தடாதகை பிராட்டியார் திருஅவதாரப் படலம் | Thiruvilaiyadal thadathagai story Tamil
தடாதகை பிராட்டியார் திருஅவதாரப் படலம் (Thiruvilaiyadal Thadathagai Story Tamil) திருவிளையாடல் புராணத்தின் மதுரைக் காண்டத்தின் நான்காவது படலம் ஆகும்.
இப்படலம் அங்கயற்கண்ணி அம்மையான மீனாட்சியின் அவதாரம் மற்றும் அவர் மதுரையை ஆட்சி செய்த விதம் பற்றி விளக்கிறது.
மீனாட்சி அம்மையின் அவதாரம் மதுரையில் நிகழ்ந்த காரணத்தை இப்படலத்தின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
இனி தடாதகை பிராட்டியார் திருஅவதாரப் படலம் பற்றிப் பார்ப்போம்.
மலயத்துவசன் குழந்தை வரம் வேண்டுதல்
மலயத்துவசன் பாண்டிய நாட்டை சிறப்புற ஆட்சி செய்து வந்தான். அவன் சூரசேனன் என்னும் சோழ அரசரின் மகளான காஞ்சன மாலையை திருணம் செய்தான்.
ஆனால் இத்தம்பதியருக்கு நீண்ட நாட்கள் குழந்தைப் பேறு வாய்க்கவில்லை. இதனால் மலயத்துவசன் அசுவமேத யாகம் செய்யத் தொடங்கினான்.
தொண்ணூற்று ஒன்பது யாகங்கள் முடிந்த நிலையில் இந்திரன் “இப்பாண்டியன் நூறு யாகங்களை முடிப்பானாகில் நொடிப்பொழுதில் இந்திரப்பதவி அவனுக்கு போய்விடும்” என்று எண்ணி மலயத்துவசன் முன் தோன்றினான்.
“பாண்டியனே நீ நற்புத்திரப்பேற்றினை விரும்பினாய். ஆதலால் உலக இன்பத்தை அளிக்கக் கூடியதும் நற்புத்திரபேற்றினை வழங்கக்கூடிய மகயாகத்தினைச் (புத்திர காமேஷ்டி) செய்” என்று கூறி தன்னுலகத்தை அடைந்தான்.
பாண்டியனும் இந்திரனின் வழிகாட்டுதலின்படி மகயாகத்தைத் தொடங்கினான்.
அங்கயற்கண்ணி அம்மையான மீனாட்சி தோன்றுதல்
தலையின் இடதுபுறத்தில் கொண்டையுடன் கையில் கிளிகொண்டு காலில் சதைங்கை அணிந்து, முகம்நிறைய புன்னகையைச் சிந்தியவாறே மூன்று வயதினை ஒத்த சிறுமியாக உலகநாயகியான உமையம்மை மூன்று தனங்களுடன் தோன்றினார்.
அக்குழந்தையின் கண்கள் மீன்களைப் போன்று நீண்டு அழகாக இருந்தன. ஆதலால் அக்குழந்தை பின்னாளில் அங்கயற்கண்ணி என்றும் போற்றப்பட்டாள்.
அவள் தன் சின்னஞ்சிறு திருவடிகளால் தளிர் நடை நடந்து காஞ்சன மாலையின் மடியில் போய் அமர்ந்தாள். தன்னுடைய சின்னச்சிறிய செவ்விதழ்களால் காஞ்சனமாலையை “அம்மா” என்று மழலை மொழியில் அழைத்தாள்.
அதனைக் கண்டதும் காஞ்சன மாலை குழந்தை வடிவில் இருந்த உலக அன்னையை வாரி எடுத்து அணைத்து முத்தமிட்டு மகிழ்ந்தாள்.
மலயத்துவசனின் துயரம்
குழந்தையைக் கண்ட மலயத்துவசன் மனதில் மகிழ்ச்சி கொண்டான். இருப்பினும் கவலை ஒன்று அவனை வாட்டியது. புத்திரபேற்றினை விரும்பி மகயாகத்தினை செய்த தனக்கு தான் விரும்பியபடி ஆண்மகவு தோன்றாமல் மூன்றுதனங்களுடன் கூடிய பெண்மகவு தோன்றியதுதான் அவனுடைய கவலை ஆகும்.
சொக்கநாதரின் திருவாக்கு
மலயத்துவசன் தன் மனைவி மற்றும் குழந்தையுடன் சோமசுந்தரக் கடவுளை வழிபட்டான். தன்னுடைய மனக்குறையை இறைவனிடம் விண்ணப்பித்தான்.
இறைவனும் அவ்வரசனுக்கு மட்டும் கேட்குமாறு திருவாக்கு ஒன்றினைக் கூறினார். “பாண்டியனே, கலங்காதே. உன்னுடைய அன்பு புதல்விக்கு தடாதகை எனப் பெயரிட்டு எல்லா கலைகளையும் கற்பித்து அவளுக்கு ராணியாக முடிசூட்டு. அவளுக்கு ஏற்ற கணவனை அவள் காணும்போது அவளுடைய ஒரு தனம் தானே மறைந்து விடும். எனவே மனம் வருத்தம் கொள்ள வேண்டாம்” என்று சொக்கநாதர் கூறினார்.
இறைவனின் திருவாக்கினை கேட்ட மலயத்துவசன் கவலை நீங்கி மனத்தெளிவு பெற்றான்.
மீனாட்சிஅம்மை மதுரையில் தோன்றக் காரணம்
மீனாட்சியம்மையின் திருவதாரம் நிகழ்ந்ததை அகத்தியர் மற்ற முனிவர்களுக்கு கூறினார். அம்முனிவர்கள் அகத்தியரிடம் “தக்கனும் மலையரசனும் பல நாட்கள் வருந்தி தவம் இயற்றியே உலக அன்னையை தம் மகள்களாகப் பெற்றனர். அப்படியிருக்க தற்போது அன்னை பாண்டியனின் திருமகளாக இப்பூமியில் இறைவனை விட்டுவிட்டு தனியே தோன்றக் காரணம் என்ன?” என்று வினவினர்.
அதற்கு அகத்தியர் “விச்சுவாவசு என்ற கந்தவர்வனின் மகளான விச்சாவதி உமையம்மையிடம் மிக்க விருப்பம் கொண்டு இருந்தாள்.
ஒரு நாள் தனது தந்தையிடம் “உமையம்மையின் அருளைப் பெற வழிபட வேண்டிய தலம் யாது?” என்று கேட்டாள். அதற்கு விச்சுவாவசுவும் “துவாத சந்தம் எனப்படும் மதுரையம்பதியே சிறந்த இடம்” என்று கூறினார்.
விச்சாவதியும் மதுரையை அடைந்து பலவிரதமுறைகளை மேற்கொண்டு தை மாதத்தில் அங்கயற்கண்ணி அம்மையின் சந்நதியை அடைந்து யாழினை இசைத்து அம்மன் பற்றிய இனிய பாடல்களை பாடினாள்.
அப்போது அங்கையற்கண்ணி அம்மை மூன்று வயது குழந்தையாக விச்சாவதிக்கு காட்சி தந்தாள். விச்சாவதியிடம் உமையம்மை “உன் விருப்பம் யாது?” என்று கேட்டாள். விச்சாவதியும் “தாயே நின் திருவடியில் நீங்காத அன்பினை நான் எப்போதும் பெற்றிருக்க வேண்டும்.” என்று கேட்டாள்.
அம்மை மேலும் “இன்னும் வேண்டுவது யாது?” என்று வினவினாள். அதற்கு விச்சாவதி “அம்மையே தற்போது காட்சி தருகின்றன திருவுருவத்திலேயே அடியேனிடத்தில் தோன்றி கருணை கூர்ந்திருக்கும்படி திருவருள் புரிய வேண்டும்.” என்று கேட்டாள்.
அதனை கேட்ட அன்னையானவள் “பாண்டியனின் மரபிலேயே மலயத்துவசன் தோன்றுவான். நீ அவனுடைய மனைவியாய் வருவாய். யாம் அப்போது இத்திருவுருவத்தியேயே உம் தவப்புதல்வியாய் உம்மிடம் வருவோம்” என்று அருளினார்.
விச்சாவதியின் தவப்பயனால் உலக அன்னை மதுரையம்பதியில் தடாதகை பிராட்டியாராகத் தோன்றினாள்.” என்று கூறினார்.
தடாதகை பிராட்டியார் குமரிப் பருவம் எய்தல்
தன்னுடைய குழந்தை மற்றும் மனைவியுடன் அரண்மனை திரும்பிய மலயத்துவசன் தனக்கு குழந்தைப்பேறு வாய்க்கப் பெற்றதை உலகெங்கும் அறிவிக்கச் செய்தான்.
தடாதகை பற்றிய இறைவனின் திருவாக்கினை மன்னன் தன்னுடைய நம்பிக்கைக்கு உரிய அமைச்சர் சுமதியிடம் மட்டும் சொன்னான்.
அக்குழந்தைக்கு இறைவனின் திருவாக்குப்படி தடாதகை என்னும் பெயரினைச் சூட்டினான். தடாதகை என்பதற்கு மாறுபட்டவள் என்பது பொருள் ஆகும். தடாதகை பிராட்டியாரும் போர் கலைகள் உள்ளிட்ட எல்லா கலைகளையும் கற்று குமரிப்பருவத்தை எய்தினாள்.
பாண்டிய நாட்டு அரசியாக திருமுடி சூட்டுதல்
தடாதகை பிராட்டியார் குமரிப் பருவத்தை அடைந்ததும் மலயத்துவசன் தன் அமைச்சரான சுமதி என்பவரிடம் இறைவனின் திருவாக்கினைக் கூறினான். பின் அமைச்சருடன் கலந்தாலோசித்து நல்லதொரு நாளில் தடாதகை பிராட்டியாருக்கு பாண்டிய நாட்டு அரசியாக திருமுடி சூட்டினான். சில நாட்களில் மலயத்துவசன் விண்ணுலகத்தை அடைந்தான்.
கன்னிநாடு
தடாதகை பிராட்டியாரும் தான் கற்ற கல்வியின்படி நாட்டினை சிறப்புற ஆட்சி செய்தார். மீனானது பார்வையாலே தன் குஞ்சுகளுக்கு உணவினை ஊட்டி பாதுகாப்பது போல தடாதகை பிராட்டியாரும் தம் குடிமக்களைப் பாதுகாத்து அரசாண்டார்.
மீன் போன்ற கண்களைக் கொண்டு அரசியாக அரசாண்டதால் இவ்வம்மை மீனாட்சி என்றும், அங்கயற்கண்ணி என்றும் அழைக்கப்படுகிறார். (அம் + அயல்+ கண்ணி = அங்கயற்கண்ணி. அம் என்றால் அழகிய, கயல் என்றால் மீன், கண்ணி என்றால் கண்களை உடையவள். அழகிய மீன்போன்ற கண்களை உடையவள்).
தடாதகை பிராட்டியார் கன்னிப் பருவத்தில் முடிசூடி பாண்டிய நாட்டை ஆண்டமையால் பாண்டியநாடு ‘கன்னிநாடு’ என்னும் பெயர் பெற்றது.
தடாதகை பிராட்டியார் திருஅவதாரப் படலம் கூறும் கருத்து
அன்புமிக்க தன் அடியவரிடத்தும் அவர்களின் அன்பின் பொருட்டு இறைவன் தோன்றுவார்.
தடாதகை பிராட்டியார் பாண்டிய நாட்டின் அரசியாகி மதுரை அரசாட்சி செய்தன் மூலம் ஆணுக்குப் பெண் சமம் என்பதை இப்படலம் தெளிவாக்குகிறது.
திருவிளையாடல் புராணம் என்பது சிவபெருமானது திருவிளையாடல்களைக் கூறும் பரஞ்சோதி முனிவர் எழுதிய நூல் ஆகும். சிவபெருமான் தன்னுடைய அடியார்கள் மீதும், சிற்றுயிர்கள் மீதும் கொண்ட அன்பினால் தாமே பூலோகத்திற்கு வந்து செய்த திருவிளையாடல்களின் தொகுப்பாக இந்நூல் அமைந்துள்ளது. மதுரை மீனாட்சியம்மை பராசக்தி பரஞ்சோதி முனிவரின் கனவில் தோன்றிச் சிவபெருமானின் திருவிளையாடல்களைப் பாடும் படி கூறியமையால் இந்நூலைப் பரஞ்சோதியார் இயற்றியதாக நம்பப்படுகிறது. பரஞ்சோதி முனிவர் திருமறைக்காடு (வேதாரணியம்) எனும் ஊரில் மீனாட்சி சுந்தர தேசிகர் என்பவருக்கு மகனாகப் பிறந்தவர். மதுரையில் சற்குருவை ஏற்று சைவ சந்நியாசம் பெற்றார்.