கோட்புலி நாயனார்.
சிவாலய நித்யபூசைக்கு தீங்கு செய்த தன்னுடைய சுற்றத்தையே வேறோடு கருவறுத்து குலத்தையே நாசம்செய்த உத்தம சிவனடியாரின் வரலாறு கோட்புலி நாயனார் வரலாறு ஆகும். சிவன் சொத்து குலநாசம் என்ற பழமொழி இந்த அடியாரால் வழக்கத்திற்கு வந்ததாகும்.
மாமன்னரிடம் அமைச்சர் பொறுப்பில் இருந்த சிவனடியார். அமைச்சர் பொறுப்புடன் சிவாலய நிர்வாகப்பொறுப்பும் அடியாரிடம் கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது.சிவாலயத்திற்கும் சிவனுக்கான நித்யபூசைக்கும் நிவேதனத்திற்கும் ஓர் குறையும் நேராதவண்ணம் கண்ணும் கருத்துமாய் கவனித்துவந்த சிவனடியார்.நாட்டில் பஞ்சமோ பட்டினியோ நேரிடினும் சிவபூசைக்கு எந்த குறையும் நேர்ந்துவிட ஆகாது என்ற முற்போக்கான சிந்தனையால் சிவனின் பூசைக்கு என்று ஒரு கோட்டையை அமைத்து அந்த கோட்டை முழுவதிலும் நெல்மணிகளை சேமித்து வைத்துள்ளார். ஊரில் பஞ்சம் ஏற்பட்டாலும் அந்த நெல்மணிகள் மூலமாக அன்னம் சமைத்து சிவனுக்கு நிவேதனம் செய்து அந்த நிவேதன பிரசாதத்தை மக்களுக்கு பேதம்பார்க்காது அனைவரின் பசியையும் தீர்க்கும் திட்டம் வகுத்த உத்தம அடியார்.
இப்படியாக இருக்கும் நிலையில் மன்னரின் கட்டளைப்படி பெருமானார் அன்னிய தேசத்தின்மீது போர்தொடுக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது. கோட்புலியார் படைத்தலைமை பொறுப்பேற்க வேண்டும். எனவே தன் குடும்பத்தினரை சிவாலய திருப்பணியையும் நெற்கோட்டையை காவல் காக்கும் பணியையும் செய்யும்படி பணித்துவிட்டு செல்கிறார். படைத்தலைமை பொறுப்பேற்று போர்புரிய செல்கிறார்.போர் மாதகணக்கில் நடைபெறுகிறது. அவரால் நாடுதிரும்ப முடியவில்லை. நாட்டில் பஞ்சம் ஏற்படுகிறது. உணவும் கிடைக்கவில்லை. அடியாரின் சொந்த பந்தங்கள் அடியார் இல்லத்திற்கு வந்துவிடுகின்றனர்.நாட்டில் பஞ்சம் தலை விரித்தாடுகிறது. அடியாரின் குடும்பத்தார் சிவனது நித்திய பூசைக்கு சேமித்து வைத்திருந்த நெற்கோட்டையில் இருந்த நெல்மணிகள் அனைத்தையும் உண்டு தீர்த்துவிடுகின்றனர்.போரில் வெற்றிபெற்று அடியார் நாடு திரும்புகிறார்.
வந்தவர் சிவாலயம் தரிசித்து நெற்களஞ்சியத்திற்கு வருகிறார். வந்தவருக்கு அதிர்ச்சி.சிவனுக்கு வைத்திருந்த நெற்கோட்டையை தன் இல்லாளும் சுற்றமும் ஒன்றுகூடி உண்டு களித்திருந்தனர். சிவனுக்கு நிவேதனத்திற்கு ஒருநெல்மணிகூட இல்லை.இதை கண்டு மிக்கசினம் கொண்ட அடியார் பெருமான் தன் உடைவாளால் அனைவரது சிரத்தையும் கொய்கிறார். கடைசியில் பால் உண்ணும் பச்சிளங்குழந்தையை மட்டுமாவது விட்டுவிட மக்கள் வேண்டியும் சிவனுக்குரிய நெல்மணியை உண்ட தாயின் பாலைபருகியதால் அக்குழந்தையும் உயிர்வாழ தகுதியற்றது எனவே எம் குலமே முற்றிலுமாக நாசமடையட்டும் எனகூறி அக்குழந்தையையும் சிரம்கொய்து அழிக்கிறார்.தமது குலத்தில் ஒருவரையும் விடாது கொன்றுவிடுகிறார். இவர் கூறிய வாக்கியமே சிவன் சொத்து குலம் நாசம் என்பது. பின்னர் அது சைவசமயத்தில் சிவன் சொத்து குலநாசம் எனும் பழமொழியாகவே நிலைபெற்று விட்டது.அவரது நேர்மையை கண்ட ஈசன் அழிந்த கோட்புலியாரின் குலத்தை மீண்டும் உயிர்பித்து எழச்செய்கிறார். கோட்புலி பெருமானுக்கு அருள்புரிந்து அவரது சிவபக்தியையும் கடமையையும் பாராட்டி அறுபத்துமூன்று நாயன்மார் பெருமான்களில் ஒருவராக அவருக்கும் தமது ஆலயத்தில் இடமளிக்கிறார்.
சிவனது திருவடி பேறுபெற்று சிவபுரம் சார்கிறார்.
கோட்புலிநாயனார் திருவடிகள் போற்றி.
அம்மையப்பன் மலரடிகள் போற்றி போற்றி.