Chitra Gupta Pooja in Tamil

ஆயுளை அதிகரிக்கும் சித்ரகுப்தன் வழிபாடு | chitra gupta pooja in tamil

ராஜ கிரகங்களான சந்திரனும், சூரியனும் பலம் பெரும் மாதம் என்பதால், சித்திரை மாத பவுர்ணமி வழிபாட்டுக்குரியதாக மாறியிருக்கிறது. இந்த நாளில் மலை வலம் வருவதும், முருகப்பெருமானை வழிபடுவதும் சிறப்பான வாழ்வை அமைத்துக் கொடுக்கும்.எமதர்மனின் கணக்காளராக இருந்து, உலக உயிர்கள் அனைத்தின் பாவ – புண்ணிய கணக்குகளை பாரபட்சமின்றி எழுதும் பணியைச் செய்பவர், சித்ரகுப்தன். இவர் அவதரித்த நாளாகவும், சித்ரா பவுர்ணமியை புராணங்கள் குறிப்பிடுகின்றன.

ஒரு முறை கயிலாயத்தில் இருந்த பார்வதிதேவி, பொழுதுபோக்காக ஒரு அழகிய ஆண் குழந்தையின் உருவத்தை, சித்திரமாக வடித்தாள். அப்போது உலகிற்கு படியளக்கும் பணியைச் செய்துவிட்டு வந்த ஈசனிடம், தான் வரைந்த சித்திரத்தை பார்வதிதேவி காட்டினாள். அந்த ஓவியம், சிவபெருமானை கவர்ந்தது. அப்போது அவருக்கு ஒன்று நினைவுக்கு வந்தது. விதிமுடிந்த மனித உயிர்களின் உயிரைப் பறித்து, பூமித்தாயின் பாரத்தைக் குறைக்கும் பணியைச் செய்பவர் எமதர்மன். அவர் அதிக வேலைப்பளு காரணமாக, தனக்கு ஒரு உதவியாளரைத் தரும்படி, ஈசனிடம் கேட்டிருந்தார். அதுபற்றிய நினைவு வந்ததும், பார்வதிதேவி வரைந்த ஓவியத்தை கையில் எடுத்து அதில் தன்னுடைய மூச்சுக்காற்றை செலுத்தினார், ஈசன். உடனே அந்தச் சித்திரம் உயிர்பெற்றது. சிவசக்தியின் அம்சமாக, சித்திரத்தில் இருந்து உயிர்பெற்றதால், ‘சித்ரகுப்தன்’ என்ற பெயர் வந்தது. ‘சித்’ என்பது ‘மனம்’ என்பதையும், ‘குப்த’ என்பது ‘மறைவு’ என்பதையும் குறிக்கும். அதாவது மனித மனங்களில் மறைந்திருக்கும் பாவ எண்ணங்களையும், மனதார செய்யும் நல்ல செயல்களையும் கவனித்து, அதற்குத் தகுந்தாற் போல் பாவ- புண்ணிய கணக்குகள ை எழுதுபவர் என்பதால் இந்தப் பெயர் வந்தது. சித்ரகுப்தன் பிறக்கும் போதே தனது கையில் ஏடு மற்றும் எழுத்தாணியோடு பிறந்தவர்.

 

சித்ரா பௌர்ணமி அன்று இல்லத்தில் உள்ள பூஜை அறையை சுத்தம் செய்ய வேண்டும். பின்னர் சித்ரகுப்தன் உருவ படத்தை தெற்கு திசையில் வைத்து அதனை பூக்களால் அலங்கரிக்க வேண்டும். படத்திற்கு சந்தனம் குங்குமம் வைத்து பழங்கள் காய்கறிகள் வேப்பம் பூ பச்சடி பச்சரிசியுடன் வெல்லம் கலந்த இனிப்பு கலவை சாதங்கள் போன்றவற்றை நைவேத்தியமாக படைக்க வேண்டும். ஐந்து முக குத்துவிளக்கு ஏற்றி நம் மனதில் உள்ள தீய எண்ணங்களை விலக வேண்டும் என்று சித்ரகுப்தனுக்கு தீபாராதனை காட்டி வழிபடவேண்டும்.

 

சித்ரா பௌர்ணமி அன்று சித்ரகுப்தனை வழிபாடு செய்தால் ஆயுள் நீளும் என்பது நம்பிக்கையாக உள்ளது. சித்ரகுப்தனை வேண்டிக்கொண்டு பஞ்சாங்கம் படிப்பதும் புண்ணிய தீர்த்தங்களில் நீராடுவதும் வாழ்க்கையில் மகிழ்ச்சியை வரவழைக்கும். அதோடு அன்றைய தினம் அம்பாளுக்கு தேங்காய் சாதம் புளியோதரை எலுமிச்சை சாதம் தயிர் சாதம் பருப்பு பொடி சாதம் மாங்காய் சாதம் வெண்பொங்கல் சர்க்கரை பொங்கல் அரிசி உப்புமா அவல் உப்புமா கோதுமை உப்புமா ஆகியவற்றை நைவேத்தியமாக படைத்து வழிபட வேண்டும்.

 

பின்னர் அந்த நைவேத்திய பிரசாதங்களை பசித்தோருக்கு தானமாக கொடுத்தால் புண்ணியம் சேரும். இந்த விரதத்தை கடைபிடிப்பவர்கள் முழுமையாக விரதம் மேற்கொண்டு சித்ரா பௌர்ணமி அன்று இரவு நிலவு பார்த்த பின் உணவருந்த வேண்டும். சித்ரகுப்தனுக்கு காஞ்சிபுரத்தில் தனிக்கோயில் உள்ளது. அதே போல் அருப்புக்கோட்டை அமிர்தகடேஸ்வரர் கோவிலில் சித்ரகுப்தனுக்கு தனி சன்னிதி இருக்கிறது. சித்ரா பௌர்ணமி அன்று இந்த ஆலயங்களுக்கு சென்றும் வழிபாடு செய்து வரலாம். சித்ரகுப்தனை வழிபடுவதோடு நில்லாமல் இனி பாவ செயல்கள் செய்யாமல் புண்ணியத்தை சேர்க்க வேண்டும் என்ற உறுதியையும் மனதில் பதித்துக் கொள்ள வேண்டியது அவசியம்.

 

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

Leave a Comment