ராகு, கேது பெயர்ச்சி பலன்கள் 2022 – மேஷம் முதல் மீனம் வரை

நிகழும் பிலவ வருடம் பங்குனி மாதம் 7-ம் தேதி திங்கள்கிழமை உத்தராயணப் புண்ய கால, சசி ருதுவில் கிருஷ்ணபட்சத்து சதுர்த்தி திதி, சுவாதி நட்சத்திரம், வியாகாதம் நாமயோகம், பவம் நாமகரணம் அமிர்த யோகத்தில், பஞ்சபட்சியில் காகம் நடைபயிலும் நேரத்தில் நேத்திரம் ஜீவனம் நிறைந்த நன்னாளில் பல சித்து வேலைகளைச் செய்யும் ராகுபகவானும், கேதுபகவானும் (21.3.2022) இன்று பிற்பகல் 2 மணி 54 நிமிடத்துக்கு ரிஷப ராசியிலிருந்து மேஷ ராசிக்குள் ராகுபகவானும், விருச்சிக ராசியிலிருந்து துலாம் ராசிக்குள் கேதுபகவானும் நுழைகின்றனர். திருக்கணிதப் பஞ்சாங்கப்படி 12.4.2022 மதியம் 1 மணி 48 நிமிடத்துக்கு பெயர்ச்சி அடைகிறார்கள்.

இந்த ராகு -கேது பெயர்ச்சி ரிஷபம், மிதுனம், சிம்மம், விருச்சிகம், தனுசு, கும்பம் ராசிக்காரர்களுக்கு பிரபலமான யோகத்தை தரக் கூடியதாக இருக்கிறது. வீடு, மனை வாங்குவது, திருமணம் கூடுவது, நல்ல வேலையில் அமர்வது போன்ற எல்லா சுகபோகங்களும் இந்தப் பெயர்ச்சியில் நடக்கும். கடகம், மகரம் ராசிகளில் பிறந்தவர்கள் சின்னச் சின்ன சிக்கல்கள் இருந்தாலும் கடின உழைப்பால் ஜெயித்துக் காட்டுவீர்கள். ஆனால் மேஷம், கன்னி, துலாம், மீனம் ஆகிய ராசிக்காரர்கள் எல்லாவற்றையும் போராடிப் பெற வேண்டி வரும். உடல்நலத்திலும் கவனம் தேவை. சந்தேகக் கோடு அது சந்தோஷக் கேடு.

மேஷம் இப்போது உங்கள் ராசிக்குள்ளேயே ராகு வந்து அமர்வதால் முன்பு இருந்து வந்த பிரச்சினைகளெல்லாம் கொஞ்சம் விலகும். உங்கள் ஆரோக்யத்தில் கொஞ்சம் அக்கறை காட்ட வேண்டும். முன்கோபம் அதிகமாகும். உணர்ச்சி வசப்பட்டு முடிவெடுக்க வேண்டாம். தற்போது கேது 7-ல் வந்தமர்வதால் கணவன் -மனைவிக்குள் சின்னச் சின்னதான சந்தேகங்கள் வரும். வியாபாரத்தில் பங்குதாரர்களுடன் கருத்து மோதல்கள் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். கணவன் – மனைவிக்குள் கலகத்தை ஏற்படுத்த யாராவது முயற்சி செய்வார்கள் அதை நீங்கள் கவனித்து கொள்ள வேண்டும். பரிகாரம்: புற்றுடன் இருக்கும் அம்மன் கோயிலுக்குச் சென்று எலுமிச்சை பழ தீபம் ஏற்றுங்கள்.

ரிஷபம்

கடந்த மூன்றரை வருடத்துக்கு பிறகு மிகப் பெரிய ராஜயோகத்தை இந்த ராகு – கேது பெயர்ச்சி தரப் போகிறது. ராகு ராசியை விட்டு விலகுவதால் உடம்பில் இருந்து வந்த நோய்களெல்லாம் பறந்து ஓடிவிடும். மருந்து மாத்திரையெல்லாம் எடுத்து தூர போடுங்கள். பணவரவும் திருப்தி தரும். எதிர்மறை எண்ணங்கள் எல்லாம் உங்களை விட்டு விலக ஆரம்பிக்கும். கேது 6-ம் வீட்டில் இருக்கிறார். கடன் பிரச்சினை தீரும். உங்களை எதிரியாக பார்த்தவர்கள் உங்களிடம் திடீரென்று வந்து நட்பு பாராட்டுவார்கள். ராகு – கேது பெயர்ச்சி ஒரு பெரிய ராஜயோகத்தை தருவது மட்டுமின்றி உங்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும்.

பரிகாரம்: சிவாலயத்துக்கு சென்று பிரதோஷ பூஜையில் கலந்து கொள்ளுங்கள்.

மிதுனம்

அஷ்டமத்துச் சனியில் அவஸ்தை பட்டுக் கொண்டிருக்கும் உங்களுக்கு ராகு பகவான் 12-ம் வீட்டிலிருந்து 11-ம் வீட்டில் உட்கார்ந்து அள்ளித் தரப் போகிறார். இனி நிம்மதியாக இருப்பீர்கள். உங்களின் வியாபாரத்தில் இரட்டிப்பு லாபமும், உத்யோகத்தில் பதவி உயர்வும் உண்டு. சொந்த வீடு வாங்குவீர்கள். ஆனால் கேது 5-ல் அமர்வதால் பிள்ளைகளிடம் கோபப்படாதீர்கள் அவர்களை புரிந்து கொள்ளுங்கள். பூர்வீகச் சொத்து விவகாரத்தில் சென்று மாட்டிக் கொள்ளாதீர்கள்.

பரிகாரம்: அருகிலிருக்கும் விநாயகர் கோவிலுக்கு, சதுர்த்தி திதி நாளில் சென்று வணங்குங்கள்.

கடகம்

உங்களுக்கு 4-ம் வீட்டில் கேது அமர்வதால் வீடு மாற வேண்டி வரும். அம்மாவுக்கு கொஞ்சம் மருந்து, மாத்திரை செலவுகள் இருக்கும். 10-ல் ராகு அமர்வதால் உத்யோகத்தில் உங்களை விட வயதிலும், தகுதியிலும் குறைவானவர்களிடம் கொஞ்சம் பணிந்து பதில் சொல்ல வேண்டியிருக்கும். சொந்தமாக எதாவது தொழில் தொடங்கலாமா என்று கூட யோசிப்பீர்கள். ஆனால் அவசரப்பட்டு எதிலும் போய் சிக்கிக் கொள்ளாதீர்கள். அதேசமயம் கவுரவப் பதவிகளும் தேடி வரும். பணவரவு இருக்கும். எதிலும் பொறுமை காக்கவும்.

பரிகாரம்: கருமாரியம்மன் கோவிலுக்கு வெள்ளிக்கிழமைகளில் சென்று நெய் தீபமேற்றுங்கள்.

சிம்மம்

இந்த ராகு கேது பெயர்ச்சி உங்களுக்கு நல்ல ஒரு யோகத்தை தரப் போகிறது. கேது பகவான் 3-ம் வீட்டில் அமர்வதால் இனி தைரியம் வரும். முக்கிய முடிவுகளை கூட நீங்களே சொந்தமாக எடுப்பீர்கள். சொந்த – பந்தங்களுடன் இருந்த மனவருத்தங்கள் விலகும். அம்மாவினுடைய ஆரோக்யமும் நன்றாக இருக்கும். கொஞ்சம் கொஞ்சமாக சேமித்து வைத்திருக்கும் பணத்தில் சொந்த வீடு வாங்குவீர்கள். 9-ல் ராகு இருப்பதால் அப்பாவின் ஆரோக்யத்தில் கவனம் காட்டுங்கள். அப்பா வழி சொந்தங்களுடன் சலசலப்புகள் வரும்.

பரிகாரம்: அருகிலிருக்கும் ஸ்ரீரங்கநாத பெருமாள் கோயிலுக்கு சனிக்கிழமைகளில் சென்று தீபமேற்றி வணங்குங்கள்.

கன்னி

உங்களுக்கு எல்லாத் திறமைகளும் இருக்கிறது அதில் எந்த மாற்றமும் இல்லை ஆனால் இந்த ராகு – கேது பெயர்ச்சியில் 2-ம் வீட்டில் கேது இருப்பதால் இனி யாரிடம் எப்படி பேச வேண்டும் என்பது ரொம்ப முக்கியம். கண் மருத்துவரிடம் உங்கள் கண்களை பரிசோதித்துக் கொள்ளுங்கள். 8-ல் ராகு இருப்பதால் இரவு நேரத்தில் பயணம் செய்யாதீர்கள். பணம் கொடுக்கல், வாங்கல் விஷயத்தில் ஜாமீன், கேரண்டர் கையெழுத்து போட்டு மாட்டிக் கொள்ளாதீர்கள். பேச்சு என்பது வெள்ளி, மௌனம் என்பது தங்கம் என்பதை மறந்து விடாதீர்கள்.

பரிகாரம்: அருகிலிருக்கும் துர்க்கை அம்மன் கோயிலுக்கு சென்று விளக்கேற்றுங்கள்.

துலாம்

உங்கள் ராசிக்குள்ளேயே கேது நுழைந்திருக்கிறார் உடல் நலத்தில் கவனம் தேவை. வீண் சந்தேகத்தால் சங்கடங்கள் வரும். மருத்துவரோட ஆலோசனை இல்லாமல் கை வைத்தியம் எல்லாம் பார்த்துக் கொண்டு இருக்காதீர்கள். காய்கறி, கீரை போன்ற உணவுகளை அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள். ஆரோக்யத்தில் அக்கறை காட்டுங்கள். சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும். 7-ல் ராகு இருப்பதால் வீட்டில் இருப்பவர்களிடம் சண்டை போட்டால் நிம்மதி போய்விடும். கணவன் – மனைவிக்குள் கலகத்தை ஏற்படுத்த யாராவது முயற்சி செய்வார்கள் கவனம் தேவை.

பரிகாரம்: அருகிலிருக்கும் பெருமாள் கோயிலில் உள்ள ஸ்ரீகருடாழ்வாரை சென்று வணங்குங்கள்.

விருச்சிகம்

கடந்த நான்கரை வருடத்துக்குப் பிறகு உங்களுக்கு நல்ல காலம் பிறந்து விட்டது. 6-ல் ராகு இருப்பதால் நீங்கள் இனி எதை செய்தாலும் அதில் வெற்றி உண்டு. பிரிந்திருந்தவர்கள் ஒன்று சேர்வீர்கள். வேலை கிடைக்கும். மனதாலும், உடலாலும் இருந்து வந்த அவஸ்தைகள் விலகும். கேதுவும் சாதகமாக இருப்பதால் பாதியில் நின்று போன அரசு வேலைகள் உடனே நடக்கும். குடும்பத்தில் மனைவி பிள்ளைகளுடன் சந்தோஷமாக இருப்பீர்கள். வழக்கில் வெற்றி உண்டு. புது வேலை கிடைக்கும். மகனுக்கு திருமணம் முடியும்.

பரிகாரம்: அருகிலிருக்கும் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலுக்குச் சென்று வாருங்கள்.

தனுசு

எப்பொழுதும் ஏதோ ஒன்றை இழந்ததைப் போல் இருப்பீர்களே – இனி உற்சாகமாக இருப்பீர்கள். வீடு மாற வேண்டி இருக்கும். அசதி, சோர்வு விலகும். புது வாகனம் வாங்குவீர்கள். 5-ல் ராகு இருப்பதால் முன்கோபத்தால் நெருங்கிய நண்பர்களுடன் மனத்தாங்கல் வரும். வித்தியாசமாக யோசித்து வெற்றி அடைவீர்கள். குடும்ப வருமானத்தை அதிகப்படுத்த சுய தொழில் செய்யத் தொடங்குவீர்கள். கேது சாதகமாக இருப்பதால் கழுத்து வலி, இடுப்பு வலி குறையும். தினமும் நடைபயிற்சி மேற்கொள்ளவும். பரிகாரம்: சிவன் கோவிலில் இருக்கும் பைரவரை வியாழக்கிழமைகளில் சென்று வணங்குங்கள்.

மகரம்

ராகுவும், கேதுவும் கேந்திரஸ் தானங்களில் அமர்வதால் குழப்பங்களுக்கு விடை கிடைக்கும். ருசிக்கு சாப்பிடாமல் ஆரோக்யத்தை மனதில் வைத்து பராம்பரிய உணவுகளை சாப்பிடுவது நல்லது. கேதுவால் உத்யோகத்தில் மரியாதை குறைவான சம்பவங்கள் நடக்கும். சொந்த – பந்தங்களெல்லாம் நம்மை விட்டு விலகி போகிறார்களோ என நினைக்கத் தோன்றும். செலவுகளை கட்டுப்படுத்த முடியாமல் திணறுவீர்கள். நகரத்திலிருந்து விலகி சற்று ஒதுக்குப் புறமான பகுதிக்கு வீட்டை மாற்றுவீர்கள்.

பரிகாரம்: குலதெய்வ வழிபாடும், மாரியம்மன் கோயிலுக்குச் சென்று வணங்குவதும் சிறப்பான பலன்களைத் தரும்.

கும்பம்

ஏழரைச் சனியால் பாதிக்கப்பட்டிருந்த உங்களுக்கு இந்த ராகு- கேது பெயர்ச்சி ஒரு வரப்பிரசாதமாக இருக்கும். எதிர்நீச்சல் போட்டு எதிரிகளை ஜெயிப்பீர்கள். உத்யோகத்தில் இழந்த மரியாதை மீண்டும் கிடைக்கும். தேவையற்ற விவாதங்களைத் தவிர்த்து விடவும். அடகிலிருந்த நகையை மீட்பீர்கள். வாயிதா வாங்கி கொண்டேயிருந்த வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். சிக்கனமாய் சேர்த்த பணத்தில் சின்னதாய் ஓர் இடம் வாங்கி குடி போவீர்கள். உங்கள் அப்பா எதாவது உரிமையில் பேசினால் அதற்காக கோபித்துக் கொள்ளாதீர்கள். வெளிநாட்டு நிறுவனத்தில் வேலை கிடைக்கும். மகளுக்கு திருமணம் முடியும்.

பரிகாரம்: பெருமாள் கோயிலில் இருக்கும் சக்கரத்தாழ்வாரை சனிக்கிழமைகளில் சென்று வணங்குங்கள்.

மீனம்

எல்லோரிடமும் வெளிப்படையாக இனி பேச வேண்டாம். கண்ணை கசக்கிக் கொண்டு காசு கேட்டவர்களுக்கெல்லாம் தந்து விட்டு நெருக்கடி நேரத்தில் நமக்கு யாரும் உதவவில்லையே என்று வருந்த வேண்டாம். குடும்பத்தில் அடங்கிப் போக வேண்டி இருக்கும். யாரையும் எடுத்தெறிந்து பேச வேண்டாம். வியாபாரத்தில் வேலையாட்களை மாற்றுவீர்கள். யாரையும் எளிதில் நம்பி விடாதீர்கள். கடையை கொஞ்சம் பெரிதுபடுத்துவீர்கள். கேதுவால் இனந்தெரியாத ஒரு மனக்கலக்கம் இருக்கும். சுற்றியிருப்பவர்களின் மறுபக்கத்தை தெரிந்து கொள்வீர்கள். பிள்ளைகளிடம் வளைந்து கொடுத்து போகவும். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது.

பரிகாரம் : அருகிலிருக்கும் முருகன் கோயிலுக்குச் சென்று வாருங்கள்.

நன்றி: ‘இந்து தமிழ் திசை’

 

Leave a Comment