அமர்நீதி நாயனார்.

பழையாறை என்னும் பழம்பெரும் பதியில் – வணிக குல மரபில் அமர்நீதியார் என்னும் சிவ அன்பர் தோன்றினார். வணிககுல மரபிற்கு ஏற்ப வியாபாரத்தில் வல்லமையுள்ளவராய், மேம்பட்டு விளங்கிய அவரிடமிருந்த பொன்னும், மணியும், முத்தும், வைரமும், ஆடைகளும், அவரது செல்வச் சிறப்பையும், வெளிநாட்டினரோடு அவருக்கிருந்த வர்த்தகத் தொடர்பையும் உலகோர்க்கு எடுத்துக் காட்டின.

இத்தகைய செல்வச் சிறப்பு பெற்ற அமர்நீதியார், சிவனடியார்களுக்குத் திருத்தொண்டு செய்வதையே, இலட்சியமாகக் கொண்டிருந்தார். அவர் தமது இல்லத்திற்கு வரும் அடியார்களுக்கு அமுது அளித்து, ஆடையும், அரைத் துண்டும், கோவணமும் அளித்து அளவிலா ஆனந்தம் பெற்றார். பழையாறைக்குப் பக்கத்திலே உள்ள சிவத்தலம் திருநல்லூர். இவ்விடத்தில் ஆண்டுதோறும் அங்கு எழுந்தருளியிருக்கும் நீலகண்டப் பெருமானுக்குத் திருவிழா நடைபெறுவது வழக்கம்.

இவ்விழாவிற்கு வெளியூர்களிலிருந்தெல்லாம் பக்தர்கள் வெள்ளமெனத் திரண்டு வருவர். அமர்நீதியாரும் அவ்விழாவிற்குத் தம் குடும்பத்துடன் சென்று இறைவனை வழிபடுவார். அவ்வூரில் அடியார்களுக்கு என்றே திருமடம் ஒன்றை கட்டினார். ஒரு சமயம் அவ்வூர் திருவிழாக் காலத்தில், அமர்நீதியார் தமது குடும்பத்தாரோடு மடத்தில் தங்கியிருந்தார். சிவனடியார்களுக்கு நல்ல பணிகள் புரியும் அமர்நீதியாரின் உயர்ந்த பண்பினை – பக்திப் பெருக்கினை உலகறியச் செய்யத் திருவுள்ளம் கொண்டார் சிவபெருமான்.

சிவபெருமானே சிவனடியார் போன்ற திருவுருவம் பூண்டு, அவர் தங்கியிருந்த மடத்திற்கு எழுந்தருளினார். அமர்நீதியார் அடியாரைப் பார்த்ததும் மகிழ்ச்சியோடு வரவேற்று தேவரீர் இம்மடத்திற்கு இப்போதுதான் முதல் தடவையாக வருகிறீர் என்று கருதுகிறேன். அடியார் இங்கே எழுந்தருளுவதற்கு யான் செய்த தவம்தான் என்னவோ என கூறியவாறு முகம்மலர வரவேற்றார். அவர் மொழிந்ததைக் கேட்டு எம்பெருமான், அடியார்களுக்கு அமுதளிப்பதோடு, அரைத்துண்டு, கீள்,அழகிய வெண்மையான கோவணம் முதலியனவும் தருகின்றீர் என்று கேள்வியுற்றுத்தான் உம்மைப் பார்த்துவிட்டுப் போக வந்தேன் என்று பதிலுரைத்தார்.சிவ னடியார்களுக்கென தனியாக அமுது செய்கின்றோம். அதனால் ஐயன் தயவு கூர்ந்து திருவமுது செய்து அருள வேண்டும் என்று பக்திப் பரவசத்தோடு வேண்டினார்.
சிவனடியாரும் உமது விருப்பத்தை யாம் உளமாற ஏற்கின்றோம்.யாம் நீராடச் செல்ல இருக்கின்றோம். வானம் மப்பும் மந்தாரமுமாக இருப்பதால் மழை வரலாம். இக்கோவணம் இரண்டும் நனைந்து போக நேரிடும். அதனால் ஒன்றை மட்டும் கொடுத்து விட்டுப் போகின்றேன். பாதுகாப்பாக வைத்திருந்து தரவேண்டும்.இந்தக் கோவணத்தைச் சர்வ சாதாரணமாக எண்ணி விடாதீர்.இது விலை மதிப்பற்றது என்று சொல்லியவாறு தண்டத்தில் இருந்த கோவணங்களில் ஒன்றை அவிழ்த்து அமர்நீதியாரிடம் கொடுத்துவிட்டு நீராடிவர புறப்பட்டார் சிவனடியார்.

அமர்நீதியாரும் அக்கோவணத்தை மற்ற கோவணங்களோடு சேர்த்து வைக்காமல் தனிப்பட்ட இடத்தில் தக்க பாதுகாப்பாக வைத்தார். அடியார்களோடு விளையாடுவதை தம் குலத்தொழிலாக கொண்ட சிவபெருமான், திருநீலகண்டரிடம் கொடுத்துவிட்டுச் சென்ற திருவோட்டை அன்று மறைத்தது விளையாடியது போன்று, இன்று இவ்வணிகரிடம் கொடுத்த கோவணத்தையும் மாயமாக மறையச் செய்தார். சற்று நேரத்திற்கெல்லாம் சிவனடியார் மழையில் நனைந்து கொண்டே மடத்தை வந்தடைந்தார். அதற்குள் அமர்நீதியார், அடியார்க்கு வேண்டிய அறுசுவை உண்டியைப் பக்குவமாகச் சமைத்து வைத்திருந்தார். அடியார் மழையில் நனைந்து வருவதைக் கண்டு மனம் பதறிப்போன அமர்நீதியார், விரைந்து சென்று அடியார் திருமேனியை துவட்டிக் கொள்ளத் துணிதனைக் கொடுத்தார். இதெல்லாம் எனக்கு வேண்டாம் முதலில் எனக்கு நான் கொடுத்து கோவணத்தை எடுத்து வாரும், எதிர்பாராமல் மழை பெய்ததால் எல்லாம் ஈரமாகிவிட்டது என்றார் இறைவன். அமர்நீதியார் கோவணத்தை எடுத்து வர உள்ளே சென்றார். சிவனடியாரின் சூது மொழியை, அமர்நீதியார் எப்படி புரிந்து கொள்ள முடியும் ? அமர்நீதியார் சென்று, கோவணத்தைத் தாம் வைத்திருந்த இடத்தில் பார்த்தார். அங்கு கோவணத்தைக் காணவில்லை. சுற்றும் முற்றும் தேடிப் பார்த்தார். எங்குமே காணவில்லை. யாராவது எடுத்திருக்கக் கூடுமோ ? என்று ஐயமுற்று அனைவரையும் கேட்டுப் பார்த்தார், பலனேதுமில்லை.

அமர்நீதியாரும், அவர் மனைவியாரும் செய்வதறியாது திகைத்தனர். மனைவியோடு கலந்து ஆலோசித்து இறுதியில் மற்றொரு அழகிய, புதிய கோவணத்தை எடுத்துக்கொண்டு, . சிவனடியார் முன் சென்று, வேதனை முகத்தில் தோன்ற, தலைகுனிந்து நின்றார். கண்களில் நீர்மல்க அடியாரை நோக்கி, ஐயனே ! எம்மை அறியாமலே நடந்த தவற்றைப் பொறுத்தருள வேண்டும் என்றார் அமர்நீதியார். அமர்நீதியார் மொழிந்ததைக் கேட்ட சிவனடியார் என்ன சொல்கிறீர் ? எமக்கு ஒன்றுமே புரிய வில்லையே ! என்றார். ஐயனே ! தங்களிடம் இருந்து பெற்றுக் கொண்ட கோவணத்தைப் பாதுகாப்பான இடத்தில்தான் வைத்திருந்தேன். ஆனால், இப்பொழுது போய்ப் பார்த்தால் வைத்திருந்த இடத்தில் அதைக் காணவில்லை. பெரும் வியப்பாகத்தான் இருக்கிறது. அதனால் தேவரீர் இதனை அணிந்துகொண்டு எம் பிழையைப் பொறுத்தருள வேண்டும் என்று மிகத் தாழ்மையோடு மனம் உருகி வேண்டினார்.

அதனைக்கேட்டதும் எம்பெருமானின் திருமுகத்திலே கோபம் கொழுந்து விட்டெரியத் தொடங்கியது. நன்றாக உள்ளது உமது பேச்சு. சற்று முன்னால் கொடுத்துச் சென்ற கோவணம் அதற்குள் எப்படிக் காணாமற் போகுமாம்? நான் விலைமதிப்பற்ற கோவணம் என்று சொன்னதால், அதனை நீரே எடுத்துக்கொண்டு, மற்றொரு கோவணத்தைக் கொடுத்து என்னை ஏமாற்றலாம் என்று நினைக்கிறீரோ ? இந்த நிலையில் நீர் அடியார்களுக்குக் கோவணம் கொடுப்பதாக ஊரெல்லாம் தம்பட்டம் அடிக்கின்றீரோ? என கோபத்தால் ஏசினார் சிவனடியார்.

எம்பெருமான் பேசியதைக் கேட்டு அஞ்சி நடுங்கிய அமர்நீதியார், அறியாது நடந்த பிழையை மன்னித்து பொறுத்தருள வேண்டும். காணாமற் போன கோவணத்திற்கு ஈடாக அழகிய, விலை உயர்ந்த பட்டாடைகளும், பொன்மணிகளும் எவ்வளவு வேண்டுமாயினும் தருகின்றேன். ஐயன் எங்ஙனமாகிலும் சினம் தணிந்து எம்மைப் பொறுத்தருள வேண்டும். என்று பயபக்தியுடன் பிரார்த்தித்தார். பன்முறை மன்னிப்புக் கேட்டார். அடியாரை வீழ்ந்து வீழ்ந்து வணங்கினார். அமர்நீதியார்,

சினம் சற்று தணிந்தாற்போல் பாவனை செய்த அடியார் தண்டில் இருக்கும் நனைந்த கோவணத்தைக் காட்டி, இதற்கு ஈடான கோவணத்தை கொடுத்தால் அதுவே போதுமானது. பொன்னும் பொருளும் எமக்கு எதற்கு என்று மொழிந்தார். இறைவனின் தீர்ப்பைக் கேட்டு அமர்நீதியார் சற்று மன அமைதி கொண்டார். உள்ளே சென்று துலாக்கோலை எடுத்து வந்து சிவனடியார் முன் நாட்டினார். அடியாரிடமிருந்த கோவணத்தை வாங்கி ஒரு தட்டிலும் தம் கையில் வைத்திருந்த கோவணத்தை மற்றொரு தட்டிலுமாக வைத்தார். நிறை சரியாக இல்லை. அதுகண்டு அமர்நீதியார் அடியார்களுக்கு அளிப்பதற்காக வைத்திருந்த கோவணங்களை எடுத்து வந்து வைத்தார். அப்பொழுதும் நிறை சரியாக நிற்கவில்லை அமர்நீதி நாயனாரின் தட்டு உயர்ந்தேயிருந்தது. ஒவ்வொன்றாக மற்ற கோவணமனைத்தையும் தட்டில் வைத்துக்கொண்டே வந்தார். எடை சமமாகவே இல்லை.

தொடர்ந்து நூல் பொதிகளையும், பட்டாடைகளையும் கீள்களையும் ஒவ்வொன்றாக அடுக்கடுக்காகத் தட்டில் வைத்துக் கொண்டே போனார். எவ்வளவுதான் வைத்தபோதும் எடை மட்டும் சரியாகவே இல்லை. அமர்நீதியார் தட்டு உயர்ந்தும், சிவனார் தட்டு தாழ்ந்தும் இருந்தது.

தராசுத் தட்டின் மீது இறைவனால் வைக்கப்பட்டுள்ள கோவணத்தின் மகிமையை யார்தான் அறிய முடியும் ? ஈரேழு உலகமும் அதற்கு ஈடு இணையாகாதே ! அன்பர்களின் அன்பிற்குத் தானே அது கட்டுப்படும் ! இறைவனின் இத்தகைய மாயத்தை உணரச் சக்தியற்ற தொண்டர் சித்தம் கலங்கினார். செய்வதறியாது திகைத்தார். தொண்டர் நல்லதொரு முடிவிற்கு வந்தார். பொன்னும் பொருளும், வெள்ளியும், வைரமும், நவமணித் திரளும் மற்றும் பலவகையான உலோகங்களையும் கொண்டுவந்து குவித்தார். தட்டுக்கள் சமமாகவில்லை. தம்மிடமுள்ள எல்லாப் பொருட்களையும் தராசு தட்டில் கொண்டுவந்து வைத்து மலைபோல் குவித்தார். இப்படியாக அவரிடமுள்ள பொருள்கள் அனைத்தும் ஒரு வழியாகத் தீர்ந்தது. இனிமேல் எஞ்சியிருப்பது தொண்டரின் குடும்பம் ஒன்றுதான்.

அமர்நீதியார் சற்றும் மன உறுதி தளரவில்லை. இறைவனை மனதிலே தியானித்தார். ஐயனே ! எம்மிடம் இருந்த பொருள்கள் அனைத்தும் தீர்ந்துவிட்டன. நானும், என் மனைவியும், குழந்தையும் தான் மிகுந்துள்ளோம். இந்தக் தராசு சமமான அளவு காட்ட, நாங்கள் தட்டில் உட்கார தேவரீர் இயைந்தருள வேண்டும் என்று வேண்டினார் நாயனார்.பிறவிப் பெருங்கடலில் நின்றும் தம் தொண்டனைக் கரையேற்றும் பொருட்டு தராசில் குடும்பத்தோடு சேர்ந்து அமர அனுமதி கொடுத்தார் எம்பெருமான். அமர்நீதியாரும், அவரது மனைவியாரும், மகனும் அடியாரின் பாதங்களில் ஒருங்கே வீழ்ந்து வணங்கி எழுந்தனர். நாங்கள் திருவெண்ணீற்றில் உண்மையான பக்தியுடன் இதுகாறும் பிழை ஏதும் புரியாமல் வாழ்ந்து வந்தோம் என்பது சத்தியமானால் இந்தத் தராசு சமமாக நிற்றல் வேண்டும் என்று கூறினார். திருநல்லூர் பெருமானைப் பணிந்தார். நமச்சிவாய நாமத்தை தியானித்தவாறு தட்டின் மீது ஏறி அமர்ந்தார். அவரைத் தொடர்ந்து மனைவியாரும், மகனும் பரமனை நினைத்த மனத்தோடு ஏறி அமர்ந்தனர். மூவரும் கண்களை மூடிக்கொண்டு, ஐந்தெழுத்து மந்திரத்தை மனத்தால் முறைப்படி ஓதினர். துலாக்கோலின் இரண்டு தட்டுகளும் சமமாக நின்றன.

மூவரும் கண் திறந்தனர்.அதற்குள் முக்கண்ணன் மாயமாய் மறைந்தார். சிவனடிரைக் காணாது அனைவரும் பெருத்த வியப்பில் மூழ்கினார், அப்போது வானத்திலே தூய ஒளி பிரகாசித்தது. நீலகண்டப் பெருமான் உமாதேவியாருடன் விடையின் மீது காட்சி அளித்தார். விண்ணவர் பூமாரி பொழிய மறைகள் முரசுபோல் முழங்கின. வணிகரும், மனைவியாரும், மகனும் துலாத்தட்டில் மெய்மறந்து இருந்தபடியே சிவநாமத்தை உச்சரித்துக் கொண்டேயிருந்தனர். இறைவனின் அருளினால் துலாத்தட்டு புட்பக விமானமாக மாறியது. அமர்நீதியார் குடும்பம் அப்புட்பக விமானத்தில் கைலயங்கிரியை அடைந்தது. அமர்நீதியார் இறைவனின் திருவடித்தாமரை நீழலிலே பிறவிப்பேறு பெற்று இன்புற்று வாழலானார். பரமுத்தியும் பெற்றார்.

அமர்நீதி நாயனார் திருவடிகள் போற்றி.
அம்மையப்பன் திருவடிகள் போற்றி போற்றி.

Leave a Comment

Enable Notifications Allow Miss notifications