Shani Jayanthi Special

சனீஸ்வரர் ஜெயந்தி | Shani Jayanthi

🙏சனி ஜெயந்தி 10.06.2021….

வியாழக்கிழமை அமாவாசை திதி இந்த நாளில் சனி ஹோரையில் சனி பகவானை நினைத்து பூஜை செய்து வழிபடலாம். நம்மால் முடிந்த அளவிற்கு தானம் தர பாதிப்புகள் நீங்கும்.

வைகாசி மாதம் அமாவாசை வரும் நாளினை சனி ஜெயந்தியாக கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் சனி பகவானை வணங்குவதோடு ஏழை, எளியவர்களுக்கு இயன்ற அளவு தானங்கள் செய்து நன்மைகள் பெறலாம்.

ஏழரை சனி, ஜென்ம சனி, அஷ்டம சனி, அர்த்தாஷ்டம சனி, கண்ட சனியால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் சனி தோஷத்தினால் பாதிக்கப்பட்டவர்களும் தோஷங்கள் நீங்கி நன்மைகள் பெற சனி பகவானை இந்த நாளில் வழிபாடு செய்வது மிகவும் நல்லது.

நவகிரகத்தில் சனி பகவானைப் பார்த்துதான் பலரும் பயப்படுகின்றனர். சனி பகவானின் பார்வை பலவித சங்கடங்களைக் கொடுக்கும் என்று ஜோதிடத்தில் சொல்லப்பட்டுள்ளது.

சனிபகவான் ஏழரை சனியாகவும், அஷ்டம சனியாகவும், அர்த்தாஷ்டம சனியாகவும், கண்டச்சனியாகவும் வந்து பலருக்கும் கஷ்டங்களைக் கொடுப்பார். சனியால் ஏற்பட்டுள்ள சங்கடங்கள், கஷ்டங்கள் நீங்க சனிபகவானை சனி ஜெயந்தி நாளில் வழிபடுங்கள் பிரச்சினைகள் நீங்கும். நோய்கள் நீங்கும் ஆரோக்கியம் அதிகரிக்கும்.

ஒருமுறை சிவபெருமானை நோக்கி சனிபகவான் கடுமையான தவம் புரிந்தார். அவரின் தவத்திற்கு பிரதிபலனாக சிவபெருமான் ஒரு வரம் அளித்தார். மனிதர்களின் தவறுகளுக்கு ஏற்ப தண்டனைகளையும், அவர்களின் நல்ல செயல்களுக்கு வெகுமதியும் தரும் வரத்தை வழங்கினார்.

அதே போன்று கடவுளுக்கும், அசுரர்களுக்கும், தேவர்களுக்கும் அவரின் செயல்களுக்கு ஏற்ப தண்டனையையும், பரிசையும் வழங்க ஆசிர்வதித்தார் என்கிறது புராணம்.

ஜோதிட சாஸ்திரத்தில் ஈஸ்வரன் பட்டம் பெற்ற ஒரே கிரகம் சனீஸ்வரர்தான். இவர் நியாயவான், தர்மவான், நீதிமான் என போற்றப்படுகிறார். ஆயுள், ஆரோக்கியம், செல்வம், தொழில் ஆகியவற்றை அருள்பவர் சனீஸ்வர பகவான்தான். சாதாரண தொழிலாளியைகூட மிகப் பெரிய தொழிலதிபராக ஆக்கும் சக்தி சனீஸ்வரருக்கு உண்டு. சர்வ அதிகாரம் படைத்தவராக இருந்தாலும், கர்ம வினைப்படி அவர்களை துன்பத்திற்கு ஆளாக்கக்கூடியவரும் இவர்தான்.

நம் ஜாதகத்தில் சனிபகவான் நல்ல பலம் பொருந்தி இருந்தால் ஆயுள், ஆரோக்கியம், அஷ்ட ஐஸ்வர்யம், பட்டம், பதவி தானாக தேடி வரும். தன்னுடைய தசா புக்தி காலங்களில் பல ஏற்றங்களை வழங்குவதில் சனிக்கு நிகர் சனிதான். அதேபோல் கோச்சார பலன்கள் தருவதிலும் வலிமை மிக்கவர்.

ஏழரை சனி, கண்ட சனி, அட்டம சனி, அர்த்தாஷ்டம சனி என்று ஒவ்வொருவருக்கும் 30 ஆண்டுகளுக்குள் பல விதமான கோச்சார பலன்களை தருகிறார்.

விரல்களில் சனி விரல் நடு விரலாகும். அந்த விரலுக்கு கீழே உள்ள மேடு சனி மேடாகும். தொழில் காரகன் கர்ம காரகன் ஆன சனி பகவான் ஜாதகத்தில் ஆட்சி பெற்றால் அனைவரையும் ஒன்றிணைக்கும் ஆற்றல் உள்ளவர், ஒருவரின் ஜாதகத்தில் சனி பகவான் உச்சம் ஆனால் தொழில் துறையில் சாதனை படைப்பவராகவும் நீதிமானாக திகழ்வார்.

பிறர் மனைவியை அபகரித்ததால் உண்டான கணவனின் சாபத்தினாலும், நயவஞ்சகத்தால் ஏமாற்றப்பட்ட ஒரு ஏமாளியின் சாபத்தாலும் புத்திர தோஷம் ஏற்படும்.

வறுமையில் வாடும் ஏழைகளுக்கு உணவு, உடை, தானம் செய்வதாலும், கோயில்களில் உழவாரப் பணி செய்வதன் மூலமும், ஏழை உடல் ஊனமுற்றோருக்கு கைத்தடி, சைக்கிள் தானம் செய்து சனி ஜெயந்தி அன்று சனிபகவான் அருள் வேண்டி பிரார்த்தனை செய்வோம்.

நீதி தேவனாக பார்க்கப்படும் சனி பகவான், ஒருவருக்கு ஏழரை சனியாக வரும் போது அவர் செய்த பாவங்களுக்கும், தர்மங்களுக்கும் ஏற்ற வகையில் சரியான வகையில் தண்டனை கொடுத்து நல்வழிப்படுத்துவார்.

சனியின் கோபப் பார்வையில் இருந்து தப்பிக்க காக்கைக்கு தினந்தோறும் சாதம் வைக்க வேண்டும். உளுந்து தானியத்தை தானம் செய்யலாம். சனிக்கிழமை அதிகாலை வேளைகளில் குளித்து விட்டு சனி பகவானுக்கு எள் எண்ணெய் தீபம் போடலாம். எளியவர்களுக்கு செய்யும் உதவியும், தொண்டும் சனீஸ்வரருக்கு மிகவும் பிடித்தமானதாகும். சனி பகவானை மனதார நினைத்து ஏழை, எளியோருக்கு உதவி செய்தல், மாற்றுத் திறனாளிகளுக்கு உங்களால் முடிந்த உதவிகளை செய்தாலே அவரின் அருள் நமக்கு கிடைத்துவிடும்.

யாரையும் ஏளனமாக எண்ணாமல் இருப்பதும், நமக்கு கொடுக்கப்பட்ட வேலையை சரியாக நேர்மையாக செய்து முடிப்பதும். வஞ்சம் இல்லாமல் இருப்பதும், பிறருக்கு உதவுவதுமே சனி பகவானின் கெடு பலனிலிருந்து தப்பிக்கக் கூடிய எளிய வழியாகும்.

அகஸ்தியர் வழிபட்ட ஸ்தலம் இன்று வாலாஜாபேட்டை என்று அழைக்கப்படும், அகத்தீஸ்வரம் ஆக அறியப்படுகிறது. இங்குள்ள தன்வந்திரி பீடத்தில் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் பெறும் முயற்சியினால் நம் தலையெழுத்தை நிர்ணயிக்கும் சக்தி கொண்ட சனீஸ்வரனுக்கு உலகிலேயே முதல்முறையாக தங்கத்திலான விக்கிரகம் அமைக்கபப்ட்டுள்ளது. இவர் இங்கு பாதாள சொர்ணசனீஸ்வரர் ஆகவும் ஜெய மங்கள சனீஸ்வரர் ஆகவும் இருந்து அருள் புரிந்து வருகிறார்.

ஈசான்ய மூலையில் 20 அடி அகலம், 27 அடி நீளம், 10 அடி உயரத்தில் பாதாளத்தில் மேற்கு நோக்கி சொர்ண சனீஸ்வரராக தனிச் சன்னிதியில் சனீஸ்வரர் அமைந்துள்ளார். இத்தகைய சிறப்பு வாய்ந்த பாதாள சொர்ணசனீஸ்வரர் ஆலயத்தில் வருகிற 10.06.2021 வியாழக்கிழமை அமாவாசை அன்று சனிபகவான் ஜெயந்தியை முன்னிட்டு ஸ்வாமிகள் அருளானைப்படி காலை 10.00 மணிக்கு கோ பூஜையுடன் சனி சாந்தி ஹோமமும் பாதாள சொர்ணசனீஸ்வரருக்கு சங்காபிஷேகமும் வன்னி இலையால் அர்ச்சனையும் ஜெய மங்கள சனீஸ்வரருக்கு தைலாபிஷேகமும் நடைபெறவுள்ளது.

மேற்கண்ட ஹோமம், பூஜைகளில் அஷ்டம சனி, ஏழரை சனி, அர்த்தாஷ்டம சனி, கண்ட சனி போன்ற தோஷங்கள் விலகவும், பித்ரு சாபங்கள் நீங்கவும், விபத்து பாதிப்புகள் தடுக்கவும், பிரிந்த தம்பதிகள் ஒன்று சேரவும், தடைப்பட்ட சுப நிகழ்ச்சிகள் நடைபெறவும், தொழில், வியாபாரம், விவசாயத்தில் ஏற்படும் இன்னல்கள் நீங்கவும், சகலவிதமான திருஷ்டிகள் அகலவும், சனி திசை, சனி புக்தினால் ஏற்படும் பாதிப்புகள் குறையவும் பிராத்தனைகள் நடைபெறவுள்ளது.

பாதாள சொர்ண சனீஸ்வரர் இங்கு பல்வேறு நன்மைகளை அளித்து வருகிறார் இவருக்கு பிரதி சனிக்கிழமைகளில் வரும் சனி ஹோரையில் சனி சாந்தி ஹோமமும் சங்காபிஷேகமும், வன்னி இலை
அர்ச்சனை சொர்ணசனீஸ்வரருக்கும் தைலாபிஷேகம் ஜெய மங்கள சனீஸ்வரருக்கும் நடைபெற்று வருகிறது. இந்த பூஜையில் பங்கேற்பவர்களுக்கு சனி தோஷங்கள் குறைந்து நன்மைகள் கிடைப்பதாக பக்தர்கள் தெரிவிக்கின்றனர்.

பொதுமக்கள் வீட்டில் இருந்தவாறு சனி ஹோரையில் பூஜையறையில் தீபம் ஏற்றி பிரார்த்தனை செய்வது மிகவும் நன்மை தரும் என்கிறார்..

சனி பகவான் காயத்ரி மந்திரம்

108 சனி பகவான் போற்றி

சனி பகவானின் தாக்கம் குறைய எளிய வழிமுறை

Leave a Comment