அரிவட்டாய நாயனார்.

அரிவாட்டாய நாயானார் சோழ நாட்டில் இருந்த கணமங்கலம் என்னும் ஊரில் வேளாளராக வாழ்ந்தவர். இவருடைய இயற்பெயர் தாயனார் என்பதாகும். இவரும் இவர் மனைவியும் சிவபெருமானிடம் மாறாத அன்பு கொண்டிருந்தனர்.

கணமங்கலம் தற்போது தண்டலைச்சேரி என்றழைக்கப்படுகிறது. இது திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி வட்டத்தில் அமைந்துள்ளது.

நல்லொழுக்கத்தில் சிறந்தவரும், செல்வந்தருமான இவர் சிவதொண்டுகள் பல செய்து வந்தார். கணமங்கலத்தில் கோவில் கொண்டிருந்த நீள்நெறி நாதருக்கு செந்நெல் அரிசி, செங்கீரை, மாவடு ஆகியவற்றை படையல் பொருட்களாக படைப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். மிகப்பெரும் நிலச்சுவான்தராகவும் இருந்தார்.

தாயனார் இறைவன் மீது கொண்டிருந்த பேரன்பினையும், அவர் தம் உறுதியையும் உலகிற்கு எடுத்துரைக்க சிவனார் விருப்பம் கொண்டார்.

இறைவனாரின் விருப்பப்படி தாயனாரிடம் இருந்த செல்வ வளம் குறையத் தொடங்கியது. எனினும் தாயனார் நீள்நெறி நாதருக்கு செந்நெல் அரிசி, செங்கீரை, மாவடு ஆகியவற்றை தவறாது படைத்து வந்தார்.

கூலியாட்களை கொண்டு வேளாண்மை செய்து வந்த நாயனார் தன்னுடைய செல்வ வளம் அழிந்ததால், தம் நிலங்களையும் விற்று இறைவனின் படையலுக்காக செலவிட்டார். அனைத்து நிலபுலன்களும் விற்று தீர்ந்ததும் வேளாண்மை கூலியாக கூலி வேலைக்குச் சென்றார். அப்போதும் அவர் தம்முடைய படையல் வழிபாட்டை நிறுத்தவில்லை.

வேளாண்மை கூலியாக வேலை செய்ததற்கு கூலியாக தாயானார் செந்நெல்லையும், கார்நெல்லையும் பெற்று வந்தார். கூலியாகப் பெற்ற செந்நெல்லை இறைவனாருக்கும், கார்நெல்லை தம்முடைய பயன்பாட்டிற்கும் பயன்படுத்தினார் தாயனார்.

இறைவனின் திருவருளால் கார்நெல்லிற்குப் பதிலாக செந்நெல்லே அப்பகுதியில் விளைந்தது. ஆதலால் தாயனாருக்கும் கூலியாக செந்நெல்லே வழங்கப்பட்டது. கூலியாக பெறப்பட்ட செந்நெல் முழுவதையும் இறைவனாருக்கே படையலிட்டார்.

எமக்கு வழங்கும் கூலி முழுதும் செந்நெல்லாகவே வழங்கப்பட்டதால் படையல் வழிபாடு தடைபாடாது. என்னே இறைவனின் கருணை என்று மனதிற்குள் மகிழ்ந்து இறைவனுக்கு நன்றி தெரிவித்தார்.

கார்நெல் கிடைக்காததால் தாயனாரின் மனைவியார் சோற்றிற்கு அரிசி இல்லாமல் வீட்டுத் தோட்டத்தில் இருந்த கீரைகளை மட்டுமே உணவாக்கினார். அதனை மட்டும் உண்டுவிட்டு தம்பதியர் இருவரும் படையலிடும் தொண்டினைத் தொடர்ந்தனர்.

நாளடைவில் கீரைகளும் இல்லாது போகவே தண்ணீரை மட்டும் அருந்தி படையல் தொண்டினைத் தம்பதியர் தொடர்ந்தனர்.

ஒருநாள் செந்நெல் அரிசி, செங்கீரை, மாவடு ஆகியவற்றை தலையில் வைத்துக் கொண்டு, நீள்நெறி நாதர் கோவிலை நோக்கிச் செல்லத் தொடங்கினார் தாயனார்.

அவருடைய மனைவியார் மண்பானையில் பஞ்சகவ்வியத்தை எடுத்துக் கொண்டு தாயனாரைப் பின் தொடர்ந்தார்.

உணவின்றி மெலிந்த தேகம் கொண்டிருந்த தாயனார் பசி மயக்கத்தால் நிலப்பிளவில் கால் இடரி கீழே விழப் போனார். தாயனாரின் மனைவியார் அவரை தம்முடைய கையால் தாங்கிப் பிடித்தார்.

எனினும் இறைவனின் படையல் பொருட்கள் நிலத்தில் சிந்தின. அதனைக் கண்டதும் திகைத்த தாயனார் ‘இனி கோவிலுக்குச் சென்று என்ன செய்வது?’ என்று எண்ணினார்.

இறைவனுக்கான படையல் தம்மால் தடைபட்டதை எண்ணி வருத்தமுற்ற தாயனார் தாம் வாழ்வதில் எப்பயனும் இல்லை என நினைத்து அரிவாளால் தம் கழுத்தை அரியச்சென்றார். உடனே நிலவெடிப்பினின்று நீண்டுவந்த இறைவனின் இடது திருக்கரம் தாயனாரின் கரத்தை பற்றிகொண்டு தடுத்து நிறுத்தியது.

தாயனாரும் இறைவா எம்மை தடுக்காதீர். தங்கள் படையலுக்கு பங்கம் விளைவித்த அடியேன் வாழ்வதில் யாதொரு பயனும் இல்லை என்றார். இறைவன் தம் வலது திருக்கரத்தால் மண்ணில் சிந்திய செந்நெல் அரிசி சாதமுடன் கீரை மசியலுடன் சேர்த்து அமுதுசெய்ய ஆரம்பித்தார். மாவடுவையும் உண்டு அடியாரை மகிழ்வித்தார்.

பக்தர்கள் தம்முடைய வேண்டுதலுக்காக மண்சோறு உண்பதை நாம் கண்டிருப்போம். ஆனால் தம் அடியாருக்காக இறைவன் மண்சோறு உண்டதும் முதன் முதலில் மண்சோறு உண்பதை இவவுலகிற்கு அறிமுகம் செய்ததும் சிவபெருமான் ஒருவர் மட்டுமே.

அச்சமயம் இடப வாகனத்தில் உமையம்மையுடன் காட்சியளித்த சிவனார் ‘உன்னுடைய அன்பினைக் கண்டு வியந்தோம். நீ உன்னுடைய மனைவியுடன் சிவலோகத்தை அடைவாயாக’ என்று பரழுத்தி அருளினார். அரிவாட்டய நாயனார் குருபூஜை தை மாதம் திருவாதிரை நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறது.

அரிவட்டாய நாயனார் திருவடிகள் போற்றி.
எம்பெருமான் அம்மையப்பன் மலரடிகள் போற்றி போற்றி.

Leave a Comment