Sivavakkiyar Songs Lyrics Tamil

சிவ சிவ என்று கூறியபடியே பிறந்ததால் சிவவாக்கியர் என அழைக்கப்பட்டார். வைத்தியம், வாதம், யோகம், ஞானம் பற்றி பாடல் இயற்றியுள்ளார் (Sivavakkiyar Songs Lyrics Tamil). இவரது பாடல்கள் சிவவாக்கியம் என அழைக்கப்படுகிறது… இவருடைய 526 பாடல்கள் இங்கு பல பக்கங்களாக பிரிக்கப்பட்டு இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது…  சிவவாக்கியர் வாழ்க்கை வரலாறு

சிவவாக்கியர் பாடல்கள் 1 -20

அரியதோர் நமச்சிவாயம் ஆதியந்தம் ஆனதும்
ஆறிரண்டு நூறுதேவர் அன்றுரைத்த மந்திரம்
சுரியதோர் எழுத்தை உன்னி சொல்லுவேன் சிவவாக்கியம்
தோச தோச பாவமாயை தூர தூர ஓடவே

கரியதோர் முகத்தையுற்ற கற்பகத்தைக் கைதொழக்
கள் நூற் கண் ஞானமும் கருத்தில் வந்துதிக்கவே
பெரியபேர்கள் சிறிய பேர்கள் கற்றுணர்ந்த பேரெலாம்
பேயனாகி ஓதிடும் பிழை பொறுக்க வேண்டுமே (1)

அக்ஷர நிலை

ஆன அஞ் செழுத்துளே அண்டமும் அகண்டமும்
ஆன அஞ் செழுத்துளே ஆதியான மூவரும்
ஆன அஞ் செழுத்துளே அகாரமும் மகாரமும்
ஆன அஞ் செழுத்துளே அடங்கலாவ லுற்றவே (2)

சரியை விலக்கல்

ஓடி ஓடி ஓடி ஓடி உட்கலந்த சோதியை
நாடி நாடி நாடி நாடி நாட்களும் கழிந்து போய்
வாடி வாடி வாடி வாடி மாண்டுபோன மாந்தர்கள்
கோடி கோடி கோடி கோடி எண்ணிறந்த கோடியே (3)

யோக நிலை

உருத்தரித்த நாடியில் ஒடுங்குகின்ற வாயுவைக்
கருத்தினால் இருத்தியே கபாலம் ஏற்ற வல்லிரேல்
விருத்தரும் பாலராவர் மேனியும் சிவந்திடும்
அருள் தரித்த நாதர் பாதம் அம்மைபாதம் உண்மையே (4)

தேக நிலை

வடிவுகண்டு கொண்ட பெண்ணை மற்றொருவன் ந்ததினால்
விடுவனோ அவனை முன்னர் வெட்ட வேண்டும் என்பனே
நடுவன் வந்து அழைத்தபோது நாறும் இந்த நல்லுடல்
சுடலை மட்டும் கொண்டு போய்த் தோட்டிகைக் கொடுப்பரே (5)

ஞானநிலை

என்னிலே இருந்த ஒன்றை யான் அறிந்தது இல்லையே
என்னிலே இருந்த ஒன்றை யான் அறிந்து கொண்டபின்
என்னிலே இருந்த ஒன்றை யாவர் காண வல்லரோ
என்னிலே இருந்திருந்து யான் உணர்ந்து கொண்டனே (6)

நினைப்பதொன்று கண்டிலேன் நீயலாது வேறிலை
நினைப்புமாய் மறப்புமாய் நின்ற மாயை மாயையோ
அனைத்துமாய் அகண்டமாய் அனாதிமுன் அனாதியாய்
எனக்குள் நீ உனக்குள் நான் நினைக்கு மாற தெங்கனே (7)

மண்ணும் நீ விண்ணும் நீ மறிகடல்கள் ஏழும் நீ
எண்ணும் நீ எழுத்தும் நீ இசைந்த பண் எழுத்தும் நீ
கண்ணும் நீ மணியும் நீ கண்ணுள் ஆடும் பாவை நீ
நண்ணும் நீர்மை நின்றபாதம் நண்ணுமாறு அருளிடாய் (8)

அரியும் அல்ல அயனும் அல்ல அப்புறத்தில் அப்புறம்
கருமை செம்மை வெண்மையைக் கடந்து நின்ற காரணம்
பெரியதல்ல சிறியதல்ல பற்றுமின்கள் பற்றுமின்கள்
துரியமும் கடந்து நின்ற தூர தூர தூரமே (9)

அந்தி மாலை உச்சி மூன்றும் ஆடுகின்ற தீர்த்தமும்
சந்திதர்ப் பணங்களும் தபங்களும் செபங்களும்
சிந்தைமேவு ஞானமும் தினம் செபிக்கு மந்திரம்
எந்தை ராம ராம ராம ராம என்னும் நாமமே (10)

கதாவுபஞ்ச பாதகங்களைத் துரந்த மந்திரம்
இதாம் இதாம் இதல்ல என்று வைத்துழலும் ஏழைகாள்
சதாவிடாமல் ஓதுவார் தமக்கு நல்ல மந்திரம்
இதாம் இதாம் இராம ராம ராம என்னும் நாமமே (11)

நானதேது நாயதேது நடுவில் நின்றது ஏதடா
கோனதேது குருவதேது கூறிடும் குலாமரே
ஆனதேது அழிவதேது அப்புறத்தில் அப்புறம்
ஈனதேது ராமராம ராம என்ற நாமமே (12)

யோக நிலை
சாத்திரங்கள் ஓதுகின்ற சட்டநாத பட்டரே
வேர்த்து இரைப்பு வந்தபோது வேதம் வந்து உதவுமோ
மாத்திரைப்போ தும்முளே மறிந்து தொக்க வல்லிரேல்
சாத்திரப்பை நோய்கள் ஏது சத்தி முத்தி சித்தியே (13)

நாலுவேதம் ஓதுவீர் ஞானபாதம் அறிகிலீர்
பாலுள் நெய் கலந்தவாறு பாவிகாள் அறிகிலீர்
ஆலம்உண்ட கண்டனார் அகத்துளே இருக்கவே
காலன் என்று சொல்லுவீர் கனாவிலும் அதில்லையே (14)

வித்தில்லாத சம்பிரதாயம் மேலும் இல்லை கீழும் இல்லை
தச்சில்லாத மாளிகை சமைந்தவாற தெங்கனே
பெற்ற தாயை விற்றடிமை கொள்ளுகின்ற பேதைகாள்
சித்தில்லாத போது சீவன் இல்லை இல்லை இல்லையே (15)

அஞ்சும் மூன்றும் எட்டாதாம் அநாதியான மந்திரம்
நெஞ்சிலே நினைந்து கொண்டு நூறுருச் செபிப்பிரேல்
பஞ்சமான பாதகங்கள் நூறு கோடி செய்யினும்
பஞ்சுபோல் பறக்கும் என்று நான்மறைகள் பன்னுமே (16)

அண்டவாசல் ஆயிரம் ப்ரசண்டவாசல் ஆயிரம்
ஆறிரண்டு நூறுகோடியான வாசல் ஆயிரம்
இந்த வாசல் ஏழை வாசல் ஏகபோகமான வாசல்
எம்பிரான் இருக்கும் வாசல் யாவர்காண வல்லரே (17)

சாமநாலு வேதமும் சகல சாத்திரங்களும்
சேமமாக ஓதிலும் சிவனை நீர் அறிகிலீர்
காம நோயை விட்டு நீர் கருத்துளே உணர்ந்தபின்
ஊமையான காயமாய் இருப்பன் எங்கள் ஈசனே (18)

சங்கிரண்டு தாரை ஒன்று சன்ன பின்னல் ஆகையால்
மங்கி மாளு தேஉலகில் மானிடங்கள் எத்தனை
சங்கிரண்டையும் தவிர்த்து தாரை ஊதவல்லிரேல்
கொங்கை மங்கை பங்கரோடு கூடி வாழல் ஆகுமோ (19)

அஞ்செழுத்திலே பிறந்து அஞ்செழுத்திலே வளர்ந்து
அஞ்செழுத்தை ஓதுகின்ற பஞ்சபூத பாவிகாள்
அஞ்செழுத்தில் ஓர் எழுத்து அறிந்து கூற வல்லிரேல்
அஞ்சல் அஞ்சல் என்று நாதன் அம்பலத்தில் ஆடுமே (20)

Leave a Comment