கண்ணன் கதைகள் – 46

வருணன் நந்தனைக் கடத்திச் செல்லுதல்

குருவாயூரப்பன் கதைகள்

ஒரு நாள் நந்தகோபர் ஏகாதசி விரதமிருந்து, துவாதசி விடியற்காலை என்று நினைத்து இரவில் யமுனையில் நீராடினார். வருணனின் வேலையாளான ஒரு அசுரன் அவரை இழுத்துச் சென்றான். நந்தனைக் காணாமல் அனைவரும் கதறி அழுதனர். கண்ணனிடம் சரணடைந்தனர். கண்ணன் தனது யோக சக்தியால் வருணனின் லோகத்தில் நந்தகோபர் இருப்பதை அறிந்து, உடனே வருணலோகம் சென்றான்.

கண்ணனைக் கண்ட வருணன் பக்தியுடன் தொழுது, பூஜை செய்தான். பிறகு, “ஹரியே! இன்று நான் பாக்கியம் செய்தவனானேன். பிறவிப் பிணி அகற்றுபவரே! எனது வேலையாள் செய்த இந்தத் தவறை மன்னித்து அருளுங்கள். உம்முடைய தந்தையாரை அழைத்துச் செல்லுங்கள்” என்று கூறினான். அதே நொடியில் நந்தகோபரை அழைத்துக் கொண்டு கண்ணன் வீட்டிற்குச் சென்றான். நந்தகோபரும் தன் சுற்றத்தாரிடம் அதைப் பற்றிக் கூறினார்.

ஆயர்கள் கண்ணனை ‘ஸ்ரீஹரி’ என்று நிச்சயித்து, அவரது
இருப்பிடமான வைகுண்டத்தைக் காண விரும்பினார்கள். எங்கும் நிறைந்திருக்கும் திருமாலான கண்ணன், யாராலும் அடைய முடியாத வைகுண்டலோகத்தை உள்ளங்கை நெல்லிக்கனி போல அவர்களுக்குக் காண்பித்தான். வைகுண்டத்தைக் கண்ட கோபர்கள், ஆனந்த நிலையை அடைந்து, கைவல்யம் (மோக்ஷம்) என்ற சமுத்திரத்தில் மூழ்கினார்கள். அவர்களை மீண்டும் உலக உணர்வுக்கு அழைத்து வந்தான். மீண்டும் அவர்கள் பிருந்தாவனத்தில் இருந்தார்கள். இடையனாக வேடம் கொண்ட இந்த கிருஷ்ணாவதாரத்தில் பிரத்யக்ஷமாக வைகுண்டத்தைக் காண்பித்து அதிசயத்தக்க லீலைகளைப் புரிந்து வந்தான்.

Leave a Comment