கண்ணன் கதைகள் – 10

சதுரங்க விளையாட்டு

கேரளத்திலுள்ள அம்பலப்புழா, ‘தென்னகத்து துவாரகை’ என்று பக்தர்களால் போற்றப்படுகிறது அம்பலப்புழா கிருஷ்ணர் கோயிலை தேவ நாராயணன் தம்புரான் என்ற மன்னன் கட்டியதாக வரலாறு. மூலவர் இங்கு குழந்தை கிருஷ்ணராகக் காட்சி தருகிறார். திப்பு சுல்தானின் படையெடுப்பின்போது குருவாயூர் உற்சவ மூர்த்தியை இங்கு வைத்திருந்ததாகச் சொல்கிறார்கள். இந்தக் கோயிலின் நைவேத்தியமான “அம்பலப்புழா பால் பாயஸம்” மிகவும் பிரசித்தி பெற்றது. குருவாயூரில் காலையில் பால் பாயசம் சாப்பிடும் கண்ணன், மதியம் அம்பலப்புழாவிற்குப் பால் பாயசம் சாப்பிட வருவதாக ஐதீகம். அம்பலப்புழா பால் பாயஸத்தைப் பற்றிய சுவையான கதை ஒன்று உண்டு.

கண்ணனின் சதுரங்க விளையாட்டும் அம்பலப்புழா பால் பாயஸமும்:

முன்னொரு சமயம் அம்பலப்புழையை ஆண்டு கொண்டிருந்த அரசன் முன் கிருஷ்ணர் ஒரு முனிவர் வடிவில் தோன்றினார். “இந்த நாட்டில் யாரேனும் என்னை சதுரங்கம் ஆடி ஜயிக்க முடியுமா? என்று சவால் விட்டார். அரசனுக்கு சதுரங்கத்தில் மிகுந்த ஆர்வம் இருந்ததால் மகிழ்ச்சியுடன் அரசனே சவாலை ஏற்றான்.

எந்த ஒரு சவாலிலும் பரிசு என்ன என்பதை முன்னமேயே முடிவு செய்ய வேண்டும் அல்லவா? அதனால் அரசன் முனிவரிடம், “சவாலில் நான்தான் ஜயிப்பேன், ஒரு வேளை நீர் ஜயித்தால் பரிசாக என்ன வேண்டும் என்பதை நீரே முடிவு செய்யும்” என்று சொன்னான். முனிவர், “என்னைப் போன்ற முனிவர்களுக்கு வேறென்ன தேவையாக இருக்க முடியும்? எனக்கு அரிசிதான் தேவை. ஆனால் நான் சொல்லும் முறையில் அரிசியைத் தர வேண்டும். முதல் கட்டத்தில் 1 அரிசி, இரண்டாவது கட்டத்தில் 2 அரிசி,, மூன்றாவது கட்டத்தில் 4 அரிசி, நான்காவது கட்டத்தில் 16 அரிசி என்ற ரீதியில் அரிசியைத் தர வேண்டும்” என்று சொன்னார்.

அரசனும், இவ்வளவு பெரிய ராஜ்ஜியத்தில் வெறும் அரிசியைக் கேட்கிறீர்களே, வேறு ஏதாவது கேளுங்கள் என்று சொல்ல முனிவர் வேறு எதுவும் வேண்டாம் என்று மறுத்துவிட்டார். அரசனுக்கு அந்தக் கோரிக்கையில் வருத்தம் இருப்பினும், அரிசிதானே என்று சந்தோஷமாக ஆடத் துவங்கினான். சதுரங்க விளையாட்டு துவங்கியது, கண்ணனுடைய விளையாட்டும் தான்!! அரசன் ஆட்டமிழந்தான். சொன்னபடி முனிவருக்குப் பரிசு தரும் நேரம் வந்தது. கட்டத்தில் முனிவர் சொன்னபடி அரிசியை வைக்க ஆரம்பித்த சிறிது நேரத்திலேயே அரசனுக்குத் தன் தவறு புரிந்துவிட்டது. முனிவரின் உண்மையான கோரிக்கையை உணர்ந்தான். 20-வது கட்டம் வரும்போது அரிசி அளவு 10 லட்சமாக (மில்லியன்) உயர்ந்தது. 40-வது கட்டத்தில் ஒரு மில்லியன் மில்லியனாக ஆயிற்று. இவ்வாறு ஒரு பெருக்குத் தொடர்ச்சியின் (geometric progression) வளர்ச்சியாக வளர்ந்துகொண்டே போனது. களஞ்சியத்தில் இருந்த அரிசி, நெல் அனைத்தும் தீர்ந்து, பக்கத்து ராஜ்ஜியங்களில் இருந்த நெற்குவியலையும், அரிசியையும் கொட்டியாயிற்று. இப்போது, அரசன் முனிவரின் கோரிக்கையை நிறைவேற்ற முடியாது என உணர்ந்தான். 64 கட்டங்கள் கொண்ட சதுரங்கத்தில் நிரப்ப ((2 ^ 64) – 1) அதாவது 18.446.744.073.709.551.615 டிரில்லியன் டன் கணக்கில் அரிசி தேவைப்பட்டது. அரசன் கலங்கினான். என்ன செய்வது என்று புரியவில்லை.

அரசனின் சங்கடத்தைக் கண்ட முனிவர், கிருஷ்ணர் வடிவில் அரசன் முன் தோன்றினார். அரிசியை உடனடியாகக் கொடுக்க வேண்டாம், கடன் தீரும்வரை அம்பலப்புழை கிருஷ்ணன் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அரிசியில் செய்யப்பட்ட பால் பாயஸம் செய்து கொடு என்று கூறினார். அரசனும் கர்வத்தை ஒழித்து, தனது சொத்துக்கள் அனைத்தையும் கோவிலுக்கே கொடுத்தான். இன்றளவும் கோயிலில் அரிசியால் செய்யப்பட்ட பால் பாயஸம் கிருஷ்ணனுக்கு நைவேத்தியம் செய்யப்பட்டு, வரும் பக்தர்களுக்குப் பிரஸாதமாகக் கொடுக்கப் படுகிறது.

Leave a Comment

Enable Notifications Allow Miss notifications