ஸ்ரீவில்லிபுத்தூரை பற்றிய ஓர் பதிவு.. Srivilliputhur Temple specialities…

பல நூற்றாண்டுகளுக்கு முன், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள நிலப்பகுதிகள் ராணி மல்லி என்பவரின் ஆட்சியின் கீழ் இருந்தது. இந்த ராணிக்கு வில்லி மற்றும் கண்டன் என்ற இரு மகன்கள் இருந்தனர். ஒரு நாள், அவர்கள் காட்டில் வேட்டையாடிய போது,கண்டன் ஒரு புலியால் கொல்லப்பட்டார். இந்த உண்மை தெரியாமல், வில்லி, அவரது சகோதரர் என்ன ஆனார் என்று காட்டில் தேடிக் கொண்டு இருந்தார். வெகுநேரம் காட்டில் தேடிய பின்னர் களைத்துப்போய் சிறிது நேரம் தூங்கினார். அவரது கனவில், கடவுள் அவரது சகோதரருக்கு என்ன ஆயிற்று என்பதை அவருக்கு விளக்கினார். உண்மை புரிந்ததும், தெய்வீக உத்தரவின் பேரில் வில்லி அந்த காடுகளைத் திருத்தி அமைக்க, ஒரு அழகான நகரம் உருவாக்கப்பட்டது. இந்த காரணத்திற்காக, இந்த நகரம், வில்லிப்புத்தூர் என்ற பெயர் பெற்றது. மேலும் இந்த நகரம் திருமகளே தெய்வீக குழந்தையாக ஆண்டாள் என்று பிறந்ததின் காரணமாகவும், திருமகளைக் குறிக்கும் ‘’ஸ்ரீ’’ என்று சேர்த்து அழைக்கப்படுகிறது.

பெயர் காரணம் .

வரலாறு

ஆண்டாள் கோயில் கி.பி. 788ல் கட்டப்பட்டது. இங்குள்ள நரசிம்மர் சன்னதி, கல்வெட்டுகளில் ஒன்றான, சோழனின்
தலைகொண்ட வீரபாண்டியன் (கி.பி.946 -966 ) கல்வெட்டில், இக்கோயில் ‘ஜலசயநாட்டுக் கிடந்தருளின பரமசுவாமி கோயில்’ என்றழைக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. சோழமன்னன் முதலாம் குலோத்துங்கன் (கி.பி.1070 -1120 ) ஆட்சியில் இந்த ஊர், ‘விக்கிரமசோழ சதுர்வேதிமங்கலம்’ என்றழைக்கப்பட்டது. பிற்கால பாண்டியர் கல்வெட்டில், இக்கோயில் வடபெருங்கோயில் பள்ளி கொண்டருளிய பெருமாள் கோயிலாக இருந்தது. பின்,கி.பி.13 ம் நூற்றாண்டில் இந்த ஊர், ‘பிரம்மதேய குலசேகர சதுர்வேதி மங்கலம்’ என்ற பெரிய நகரமாக பிற்கால பாண்டியர்களால் விரிவுபடுத்தப்பட்டது. திருமலைநாயக்கர் (1623-1659) மற்றும் இராணி மங்கம்மாள் (1689-1706) ஆட்சி காலத்தில், இந்த நகரம் மிகவும் பிரபலமானது. 1751 முதல் 1756 கி.பி. இருந்து, ஸ்ரீவில்லிபுத்தூர் நெற்கட்டும்செவல் பாளையக்காரர் பூலித் தேவர் ஆட்சியின் கீழ் வந்து ஒரு மறவர் பாளையமாக இருந்தது. பின் ஸ்ரீவில்லிபுத்தூர் கோட்டைபெரியசாமி தேவர் என்பவரால் ஆட்சி செய்யப்பட்டது. அடுத்து, முகமது யூசுப் கான் கைகளில் விழுந்தது. 1850 வரை, ஆண்டாள் கோவில் திருவிதாங்கூர் ராஜா சமஸ்தானத்தின் கீழ் இருந்தது. இந்தியா சுதந்திரம் அடையும் வரை பிரிட்டிஷ் நாட்டை ஆட்சி செய்த ஆட்சியாளர்களின் கீழ் இருந்தது.( மதுரையைக் கைப்பற்றிய கான்சாகிப் என்ற மருதநாயகம்,
ஆங்கிலேயருக்கு வரி கொடுக்க மறுத்த ‘நெற்கட்டுச் செவ்வல்’ பாளையக்காரர் பூலித்தேவரை வெல்ல, ஸ்ரீவில்லிபுத்தூரில் முகாமிட்டார். 1756 மே 6 -ல் நடந்த போரில் அவரை வெல்லஇயலாமல், ஸ்ரீவில்லிபுத்தூர் கோட்டையைக் கைப்பற்றினார். பின், அதை தரைமட்டமாக்கினார். இப்போது எந்தத் தடயமும் இல்லாத அந்த இடம் ‘கோட்டைத்தலைவாசல்’ என்றழைக்கப்படுகிறது. (அந்த இடம் முழுவதும் இப்போது வீடுகளாகி, கோட்டைத்தலைவாசல் தெருவாக மாறிவிட்டது.)

மதுரைக்கும் நெல்லைக்கும் நடுவில் ஸ்ரீவில்லிபுத்தூர்
கோட்டை இருந்ததால், ஆங்கிலேயர் ஆட்சியில் ‘நடுமண்டலம்’ என்றழைக்கப்பட்டது. ஆங்கிலேயரின் ராணுவ தளவாடமாகவும்இருந்தது.

ஸ்ரீவில்லிபுத்தூர் முன்பு மதுரை மாவட்டத்தின் பகுதியாக இருந்தது. 1838-இல் திருநெல்வேலி மாவட்டத்தில் இணைக்கப்பட்டு இருந்தது. 1910-இல் ராமநாதபுரத்தில் இணைக்கப்பட்டு . பின்பு ராமநாதபுரம் மாவட்டம் மூன்றாகப் பிரிக்கப்பட்டது முதல் விருதுநகர் மாவட்டத்தில் உள்ளது.

சூடி கொடுத்த சுடர்க்கொடி.

ஆண்டாள் வைணவ ஆழ்வார்களுள் ஒருவர். வைணவம் போற்றும் 12 ஆழ்வார்களில் இவர் ஒருவரே பெண்ணாவார். ஆண்டாள், திருப்பாவை, நாச்சியார் திருமொழி என்னும் இரண்டு பாடற் தொகுதிகளை இயற்றியுள்ளார்.

ஒரு குழந்தையாக, ஆண்டாள், துளசிச் செடியின் கீழ் கிடந்தபோது, மதுரைக்கு அண்மையிலுள்ள ஸ்ரீவில்லிபுத்தூர்என்னும் ஊரில் வசித்துவந்த விஷ்ணுசித்தர் (பெரியாழ்வார்) என்னும் அந்தணர் ஒருவரால் கண்டெடுக்கப்பட்டாள். இவ்வந்தணர் திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலுக்கு மலர்கள் கொய்து கொடுப்பதைத் தமது கடமையாகக் கொண்டவர். தனக்கெனக் குடும்பம் எதுவும் இல்லாதிருந்த நிலையிலும், குழந்தை தனக்கு இறைவனால் வழங்கப்பட்ட கொடை எனக் கருதி வளர்த்து வரலானார். அவர் அக்குழந்தைக்கு இட்ட பெயர் கோதை.. சிறு வயதிலேயே கண்ணன் மீதிருந்த அளவற்ற அன்பு காரணமாக தன்னைக் கண்ணனின் மணப்பெண்ணாக நினைத்துப் பாவனை செய்துவந்தார். கோயிலில் இறைவனுக்கு அணிவிப்பதற்காக விஷ்ணுசித்தர் தொடுத்து வைத்திருக்கும் மாலைகளை ஒவ்வொரு நாளும் அவருக்குத் தெரியாமல் தான் அணிந்து கண்ணனுக்கு ஏற்றவளாக தானிருக்கிறோமா என்று கண்ணாடியில் பார்த்து மகிழ்ந்து பின்னர் திரும்பவும் கொண்டுபோய் வைத்துவந்தார். இதனால் கோதை சூடிய மாலைகளே இறைவனுக்கும் சூடப்பட்டன. ஒருநாள் இதனை அறிந்து கொண்ட விஷ்ணுசித்தர் கோதையைக் கடிந்துகொண்டார். அவள் சூடிய மாலையை ஒதுக்கிவிட்டுப் புதிய மாலை தொடுத்து இறைவனுக்கு அணிவித்தார். அன்றிரவு இறைவன் அவரது கனவில் தோன்றி கோதை அணிந்த மாலைகளே தனக்குப் உகப்பானவை எனவும் அவற்றையே தனக்குச் சூடவேண்டுமென்றும் கேட்டுக்கொண்டார். இதனாலேயே “சூடிக்கொடுத்த சுடர்க்கொடி” என்றும் இறைவனையே ஆண்டவள் என்ற பொருளில் ஆண்டாள் என்றும் போற்றப்படுகிறார்.

கோதை மண வயதடைந்த பின்னர் அவளுக்காக செய்யப்பட்ட திருமண ஏற்பாடுகளை மறுத்து, திருவரங்கம் (ஸ்ரீரங்கம்) கோயிலில் உறையும் இறைவனையே மணப்பதென்று பிடிவாதமாக இருந்தார். என்ன செய்வதென்று அறியாது கவலையுடனிருந்த விஷ்ணுசித்தருடைய கனவில் தோன்றிய இறைவன், கோதையை மணப்பெண்ணாக அலங்கரித்து திருவரங்கம் கோயிலுக்கு அழைத்துவருமாறு பணித்தார். குறித்த நாளன்று கோயிலுக்கு அழைத்துச் செல்லப்பட்ட கோதை, கருவறைக்குள் சென்று இறைவனுடன் கலந்துவிட்டாள்.

திருப்பதி பிரம்மோச்சவத்திர்க்கு ஆண்டாள் சூடி கொடுத்த மலர் மாலை அணிவிக்கப்படுகிறது.

ஆண்டாள் திருத்தேர் மற்றும் ஆடிப்பூர தேரோட்டம்.

தமிழகத்திலேயே திருவாரூர் தேரை அடுத்து, இரண்டாவது பெரிய தேர் இக்கோயிலுக்கு சொந்தமானது என்ற விவரம் நிச்சயம் ஆச்சரியத்தைத் தரும். இத்தேர் பல நூறு ஆண்டுகளுக்கு முன், நாங்குநேரி
மடம் பரமஹம்ச பட்டர் பிரான் ராமானுஜ ஜீயர் சுவாமிகளால் உபயமாக வழங்கப்பட்டது. தேர் முழுவதும் தேக்கு, கோங்கு போன்ற உயர்ரக மரங்களால் செய்யப்பட்டது என்பதால்இன்றளவும் உறுதியாக இருக்கிறது. இதன் விசேஷம் என்னவென்றால், ராமாயண, மகாபாரத கதைகளைக் குறிக்கும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிற்பங்கள் வடியவமைக்கப்பட்டுள்ளன. சுமார் 1,500 டன் எடையும், 112அடி உயரமும் கொண்ட இத்தேரின் சக்கரம் முன்பு மரத்தால் செய்யப்பட்டு இருந்தது. தேரோட்ட உற்சவத்தில் சுற்று வட்டார கிராமங்களுக்கு கோபுரமும் திருத்தேரும் கம்பீரமாக காட்சியளிக்கும். பத்து கி.மீ தொலைவிலும் தேர் எந்த ரதவீதியில் உள்ளது என அறியலாம். காலபோக்கில் மரசக்கரங்கள் சேதமுற்றதால் அதிக செலவு கருதி 18 ஆண்டுகள் ஓடாதிருந்தது.. முன்பு வலிமைவாய்ந்த மக்கள் இத்தேரை நான்கு ரதவீதிகளில் சுற்றி நிலைக்குவர மூன்று மாதங்கள் ஆகும். தற்பொழுது இரும்பு சக்கரம் அமைத்து தேர் நவீனப்படுத்தப்பட்டது. தற்போது தேரோட்ட உற்சவம் அரை நாளில் நடந்து முடிந்து விடுகிறது.

தமிழக அரசின் சின்னம் ஆண்டாள் கோவில்கோபுரம் .

Srivilliputhur Temple gopuram

ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்தபோது தமிழக அரசுக்கு ஏற்ற முத்திரை ஒன்றை வடிவமைக்கத் திட்டமிட்டனர். பலரும் பல்வேறு யோசனைகளைத் தெரிவித்துக் கொண்டிருந்தனர். ரசிகமணி டி.கே.சி. அவர்களிடம் ஓமந்தூரார் யோசனை கேட்டார். “இதற்கா இவ்வளவு யோசனை? தமிழ்நாடு முழுவதும் வானளாவிய கோபுரங்கள் எழுந்து நிற்கின்றனவே. அதைவிடவா தமிழ்க் கலையையும், தமிழ்ப் பண்பாட்டையும் எடுத்துக் காட்டும் சின்னம் வேறு இருக்கிறது? நம் ஸ்ரீவில்லிபுத்தூர் கோபுரம் மிகவும் அழகான தோற்றத்துடன் இருக்கிறது. அதையே தமிழக அரசின் சின்னமாக வைத்துவிடலாமே” என்று உடனே பதில் சொல்லிவிட்டார் ரசிகமணி. டி.கே.சி. அவர்களின் இந்த அரிய யோசனை ஏற்கப்பட்டு தமிழ்நாட்டின் சின்னமாக ஸ்ரீவில்லிபுத்தூரின் கோபுரம் இடம்பெற்றுவிட்டது. தமிழக அரசு முத்திரையில் இடம்பெற்றுள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலின் கோபுரத்தை முதன்முதலில் தமிழக அரசு சின்னமாக அறிவித்தவர் திரு .பி.எஸ்.குமாரசுவாமி ராஜா ஆவார். தற்போதைய தமிழக அரசு சின்னம் திரு.காமராஜரால் 1956ல் அறிமுகப் பட்டது அப்போது மதராஸ் மாகாணம் என்ற பெயரே இருந்தது. பிறகு 1968ல் தமிழ்நாடு என்று பெயர் சூட்டப் பட்டபோதும், இந்தச் சின்னமே நீடித்தது. ஸ்ரீவில்லிப்புத்தூர் கோபுரம் தனித்தன்மை கொண்டது; அகலம் குறுகியிருப்பதால் பதினொரு நிலைகள் கொண்ட அதன் உயரம் ஒருவித பிரம்மாண்ட தோற்றத்தை அளிக்கிறது. உலக பன்னாட்டு நிறுவனம் புராதன சின்னமாக இக்கோபுரத்தை அறிவித்துள்ளது.

பால்கோவா .

ஆண்டாள் கோயிலில் இன்றும் பின்பற்றப்பட்டு வரும் வழிபாட்டுச் சடங்கின் அடிப்படையில் பால்கோவாவின் வரலாற்றை உத்தேசமாக அறிய முடிகிறது. அதாவது ஆண்டாள் திருமணம் ஆன பிறகு, பிறந்த வீட்டுக்குச் செல்லும் ஒரு சடங்கின்போது சுண்ட காய்ச்சிய பால், வெல்லம் ஆகியவை சேர்க்கப்பட்ட திரட்டுப்பாலை ஆண்டாளுக்குப் படைக்கிறார்கள். பால்கோவா தயாரிக்கும் முறையுடன் ஓரளவு ஒத்துப்போவதால் இந்த வழிபாட்டு மரபில் இருந்து பால்கோவாவின் வரலாறு பல நூற்றாண்டுப் பழமையானது எனலாம். இந்தப் பின்புலமும் ஸ்ரீவில்லிபுத்தூர் பால் வளமும் பால்கோவோ தோன்றலுக்கான காரணமாக இருந்திருக்கலாம். ஒரு கேன் பால் என்பது பத்து லிட்டர், இதில் ஒன்றேகால் கிலோ ஜீனியை போட்டு மெதுவாக கலக்குகிறார்கள். இதை செய்ய கேஸ் அடுப்பு பயன்படுத்துவதில்லை, இன்றும் முந்திரி குப்பைகளை வைத்து எரிக்கிறார்கள். அதுவும் இந்த சுவைக்கு ஒரு காரணம் போலும் ! மெதுவாக அந்த பாலை கிண்ட கிண்ட அது சுண்டி வருகிறது

இதை செய்ய கடின உழைப்புதான் ஆதாரம் என்றாலும் மக்கள் அதை ஒரு கலையின் வெளிப்பாடாகவே பார்க்கிறார்கள். இந்த உழைப்பாளிகளின் கடின உழைப்புதான் ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவாவுக்கு உலக அரங்கில் தனி அடையாளத்தைப் பெற்றுத்தந்திருக்கிறது.

ஸ்ரீவில்லிபுத்தூரின் தனி சிறப்புக்கள்.

கோதை பிறந்த ஊர் ,

கோவிந்தன்(மகாவிஷ்ணு)வாழும் ஊர்

தமிழ்நாடு அரசாங்கத்தின் சின்னமாம் கோபுரம் இருக்கும் ஊரும் இதுதான்.

கர்மவீரர் காமராஜர் சட்டமன்ற உறுப்பினராக ஸ்ரீவில்லிபுத்தூரில் நின்றுஜெயித்துத்தான் தமிழ்நாட்டின் முதலமைச்சராக ஆனார்.

இந்தியாவிலேயே பனை ஆராய்ச்சி நிலையம் இருக்கும் ஒரே ஊரும் இந்த ஸ்ரீவில்லிபுத்தூர்தான்.

. மகாவிஷ்ணுவின் பத்து அவதாரங்களில்(தசாவதாரம்)மூன்றாவது அவதாரமான வராக அவதாரம் உருவானதும் இந்த ஸ்ரீவில்லிபுத்தூரில் தான்.

மகாவிஷ்ணுவை வழிபடுவதில் சிறந்த பக்தர்களாக இருப்பவர்கள் ஆழ்வார்கள்.அந்த ஆழ்வார்களில் பெரியாழ்வார்,ஸ்ரீஆண்டாள் எனப்படும் நாச்சியாரம்மன் என இரண்டு ஆழ்வார்கள் பிறந்த ஒரே புண்ணியஸ்தலமும் இந்த ஸ்ரீவில்லிபுத்தூர்தான்

.திருப்பாவை என்னும் வைஷ்ணவப்பாடல் தொகுப்பு பிறந்ததும் இந்த ஸ்ரீவில்லிபுத்தூரில்தான்.

தமிழ்நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய தனியார் நூலகம் பென்னிங்டன் பொது நூலகம் இருப்பதும் இங்கேதான்.

புதுவைத்தலம் என்ற பழைய பெயர் இந்த ஸ்ரீவில்லிபுத்தூருக்கு உண்டு. இந்தபுதுவைத்தலம் என்ற பெயர் இந்த ஸ்ரீவில்லிபுத்தூரின் தெற்கு எல்லையில் அமைந்திருக்கும் அருள்மிகு வைத்தியநாதசுவாமி திருக்கோவிலின் பெயரே ஆகும்.சுமார் 1400களில் கட்டப்பட்ட திருக்கோவிலான இந்த சிவாலயம்தான் விருதுநகர் மாவட்ட்த்திலேயே இருக்கும் ஒரே ஒரு பழமையான சைவ திருக்கோவில் ஆகும்.

.உலகத்திலேயே சாம்பல் நிற அணில் சரணாலயம் இருப்பதும் ஸ்ரீவில்லிபுத்தூரின் வனப்பகுதியான செண்பகத்தோப்பில்தான்.

Leave a Comment