Karthigai Deepam

வாழ்வில் திருப்பங்களைத் தரும் தீப வழிபாடு

இந்தத் தீபத் திருநாளில் திருவிளக்கின் மகிமைகளை அறிந்து விளக்கேற்றி, எல்லாம் வல்ல இறைவனை வழிபட்டு சகல வளங்களும் பெறுவோம்.

Karthigai deepam

பெரும்பாலான இந்தியக் குடும்பங்களில் விளக்கேற்றி வைத்தல் என்பது நீண்ட காலமாக கடைப்பிடிக்கப்பட்டு வரும் ஒரு சம்பிரதாயம். ஆன்மிகம் வாயிலாகவும் தீபங்களுக்கு பெரும் முக்கியத்துவம் தரப்படுகிறது. சிறப்பு வாய்ந்த கார்த்திகை மாதத்தில் தீபத்திருநாளை நாம் கொண்டாடி வருகிறோம். நம் பெயர் விளங்க வைக்கும் வாரிசுகளை ‘குலவிளக்கு’ என்றும், வீட்டுக்கு வரும் மரு மகளை வாழ்வில் ‘விளக்கேற்ற வந்தவள்’ என்றும் குறிப்பிடுவதன் மூலம் தீபத்தின் பெருமையை அறியலாம். வாழ்வில் ஒளி தந்து வளம் சேர்க்கும் தீபங்களின் சிறப்புகள் சிலவற்றை இங்கே பார்க்கலாம்.

சந்தோஷமான தருணங்களிலும், துக்க நேரங் களிலும் விளக்குகளை ஏற்றும் முறைகளை நம் முன்னோர்கள் நமக்கு கூறியுள்ளனர். அதன்படி விளக்கேற்றுவதற்க்கான நேரம், நோக்கம், திசைகள், முறைகள் போன்ற பல விஷயங்கள் தீபங்களில் அடங்கியுள்ளது .

விளக்குகளின் வகைகள் :

பஞ்சலோகம், வெள்ளி விளக்கு, பாவை விளக்கு, சர விளக்கு, காமாட்சி விளக்கு, குத்து விளக்கு, கோடி விளக்கு, தூண்டா மணி விளக்கு, அகல் விளக்கு எனப் பல வகைகள் இருந்தாலும், அவரவர் வசதிகேற்ப மனத் தூய்மையுடன் சிறு மண் விளக்கையாவது வீடுகளில் ஏற்றி வைத்து இறைவனை வழிபடுவது நல்லது.

பொதுவாக விளக்குகளில் ஐந்து முகங்கள் இருக்கும். ஐந்து முக விளக்குகளை அனைத்து நேரங்களிலும் நம்மால் ஏற்றி வைப்பது என்பது நடைமுறைக்கு ஒவ்வாத விஷயம். அதனால் ஒரு முகமோ, இரண்டு முகமோ தினமும் விளக்குகளை ஏற்ற வேண்டும். இவற்றிற்கான பலன்களை காண்போம்.

ஒரு முகம்- மத்திமம், இரண்டு முகம்- குடும்ப ஒற்றுமை பெருகும், மூன்று முகம் – புத்திர இன்பம் கிடைக்கும், நான்கு முகம்- மாடு மனை வளம் சேரும், ஐந்து முகம் – செல்வம் செழிக்கும்.

பொதுவாக தூய பஞ்சினால் திரியை இட்டு விளக்கேற்றுவோம். இதற்கும் குடும்ப ஒற்றுமை போன்ற நற்பலன்களே பெறுவோம். ஆனாலும் விசேஷ பலன்களை மேலும் பெற சிறப்புத் திரி வகைகளும் உண்டு. மஞ்சள் நிறம் கொண்ட திரியை ஏற்றினால் அம்பாளின் கருணை கிடைப்பதோடு, மன தைரியம் கூடும். சிவப்பு நிற திரி ஏற்றினால் தடைபட்ட திருமணம் சிறப்பாக நடைபெறும். வாழைத்தண்டு திரி ஏற்றினால் புத்திரப் பாக்கியத்தை அருளும். வெள்ளெருக்குப் பட்டையை திரியாக்கி விளக்கேற்றினால் செல்வங்கள் பெருகி வாழ்வு வளம் பெறும். தாமரைத் தண்டின் நாரைத் திரித்து ஏற்றும்போது, தெய்வக் குற்றங்கள் அகன்று, தீய சக்திகள் விலகி விடும்.

விளக்கேற்றும் திசை :

தீபத்தை வடக்கு திசை நோக்கி ஏற்றுவது அறிவு வளர்ச்சியும், செல்வ வளர்ச்சியும் தரும். கிழக்கு திசையில் ஏற்றுவது துன்பங்களை நீக்கும். மேற்கு திசையில் ஏற்றுவது கடன் தொல்லைகளையும், தோஷங்களையும் போக்கும். ஆனால் எக்காரணத்தைக் கொண்டும் தெற்கு திசையில் தீபங்களை ஏற்றக்கூடாது.

விளக்கேற்றும் எண்ணெய் :

பொதுவாக நல்லெண்ணெயால் விளக்கேற்றலாம். தற்சமயம் ஐந்து வகையான எண்ணெய் களைக் கொண்டு தீபங்கள் ஏற்றப்படுகின்றன. வேப்ப எண்ணெய், இலுப்ப எண்ணெய், தேங்காய் எண்ணெய், நெய், விளக்கெண்ணைய் ஆகியவைகளை கலந்து பஞ்சமுகங்கள் கொண்ட விளக்குகளை ஏற்றி பூஜைகள் செய்யும்போது சகல சம்பத்துக்களும் பெருகி, இறை அருள் கிட்டும்.

திருவிளக்குகள் இறைவனின் பிரதிநிதியாக பார்க்கப்படுவதால் அவற்றிற்கான மரியாதையையும் நாம் கடைப்பிடிக்க வேண்டும். பூஜைக்கு ஏற்றப்படும் திருவிளக்கிற்கு பால், சர்க்கரை, கற்கண்டு போன்றவைகளை நைவேத்தியமாகவும், கார்த்திகை தீபத்தன்று அவல் பொரியில் வெல்லப் பாகு சேர்த்து கார்த்திகை பொரி படைத்தும் வழிபாடு செய்தல் சிறப்பு.

விளக்குகளை அணைப்பதற்கும் விதிகள் உண்டு. வெறும் வாயினால் விளக்கை ஊதி அணைப்பது தீமையைத் தரும். பூ அல்லது நீர்த் துளி, பால் துளியைக் கொண்டு விளக்கினை அமர்த்த வேண்டும். விளக்குகளை அமர்த்தும்போது ‘சாந்த ஸ்வருபியே நமஹ’ என்று மனதில் தியானிப்பது நலம். விளக்குகளை வெறும் தரையில் வைப்பது நல்லதல்ல. பித்தளை தட்டுகளில் வைப்பது நல்லது. தட்டுகளில் வைப்பது எண்ணெய் கீழே சிந்துவதை தடுக்கவும் செய்யும்.

அதிகாலை சூரியன் உதிக்கும் முன்னும், மாலையில் அந்தி சாயும் முன்பும் வீட்டின் வாசல் தெளித்துக் கோலமிட்டு மனதை ஒருமுகப்படுத்தி விளக்கேற்ற வேண்டும். இதனால் நேர்மறை சக்திகள் நம்மை சூழ்ந்து வாழ்வில் இருள் விலகி ஒளி பிறக்கும்.

கார்த்திகை தீபத்தன்று அழகான அகல் விளக்கு களை சுவாமி அறையில் ஏற்றி, தெரிந்த ஸ்லோகங்களை பாடி, கற்பூரம் தீபாராதனை செய்து வழி படுங்கள்.

இந்தத் தீபத் திருநாளில் திருவிளக்கின் மகிமைகளை அறிந்து விளக்கேற்றி, எல்லாம் வல்ல இறைவனை வழிபட்டு சகல வளங்களும் பெறுவோம்…

Leave a Comment