கன்னி ராசி சனிப்பெயர்ச்சி பலன்கள்.. Kanni sani peyarchi palangal 2017-20
சிறு கண்ணோட்டம்:
கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த சனி பெயர்ச்சி சற்று மோசமாகவே இருக்கும் . இந்த காலகட்டத்தில் நிறைய அலைச்சல்கள் இருக்கும். வாகனத்தில் செல்லும்போது கவனம் தேவை. இந்த காலகட்டத்தில் தேவை இல்லாத விரயச்செலவு ஏற்படும். வேலை காரணமாக சிலர் ஊர் மாறுதல், வீடு மாறுதல் போன்றவை ஏற்படும். உடல்நலத்தில் கவனம் தேவை. உடல் ஊனமுற்றோர்களுக்கு உதவி செய்வதன் மூலம் சனியின் தாக்கம் குறையும். சனிக்கிழமைகளில் சனி பகவானுக்கு எள் தீபம் ஏற்றி வாருங்கள்.
உத்தரம் 2, 3, 4, அஸ்தம், சித்திரை 1, 2
(டோ, ப, பா, பி, பூ, வி, ள, ட, பே, போ என்ற எழுத்துகளில் பெயரை முதல் எழுத்தாக கொண்டவர்களும் புரட்டாசி மாதத்தில் பிறந்தவர்களுக்கும் இப்பலன்கள் ஓரளவு பொருந்தி வரும்
வான மண்டலத்தில் 6வது ராசியாக வலம் வரும் கன்னி ராசியின் அதிபதியான புதன் உங்கள் ராசிநாதன் ஆவார். கல்விக்கும் வித்தைக்கும் ஞானத்துக்கும் அறிவிக்கும் ஆற்றலுக்குமான புதபகவான் வீட்டில் பிறந்த நீங்கள் எதையும் நின்று நிதானித்து செயல்படும் ஆற்றல் உடையவர்கள். எந்த காரியத்தையும் பல முறை யோசித்து செயல்படும் நீங்கள் விரைவாகவும் வேகமாகவும் செயல்படுவீர்கள். மாற்றம் என்ற சொல்லுக்கு நீங்களே எடுத்துக் காட்டாகும். எண்ணிய எதையும் செய்யும் ஆற்றலும் துணிச்சலும் உடைய நீங்கள் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள்.
அறிவிக்கும் சேமிப்புக்கும் சிக்கனத்திற்கும் உரியவரான நீங்கள் தேவையற்ற செலவினங்களை குறைத்து தேவைக்கு மட்டும் செலவு செய்யும் இயல்பு உடையவர்கள் மாற்றம் என்ற கருத்தை உடனே ஏற்றுக் கொள்ளும் தன்மையுடைய உங்களுக்கு இந்த சனிபகவான் இதுவரை உங்களுடைய ராசிக்கு 3ம் இடத்தில் சஞ்சரித்தவர் இனி 4ம் இடத்தில் தனசு ராசியில் சஞ்சாரம் செய்வார். இது அர்த்தாஷ்டமச் சனி எனப்படும். இதை நினைத்து பயப்படவோ அல்லது கவலைப்படவோ வேண்டாம். அவரவர் பிறப்பு ஜாதகத்தை பொறுத்து இதன் தன்மை மறுபடும். எனவே அர்த்தாஷ்டமச் சனி நடக்கப் போகிறதே என்று ஒரு போதும் கவலையோ பயமோ கொள்ள வேண்டாம்.
உங்கள் ராசிக்கு 5ம் வீட்டிற்கும் 6ம் வீட்டிற்கும் அதிபதியான சனிபகவான் 4ம் வீட்டில் சஞ்சரிக்கும் காலத்தில் இதுவரை வேலை இல்லாமல் இருந்தவர்களுக்கு வேலைக்கான வாய்ப்பும் சந்தர்ப்பமும் அமையும். எதிர்பார்த்த வேலை கிடைப்பதில் தாமதம் இருந்தாலும் முதலில் கிடைத்த வேலையை ஏற்று கொண்டு திருப்தியற்ற வேலையாக இருந்தாலும் திருப்தியாக செயலாற்ற வேண்டும். மேலும் 4ம் வீட்டில் சனி சஞ்சாரம் என்பது தொழிலில் தகராறு மற்றும் தொழிலில் நிச்சயமற்ற தன்மையை உருவாக்குவார். அதே சமயம் வேலையில் அதிக கவனம் செலுத்துதல் வேண்டும். வேலையில் அடிக்கடி விடுப்பு எடுப்பதைத் தவிர்த்தல் வேண்டும். மேலும் சனி பகவான் உங்கள் ராசிக்கு 5ம் வீட்டிற்கும், 6ம் வீட்டிற்கும் அதிபதியாக வருவதால் வேலையில் கவனம் தேவை. 5ம் இடம் என்பது பார்க்கும் வேலையை விட்டு வெளியே வருவது அல்லது வெளியேற்றபடுவது என்பதைக் குறிக்கும். எனவே அவசரபட்டு வேலயை விடுவதோ அல்லது வேறு வேலைக்கு மாறும் பொழுது வேலை உத்தரவாதம் இருந்தால் மட்டுமே மாற வேண்டும்.
சமூகத்தில் இதுவரை இருந்த வந்த நிலை மாறி சற்று மதிப்பும் மரியாதையும் கூடும். இதுவரை இருந்து வந்த தேவையற்ற அலைச்சல்கள் குறைந்து ஒரு இடத்தில் நிலையாக இருக்க வாய்ப்பு அமையும். வேலையின் காரணமாக உயர்வு ஏற்படும். அதே சமயம் அதிக உழைப்பு குறைந்த வருவாய் என்ற சூழ்நிலையை சனி பகவான் உருவாக்குவார். எனவே உழைப்புக்கு அஞ்சாமல் வேலையில் சளைப்பில்லாமல் விரும்பி செய்தல் வேண்டும். அப்பொழுது தான் வேலையில் நீங்கள் நீண்ட நாட்கள் நிலைத்து இருக்க முடியும். இல்லையெனில் வேலையில் அலுப்பும் சலிப்பும் தோன்றி வேலையை விட வேண்டியது வரும்.
உங்களது லக்னத்தின் 2ம் வீட்டிற்கு அதிபதி சுக்ரன் ஆவார். அதனால் இதுவரை இருந்த வந்த பொருளாதார தேக்க நிலை மாறி பணவரவும் பொருள் வரவும் அதிகரிக்கும். இதுவரை கையை விட்டுப்போன பொருட்கள் நகைகள் பத்திரங்கள் திரும்ப வீடு வந்து சேரும். பேச்சில் சாமர்த்தியமும் அதிகரித்து காணப்படும். பொருளாதார நிலை மேம்படும். சுறுசுறுப்பும் ஊக்கமும் உற்சாகமும் அதிகரிக்கும். இதுவரை இருந்து வந்த மந்தம் தயக்கம், குழப்பம், தேக்கம், தடுமாற்றம் மாறி பொறுப்புணர்வுடன் செயல்பட ஆரம்பிப்பீர்கள்.
புதிய முயற்சிகளில் ஈடுபடும் பொழுது சற்று கவனம் தேவை. தேவையற்ற விஷயங்களில் தலையிடக் கூடாது. சகோதர சகோதரர்களில் அன்பும் ஆதரவும் இருந்தாலும் அவர்களால் நிம்மதியற்ற சூழ்நிலை நிலவும் நெருங்கிய உறவினர்களை விட்டுப் பிரிய நேரிடும். எதிர்பார்த்த செய்திகள் தகவல்கள் சற்று தாமதித்து சாதகமாக வந்து சேரும். இடம் வாங்குவதற்கு வீடு வாங்குவதற்கு வண்டி வாகனம் வாங்குவதற்கு வாய்ப்புகள் தானாக வந்து சேரும். தாயாரின் உடல் ஆரோக்யத்தில் அதிகக் கவனம் தேவை. குறிப்பாக உங்களது உடல் நலத்தில் அதிக கவனம் தேவை. இனம் தெரியாத நோய்கள் வந்து போகும் குறிப்பாக சளித் தொல்லையால் அவதிப்பட நேரிடும்.
சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதில் அதிகக் கவனம் தேவை. அதில் மகிழ்ச்சியற்ற செயல்கள் நடந்தேறும். குழந்தைகளால் நிம்மதியற்ற சூழ்நிலை உருவாகும். குடும்பத்தில் சுப காரியங்கள், சுப நிகழ்ச்சிகள் சற்று தாமதத்திற்குப் பின் இனிதே நடந்தேறும். நேரத்திற்கு உணவு அருந்த வேண்டும். வழக்குகள் சாதகமாக இராது. தாய்மாமன்களின் அன்பும் ஆதரவும் இருந்து வரும். கேட்ட இடத்தில் கடன்கள் கிடைக்கும். கடன்கள் அதிகரித்து கொண்டே போகும்.
கணவன் மனைவி உறவு சற்று சுமாராக இருந்து வரும். வலுவான போராட்டத்திற்கு பின் காதல் நிறைவேறும் காதலால் தேவையற்ற மன வருத்தங்களும் வேதனைகளும் வந்து சேரும். தொழில் முதலீட்டில் அதிக கவனம் தேவை. தேவையற்ற முதலீடு கூடாது. தொழிலில் கூட்டாளிகளுக்கு ஆக உழைக்க வேண்டி வரும். தந்தையாரின் அன்பும் ஆதரவும் கிட்டும். நண்பர்களால் எதிர்பாராத உதவிகளும் நன்மைகளும் வந்து சேரும். உயரதிகாரிகளின் அன்பும் ஒத்துழைப்பும் இருந்து வரும். கடை, தொழில் நிலம் தோட்டம், பண்னை, பயிர் செய்யும் நிலம் வாங்கவும் கடை, அலுவலக கட்டிடம் கட்டவும் ஒரு சிலருக்கு வாய்ப்புகள் உருவாகும். எதையும் தள்ளிப் போடுவது ஒத்திப் போடுவது கூடாது. அன்றைய வேலைகளை அன்றே செய்து முடிக்க வேண்டும்.
பரிகாரம்:திருவாதிரை நட்சத்திரம் நடைபெறும் நாளில், வேலூர் மாவட்டம் பெரியமணலி எனும் ஊரில் அருளும் ஸ்ரீநாகேஸ்வரர் கோயிலுக்குச் சென்று வில்வம் சாற்றி வழிபட்டு வாருங்கள்; முன்னேற்றம் உண்டாகும்.
பெற்றோரின்றி தவிக்கும் பிள்ளைகளுக்கு உங்களால் இயன்றவரை உதவுங்கள். திருவாதிரை நட்சத்திர நாளில் அருகில் உள்ள ஸ்ரீநாகேஸ்வரர் கோயிலிற்கு சென்று வில்வம் சாற்றி வழிபட்டு வாருங்கள். “ஓம் ஸ்ரீசாஸ்தாய நமஹ” என்ற மந்திரத்தை தினமும் 5 முறை கூறி வாருங்கள். நல்ல பலன் உண்டு.