அப்பூதியடிகள் நாயனார்.

அப்பூதியடிகள் சோழநாட்டில் திங்களூர் எனும் திருத்தலத்தில் தைமாதம் சதயம் நட்சத்திரத்தில் அவதாரம் செய்தார். அப்பூதி அடிகள் என்பவர் சிவத்தொண்டர்களாக வாழ்ந்த அறுபத்து மூன்று நாயன்மார்களுள் ஒருவரானவர்.சைவ சமயத்தில் சிவபெருமானும், அடியாரும் ஒருவரே என்பதை விளக்க அப்பூதி அடிகள் வரலாறு கூறப்படுகிறது. அப்பூதி அடிகள் திருநாவுக்கரசர் எனும் சைவ அடியாரை வணங்கியே வீடுபேரு அடைந்தார் என்று எடுத்துரைக்கப்படுகிறது.

திருநாவுக்கரசரின் சிவத்தொண்டினை அறிந்த அப்பூதியடிகள் திருநாவுக்கரசர் பெயரால் மக்களுக்கு அன்னம் படைத்தல், சத்திரம் அமைத்தல், நீர்பந்தல் அமைத்தல் போன்ற பணிகளைச் செய்துவந்தார். திருநாவுக்கரர் இந்த நற்தொண்டினை அறிந்து அப்பூதிஅடிகள் இல்லத்திற்கு சென்றார்.

அப்பூதியடிகளை சந்தித்த திருநாவுக்கரசர், ஏன் உங்கள் பெயரில் தர்மச் செயல்களைச் செய்யாமல் திருநாவுக்கரசரின் பெயரில் செய்கின்றீர்கள் என்று வினவினார். அதற்கு அப்பூதியடிகள் திருநாவுக்கரசர் சமண சமயத்தில் பெரும் துறவியாய் இருந்ததையும், சிவனருளால் அச்சமயம் விட்டு சைவமதமேற்று தொண்டுகள் புரிந்து வருவதையும் எடுத்துரைத்தார். இறைவனின் மீது அன்பு கொள்வதை விடவும், அவனுடைய அடியார்கள் மேல் அன்பு கொள்ளுதல் மேலும் சிறப்பானது என்று எடுத்துரைத்தார். அதன் பின்பு தானே திருநாவுக்கரசர் என்று தன்னை வெளிப்படுத்தினார் திருநாவுக்கரசர். திருநாவுக்கரசரே தன்னுடைய இல்லம் வந்திருப்பதை அறிந்து மகிழ்ந்த அப்பூதி அடிகள் உணவு உண்ண அழைத்தார்.

வாழை இலையை அறுக்கச் சென்ற அப்பூதி அடிகள் மகன் பாம்பு தீண்டி இறந்தார். திருநாவுக்கரசர் வந்திருக்கும் போது மகன் இறந்து போனதால், அதைக் கூறி திருநாவுக்கரசரை உணவு உண்ண தடை செய்து விடக்கூடாதென அப்பூதி அடிகளும், அவரது மனைவியும் துயரத்தினை மறைத்து உணவு இட்டனர். ஆனால் திருநாவுக்கரர் தன்னுடன் அப்பூதியடிகளின் மகனையும் உணவருந்த அழைத்துவர கோரிக்கை வைத்தார்.

அப்பூதி அடிகள் தன்னுடைய மகன் பாம்பு தீண்டி இறந்ததை தெரிவித்தார். எல்லாம் இறைவனின் திருவிளையாடல் என நினைத்த திருநாவுக்கரசர் பெருமான் உடனே இறந்த பாலகனை எடுத்துக் கொண்டு திருக்கோயிலுக்கு வருக என்று கூறியவாறு கோயிலுக்குப் புறப்பட்டார்.

அப்பூதி அடிகள் பாலகனைத் தூக்கிக் கொண்டு புறப்பட்டார். இச்செய்தி கேட்டு ஊர் மக்களும் திரண்‌டனர். திங்களூர் பெருமானை அப்பரடிகள் மெய் மறந்து உருகிப் பணிந்தார். ஒன்று கொல்லாம் என்னும் திருப்பதிகத்தை நாவுக்கரசர் பாடினார்; ‌மெய்யுருகினார். நாவுக்கரசரின் பக்தியிலே பரமனின் அருள் ஒளி பிறந்தது. அப்பூதியடிகள் மகனார் துயின்று எழுந்திருப்பவன் போல் எழுந்தான். அப்பரடிகளின் காலில் விழுந்து வணங்கினான். அப்பரடிகளின் மகிமையைக் கண்டு அனைவரும் வியந்து போற்றினார்.

அவரது பக்திக்கும், அருளுக்கும், அன்பிற்கும் தலைவணங்கி நின்றனர். ஆலயத்துள் கூடியிருந்து அன்பர் கூட்டம் அப்பர் பெருமானைக் கொண்டாடி போற்றியது. எல்லோரும் அப்பூதி அடிகளின் இல்லத்திற்கு வந்தனர். எல்லோரும் ஒருங்கே அமர்ந்து அப்பர் அடி‌களோடு சேர்ந்து அமுதுண்டனர். அப்‌பூதி அடிகள், நாவுக்கரசருடன் அமுதுண்ணும் பேறு பெற்றோமே என மகிழ்ந்தார். திருநாவுக்கரசர் சில காலம் அப்பூதி அடிகளின் இல்லத்தில் தங்கி இருந்து பின்னர் திருப்பழனம் சென்றபொழுது அப்பூதி அடிகளின் திருத் தொண்டினையும் சிறப்பித்துப் பாடியுள்ளார்.

அப்பூதி அடிகள் நிலவுலகில் அடியார்களுக்குத் ‌திருத்தொண்டு பல புரிந்தவாறு பல்லாண்டு வாழ்ந்து முடிவில் எம்பெருமான் ஈசனின் பரமுத்தியை பெற்று வீடுபேறு அடைந்தார். சிவாயநம திருச்சிற்றம்பலம்.

Leave a Comment