இடைக்காடன் பிணக்கு தீர்த்த படலம் | Idaikadan Pinaku padalam story

இடைக்காடன் பிணக்கு தீர்த்த படலம் (idaikadan pinaku story) இறைவனான சொக்கநாதர் தனது பக்தனான இடைக்காடனுக்கும், பாண்டியனுக்கும் இடையே உண்டான பிணக்கினை தீர்த்து வைத்ததைக் குறிப்பிடுகிறது.

குலேசபாண்டியனின் தமிழறிவு, இடைக்காடனின் பாடலை குலேசபாண்டியன் கண்டுகொள்ளமால் இருந்தது, இடைக்காடனை மதிக்காமல் இருந்த பாண்டியனுக்கு இடைகாடனின் பெருமையை உணர்த்த இறைவனார் நடத்தியவை ஆகியவற்றை இப்படலம் எடுத்துரைக்கிறது.
இடைக்காடன் பிணக்கு தீர்த்த படலம் திருவிளையாடல் புராணத்தின் ஆலவாய் காண்டத்தில் ஐம்பத்து ஆறாவது படலமாக அமைந்துள்ளது.

இடைக்காடனின் முறையீடு
சண்பகமாற பாண்டியனுக்குப் பின் அவனுடைய வழியில் பதினாறாவது தலைமுறையாக குலேச பாண்டியன் என்பவன் தோன்றினான்.
அவன் தமிழின் இலக்கண இலக்கியங்களில் கற்றுத் தேர்ந்தவன். அவன் தன்னுடைய தமிழ் புலமையால் இறைவன் கொடுத்த சங்கப்பலகையில் அமரும் பாக்கியத்தைப் பெற்றான்.
குலேச பாண்டியனின் தமிழ் புலமையை கபிலரின் நண்பரான இடைக்காடன் கேள்வியுற்றார். ஆதலால் தமிழ் பிரபந்தம் ஒன்றை இயற்றி குலேச பாண்டியனைக் காண விரைந்தார்.
குலேச பாண்டியனைச் சந்தித்து தாம் இயற்றிய பிரபந்தத்தை இடைக்காடன் பாடிக் காட்டினார். குலேச பாண்டியன் அப்பாடலின் சிறந்த பொருளையும், சொல்திறனையும் உணர்ந்தான்.
இருப்பினும் தன்னுடைய மனத்தில் உண்டான பொறாமைக் குணத்தால் இடைக்காடனின் பாடலுக்கு தலைஅசைக்காமலும், முகத்தில் எந்தவித அசைவுகளை காண்பிக்காமலும் அமர்ந்திருந்தான்.
பாண்டியனின் செயலைக் கண்ட இடைக்காடன் வருத்தம் கொண்டு சொக்கநாதரை வழிபட திருக்கோவிலை அடைந்தான்.
இடைக்காடன் “அப்பனே, தமிழை நன்கறிந்த குலேசபாண்டியன் நான் இயற்றிய பிரபந்தத்தை பாடும்போது அதனைக் கொஞ்சம் கண்டுகொள்ளாமல் எந்தவித அசைவின்றி இருந்தான்.
பாண்டியனின் இச்செயல் தமிழின் சொல்லாகவும், பொருளாகவும் விளங்கும் உன்னையும், அங்கையற்கண் அம்மையையும் அவமதிப்பதாக உள்ளது.
பாண்டியனின் பாடலை பிழை உள்ளதாக்கி அவனுக்கு சங்கப்பலகையில் இடம் கிடைக்காமல் செய்ய வேண்டும்” என்று முறையிட்டுவிட்டு கோபத்துடன் வடக்கு நோக்கிச் சென்றான்.

பாண்டியன் உண்மையை உணர்தல்
இடைகாடனின் முறையீட்டினைக் கேட்ட இறைவனார் பாண்டியனுக்கு தன்னிலையை அறிவிக்க எண்ணினார். எனவே திருஆலவாய் கோவிலிலிருந்து தன்னுடைய லிங்க உருவத்தை மறைத்து திருஆலவாய் கோவிலுக்கு வடக்கே, வைகை ஆற்றிற்கு தென்புறத்தில் அங்கையற்கண் அம்மையுடன் எழுந்தருளினார்.
சங்கப்புலவர்களும் சொக்கநாதரின் இருப்பிடத்தை அடைத்து அம்மையையும், அப்பனையும் வழிபட்டு அங்கேயே தங்கினர்.

மறுநாள் காலையில் கோவிலில் இறைவனையும், அம்மையையும் காணாது அனைவரும் திகைத்தனர். குலேச பாண்டியனிடம் இறைவன் திருக்கோவிலில் இல்லாத செய்தியை எடுத்துரைத்தனர்.
இறைவனைக் காணாத செய்தியைக் கேட்ட குலேசபாண்டியன் அதிர்ச்சியுற்றான். திருக்கோவிலை அடைந்து செய்வதறியாது திகைத்தான்.
அப்போது சிலர் பாண்டியனிடம் ஓடி வந்து “அரசே, நாங்கள் ஓர் அதிசயம் கண்டோம். வைகை ஆற்றங்கரையின் தென்கரையில் சங்கப்புலவர்களோடும், அங்கையற்கண்ணி அம்மையுடனும் சொக்கநாதர் எழுந்தருளிருக்கிறார்.” என்று கூறினர்.

அதனைக் கேட்டதும் குலேசபாண்டியன் விரைந்து சொக்கநாதர் எழுந்தருளிய இடத்திற்கு விரைந்தான். அங்கு இறைவனைக் கண்டு வழிபட்டு “ஐயனே, தாங்கள் இங்கு எழுந்தருளிருக்கும் காரணம் யாது? அடியேனுடைய தவறு ஏதும் உண்டா? அடியேன் நிகழ்ந்தது அறியேன்” என்று விண்ணப்பம் செய்து வேண்டி நின்றான்.

அப்போது “வையை நாடனே, உனது துதியினை நாம் கேட்டு மகிழ்ந்தோம். அது எமக்கு இனிமை உடையதாயிற்று. உனக்கு கூற வேண்டியது இன்னும் ஒன்று உண்டு. அதனைக் கேட்பாயாக.
இம்மதுரை நகரில் ஏராளமான சுயம்பு லிங்கங்கள் புதைந்திருக்கின்றன. அவற்றை தேவர்களும், முனிவர்களும், சித்தர்களும், ராட்சதர்களும், மனிதர்களும் வழிபட்டு நற்கதி அடைந்துள்ளனர்.
இவற்றில் 64 லிங்கங்கள் சிறந்தவை. அவற்றில் அட்டத்திக் பாலகர்கள் வழிபட்டவை மேலானவை. வடகிழக்கு திசையின் அதிபதியான குபேரன் வழிபட்ட இந்த லிங்கத்துள் தற்போது எழுந்தருளியுள்ளேன்.

இன்று முதல் இது வடத்திருஆலவாய் என்று அழைக்கப்படும். இடைக்காடனின் பாடல்களை நீ அவமதித்ததால் யாம் இங்கு எழுந்தருளியுள்ளோம்.” என்று திருவாக்கு மலர்ந்தருளினார்.
உடனே குலேசபாண்டியன் “ஐயனே, என்னுடைய பிழையைப் பொறுத்தருளங்கள்.” என்று மனமுருகி வேண்டினான்.

இறைவனாரும் மனமிரங்கி சங்கப்புலவர்களோடும், அங்கையற்கண் அம்மையுடனும் திருக்கோவிலில் எழுந்தருளினார்.
குலேசபாண்டியன் இடைக்காடனை அழைத்து சிறப்பு செய்து அவனுடைய பாடலை முறைப்படி கேட்டு மகிழ்ந்தான். பின்னர் தன்னுடைய மகனான அரிமர்த்தன பாண்டியனுக்கு முடிசூடிவிட்டு சிவப்பேறு பெற்றான்.

இடைக்காடன் பிணக்கு தீர்த்த படலம் கூறும் கருத்து
தகுதியுடையோர்களை இகழ்ந்தால் இறைவனின் அருள் கிடைக்காது என்பதே இப்படலம் கூறும் கருத்தாகும்.