Ayyappa sami viratham procedure
ஸ்வாமியே சரணம் ஐயப்பா
கார்த்திகை முதல் நாள்
பலர் துளசி மணிமாலை அணிந்து ஐயன் ஐயப்பனை தரிசிக்க விரதம் துவங்க தயாராகி இருப்பீர்கள் அவர்களுக்கான பதிவு இது.
துளசிமணி மாலை அணிந்து சபரிமலைக்கு செல்வது உங்கள் நண்பர் அல்லது உறவினரான கூட இருக்கலாம் அவர்களுக்கு இந்த தொகுப்பு பகிர்ந்து பம்பா வாசன் அருளை பூரணமாக பெருவோம்.
*யாத்திரையின் நோக்கம் என்ன*
சபரிமலை யாத்திரையின் நோக்கம் ஒன்றே ஒன்று: பக்தர்கள் தங்கள் ஐம்புலன்களை அடக்கி, ஏற்றத்தாழ்வின்றி செயலாற்றி இறைவனிடம் தங்களைச் சரணடையச் செய்தலே சபரிமலை புனித யாத்திரையின் நோக்கமாகும்.
ஐயப்பமார்களின் நோக்கங்கள் :
தன்னையே புனிதப்படுத்தி சத்தியமான பதினெட்டாம் படியில் ஏறி பகவான் ஐயப்பனைத் தரிசித்தல்; தன் புலன்களை எல்லாவகையிலும் கட்டுப்படுத்தி நெறியான வாழ்க்கை வாழ்ந்து மனம், உடல் இவற்றைத் தூய்மைப்படுத்துதல், தான் சுத்தமாக இருப்பதோடு அல்லாமல், வீட்டையும் வீட்டில் உள்ளவர்களையும் சுத்தமாக இருக்கவைத்து அவர்களையும் பக்தி நெறிக்கு உட்படுத்துதல்
*எப்படி விரதம் மேற்கொள்ள வேண்டும்:*
முதன் முதலில் சபரிமலைக்கு செல்லும் ஐயப்பமார்களை கன்னி சாமி என்றழைப்பார்கள். தகுதியான குருசாமி ஒருவரது கரத்தால் மாலை அணிவது மிகவும் சிறப்பு. குருதட்சணையாக எவ்வளவு வேண்டுமானாலும் தரலாம். ஒரு ரூபாய் என்றாலும் ஐயப்பனே தந்ததாக கருதி ஏற்பது குருவின் கடமை. மாலையை எக்காரணம் கொண்டும் கழற்றக்கூடாது.
குருசாமி கிடைக்காவிட்டால் கோயில் சென்று, கடவுள் பாதத்தில் மாலையை வைத்து அர்ச்சனை செய்து அர்ச்சகரிடம் தட்சணை கொடுத்து, ஐயப்பனையே குருவாக நினைத்து அர்ச்சகர் மூலம் மாலையை அணிந்து கொள்ளலாம். இது எதுவுமே முடியாவிட்டால் “கடவுளின் பிரதிநிதியான தமது தாயிடம்” ஆசிர்வாதம் பெற்று மாலை அணியலாம். குறைந்தது 41 நாட்கள் விரதமிருக்க வேண்டும்.
காலை உணவு விடுத்து மதிய உணவை ஐயப்பனிற்கு நிவேதனம் செய்து உண்ண வேண்டும். மாலையில் பால், பழம், பலகாரம் உண்ணலாம். விரதகாலத்தில் பிரம்மச்சாரியத்தை கடுமையாக கடைபிடிக்கவும். மனதளவிலும் பெண்ணை நினைக்கக்கூடாது.
உருத்திராட்சம் அல்லது துளசிமாலை 54 அல்லது 108 மணிகள் கொண்டதில், ஐயப்பன் விநாயகர் பதக்கம் சேர்த்து அணிவதுடன், துணை மாலையும் அவசியம். மேலாடை கழற்றும்போது பிரதான மாலை கழன்றாலும், கழுத்தில் துணை மாலை இருக்கும். விரதப்பூர்த்தி வரை மாலையை கழற்றக்கூடாது.
தினமும் காலை மாலை குளிர்ந்த நீரில் குளித்துவிட்டு ஆலயம் சென்று வழிபட வேண்டும். எல்லை அம்மன் ஆலயம், சிவாலயம், விநாயகர் ஆலயம் நீங்கள் இருக்கும் பகுதியில் ஐயப்பன் ஆலயம் இருந்தால் அங்கும் செல்லலாம். நண்பர்கள் உறவினர்கள் என மற்றவர்களை தொட்டு பேச கூடாது. உடலையும் மனதையும் தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும்.
உறவினர் இறப்பில் தீட்டு நேர்ந்தால், மாலையைக் கழற்றிவிட்டு, அடுத்த ஆண்டுதான் மாலை அணியலாம். விரதகாலத்தில் கன்னிசாமிகள் கறுப்பு மட்டுமே அணியலாம். தானே இருமுடியை ஏற்றி இறக்கலாகாது. பெருவழியில் தான் பயணிக்க வேண்டும்.
சூரிய உயரத்திற்கு முன் குளிர்ந்த நீரில் காலைக்குளியல், துளசி, பால், பழம், கற்கண்டில் நிவேதனம் செய்து 108 போற்றி, சரண கோஷம் சொல்லி ஐயப்ப வழிபாடு வேண்டும். முடிவெட்டுதல், முகச்சவரம், காலணி, குடை, மழை கோட் அணிதல், பகல் தூக்கம், பாய், தலையணை, மாமிசம் கூடாது. முக்கியமாக பான்பராக், மது, புகைபிடிப்பது போன்ற போதை பழக்கம் உள்ளவர்கள் அவற்றை தொடவே கூடாது.
இரவில் துண்டு விரித்து படுக்கலாம். பொய், கோபம், கடுஞ்சொற்களும், தாயிடம் சண்டை போடுவது தவிர்க்கவும். எப்போதும் ‘சுவாமி சரணம்’ உச்சரிப்பு முக்கியம். ஐயப்பன் பக்தி பாடல்களை கேட்கலாம். ஆண்களாக இருந்தாலும் சரி பெண்களாக இருந்தாலும் சரி “சாமி” என்று அழைக்கும வேண்டும்.
மாதவிலக்கு பெண்ணை பார்க்க, அவரது உணவை உண்ண தடையுண்டு அறியாது நடப்பின், நீராடி 108 சரணம் கூறி ஆலயம் சென்று பம்பாவாசனை வழிபட வேண்டும். மாலை அணிந்தவர்கள் வீடுகள் தவிர்த்து, பிற வீட்டில் உணவருந்தக் கூடாது. கன்னி சாமி பூஜை நடத்தி விருந்தளிப்பது கட்டாயமில்லை. கடன்வாங்கி மலையேறுவதும் கூடாது. உள்மன பக்தியையே ஐயப்பன் பார்க்கிறார்.
மலைக்கு கிளம்பும் முன் பஜனை, கூட்டு வழிபாடு, பூஜை நடத்தி பிரசாதம் தந்து உணவளிப்பது சிறப்பு. குருசாமி வீடு, கோயிலில் இருமுடிக்கட்டு பூஜை நடத்தலாம். கிளம்பும்போது ‘போய் வருகிறேன்’ எனச் சொல்லக்கூடாது. வீடு திரும்பியதும், குருசாமி மூலம் மாலை கழற்றவும். இருமுடி அரிசியை பொங்கியும், பிரசாதமாக எல்லோருக்கும் தர வேண்டும். விரதகாலம் வழங்கிய நற்பழக்கங்களை ஆயுள் முழுக்க பின்பற்றுவதே, ஐயப்பனின் பூரண அருளைத் தரும்.
ஸ்வாமியே சரணம் ஐயப்பா