இளையான்குடி மாற நாயனார்.

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி என்ற திருத்தலத்திலே இறையருளால் அவதரித்த மாறனார் என்ற சிவபக்தர் தன் மனைவியோடு,‘இல்லற மல்லது நல்லறமன்று’ என்ற முது மொழிக்கேற்ப வாழ்ந்து வருகிறார். தன்னைத் தேடி வரும் சிவனடியார் யாராக இருந்தாலும் அவர்களை பக்தியோடும் அன்போடும் எதிர்சென்று கரம்குவித்து வணங்கி அழைத்து வந்து பாதங்களை அலம்பி பூசனை செய்து ஆசனம் கொடுத்து, அருச்சனை செய்து , அறுசுவை உணவை சமைத்து அவர்களை உபசரிப்பார்.

இப்படியே பலகாலம் அடியவர்களைத் தம்பதிகள் இருவரும் சேர்ந்து உபசரித்து வந்தனர். இவர்களுடைய மேன்மையை உலகுக்கு அறிவிக்கவும் தம் திருவடிப்பேற்றினை அடியவர்களுக்கு அருளவும் எண்ணம் கொண்டார் தில்லையெம் பெருமான்.குன்று போலிருந்த செல்வம் குன்றிமணியானது. ஆனால் என்ன?

பணம் போனால் என்ன? மனம் போகவில்லையே! தனம் சுருங்கியது. மனம் சுருங்கவில்லை. எந்தெந்தப் பொருட்களை விற்க முடியுமோ அதை விற்கிறார்கள்.அடகு வைக்க முடிந்ததை அடகு வைக்கிறார். தன்னையே அடகு வைக்கவும் தயங்கவில்லை. இவ்வளவு வறுமையிலும் மாறனார் மனைவி கை கொடுக்கின்றார்.
இவர்கள் மனவலிமையை மேலும் சிறப்பிக்க இறைவன் எண்ணுகிறார். மாலும் அயனும் காண முடியாத பெருமான் நற்றவர் வேடம் பூண்டு கொண்டு நடு இரவில் வருகிறார். நல்ல மழையில் இரவு நேரத்தில் இளையான்குடி மாறனாரின் கதவைத்தட்டுகிறார். கதவைத் திறக்கிறார் மாறனார். சிவனடியார் ஒருவர் நிற்பதைப் பார்க்கிறார்.உடனே வந்த விருந்தினரை ஈரம் போகத் துடைத்து விட்டு மாற்றுடை கொடுத்து, மனைவியிடம், ”இந்தத் தவசியர் அரும்பசியைத் தீர்க்க என்ன செய்யலாம்?” என்று கேட்கிறார்.

வீட்டிலே உணவில்லை என்பது அவருக்கும் தெரியும்.என்றாலும் மனைவியிடம் யோசனை கேட்கிறார். அம்மையும் யோசனை செய்கின்றார். நேரமோ இருட்டி விட்டது. மழையும் பெய்கிறது. வீட்டிலும் ஒன்றுமில்லை. அண்டை வீட்டுக்காரகளிடம் இனியும் கடன்கேட்க முடியாது. ஏற்கெனவே நிறையக் கடன் வாங்கியாகிவிட்டது. என்ன செய்யலாம்? சட்டென்று ஒரு வழி கண்டுபிடித்து விடுகிறாள்.இந்தச் சிக்கல் தீர வேண்டுமானால் ஒரே ஒருவழி தான் இருக்கிறது இன்று காலை விதைத்த நெல் இந்நேரம் மழையில் மிதந்து கொண்டிருக்கும் நீங்கள் சென்று அதை அள்ளிவாரி எடுத்துக்கொணர்ந்து வந்தால் அதை என்னால் முடிந்த அளவு பக்குவப்படுத்தி சமைத்து தரமுடியும் என்கிறார்.இதைத் தவிர வேறுவழி ஒன்றும் தெரியவில்லை என்கிறார் அம்மை. அம்மையின் புத்தி கூர்மையை என்னவென்று சொல்வது.
’செல்லல் நீங்கப் பகல் வித்திய செந்நெல்
மல்லல் நீர்முளை வாரிக்கொடு வந்தால்
வல்லவாறு அமுதாக்கலும் ஆகும் மற்(று)
அல்லது ஒன்றறியேன்.”
என்கிறார்.இதைக் கேட்ட மாறனார், மனைவியின் நல்ல யோசனையை ஏற்றுக் கொண்டு வயலுக்கு புறப்படுகிறார். அடாத மழை திண்இருள் வேறு, பேயும் உறங்கும் நேரம்! மாறனார் ஒரு கூடையைத் தன் தலையில் கவிழ்த்துக் கொண்டு நெல்வயலுக்கு செல்கிறார். மெதுவாக கைகளால் அந்த விதைகளை அள்ளி எடுத்துக் கூடையில் போட்டுச் சுமந்து கொண்டு இல்லம் விரைகிறார்.

வந்தவரை வாயிலில் எதிர் கொண்ட அவர் மனைவி அவ்விதைகளை வாங்கி அதிலிருந்த சேறுசகதிகளை யெல்லாம் போகும்படி நன்கு கழுவி எடுக்கிறார். நெல் வந்துவிட்டது. அதைச் சமைக்க விறகு வேண்டுமே! தயங்கியபடியே மாறனாரிடம் சொல்கிறாள்.
மாறனார் சிறிதும் தாமதிக்காமல் வீட்டின் கூரையிலிருந்த வரிச்சுகளை வாளால் வெட்டி எடுக்கிறார். அதைக் கொண்டு ஒருவாறு அடுப்பைப் பற்றவைத்து ஈரநெல்லை வறுத்து உரலில்இட்டு அரிசியாக்கி உலையில் போட்டு சோறாக்குகிறார். வந்த விருந்தினருக்கு வெறும் சோற்றை மட்டும் எப்படிக் கொடுப்பது? யோசிக்கிறாள். மறுபடியும் கணவரிடம் போய் காய்கறி ஒன்றும் இல்லையே, என்ன செய்யலாம்? என்று இருவரும் சேர்ந்து யோசிக்கிறார்கள்

வந்த விருந்தினர் வழி நடந்த களைப்பால் மிகவும் களைத்திருப்பார். அவருக்கு வெறும் சோறு மட்டும் கொடுத்தால் போதாது. அந்தத் தாயுள்ளம் என்ன செய்யலாம்? என்று யோசிக்கிறது.
’குழி நிரம்பாத புன்செய்க் குறும் பயிர் தடவிப் பாசப்
பழி முதல் பறிப்பார் போலப் பறித்து
அவை கறிக்கு நல்கினார்

அதை வாங்கிக் கொண்ட மாறனார் மனைவி அக்கீரையை நன்கு அலம்பி ஒரு கீரையையே பலவிதமாக சமைக்கிறார்.பின் மாறனாரிடம் சென்று,‘நம் இல்லத்திற்கு எழுந்தருளி யிருக்கும் ஈடு இணையற்ற சிவனடியாரை அழைத்து வாருங்கள் அவருக்கு விருந்து படைப்போம்” என்கிறாள்.நடந்து வந்த களைப்பினால் உறங்கிக் கொண்டிருந்த அடியவரிடம் சென்று, ”அடியனேன் உய்ய என்பால் எழுந்தருளிய பெரியோய்! அமுது செய்யுங்கள்” என்று அழைக்கிறார். அடியவர் மறைந்து விடுகிறார்.சோதி தோன்றுகிறது.மாறனாரும் அவர் மனைவியும் திகைத்து நிற்கிறார்கள்.

மாலும் அயனும் தேடியும் காண முடியாத இறைவன் சோதி வடிமாய் காட்சி தர மயங்கிய மாறனாருக்கும் அவர் மனைவிக்கும் சிவகாமவல்லியோடு இடபவாகனத்தில் காட்சிதந்து இளையான்குடி மாறநாயனாரை நோக்கி
”அன்பனே! அன்பர் பூசெய்
அளித்த நீ அணங்கினோடும்
என் பெரும் உலகம் எய்தி
இருநிதிக் கிழவன் தானே
முன் பெரும்நிதியம் ஏந்தி
மொழிவழி ஏவல் கேட்ப
இன்பமார்ந்திருக்க”
என்று வரமளிக்கிறார்.

சிவலோகத்தை யடைந்து சங்கநிதி, பதுமநிதிக்குத் தலைவனான குபேரனையே ஏவல் செய்யும்படியான பெருமையை இறைவன் வழங்கி அறுபத்துமூன்று நாயன்மார்களிலும் ஒருவராக அருள செய்கிறார். ஈசனடி போற்றி.

இளையான்குடி மாறநாயனார் அவர்தம் இல்லத்தரசியர் மலரடிகள் போற்றி போற்றி.
அம்மையப்பன் மலரடிகள் போற்றி போற்றி.

Leave a Comment