உருத்திரபசுபதி நாயனார்.
சோழ நாட்டில் திருத்தலையூர் என்னும் ஊரில் சிறந்த சிவனடியவராக பசுபதியார் பிறந்தார். இவரின் இயற்பெயர் பசுபதி என்பதாகும்.
திருத்தலையூர் என்ற பேரில் தமிழ்நாட்டில் இரு இடங்கள் உள்ளன. அவ்விரு இடங்களிலும் உள்ள பழமையான சிவாலயங்களில் உருத்திர பசுபதி நாயனாரின் குருபூசை கடைபிடிக்கப்படுகிறது.
ஒன்று மயிலாடுதுறையிலிருந்து திருவாரூர் செல்லும் பாதையில் உள்ள கொல்லுமாங்குடி என்னும் ஊரில் இருந்து காரைக்கால் செல்லும் வழியில் 4கிமீ தொலைவில் உள்ளது.
மற்றொன்று திருச்சிராப்பள்ளி மாவட்டம் முசிறிக்கு அருகே உள்ளது. இந்நாயனாரைப் பற்றி சேக்கிழார் பாடுகையில் பசுபதி நாயனார் சோழ நாட்டில் உள்ள திருத்தலையூரை சார்ந்தவர் என்றே குறிப்பிடுகிறார்.
நிலைத்த வீடுபேறான சிவபதத்தை அடைய விரும்பும் அடியவர்கள் இறைவனாருக்கு ஏதேனும் ஒரு குறிப்பிட்ட வழியில் தொண்டுகள் செய்து இறைபதம் பெற்றனர்.
சிலர் சிவனடியார்களுக்கு உணவு, உடை வழங்கி தொண்டுகள் செய்தும், சிலர் பூமாலை சாற்றுவதை வழக்கமாக்கியும், சிலர் இறைவனின் புகழினை பாமாலைகளால் பாடியும் வழிபட்டு வீடுபேறினைப் பெற்றனர்.
அவ்வகையில் பசுபதி நாயனார் இறைவனுக்கு உகந்த உருத்திரத்தை உச்சரித்து இறைபதம் பெற விரும்பினார்.
உருத்திரம் மந்திரம் சிவனுக்கு உகந்தது. உருத்திர மந்திரம் கண்ணையும், சிவாயநம என்னும் திருஐந்தெழுத்து கண்ணின் மணியையும் போன்றது.
உருத்திர மந்திரத்தை உள்ளன்போடு உச்சரிப்பவர்கள் இறைபதம் பெறுவர் என்று சாத்திரங்கள் கூறுகின்றன.
ஆதலால் நிலைத்த இன்பமாகிய இறைபதத்தை அடைய பசுபதி நாயனார் இடைவிடாது உருத்திர மந்திரத்தை உச்சரிக்க எண்ணினார்.
அதிகாலையிலும், மாலை வேளைகளிலும் செந்தாமரைகள் பூத்த குளத்தில் கழுத்தளவு நீரில் நின்று கொண்டு, உருத்திர மந்திரத்தை உச்சரிப்பதை வழக்கமாகக் கொண்டார்.
எந்நேரமும் உருத்திர மந்திரத்தை உச்சரித்ததால் பசுபதியார் உருத்திர பசுபதியார் என்று மக்களால் அழைக்கப்பட்டார்.
பசுபதியாரின் உருத்திர மந்திர உச்சரிப்பால் இறுதியில் நீங்காத இன்பமான இறைபதத்தைப் பெற்றார்.
உருத்திர பசுபதி நாயனார் குருபூசை புரட்டாசி மாதம் அசுவினி நட்சத்திரத்தில் கடைப்பிடிக்கப்படுகிறது.
தொடர்ந்து உருத்திர மந்திரத்தை உச்சரிக்கும் தொண்டால் இறையடியைப் பெற்ற உருத்திர பசுபதி நாயனாரை சுந்தரர் திருத்தொண்ட தொகையில் ‘(முருகனுக்கும்) உருத்திர பசுபதிக்கும் அடியேன்’ என்று புகழ்கிறார்.
உருத்திரபசுபதி நாயனார் திருவடிகள் போற்றி.
அம்மையப்பன் மலரடிகள் போற்றி போற்றி.