சக்தி நாயனார்.

சோழ வள நாட்டிலே அமைந்துள்ள வரிஞ்சையூர் எனும் சிவப்பதியிலே சக்தி நாயனார் என்னும் நாமமுடைய சிவத்தொண்டர் வாழ்ந்து வந்தார்.

இவர் இளமை முதற்கொண்டே விரிசடை முடியுயுடைய விடையவர் திருவடியைச் சிந்தையில் இருத்தி வந்ததோடு சிவனடியார்கள் சேவடிகளையும் தமது சென்னி மீது தாங்கி வழிபட்டு வந்தார்.

“இறைவரோ தொண்டருள் ஒடுக்கம்
தொண்டர்தம் பெருமை சொல்லவும் பெரிதே” என்ற செந்தமிழ் மூதாட்டி ஒளவையின் திருவாக்கின்படி சக்தி நாயனார் சிவனடியார்களையும் சிவனைப்போன்றே பாவித்து வந்தார்.. சிவனடியார்களைப் பழித்து யாரேனும் இகழ்ந்து பேசினால் அக்கணமே அவர்களது நாவினை குறட்டினால் பிடித்து இழுத்து அரிவார்.இத்தகைய வலிய மனமும் சக்தியும் வாய்க்கப் பெற்று ஒழுகி வந்தமையால் தான் இவர் சக்தி நாயனார் என்று திருநாமம் பெற்றார்.
சிவனடியார்களை எவரும் இகழாவண்ணம் காத்து வரும் பணியில் தம்மை முழுக்க முழுக்க அர்ப்பணித்தார்.

அம்பலத்தே ஆடுகின்ற அரசர்க்கு அளவிலா தொண்டாற்றி வந்த இத்திருத்தொண்டர், மன்னுள் ஆனந்தத் தாண்டவம் ஆடுகின்ற அம்பலவாணனுடைய அழகிய சிலம்பணிந்த சேவடி நீழலை கண்டு வீடுற்று சிவபுரத்தே சார்ந்து அருளப்பெற்றார். அறுபத்து மூன்று நாயன்மாரில் ஒருவராகும் அருளையும் இறைவனால் பெற்றார்.எறிபத்த நாயனாரும் இத்தகு செயலாலே இறைவனின் வீடுபேற்றினை அருளப்பெற்றார்.

சக்தி நாயனாரின் குருபூசை ஐப்பசி மாதம் பூசம் நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறது.

சக்தி நாயனார் திருவடிகள் போற்றி

அம்மையப்பன் மலரடிகள் போற்றி போற்றி.

Leave a Comment