மார்கழி மாதம் சிறப்பு | ஆண்டாள் வரலாறு | margazhi month history

மார்கழி மாதம் என்றாலே விடியற்காலையிலேயே எழுந்து, வாசலில் அழகிய கோலமிட்டு, நீராடி, சூடிக் கொடுத்த சுடர்க்கொடியாம் ஆண்டாள் அருளிய திருப்பாவையை பாராயணம் செய்து, திருக்கோவில்களுக்கு சென்று இறைவனை வழிபடுவது நமது தொன்றுதொட்ட வழக்கமாக இருந்து வருகிறது..

ஆண்டாள்:

ஆண்டாள் தமிழத்தில் 8ம் நூற்றாண்டில் வாழ்ந்த வைணவ ஆழ்வார்களுள் ஒருவர். வைணவம் போற்றும் 12 ஆழ்வார்களில் இவர் ஒருவரே பெண்ணாவார். ஆண்டாள், திருப்பாவை, நாச்சியார் திருமொழி என்னும் இரண்டு பாடற் தொகுதிகளை இயற்றியுள்ளார்.வைணவ சமய நூல்கள் கூறும் இவரது வரலாறு, இறைவன் மீது இவர் கொண்டிருந்த காதலை விளக்கும் வித்தியாசமான ஒரு வரலாறாகும்.திருமாலின் மனைவியாகும் பாக்கியம் செய்தவள். ஸ்ரீ வில்லிபுத்தூர் நந்தவனத்தில் ஒரு துளசி செடியின் அடியில் ஆடி மாதம் பூரம் நட்சத்திரத்தில் மகாலட்சுமியே ஆண்டாளாக அவதாரம் செய்தார். பெரியாழ்வார் இந்த நந்தவனத்திற்கு வந்தபோது, ஆண்டாளை எடுத்து சுரும்பார் குழற்கோதை என்ற பெயரிட்டு வளர்த்து வந்தார். அந்த நந்தவனத்தின் மலர்களை தினமும் பறித்து மாலையாக தொடுத்து ரெங்கமன்னாருக்கு வழங்குவது ஆழ்வாரின் முக்கியப்பணியாகும். இளம் வயதிலேயே சமயம், தமிழ் என்பன தொடர்பில் தனக்குத் தெரிந்த அனைத்தையுமே விஷ்ணுசித்தர் கோதைக்குச் சொல்லிக் கொடுத்தார். இதனால் கோதை, இளம் வயதிலேயே கண்ணன் மீது மிகுந்த பக்தியுணர்வு கொண்டவராயும், தமிழில் நல்ல திறமை கொண்டவராகவும் இருந்தார். சிறு வயதிலேயே கண்ணன் மீதிருந்த அளவற்ற அன்பு காரணமாக அவனையே மணம் செய்துகொள்ள வேண்டுமென்ற எண்ணத்தையும் வளர்த்துக்கொண்டார். தன்னைக் கண்ணனின் மணப்பெண்ணாக நினைத்துப் பாவனை செய்துவந்தார். கோயிலில் இறைவனுக்கு அணிவிப்பதற்காக விஷ்ணுசித்தர் தொடுத்து வைத்திருக்கும் மாலைகளை ஒவ்வொரு நாளும் அவருக்குத் தெரியாமல் தான் அணிந்து கண்ணனுக்கு ஏற்றவளாக தானிருக்கிறோமா என்று கண்ணாடியில் பார்த்து மகிழ்ந்து பின்னர் திரும்பவும் கொண்டுபோய் வைத்துவந்தார். இதனால் கோதை சூடிய மாலைகளே இறைவனுக்கும் சூடப்பட்டன.ஒருமுறை பெருமாள் அணிந்திருந்த மாலையில் நீண்ட முடி இருப்பதை கண்ட அர்ச்சகர்கள் அதை எறிந்து விட்டு வேறுமாலை கொண்டு வரும்படி ஆழ்வாரிடம் கூறிவிட்டனர். பகவானின் சேவையில் தவறு வந்து விட்டதே என்று ஆழ்வார் வருந்தினார். மறுநாளும் மாலை தொடுத்து ஆண்டவனுக்கு அனுப்பும் சமயத்தில், அந்த மாலையை ஆண்டாள் அணிவதை கண்டார். ஆண்டாளை கண்டித்தார். அன்று இரவே பெருமாள் ஆழ்வாரின் கனவில் தோன்றி, ஆண்டாள் சூடிய மாலையையே தனக்கு அணிவிக்கும்படி கூறினார். அது முதல் ஆண்டாள் சூடிக்கொடுத்த சுடர்க்கொடியாள் பூமாலை மட்டுமின்றி பாமாலையும் சூடி மகிழ்ந்தாள்.

Margazhi month history

ஸ்ரீ ரங்கப்பெருமாளை திருமணம் செய்வதற்காக ஆண்டாள் மார்கழியில் நோன்பிருந்து பக்தியின் சாரமாக திருப்பாவையும். காதலின் வரமாக நாச்சியார் திருமொழியையும், காதலின் வீரமாக நாச்சியார் திருமொழியையும் பாடினார். தன தந்தையிடமும் இந்த தெய்வீக திருமணம் பற்றி கூறினார். ஆழ்வாரும் ஆண்டாளை பல்லக்கில் ஏற்றி வந்தார். இதைக்கேள்விப்பட்ட பாண்டிய மன்னன் ஆண்டாள் திருமணத்தை சிறப்பாக நடத்த ஸ்ரீவில்லிபுத்தூர் முதல் ஸ்ரீரங்கம் வரை அலங்கரிக்க ஏற்பாடு செய்தார். காவிரியின் தென்கரையில் இறங்கி அங்கிருந்து நடந்து செல்ல ஆண்டான் விருப்பப்பட்டாள். ஆண்டாள் பாதம் வலிக்குமே என்றெண்ணிய ரெங்கநாதர் அவனை தன் மார்பில் வீற்றிருக்கும்படியாக செய்தார். பங்குனி உத்திரநன்னாளில் ஆண்டாள் ரெங்கநாதர் திருமணம் சிறப்பாக நடந்தது.

பெருமாளின் 108 திருப்பதிகளில் ஆண்டாள் தனியாக மங்களாசாசனம் செய்யாமல் , பிற ஆழ்வார்களுடன் சேர்ந்து மொத்தம் 10 கோயில்களை மங்களாசாசனம் செய்துள்ளார்.
வைணவ சமய வழிபாட்டில் ஒன்றறக் கலந்து விட்ட ஒன்று திருப்பாவையாகும். மாதவனாகிய எம்பெருமானுக்கு உகந்த மார்கழி மாதக் காலைகளில் அனைத்து வைணவக் கோயில்களிலும் இசைக்கப்படுவதே இதன் பெரும் சிறப்பு. தமிழில் புனையப்பெற்ற பாடல்களே ஆயினும், தமிழறியா அடியார்கள் கொண்ட வைணவத் தலங்களிலும், மார்கழி மாதக் காலைகளில் திருப்பாவை இசைக்கப்படுவதும், இந்தியாவில் எங்கெல்லாம் பெருமானின் திருக்கோயில்கள் உள்ளனவோ அங்கெல்லாம், கோதை தனக்கும் ஒரு தனிச் சந்நதி கொண்டுள்ளதும் வேறு எந்த ஒரு அடியவருக்கும் காணப் பெறாத தனிச் சிறப்பாகும்.
ஓம் நமோ நாராயணாய நம!!
ஆண்டாள் திருவடிகளே சரணம்!!

ஆண்டாள் அருளிய திருப்பாவை பாடல் – 1

மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்
நீராடப் போதுவீர்! போதுமினோ நேரிழையீர்!
சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்
கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோ பன்குமரன்
ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்
கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல்முகத்தான்
நாரா யணனே நமக்கே பறை தருவான்
பாரோர் புகழப் படிந்தேலோ ரெம்பாவாய்!

பொருள்:மார்கழி மாதத்தின் மதி நிறைந்த சிறந்த நாளாகிய இன்று, அழகிய அணிகலன்கள் அணிந்த பெண்களே, மார்கழி நீராடுவோம் வாரீர். அழகும் செல்வமும் நிறைந்திருக்கும் ஆயர்ப்பாடியின் சிறுமிகளே! நம் கண்ணன் கூர்மையான வேலை ஏந்தி பகைவர்களை வெல்லும் நந்தகோபரின் திருக்குமரன், அழகிய கண்களையுடைய யசோதையின் இளஞ்சிங்கம், கரிய மேகத்தைப் போன்ற மேனியுடையவன், செந்தாமரையை போன்ற கண்களையுடையவன், குளிர்ந்த ஒளிதரும் முழுமதியைப் போன்ற முகமுடையவன். அந்த ஸ்ரீ நாராயணன் நமக்கு வேண்டிய அனைத்தையும் வழங்குவான். அவன் பெயரைச் சொல்லி உலகிலுள்ளோர் போற்றும் வண்ணம் மார்கழி நீராடுவோமாக!

திருப்பாவை பாடல்கள்

Leave a Comment