தால் செல்வம் பெருகும்.

24. ஆடி மாதம் சுக்ல பட்ச ஏகாதசி தினத்தன்று அன்னதானம் செய்தால் சகல பாக்கியங்களும் கிடைக்கும்.

25. ஆடி மாதம் சுக்லபட்ச திரயோதசியில் பார்வதி தேவியை நினைத்து விரதம் இருந்தால் நினைத்தது நடக்கும்.

26. கஜேந்திரன் என்ற யானையை முதலை கவ்வியபோது அந்த யானை ஆதிமூலமே என்ற கதற உடனே திருமால் சக்ராயுதத்தை ஏவி யானையை காப்பாற்றினார். இதனை நினைவுப்படுத்தும் வகையில் ஆடி மாதம் எல்லா திருமால் தலங்களிலும் கஜேந்திர மோட்ச வைபவம் நடத்தப்படுகிறது.

27. ஆடி மாதம் ஏகாதசி, துவாதசி நாட்களில் அரச மரத்தை சுற்றி வந்து வழிப்டால் வாழ்வில் மகிழ்ச்சி உண்டாகும்.

28. தஞ்சாவூரில் நிசும் சூதனி உக்கிர காளியம்மன் கோவில் உள்ளது. ஆடி பதினெட்டாம் பெருக்கு தினத்தன்று தஞ்சை மாவட்ட கிறிஸ்தவர்கள் அங்கு ரொட்டி, ஆட்டுக்கறி படையலிட்டு வழிபடுவதை வழக்கத்தில் வைத்துள்ளனர்.

29. ஆடி மாத வெள்ளிக்கிழமைகளில் மகாலட்சுமியை வழிபட்டால் வீட்டில் செல்வம் சேரும்.

30. ஆடி மாதம் ஏதாவது ஒரு வெள்ளிக்கிழமை அம்மனை ஆவாகனம் செய்து வீட்டுக்கு வரவழைத்து வழிபடுவு சிறப்பை தரும்.

31. ஆடி மாதம் குத்துவிளக்கை லட்சுமியாக பாவித்து அலங்கரித்து வழிபடுதல் வேண்டும்.

32. ஆடி மாதம் அம்மனுக்கு பால் பாயாசம், சர்க்கரைப் பொங்கல் வைத்து வணங்குதல் வேண்டும்.

33. அம்மனை வழிபடும் போது மறக்காமல் லலிதா சகஸ்ரநாமம் சொல்ல வேண்டும்.

34. ஆடி மாதம் வீட்டில் சிறப்பு பூஜைகள் செய்யும் போது சிறு பெண் குழந்தைகளை அம்மனாக பாவித்து, உணவு கொடுத்து, ரவிக்கை, சீப்பு, குங்குமச்சிமிழ், கண்ணாடி, வளையல், தாம்பூலம் கொடுக்க வேண்டும்.

35. ஆடிப்பூரத்தன்று ஆண்டாள் பிறந்தாள் என்பது உங்களுக்குத் தெரிந்து இருக்கும். ஸ்ரீவில்லிப்புத்தூர் கோவிலில் ஆடிப்பூரத்தன்று ஆண்டாளை நந்தவனத்துக்கு எழுந்தருள செய்வார்கள். அப்போது திருப்பாவை, நாச்சியார் திருமொழி, திருப்பல்லாண்டு பாசுரங்கள் பாடப்படும். இதனால் ஆண்டாள் மனம் குளிர்ந்து இருப்பாள். அந்த சமயத்தில் ஆண்டாளை வழிபட்டால், உங்களது எல்லா பிரார்த்தனைகளும் நிறைவேறும்.

36 .வருடத்தில் ஆடிப்பூரத்தன்று மட்டும் சிவரூபத்தில் காட்சி தரும் பரசுராமேஸ்வரர் , மற்ற நாட்களில் வருடம் முழுவதும் சக்தி ரூபமாக 9கஜ புடவையுடனும் , திருமாங்கல்யம் தரித்து ,, பாதத்தில் தண்டை, கொலுசு, மெட்டியுடன் காட்சி தருகிறார். ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே சிவரூபம் அருளும் அதிசய சிவலிங்கம் , ஆடிப்பூரத்தன்று மட்டும் விசேஷ சிவ தரிசனம் ,காண கண் கோடி வேண்டும் .பல்லூர் கிராமம் , திருமால்பூர் ரயில் நிலையம் மிக அருகில் , காஞ்சிபுரத்தில் இருந்து அரக்கோணம் செல்லும் வழி . .வாய்ப்பை தவறவிட வேண்டாம் .

37. ஆடி மாதம் அம்மனுக்கு சாற்றப்படும் வளையல் களைப் பெண்கள் அணிந்து கொண்டால் திருமண பாக்கியம், குழந்தை பாக்கியம், சகல நலன்களையும், நீங்காத செல்வத்தை பெறலாம் என்பது ஐதீகம்.

38.ஆடி மாத வெள்ளிக்கிழமைகளில் அதிகாலையில் எழுந்து குளித்து, தூய ஆடை அணிந்து, சாணத்தைப் பிள்ளையாராகப் பிடித்து, செவ்வரளி, செம்பருத்தி, அறுகு கொண்டு சூர்யோதயத்திற்கு முன்னர் விநாயகரை பூஜிக்க வேண்டும். வாழையிலை மீது நெல்லைப்பரப்பி அதன் மீது கொழுக்கட்டை வைத்து விநாயகரை வழிபட செல்வம் கொழிக்கும்.

39.ஆடி மாதத்தை “பீடை மாதம்” என்று ஒதுக்குவது, அறியாமையால் வந்த பழக்கம். உண்மையில், “பீட மாதம்” என்றுதான் பெயர். அதாவது மனமாகிய பீடத்தில் இறைவனை வைத்து வழிபடவேண்டிய மாதம் என்பதே சரியானது.

40.. ஆடி பவுர்ணமியன்று சிவபெருமானுக்கு திரட்டுப்பால் அபிஷேகம் செய்து, கருப்புப் பட்டாடை, நூறு முத்துக்கள் கோர்த்த மணிமாலை, கருஊமத்தம் பூமாலை அணிவித்து, மூங்கில் அரிசிப் பாயாசம் படைத்து வழிபட்டால் எப்பேர்ப்பட்ட பகையும் விலகும்.

40. பொதுவாகவே வெள்ளிக்கிழமைகள் அம்பாளுக்குரிய சிறந்த நாட்களாகும். இதனோடு அயனத்துக்குரிய சிறப்பும் சேருவதால் ஆடி மாதத்தில் வரும் வெள்ளிக்கிழமைகள் அம்பாளுக்குத் தனிச்சிறப்பு கொண்டவையாகக் கருதப்படுகின்றன.

ஆடி முதல் நாளில் இருந்து ஒரு மண்டலம் எப்போதும் குலசேகர ஆழ்வார் பாடிய பிரபந்தத்தை பாராயணம் செய்திடல் சிறப்பு.
“ஊனேறு செல்வத் துடற்பிறவி யான்வேண்டேன்
ஆனேறேழ் வென்றா னடிமைத் திறமல்லால்
கூனேறு சங்க மிடத்தான்தன் வேங்கடத்து
கோனேரி வாழும் குருகாய்ப் பிறப்பேனே
ஆனாத செல்வத் தரம்பையர்கள் தற்சூழ
வானாளும் செல்வமும் மண்ணரசும் யான்வேண்டேன்
தேனார்பூஞ் சோலைத் திருவேங்க டச்சுனையில்
மீனாய்ப் பிறக்கும் விதியுடையே னாவேனே
பின்னிட்ட சடையானும் பிரமனு மிந்திரனும்
துன்னிட்டு புகலரிய வைகுந்த நீள்வாசல்
மின்வட்டச் சுடராழி வேங்கடக்கோன் தானுமிழும்
பொன்வட்டில் பிடித்துடனே புகப்பெறுவே னாவேனே
ஒண்பவள வேலை யுலவுதண் பாற்கடலுள்
கண்துயிலும் மாயோன் கழலிணைகள் காண்பதற்கு
பண்பகரும் வண்டினங்கள் பண்பாடும் வேங்கடத்து
செண்பகமாய் நிற்கும் திருவுடையே னாவேனே
கம்பமத யானை கழுத்தகத்தின் மேலிருந்து
இன்பமரும் செல்வமு மிவ்வரசும் யான்வேண்டேன்
எம்பெருமா னீச னெழில்வேங் கடமலைமேல்
தம்பமாய் நிற்கும் தவமுடையே னாவேனே
மின்னனைய நுண்ணிடையா ருருப்பசியும் மேனகையும்
அன்னவர்தம் பாடலொடு மாடலவை யாதரியேன்
தென்னவென வண்டினங்கள் பண்பாடும் வேங்கடத்துள்
அன்னனைய பொற்குவடா மருந்தவத்த னாவேனே
வானாளும் மாமதிபோல் வெண்குடைக்கீழ் மன்னவர்தம்
கோனாகி வீற்றிருந்து கொண்டாடும் செல்வறியேன்
தேனார்பூஞ் சோலைத் திருவேங் கடமலைமேல்
கானாறாய்ப் பாயும் கருத்துடையே னாவேனே
பிறையேறு சடையானும் பிரமனு மிந்திரனும்
முறையாய பெருவேள்விக் குறைமுடிப்பான் மறையானான்
வெறியார்தண் சோலைத் திருவேங் கடமலைமேல்
நெறியாய்க் கிடக்கும் நிலையுடையே னாவேனே
செடியாய வல்வினைகள் தீர்க்கும் திருமாலே
நெடியானே வேங்கடவா நின்கோயி லின்வாசல்
அடியாரும் வானவரு மரம்பையரும் கிடந்தியங்கும்
படியாய்க் கிடந்துன் பவளவாய் காண்பேனே
உம்ப ருலகாண் டொருகுடைக்கீழ் உருப்பசிதன்
அம்பொற் கலையல்குல் பெற்றாலு மாதரியேன்
செம்பவள வாயான் திருவேங் கடமென்னும்
எம்பெருமான் பொன்மலைமே லேதேனு மாவேனே
மன்னியதண் சாரல் வடவேங் கடத்தான்றன்
பொன்னியலும் சேவடிகள் காண்பான் புரிந்திறைஞ்சி
கொன்னவிலும் கூர்வேல் குலசே கரஞ்சொன்ன
பன்னியநூல் தமிழ்வல்லார் பாங்காய பத்தர்களே”.குலசேகர ஆழ்வார்..

 

Leave a Comment