ராஜராஜேஸ்வரி அம்மன் பாமாலை

மலையரசி மாதரசி மங்காத புகழரசி
மாதவத்துப் பேரரசியே
மாணிக்கத் தேரேறி மகிழ்வாக பவனி வரும்
மங்கலத் தாயரசியே !

கலையரசி கயலரசி கனிவான மொழியரசி
கற்கண்டுச் சொல்லரசியே
காவியத் தமிழ் நெஞ்சில் கருணையாம் நிலைத்து
களிக்கின்ற பூவரசியே !

சிலையாக நின்றாலும் சீரான வாழ்வு தரும்
செம்மை சேர் எழிலரசியே
செவ்வானம் மொழிகின்ற சிங்கார அருள் முத்துத்
தேவியவள் அருளரசியே !

நிலையான வாழ்வுக்கு நீங்காத ஒளியூட்டும்
நெறியான தாய் அரசியே
நித்தமும் சித்தத்தில் நின்றுமே அருளூட்டும்
நீடு புகழ் ராஜேஸ்வரியே !!!