Simma rasi guru peyarchi palangal 2017-18

சிம்ம இராசி அன்பர்களே…

 

உங்கள் இராசிக்கு 3-ம் இடத்திற்கு 02.09.2017 அன்று குரு பகவான் பெயர்ச்சி ஆகி வருகிறார். இராசிக்கு 7, 9, 11 அதாவது களத்திரஸ்தானம், பாக்கியஸ்தானம், லாபஸ்தானம் ஆகிய இடங்களை குரு பார்வை செய்வதால், எதிர்பாரா யோகம் பெறுவீர்கள். குடும்பத்தில் இருந்த பிரச்னைகள் தீர்ந்து சுமுகமான சூழ்நிலை உருவாகும். சொந்த வீடு, வாகனம் அமையும். வெளிநாடு ஏற்றுமதி-இறக்குமதி தொழில் துவங்குவீர்கள். பெற்றோர் ஆதரவு கிடைக்கும். சிலருக்கு திருமணமும், புத்திர பாக்கியமும் அமையும். செவ்வாய் சாரத்தில் அதாவது சுக, பாக்கியாதிபதி சாரத்தில் அமர்வதால் மேற்படிப்பு, பட்டப்படிப்பு அமையும். உறவினர் வருகை அதிகரிக்கும். அரசாங்க ஆதரவு கிடைக்கும். சகோதர-சகோதரி வழியில் நன்மைகள் நடக்கும். கடன் சுமைகள் குறையும். திட்டங்கள் நிறைவேறும். விரோதிகள் அடிபணிவர். வழக்கு விஷயத்தில் வெற்றி தரும். சரி, எச்சரிக்கையாக இருக்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன? உடல்நலனில் கவனம் தேவை. பிரயாணத்தில் கவனம் நல்லது. பர,பரப்பு, பதட்டம் இல்லாமல் இருக்க வேண்டும். கூட்டு தொழிலிலும், ஜாமீன் தருவதிலும் எச்சரிக்கை அவசியம். மற்றபடி, இந்த குரு பெயர்ச்சியில் குரு பகவான் அள்ளி தருவார். நல்வாழ்த்துக்கள்.

 

மகம், பூரம். உத்திரம் 1
Guru

மனசாட்சிக்குக் கட்டுப்பட்டவராகவும், எதிலும் தனித்துநின்று போராடி வெற்றிபெறக்கூடிய ஆற்றல் கொண்டவராகவும் விளங்கும் சிம்மராசி நேயர்களே!

உங்கள் ராசியாதிபதி சூரியனுக்கு நட்பு கிரகமும் ஜென்ம ராசிக்கு 5, 8-க்கு அதிபதியுமான பொன்னவன் எனப் போற்றப்படக்கூடிய குரு பகவான் வாக்கியப்படி வரும் 2-9-2017 முதல் 4-10-2018 வரை முயற்சி ஸ்தானமான 3-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்ய உள்ளார். இதனால் முயற்சிகளில் தடை தாமதங்களைச் சந்திக்க நேரிடும் என்றாலும் எதிலும் எதிர்நீச்சல் போட்டாவது முன்னேறிவிடுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் அன்றாடப் பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்படும் ஆற்றலைப் பெறுவீர்கள். கணவன்-மனைவியிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. புத்திரவழியில் மகிழ்ச்சி நிலவும். உற்றார்-உறவினர்களின் ஆதரவு ஓரளவுக்கு திருப்தியளிக்கும். பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது, முடிந்தவரை பிறர் விஷயங்களில் தலையீடு செய்யாதிருப்பது உத்தமம். சுபகாரிய முயற்சிகளில் தடைகளுக்குப்பின்பே அனுகூலப்பலனை அடைவீர்கள். பணவரவுகள் ஓரளவுக்கு திருப்தியளிப்பதாக இருந்தாலும் பணவிஷயத்தில் பிறருக்கு முன்ஜாமீன் கொடுப்பது, வாக்குறுதி கொடுப்பது போன்றவற்றைத் தவிர்க்கவும்.

19-12-2017 முதல் சனிபகவான் 5-ஆம் வீட்டில் சஞ்சரிக்க இருப்பதால் உங்களுக்கு நடைபெற்றுக் கொண்டிருந்த அர்த்தாஷ்டமச்சனி முடிவடைகிறது. இதனால் தேவையற்ற பிரச்சினைகள் யாவும் படிப்படியாகக் குறைந்து மனநிம்மதி உண்டாகும். அலைச்சல், டென்ஷன்கள் மறையும். பூர்வீக சொத்துவழியில் லாபங்கள் உண்டாகும். சிலருக்கு வீடு, மனை, வண்டி, வாகனங்கள் வாங்கக்கூடிய யோகம் ஏற்படும். கேது 6-ல் சஞ்சரிப்பதால் தொழில், வியாபாரம் செய்பவர்கள் எந்தவித போட்டிகளையும் சமாளித்து முன்னேற்ற மடையக்கூடிய ஆற்றலைப் பெறுவார்கள். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி தொழிலை விரிவுசெய்ய நினைக்கும் காரியங்களில் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்க்கும் பதவி உயர்வுகள் கிடைக்கக்கூடிய வாய்ப்புகள் உண்டாகி உயரதிகாரிகளின் பாராட்டுதல்களைப் பெறுவீர்கள். உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பு களால் வேலைப்பளு குறையும். சிலருக்கு வெளியூர், வெளிநாடுகளுக்குச் செல்லக்கூடிய வாய்ப்பு உண்டாகும்.

உடல் ஆரோக்கியம்
உங்களின் உடல் ஆரோக்கியம் ஓரளவுக்கு சிறப்பாகவே இருக்கும். அடிக்கடி ஏதாவது பாதிப்புகள் ஏற்பட்டாலும் உடனடியாக சரியாகிவிடும். தேவையற்ற பயணங்கள் மேற்கொள்ளக்கூடிய சூழ்நிலைகளால் உடல்நிலை சோர்வடையும் என்றாலும் அதன்மூலம் ஓரளவுக்கு அனுகூலமான பலனையும் அடையமுடியும். மனைவி, பிள்ளைகளாலும் சிறிதளவு மருத்துவச் செலவுகளை எதிர் கொள்வீர்கள்.

குடும்பம், பொருளாதாரநிலை
குடும்பத்தில் சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. உற்றார்- உறவினர்களை அனுசரித்துச்செல்வதன்மூலம் ஓரளவுக்கு அனுகூலமான பலனை அடைவீர்கள். திருமண சுபகாரிய முயற்சிகளை மேற்கொள்வதை சில காலம் தள்ளிவைப்பது நல்லது. புத்திரர்களால் சில மனசஞ்சலங்கள் தோன்றினாலும் பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்படாது. பொருளாதார நிலை திருப்திகரமாகவே இருக்கும். தேவையற்ற செலவுகளைக் குறைத்துக்கொண்டால் சேமிக்கமுடியும்.

கொடுக்கல்வாங்கல்
கமிஷன் ஏஜென்சி, கான்டிராக்ட் போன்ற துறைகளில் உள்ளவர்கள் ஓரளவுக்கு சிறப்பான லாபத்தைப் பெறமுடியும். கொடுக்கல்-வாங்கலில் பெரிய தொகை ஈடுபடுத்துவதைத் தவிர்ப்பது நல்லது. பிறரைநம்பி முன்ஜாமீன் கொடுப்பது, வாக்குறுதிகள் கொடுப்பதைத் தவிர்ப்பது நல்லது. வம்பு வழக்குகளில் இழுபறியான நிலையே நீடிக்கும்.

தொழில், வியாபாரம்
தொழில், வியாபாரம் செய்பவர்கள் கடினமாக உழைத்தால் மட்டுமே எதிர்பார்த்த லாபத்தைப் பெறமுடியும். உற்பத்தியிலும் விற்பனையிலும் அதிக முயற்சிகளை மேற்கொண்டால் எந்த போட்டி பொறாமைகளையும் எதிர்கொள்ளக்கூடிய ஆற்றல் உண்டாகும். வெளியூர், வெளிநாடு களிலிருந்தும் ஆர்டர்கள் கிடைக்கும். வேலையாட்களின் ஒத்துழைப்பும், கூட்டாளிகளின் ஆதரவும் மனமகிழ்ச்சியை உண்டாக்கிவிடும். வாங்கிய வங்கிக்கடன்களையும் அடைத்துவிடுவீர்கள்.

உத்தியோகம்
உத்தியோகஸ்தர்களுக்கு ஓரளவுக்கு முன்னேற்றமான பலன்கள் உண்டாகும் என்றாலும் வேலைப்பளுவும், பொறுப்புகளும் அதிகரிக்கும். எந்தப் பணி முடிப்பதற்கும் கடின உழைப்புக்களை மேற்கொள்ள நேரிடும். உயரதிகாரிகளின் பாராட்டுதல்கள் உங்களுக்கு ஓரளவுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தும். உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பும் கிடைக்கும். புதிய வேலை தேடுபவர்களுக்கு தகுதிக்கேற்ற வேலை அமைவதில் தடைகள் உண்டாகும்.

பெண்கள்
உடல்நிலையில் சிறுசிறு பாதிப்புகள் ஏற்பட்டாலும் பெரிய கெடுதல்கள் உண்டாகாது. குடும்பத்தில் தேவையற்ற வாக்குவாதங்களால் மனசஞ்சலம் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. உற்றார்- உறவினர்களை அனுசரித்து நடந்து கொள்வதால் ஓரளவுக்கு அனுகூலப்பலனைப் பெறுவீர்கள். பொருளாதார நிலை சிறப்பாக அமையும் என்றாலும் தேவையற்ற செலவுகளைக் குறைப்பது நல்லது. சுபகாரிய முயற்சிகள் அனைத்திலும் தடைகளே நிலவும். பணிபுரியும் பெண்களுக்கு எதிர்பாராத இடமாற்றங்கள் உண்டாகும்.

அரசியல்
அரசியல்வாதிகள் போட்டி பொறாமைகளை எதிர்கொண்டாலும் மக்களின் ஆதரவைப் பெறமுடியும். கட்சிகளில் உட்பூசல்கள் ஏற்பட்டாலும் உங்களின் வார்த்தைகளுக்கு மதிப்பும் மரியாதையும் உயரும். நினைத்த காரியங்களை நிறைவேற்றிக்கொள்ள முடியும். எதிலும் சற்றுச் சிந்தித்துச் செயல்படுவது நல்லது.

விவசாயிகள்
விளைச்சல் ஓரளவுக்குதான் இருக்கும். போட்ட முதலீட்டினை எடுக்கவே அரும்பாடுபட வேண்டிவரும். வயல்வேலைகளுக்குத் தகுந்த நேரத்தில் வேலைக்கு ஆள் கிடைக்கமாட்டார்கள். சந்தையிலும் விளை பொருளுக்கு சுமாரான விலையே கிடைக்கும். புதிய பூமி, மனை வாங்கும் விஷயங்களில் கவனம் தேவை. பங்காளிகளை அனுசரித்துச் செல்லவும்.

கலைஞர்கள்
புதிய வாய்ப்புகள் சற்று தாமதமாகக் கிடைத்தாலும் நல்ல வாய்ப்புகளாக அமையும். நடித்த படங்கள் சரியான வசூலை ஏற்படுத்தாத சூழ்நிலைகளால் பொருளாதார பாதிப்புக்கு ஆளாவீர்கள். வெளியூர், வெளிநாட்டுப் பயணங்கள் உற்சாகத்தை ஏற்படுத்தினாலும் உடல்நலக் குறைவுகளையும் உண்டாக்கும்.

மாணவமாணவியர்
கல்வியில் முழுமூச்சுடன் செயல்பட்டால் நல்ல மதிப்பெண்களைப் பெறமுடியும். நண்பர்களால் தேவையற்ற பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிடும் என்பதால் எதிலும் சற்று கவனமுடன் நடந்து கொள்வது நல்லது. விளையாட்டுப்போட்டி, பேச்சுப்போட்டி போன்றவற்றாலும் ஓரளவுக்கு முன்னேற்றங்களை அடைய முடியும். அரசுவழியில் ஆதரவு கிடைக்கும்.

குரு பகவான் சித்திரை நட்சத்திரத்தில் 2-9-2017 முதல் 5-10-2017 வரை
குரு பகவான் ராசியாதிபதி சூரியனுக்கு நட்பு நட்சத்திரமான செவ்வாயின் நட்சத்திரத்தில் முயற்சி ஸ்தானமான 3-ல் சஞ்சரிக்கும் இக்காலங்களில் பொருளாதார நிலை ஓரளவுக்கு திருப்திகரமாக அமையும். கேது 6-ல் சஞ்சரிப்பதால் முயற்சிகளில் சில தடைகளுக்குப்பின் வெற்றி கிட்டும். பண விஷயங்களில் பிறரைநம்பி வாக்குறுதி கொடுப்பது, முன்ஜாமீன் கொடுப்பது போன்றவற்றைத் தவிர்த்துவிடுவது நல்லது. கணவன்-மனைவி இருவரும் விட்டுக்கொடுத்து நடந்து கொண்டால் குடும்ப ஒற்றுமைக்கு பங்கம் ஏற்படாது. நெருங்கியவர்கள் உங்களுக்கு உதவி செய்வார்கள் என்ற நினைப்பைத் தவிர்க்கவும். உடல் ஆரோக்கியத்திலும் அடிக்கடி சிறுசிறு பாதிப்புகள் ஏற்பட்டு மருத்துவச் செலவுகளுக்குப்பின் குணமடையும். தொழில், வியாபாரம் செய்பவர்களும் நிறைய போட்டிகளை சந்திக்கநேரிடும். பெரிய முதலீடுகளில் செய்ய நினைக்கும் காரியங்களைத் தவிர்ப்பது நல்லது. கூட்டாளிகளிடையே ஒற்றுமைக் குறைவு உண்டாகக்கூடிய காலம் என்பதால் விட்டுக்கொடுத்து நடந்து கொள்வது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பாராத இடமாற்றங்கள் ஏற்பட்டாலும் அதன் மூலம் ஓரளவுக்கு அனுகூலப்பலனை அடையமுடியும். மாணவர்கள் கல்வியில் சற்றே கவனமுடன் நடந்து கொள்வது நல்லது. சனிக்குரிய பரிகாரங்களைச் செய்வது உத்தமம்.

குரு பகவான் சுவாதி நட்சத்திரத்தில் 6-10-2017 முதல் 7-12-2017 வரை
குரு பகவான் ராகுவின் நட்சத்திரத்தில் 3-ஆம் வீட்டில் சஞ்சரிக்கும் இக்காலங்களில் உங்களின் உடல் ஆரோக்கியம் அவ்வளவு திருப்திகரமாக இருக்கும் எனக்கூறமுடியாது. குடும்பத்திலும் வரவுக்குமீறிய செலவுகளால் பொருளாதாரத் தட்டுப்பாடுகள் ஏற்படும். சுபகாரிய முயற்சிகளுக்கு உற்றார்-உறவினர்களே தடையாக இருப்பார்கள். உங்களின் முன்கோபத்தைக் குறைத்துக்கொண்டு எதிலும் சிந்தித்துச் செயல்படுவதும், பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பதும் நல்லது. எந்தவொரு காரியத்திலும் அதன் முழுப்பலனை அடையமுடியாமல் தடைகள் உண்டாகும். கொடுக்கல்- வாங்கலிலும் வீண் விரயங்களைச் சந்திப்பீர்கள். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு எதிர்பார்த்த கடனுதவிகள் கிடைக்கும். கேது 6-ல் சஞ்சரிப்பதால் கூட்டாளிகள் மற்றும் நண்பர்களால் ஓரளவுக்கு அனுகூலப்பலனை அடைவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு மேலதிகாரியிடம் வீணான கருத்து வேறுபாடுகள் ஏற்படக்கூடும் என்பதால் பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. உத்தியோக உயர்வுகள், இடமாற்றங்கள் யாவும் தடைகளுக்குப்பின் கிடைக்கும். அரசியல்வாதிகள் மக்களின் தேவையறிந்து செயல்பட்டால் மட்டுமே பதவிகளைக் காப்பாற்றிக்கொள்ள முடியும். தட்சிணாமூர்த்தியை வழிபடுவது உத்தமம்.

குரு பகவான் விசாக நட்சத்திரத்தில் 8-12-2017 முதல் 13-2-2018 வரை
குரு பகவான் தன் சொந்த நட்சத்திரத்தில் ஜென்ம ராசிக்கு 3-ல் சஞ்சரிக்கும் இக்காலங்களில் தராசுத்தட்டில் இட்ட எடைக்கல்லைப்போல ஏற்ற இறக்கமான பலன்களை அடைவீர்கள். பணவரவுகள் ஓரளவுக்கு சிறப்பாக அமைந்து குடும்பத்தேவைகள் பூர்த்தியாகும். செலவுகளும் கட்டுக்கடங்கியிருப்பதால் கடந்தகால கடன் பிரச்சினைகள் படிப்படியாகக் குறையும். பண விஷயத்தில் பிறருக்கு முன்ஜாமீன் கொடுப்பதைத் தவிர்க்கவும். உடல் ஆரோக்கியத்திலும் சிறுசிறு பாதிப்புகள் தோன்றி மறையும். சுபகாரிய முயற்சிகள் சில தடைகளுக்குப்பின் நிறைவேறும். 19-12-2017 முதல் சனி 5-ஆம் வீட்டில் சஞ்சரிக்க இருப்பதால் தேவையற்ற அலைச்சல்கள் குறையும். உற்றார்-உறவினர்களும் ஓரளவுக்கு ஒத்துழைப்பாக இருப்பார்கள். தொழில், வியாபாரத்திலும் அவ்வளவாக ஏற்றமான பலனை எதிர்பார்க்க முடியாது என்றாலும் தேக்கநிலை அடையாது சமாளிப்பீர்கள். உத்தியோகஸ்தர்களும் எதிர்பாராத இடமாற்றங்களால் அவதிக்குள்ளாவார்கள். மாணவர்கள் கல்வியில் அதிகப்படியான கவனத்தைச் செலுத்தினால் மட்டுமே நல்ல மதிப்பெண்களைப் பெறமுடியும். கலைஞர்கள் கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்திக்கொள்வது நல்லது. அரசியல்வாதிகள் உடனிருப்பவர்களிடம் பேச்சைக் குறைத்துக்கொள்வது உத்தமம். துர்க்கையம்மனை வழிபடுவது நல்லது.

குரு பகவான் அதிசாரமாக விருச்சிக ராசியில் 14-2-2018 முதல் 6-3-2018 வரை
குரு பகவான் அதிசாரமாக உங்கள் ஜென்ம ராசிக்கு சுக ஸ்தானமான 4-ல் சஞ்சரிப்பதால் எதிலும் எதிர்நீச்சல்போட்டே முன்னேற வேண்டி இருக்கும். உடல்நிலையில் அடிக்கடி பாதிப்புகள் தோன்றும். அலைச்சல்கள் அதிகரிக்கும். குடும்பத்தில் உள்ளவர்களும் சாதகமின்றியே இருப்பார்கள். மனைவிவழியில் மருத்துவச்செலவுகள் அதிகரிக்கும். பொருளாதாரநிலையில் சங்கடங்களையே சந்திப்பீர்கள். சிலருக்குக் கேட்டஇடத்தில் கடன் தொகை கிடைப்பதில்கூட தடைகள் ஏற்படும். குடும்பத்திலும் வீண் வாக்குவாதங்களும், ஒற்றுமைக் குறைவுகளும் ஏற்படும். உற்றார்-உறவினர்களிடையே கருத்து வேறுபாடுகள் உண்டாகும். அசையா சொத்துவகையில் வீண் விரயங்களை எதிர்கொள்வீர்கள். கொடுத்த கடன்களை வசூலிப்பதில் சிக்கல்கள் உண்டாகும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு லாபமற்ற நிலைகளால் அபிவிருத்திக் குறையும். கூட்டாளிகளும் ஒற்றுமையின்றி செயல்படுவார்கள். அரசியல்வாதிகள் முன்கோபத்தைக் குறைத்துக்கொண்டு பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடித்தால் மட்டுமே பதவியினைக் காப்பாற்றிக் கொள்ளமுடியும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது உத்தமம். ராகு காலங்களில் துர்க்கையம்மனை வழிபடுவது நல்லது.

குரு பகவான் வக்ரகதியில் 7-3-2018 முதல் 3-7-2018 வரை
குரு பகவான் இக்காலங்களில் வக்ரகதியில் சஞ்சரிப்பதால் படிப்படியான முன்னேற்றத்தை அடைவீர்கள். உடல் ஆரோக்கியம் திருப்தியளிப்பதாக அமையும். குடும்ப ஒற்றுமை ஓரளவுக்கு சிறப்பாக இருக்கும். உற்றார்-உறவினர்களின் வருகை மகிழ்ச்சியளிப்பதாக இருந்தாலும் வரவுக்குமீறிய செலவுகளை ஏற்படுத்தும். எடுக்கும் காரியங்களில் எதிர்நீச்சல் போட்டாவது முன்னேறிவிடுவீர்கள். சிலருக்கு அசையா சொத்துகளாலும் வண்டி வாகனங்களாலும் வீண் செலவுகளை சந்திக்க நேரிடும். பணவரவுகள் தேவைக்கேற்றபடி இருக்கும். கொடுக்கல்- வாங்கல் ஓரளவுக்கு சரளநிலையில் நடைபெற்றாலும் பெரிய தொகை ஈடுபடுத்துவதைத் தவிர்ப்பது உத்தமம். தொழில், வியாபாரம் செய்பவர்களும் சற்று சிறப்பான லாபத்தைப் பெறஇயலும் என்றாலும் போட்டி பொறாமைகளையும் சந்தித்தே ஆகவேண்டும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் கவனமுடன் செயல்பட்டால் கௌரவமான பதவிகளை அடையமுடியும். மாணவர்களின் கல்வித்திறன் ஓரளவுக்கு உயரும். அரசியல்வாதிகளுக்கு மக்களின் ஆதரவுகள் கிடைக்கும். எதிலும் சிந்தித்து செயல்பட்டால் ஓரளவுக்கு உயர்வுகளைப் பெறுவீர்கள். சனிக்குரிய பரிகாரங்களைச் செய்வது உத்தமம்.

குரு பகவான் விசாக நட்சத்திரத்தில் 4-7-2018 முதல் 4-10-2018 வரை
குரு பகவான் தன் சொந்த நட்சத்திரத்தில் ஜென்ம ராசிக்கு 3-ல் சஞ்சரிக்கும் இக்காலங்களில் கொடுக்கல்-வாங்கலில் பெரிய தொகை ஈடுபடுத்துவதைத் தவிர்ப்பது நல்லது. முயற்சிகளில் இக்காலத்திலும் தடைகளையே சந்திப்பீர்கள். தொழில், வியாபாரம் செய்பவர்கள் நிறைய போட்டிகளையும் மறைமுக எதிர்ப்புகளையும் சந்திக்க நேரிடும். நெருங்கியவர்களே எதிரிகளாக மாறுவார்கள். குடும்பத்திலும் பொருளாதாரத் தட்டுப்பாட்டினாலும் வீண் சஞ்சலங்களும் உண்டாகும். கணவன்-மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் குறையும் என்றாலும் புத்திரவழியில் வீண் செலவுகளும் நிம்மதியற்ற நிலையும் ஏற்படும். சிலருக்கு அசையா சொத்துகளாலும் வண்டி வாகனங்களினாலும் வீண் செலவுகள் உண்டாகும். உற்றார்-உறவினர்களிடம் சற்று விட்டுக்கொடுத்து நடந்து கொள்வது நல்லது. உத்தியோகஸ்தர்கள் வெளியூர் பயணங்களால் அலைச்சல், டென்ஷனை சந்திப்பீர்கள். உங்களின் திறமைக்கேற்ற உயர்வுகளும் தாமதப்படும். பிறர் செய்யும் தவறுகளுக்கும் நீங்களே பொறுப்பேற்க நேரிடுவதால் வேலைப்பளு அதிகரிக்கும். கலைஞர்கள் கையில் இருக்கும் வாய்ப்புகளை நழுவவிடாமல் பயன்படுத்திக்கொள்வது நல்லது. குருவுக்குரிய பரிகாரங்களைச் செய்வது உத்தமம்.

பரிகாரம்
சிம்ம ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு குரு பகவான் 3-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் குருப்ரீதியாக தட்சிணாமூர்த்திக்கு நெய் தீபமேற்றி கொண்டைக் கடலை மாலை சாற்றுவது நல்லது.

அதிர்ஷ்டம் அளிப்பவை
எண்: 1, 2, 3, 9.
நிறம்: வெள்ளை, சிவப்பு.
கிழமை: ஞாயிறு, திங்கள்.
கல்: மாணிக்கம்.
திசை: கிழக்கு.
தெய்வம்: சிவன்.

Leave a Comment