அருள்மிகு கற்பக விநாயகர் திருக்கோயில் வரலாறு
பிள்ளையார்பட்டி – 630207, சிவகங்கை மாவட்டம்.
*காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.*
*மூலவர்: – விநாயகர்.* *தல விருட்சம்: – மருதமரம்.* *பழமை: – 1000-2000 வருடங்களுக்கு முன்.* *ஊர்: – பிள்ளையார்பட்டி.* *மாவட்டம்: – சிவகங்கை.* *மாநிலம்: – தமிழ்நாடு.*
பிள்ளையார்பட்டி எனப் பெயர் கொண்டு விளங்கும் இவ்வூர் தமிழ்நாடு மாநிலத்தில் சிவகங்கை மாவட்டத்தில் உள்ளது. காரைக்குடியிலிருந்து திருப்பத்தூர் செல்லும் வழியில் குன்றக்குடிக்கு அடுத்து உள்ளது.
இந்த ஊருக்கு பிள்ளையார்பட்டி என்பதே இன்று நாடறிந்த பெயராயினும், 1. எருகாட்டூர் அல்லது எக்காட்டுர், 2. மருதங்குடி, 3. திருவீங்கைகுடி, 4. திருவீங்கைச்வரம், 5. இராசநாராயணபுரம் என்று வேறு ஐந்து பெயர்கள் உண்டு. மருதங்கூர், தென்மருதூர், கணேசபுரம், கணேசமாநகரம், பிள்ளை நகர் போன்ற பெயர்கள் பிற்காலப் பெயர்கள் பிற்காலப் பாடல்களில் காணப்படுகின்றன.*
இரண்டு இராஜகோபுரங்களுடன் கூடிய பெரிய திருக்கோயில். இக்கோயிலில் நான்கு முறையாகத் திருப்பணி நடந்திருப்பதாகத் தெரிகின்றது.*
*முதன்முதலாக நடந்த திருப்பணி இன்று காணப்பெறும் திருக்கோயிலின் தெற்கு புறத்தில் கீழ்மேலாக நீண்டு கிடக்கும் குன்றில் வடமுகமாக மலையைக் குடைந்து அமைக்கப் பெற்ற குடைவரைக் கோயிலாகும்.*
*இந்த குடைவரைக் கோயிலுக்குள் நாம் நுழைந்தால் முதலில் உள்ள கிழ்மேல் ஓடிய பகுதி காணப்படும். அதற்கு அடுத்து நான்கு தூண்களுக்கு இடையே தென்வடல் ஓடிய இரட்டைப் பகுதி மண்டபம் காணப்படும். அம்மண்டபத்தின் கீழ்புறத்தில் தென்புறம் மலை நெற்றியில் 6 அடி உயரம் உள்ள கம்பீர நிலையில் வடக்கு நோக்கி உள்ளார் கற்பக விநாயகர். இந்த மூர்த்தி தான் பிள்ளையார்பட்டியின் மூலவர் கற்பக விநாயகரான தேசிவிநாயகப் பிள்ளையார்.* *அதற்கு மேற்கே அதேமலை நெற்றியில் தெற்கு நோக்கிய சங்கர நராயணர். உருநாட்டு சண்டீசன், கருடன் இருவரும் இருபுறம் நின்ற கோலத்தில் விளங்குகிறார்கள்.*
*அந்த மேல்புரத்தில் பத்தியின் நடுவே கிழக்கு பார்த்த திருவாயிலுடன் கூடிய மாடம் குடையப் பெற்றுள்ளது. அதன் நடுவிலே கடைந்த பெரிய மகாலிங்கம் உள்ளது. இந்த மூர்த்திதான் திருவீசர். இவர் திருவீங்கைக்குடி மகாதேவர்.* *அங்கிருந்து சிறிது வடக்கே வந்து மேற்கே சென்று தெற்கு புறமாக பார்த்தோமானால் வடக்குப் பார்த்த லிங்கோத்பவர் மூர்த்தியை காணலாம். இந்த அளவில் உள்ள குடைவரைக் கோயில் தான் முதல்திருப்பணி ஆகும்.*
*இக்குடைவரைக் கோயிலுக்குள் உள்ள கல்வெட்டுகள் நமக்கு சொல்லும் செய்திகள்: –*
*முதன் முதலில் மருதங்குடி வயல்களை மருதங்குடி ஊராரிடம் பிள்ளையார்பட்டி கோயில் நகரத்தார் விலைக்கு வாங்கியிருக்கிறார்கள் பின்னர் சம்மந்தப்பட்ட அத்தனையூர் நாட்டவரிடமும், கீழ்குண்டாற்று நாட்டவரிடமும், அவர்களுக்கு உள்ள உரிமையை வாங்கி உள்ளனர். அதன் பிறகு அந்நாளில் பாண்டி மண்டலத்தை வென்று ஆட்சி செய்த (பரகேசி மூன்றாம் குலோத்துங்க சோழ தேவரான) கோனேரின்மை கொண்டானிடம் முழு உரிமையும் பெற்றுக் கொண்டிருக்கின்றார்கள்.
அவன் நகரத்தார்களுக்கு கொடுத்த திருமுகத்திலுருந்து மருதங்குடியில் இராசநாராயணபுரம் என்ற பெயருடன் ஒரு நகரம் அமைத்து அதில் குடியேறி வாழ்ந்துவர அனுமதித்திருக்கிற செய்தி நன்கு புலனாகிறது.* *மருதங்குடியான இராசநாராயணபுரம் என்னும் பிள்ளையார்பட்டியும் கீழ்குண்டாற்று நாட்டில் அடங்கியதே. எனவே பிள்ளையார்பட்டியை “கேரள சிங்கவள நாட்டு கீழ்குண்டாற்று நாட்டில் மருதங்குடியான இராச நாராயணபுரத்து பிள்ளையார்பட்டி” என்றே குறிப்பிட வேண்டும்.*