Diwali celebrations

தீபாவளியை ஏன் கொண்டாடுகிறோம்?

நாம் எல்லோரும் எதிர்ப்பார்த்திருக்கும் ஒரு முக்கிய பண்டிகை தீபாவளி. அதாவது தீபங்களின் வரிசைகள், பட்டாசுகள், புத்தாடை என்ற ஆசையை ஏற்படுத்தும் இந்த தீபாவளியின் வரலாற்றைக் காண்போம்.

நரகாசுரன் என்ற அரக்கண் மரணம் அடையும் நேரத்தில் இந்தத் தினத்தை எல்லோரும் ஸ்னானம் செய்து, புத்தாடை உடுத்தி, தீபங்கள் ஏற்றி மகிழ்ச்சியுடன் கொண்டாட வேண்டும் என்று ஸ்ரீ மஹாவிஷ்ணுவைக் கேட்டுக் கொண்டான். அவனது ஆசையின் படி நாம் தீபாவளி அன்று புத்தாடை அணிந்து, பட்டாசுகள் வெடித்து தீபாவளியை உற்சாகத்துடன் கொண்டாடிவருகிறோம்.

Narakasura

*நரகாசுரன் என்பவர் யார்?*

நரகாசுரன் என்பவர் பூமாதேவியின் அம்சமாக மஹாவிஷ்ணு வராக அவதாரம் எடுத்தபோது அவருக்கும் பூமாதேவிக்கும் பிறந்த மகன் தான். அவன் ஆரம்பத்தில் மிக நல்லவனாகத் தன் அன்னையிடமிருந்து பல கலைகள் கற்று கொண்டு சிறந்து விளங்கினான். ஆனால் அவனுக்கு வயது ஆக ஆக அவன் போக்கில் பல மாற்றங்கள் ஏற்பட்டது. கெட்ட சகவாசத்துடன் சேர்ந்து எல்லோரையும் துன்பப்படுத்தினான்.

பெரிய மகரிஷி குருவை இகழ்ந்து பேசினான். எல்லா உலகத்தையும் ஜெயிக்க எண்ணினான். அதற்காக போருக்குத் தேவையான எல்லாக் கலைகளையும் படித்து அறிந்து கொண்டான். பின் அவன் தாய்ச் சொல்லையும் கேளாமல் இளம் பெண்களைத் துன்புறுத்த தொடங்கினான். அதனால் எல்லோரும் அவனைக் கண்டு பயந்தனர்.

*நரகாசுரனின் தவம்*

இதற்கிடையே அவன் பிரம்மாவை நோக்கி கடுந்தவம் செய்யத் தொடங்கினான். பிரம்மாவும் மனம் நெகிழ்ந்து வேண்டிய வரம் தருவதாக கூறினார். உடனே நரகாசுரன் தனக்கு சாகா வரம் வேண்டும் என்று வேண்டினான். உலகில் பிறந்தவர்கள் ஒரு நாள் அழியத்தான் வேண்டும். அதனால் வேறு எதாவது கேள் என்றார் அவர்.

பின் தன் தாயைத் தவிர வேறு யாராலும் சாகக் கூடாது. அதற்கு வரம் கொடுங்கள் என்று கேட்டான். ‘நீ உன் தாய் அம்சத்தைத் தவிர வேறு எவராலும் மரணம் அடைய மாட்டாய்” என்று கூறிவிட்டு பிரம்மா மறைந்து விட்டார்.

*நரகாசுரனின் திட்டம்*

வரம் வாங்கிய பின் ஆரம்பித்து விட்டது நரகாசுரனின் அட்டகாச வேலை. எல்லா லோகத்தையும் ஜெயிக்க ஆசைப்பட்டான். முதலில் இந்திர லோகத்தை முற்றுகை இட ஆரம்பித்தான். பல தேவர்களைச் சிறையில் தள்ளினான்.

இந்திரன் ஓடி ஒளிந்துக் கொள்ள, மிஞ்சிய சிலர் மிகக் கவலைக் கொண்டு கிருஷ்ணரிடம் சென்று நிலமையைக் கூறி காப்பாற்றும்படிக் கேட்டுக் கொண்டனர். ‘கவலைபடாதீர்கள், நான் காப்பாற்றுகிறேன்” என்றார் கிருஷ்ணர்.

ஸ்ரீகிருஷ்ணர் எல்லாம் அறிந்தவர். நரகாசுரனிடம் சென்று அறிவுரைகள் கூற, ‘அழிவுக் காலம் வந்தால் செவிடன் காதில் சங்கு ஊதினது போல் தான்”, என்பதற்கு ஏற்ப நரகாசுரன் காதுக் கொடுத்துக் கேட்கவில்லை.

*நரகாசுரனின் அட்டகாச வேலை*

*போர் ஆரம்பம் :*

கண்ணனுக்கு சாரதியாக சத்தியபாமாவைக் கண்ணன் அழைத்தார். சத்தியபாமா ஒரு வீரமிக்க போருக்கு வேண்டிய எல்லாக் கலைகளும் அறிந்தவள். அவள் தேரோட்ட, யுத்தம் ஆரம்பமானது.

*மாயக் கண்ணனின் மாய வேலை :*

கடும்போர் தொடர, நரகாசுரன் தன் கடாயுதத்தை கண்ணன் மீது வீசினான். மாயக் கண்ணன் மயங்கி விழுந்தார். எல்லாம் வல்ல அந்தக் கண்ணன் மயங்குவதா? எல்லோரும் ஸ்தம்பித்து விட்டனர். ஆனால் காரணம் இல்லாமல் கண்ணன் மயங்கவில்லை. பூமாதேவியின் அம்சமான சத்தியபாமா ஒரு நிலையில் நரகாசுரனின் தாய் ஆகிறாள். அவள் கையால் தானே மரணம் நிகழ வேண்டும்.

சத்தியபாமா கிருஷ்ணர் மயங்கி விழுந்ததைப் பார்த்து கோபத்தில் சீரிக் கொண்டு எழுந்தாள். ‘என் கண்ணனுக்கா இந்த நிலை” என்று அவள் மனம் கொதிக்க, அம்பை நரகாசுரன் மேல் சரமாரியாக எய்தாள். அவனும் கீழே சாய்ந்தான். அதேசமயம் மயங்கியவர் போல் விழுந்திருந்த கிருஷ்ணர் எழுந்து வந்தார். தேவர்கள் மலர்மாரி பொழிந்தனர். உயிர் பிரியும் நிலையில் பாமாவைப் பார்த்து ‘அம்மா” என அழைத்தான்.

கேட்ட வரம் பலித்தல் :

அந்தக் குரல் கேட்ட பாமாவிற்கு தன் முன்பிறவி நினைவிற்கு வந்தது. பூமாதேவியின் வடிவமும் கொண்டாள். தன் மகனைத் தன் மடியில் தாங்கிக் கொண்டு அழுதாள்.

‘மகனே! நானே உன் இறப்பிற்கு காரணமாகிவிட்டேனே. நீ கேட்ட வரம் பலித்துவிட்டதே மகனே! இந்த அம்மாவை மன்னித்துவிடு மகனே” என்று அழுதாள். ‘அம்மா! கலங்காதீர்கள். தங்கள் கையினால் நான் மடிவதில் எனக்கு மகிழ்ச்சியே” என்றான் நரகாசுரன்.

கிருஷ்ணர் நாராயணனாக வடிவம் தாங்கி அருகே வந்து நின்றார். ‘நரகா! உன் வரத்தின் படியே நீ முடியவேண்டும் என்பதற்காகவே சத்தியபாமாவை உடன் அழைத்து வந்தேன். அவள் கையினாலேயே நீ மடியவேண்டும் என்ற உன் விருப்பம் நிறைவேறியதல்லவா” என்று கிருஷ்ணர் கூறினார்.

Diwali celebrations

‘தந்தையே, உலகில் தோன்றிய எந்த உயிரும் மறைந்தே தீரும் என்ற உண்மை என்னால் நிரூபிக்கப்பட்டுவிட்டது” என்று கதரினான்.

அவன் கேட்டபடியே அவன் தாயின் அம்சமான சத்யபாமாவால் கொல்லப்பட்டான். பின் அவனுக்கு ஸ்ரீமஹா விஷ்ணு காட்சி அளித்து மறுபடியும் அவனுக்குத் தேவையான வரத்தைக் கொடுப்பதாகச் சொன்னார். நரகாசுரனோ தான் இறக்கும் இந்நாளை எல்லோரும் காலையில் ஸ்னானம் செய்து, புத்தாடை உடுத்தி, பின் தீபங்கள் ஏற்றிக் கொண்டாட வேண்டும் என்று கேட்டுக் கொண்டான். இதன்படி நாம் தீபாவளியாகக் கொண்டாடுகிறோம்…

தீபாவளி அன்று சகல ஐஸ்வர்யமும் தரும் லட்சுமி குபேர விரத பூஜை

Leave a Comment